தற்செயலாக சென்ற 12 ஆம் தேதி நான் என்னுடைய மின்னஞ்சலில் Spam தொகுதியைப் பார்க்க நேர்ந்தது. இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மின்னஞ்சல்கள் இருந்தன. அவற்றில் பலநூறு மின்னஞ்சல்கள் முக்கியமானவை. பல மின்னஞ்சல்கள் புதிய நண்பர்களால் எழுதப்பட்டவை. எப்படியோ அவை அந்தப் பெட்டிக்குள் வந்துவிட்டன. 2010 முதலே எழுதப்பட்ட கடிதங்கள் அவற்றிலிருந்தன.
எவ்வாறு அவை அங்கே சென்றிருக்கக்கூடும் என யோசித்தேன். நான் லிங்கடின் போன்ற தளங்கள் அனுப்பும் தானியங்கி மின்னஞ்சல்களை பார்த்ததும் ஸ்பாமுக்கு அனுப்புவேன். அவர்கள் அனுப்பும் மின்னஞ்சல்களையும் என் மின்னஞ்சல்பெட்டி அப்படியே ஸ்பாமுக்கு அனுப்பியிருக்கலாம் என ஓர் எண்ணம்.
ஆனால் ஒருவாரமாக அத்தனை மின்னஞ்சல்களையும் பார்த்தபோது அப்படி அல்ல என்று தெரிந்தது. ஏனென்றால் பெரும்பாலான மின்னஞ்சல்களை நான் வாசித்திருக்கிறேன். உண்மையில் அங்கே கிடந்த மின்னஞ்சல்களில் கணிசமானவை நான் வாசித்து, முக்கியமானவை எனக் கருதி, விரிவான பதிலுக்காக ஒதுக்கி வைத்தவை
அப்படியென்றால் முக்கியமானவை என்று அடையாளப்படுத்துவதற்குப் பதிலாக ஸ்பாம் என்று அடையாளப்படுத்தியிருக்கிறேன். முட்டாள்தனம்தான். ஆனால் எனக்குப் பொதுவாகத் தொழில்நுட்பங்கள் பிடிபடுவதேயில்லை.
ஒருவாரத்தில் கிட்டத்தட்ட ஆயிரம் மின்னஞ்சல்களுக்கு பதில்போட்டிருக்கிறேன். இன்னும் பழைய மின்னஞ்சல்கள் தாமாகவே அழிந்துபோயிருக்கலாம். கடிதங்கள் எழுதியவர்கள் நான் பதிலளிக்க மறுக்கிறேன் என்றோ உதாசீனம் செய்துவிட்டேன் என்றோ நினைக்கக்கூடும். பலர் பிற்பாடு மின்னஞ்சல்களே அனுப்பியதாகத் தெரியவில்லை
என்னுடைய மனநிலையின் அலைவுக்கேற்ப நான் கடிதங்களை படிப்பதோ அல்லது பதிலளிப்பதோ தாமதமாகலாம். ஆனால் எல்லா மின்னஞ்சல்களையும் மிகுந்த ஆர்வத்துடன் வாசிப்பதும் பதிலளிப்பதும்தான் என் வழக்கம். எவரையும் எப்போதும் உதாசீனம் செய்வதில்லை.
அனைவரிடமும் மன்னிப்பு கோருகிறேன்