பிரஜாபதியும் கிறித்தவர்களும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

அதிகமான அன்போடும் வணக்கங்களோடும் எழுதுகின்றேன்.

தங்கள் படைப்புகளை (சில சிறுகதைகள் மற்றும் அறிவியல் புனைவுகள் நீங்கலாக) அதிகம் வாசித்ததில்லை. ஆயினும் இரண்டாயிரத்து ஒன்பது முதலே உங்கள் வலைப்பக்கத்தை தினமும் படிப்பவன் நான். குறிப்பாக காந்தி பற்றிய தங்கள் பதிவுகள் என் முன்முடிவுகளை சுக்குநூறாக நொறுக்கிப் போட்டுப் புதியதொரு கோணத்தை எனக்கு அளித்தவை.

சரி விஷயத்திற்கு வருகின்றேன். சாது செல்லப்பா என்ற ஒரு மதப் பற்றாளர் இந்து மத வேதங்கள் பிரஜாபதி என்ற ஒரு மீட்பர் தோன்றுவாரென்றும் அவர் மனிதகுல விடுதலைக்காக பலியாவார் என்றும் சொல்லுவதாகப் பிரசங்கித்து வருகின்றார். அப்படிப்பட்ட பிரஜாபதி ஏசுவேயல்லாமல் வேறொருவரும் இல்லை என்றும் பிரசங்கித்து வருகின்றார். தாங்கள் கீழ்காணும் காணொளியையும் பின்னூட்டத்தையும் பரிசீலித்து உங்கள் கருத்தை சொன்னால் மகிழ்வேன். எனது பல குழப்பங்களை உங்கள் பதிவுகள் தீர்த்து வைத்திருக்கின்றன.

நான் எந்த மத நம்பிக்கையும் கொண்டவனில்லை. தனிப்பட்ட முறையில் கௌதம புத்தரும் கீதை சொன்ன கிருஷ்ணரும் என்னைக் கவர்ந்தவர்கள்.

நான் பிழைப்புக்காக ஆங்கில மொழியையே தின வாழ்வில் அதிகம் பயன்படுத்தி வருபவன். எனவே எனது கடிதத்தில் பல பிழைகள் காணப்படலாம். தயவுசெய்து மன்னிக்கவும்.

நன்றி

ஸ்ரீனிவாசன்.

***

அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

சாதுசெல்லப்பாவின் இந்த வகையான பேச்சுக்கள் மதமாற்றத்துக்கான கீழ்த்தர மோசடிகளே அன்றி எந்தவிதமான அறிவார்ந்த அடிப்படைகளும் கொண்டவை அல்ல. இத்தகைய பிரச்சாரம் நீண்டகாலமாகவே நிகழ்ந்துவருகிறது. சிலவருடங்களுக்கு முன்னர் நாகர்கோயில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி வளாகத்தில் பிரஜாபதி என்ற நாடகம் நடைபெற்றது. பிரம்மாண்டமான பொருட்செலவில் அமைக்கப்பட்ட நாடகம். பெரும்கூட்டம்.

இந்தப் பிரஜாபதி மோசடி எப்படி கேரளத்தில் உருவாகி மெல்ல இந்தியாவெங்கும் கொண்டு செல்லப்படுகிறது என்று கேரளப் பகுத்தறிவாளரான சனல் இடமறுகு எழுதியிருக்கிறார். சமீபத்தில் ராஜீவ் மல்ஹோத்ரா- அரவிந்தன் நீலகண்டன் எழுதிய Breaking India [உடையும் இந்தியா. கிழக்கு பதிப்பகம்] நூலில் இதைப்பற்றிய விரிவான தகவல்கள் உள்ளன.

இந்த வரலாற்றைப் பார்ப்போம். இந்தியாவில் கிறித்தவமதம் பரப்பப்பட ஆரம்பித்த போதே இந்துமதத்தின் மூலநூல்களை விருப்பப்படி திரித்து அவற்றுக்குள் கிறித்தவத்தைக் கொண்டு வரும் முயற்சிகள் ஆரம்பமாகி விட்டன. காரணம் இந்து ஞான நூல்கள் ஏராளமானவை. அவற்றில் கணிசமானவை அறிஞர்களே அறிந்த நுட்பமான தத்துவநூல்கள். கிறித்தவ மதம் இலக்காக்கிய எளிய மக்களுக்கு அந்நூல்களுடன் நேரடி உறவு கிடையாது.

பதினாறாம் நூற்றாண்டில் இந்தியாவுக்கு மதம் பரப்ப வந்த ராபர்ட் டி நொபிலி என்ற பாதிரியார் [1577-1656] உண்மையில் இந்து வேதங்கள் ஐந்து என்றும் ஐந்தாவது வேதமான ஏசுர்வேதம் பிராமணர்களால் மறைக்கப்பட்டது என்றும் பிரச்சாரம் செய்தார். அவரே ஒரு நூலை உருவாக்கி அந்நூலின் ‘தொன்மையான’ சுவடியை ஐரோப்பாவுக்கும் கொண்டு சென்றார். புகழ்பெற்ற பிரெஞ்சு சிந்தனையாளரான வால்டேர் உட்பட பலர் இந்நூலை ஒரு மகத்தான ஞானநூல் என்றும் மறைக்கப்பட்ட ஞானத்தின் கண்டுபிடிப்பு என்றும் புகழ்ந்து எழுதியிருக்கின்றனர்.

நூறாண்டுக்காலம் இந்த மோசடி புகழுடன் இருந்தது. 1774 ல் பிரெஞ்சு ஆய்வாளரான பியர் சொனேரா என்பவர் அச்சுவடியுடன் இந்தியா வந்து விரிவான ஆய்வுகளைச் செய்து அது அப்பட்டமான மோசடி என்று கண்டுபிடித்தார். தொடர்ந்து பல ஆதாரபூர்வமான கட்டுரைகளை எழுதி அதை முறியடித்தார். இந்தச் சுவடி இன்று பாரீஸ் அருங்காட்சியகம் ஒன்றில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நூறாண்டுக்கால மோசடிப் பிரச்சாரத்தின் காரணமாகவே கிறித்தவ மதம் வேதம் என்ற சொல்லைக் கவர்ந்து கொண்டது. தங்களுடையது உண்மையான வேதம் என்று கிறித்தவர்கள் நம்ப ஆரம்பித்தனர். வேதக்காரர்கள் என்றால் கிறித்தவர்கள் என்ற அர்த்தம் உருவாகியது. வேதமாணிக்கம் என்றெல்லாம் அவர்கள் பெயர் சூட்டிக்கொள்ள ஆரம்பித்தனர்.

நொபிலியின் மோசடி அப்பட்டமாக அம்பலப்படுத்தப்பட்ட வரலாற்றை மெல்ல மெல்ல மறைத்து விட்டனர். மட்டுமல்ல நொபிலியின் முயற்சி உன்னத நோக்கம் கொண்டதே என்றுகூட மாக்ஸ்முல்லர் போன்றவர்கள் எழுதினார்கள். வேதம் என்ற சொல் இந்துமதத்தில் உள்ள நான்கு நூல்களை மட்டுமே குறிப்பிடுவது என்று அறிந்த இந்துக்களே இன்று அபூர்வம்.

இதே வகையான முயற்சிகள் எப்போதும் தொடர்ந்து நிகழ்ந்தபடியே வருகின்றன. திருக்குறள் என்பது ஒரு கிறித்தவநூலே என்றும் அதன் மூலச்சுவடி தனக்கு கிடைத்துள்ளது என்றும் 1972இல் கணேசய்யர் என்பவர் சொல்ல அவரை அன்றைய மைலாப்பூர் பேராயர் அருளப்பா ஊடகங்கள் முன் நிறுத்தினார். உலகமெங்கும் கொண்டு சென்றார். பெரும் முயற்சியுடன் அந்த மோசடி முறியடிக்கப்பட்டது.

சென்ற சில ஆண்டுகளாக புனித தாமஸ் இந்தியாவுக்கு வந்தார் என்றும் அவர் இங்கே பரப்பிய கிறித்தவ மதத்தின் திரிந்த வடிவமே இந்து, பௌத்த மதங்கள் என்றும் ஒரு பெரும் பிரச்சாரம் தெய்வநாயகம் என்பவராலும் அவரை ஆதரிக்கும் கிறித்தவ அமைப்புகளாலும் முன்னெடுக்கப்படுகிறது. எல்லா இந்து நூல்களும் கிறித்தவ தத்துவத்தைச் சொல்லும் திரிபு பட்ட நூல்களே என்பது அவர்களின் வாதம்.

இந்தவரிசையில் வருவதே இந்த பிரஜாபதி என்ற மோசடி. கேரள ஏசுசபைப் பாதிரியாரான ரெய்முண்டோ பணிக்கர் என்பவரால் இது முதலில் முன்வைக்கப்பட்டது. கிறிஸ்துவின் மறுவருகை, உயிர்த்தெழுதல் பற்றி ரிக்வேதம் சொல்கிறது என்றும் அதை பிராமணர்கள் மறைக்கிறார்கள் என்றும் அவர் பிரச்சாரம் செய்தார். அதிகாரப்பூர்வ கிறித்தவ திருச்சபையால் இது நிராகரிக்கப்பட்டது. ஆனால் அவர் தொடர்ந்து இதைச் சொல்லிக் கொண்டிருந்தார்

இருபதாண்டுகளுக்கு முன்னர் உதிரி பெந்தெகொஸ்தே சபைகள் வலிமையுடன் பரவ ஆரம்பித்தபோது சிலர் இதை மீண்டும் சொல்ல ஆரம்பித்தனர். இப்படி சொன்னவர்களில் பலர் விசித்திரமானவர்கள். உலகம் அழிவதை முன்னறிவித்து அதிலிருந்து தப்ப விரும்புபவர்களை அழைத்துச்சென்று ஒரு கம்யுன் அமைத்துக்கொண்ட பாலாசீர் லாரி போன்ற நிழலான கிறித்தவ தீர்க்கதரிசிகள் இதை அரிய ஞானக்கண்டுபிடிப்பாக முன்வைத்தனர். இவ்வரிசையில் வருபவர் சாது செல்லப்பா.

ஒரு இந்துத் துறவி போன்ற வேடத்தில் உள்ள இவர் தனக்கென ஒரு திருச்சபையை நடத்தி வருகிறார். தன்னை பிராமணன் என்றும் வேதங்களைக் கற்றுத்தேர்ந்து கிறித்தவராக ஆனவர் என்றும் சொல்கிறார். 2009-இல் கிறித்தவ பிராமணர் அமைப்பு என்ற இயக்கத்தைத் தொடங்கிப் பிரச்சினை வரவே கைவிட்டார். இவரது இலக்கு போரில் பாதிக்கப்பட்டு மனம் கசந்த நிலையில் இருக்கும் இலங்கைத் தமிழர்களே.

சாது செல்லப்பாவின் வழி மிக எளியது. அடிப்படை வாசிப்போ, தர்க்கபுத்தியோ கொண்ட ஒருவர் அவரது பேச்சுகளைக் கேட்டு அருவருக்கவே செய்வார். அவரது இலக்கு, ஏதுமறியாத பாமரர்கள்தான். சமீபகாலமாகத் தொலைக்காட்சி ஊடகத்தை வலுவாக இவர் பயன்படுத்தி வருகிறார். தமிழகத்தின் திராவிட அமைப்புகள், இடதுசாரிகள்கூட இவரை ஆதரிக்கிறார்கள்.

சாது செல்லப்பாவின் மதமாற்ற நோக்கத்தை ஒப்புக்கொள்ளும் கிறித்தவர்களில்கூடக் கணிசமானவர்கள் அவர் வேதங்களும், சைவ ஆகமங்களும் எல்லாமே ஏசுவைப்பற்றித்தான் சொல்கின்றன என்று சொல்வதைக் கடுமையாகக் கண்டிக்கிறார்கள். காரணம் தூய கிறித்தவ நோக்கில் பைபிள் அன்றி எந்த பிறநூலும் அதிகார பூர்வமானவை அல்ல. பைபிள் சரி என்பதனாலேயே பிற அனைத்தும் பிழையானவை, தவறானவை. அவை எதற்கும் உதவாத குப்பைகளாகவே இருக்கமுடியும். ஆகவே அவற்றை மேற்கோள் காட்டுவதும், ஆராய்வதும் பைபிளுக்கு எதிரான பெரும்பாவம்.

சாது செல்லப்பாவின் கூற்றுக்களைப் பரிசீலிக்கும் ஒரு மரபான கிறித்தவ ஆய்வுதளம் இப்படிச் சொல்கிறது.

இரண்டாம் முறை, திருமறையைக் கர்த்தருடைய சித்தத்தை வெளிப்படுத்தும் தெளிவான, அழிவற்ற, அதிகாரம் கொண்ட ஒரே நூலாக ஏற்றுக் கொண்டு, அதன் அடிப்படையில் எதையும் ஆராய முற்படுகின்றது. ஆகவே, திருமறையோடு ஒத்துப் போகாத எதுவும், திருமறை நிராகரிக்கும் எதுவும், கர்த்தருடைய வழிகள் அல்ல என்ற தீர்மானத்திற்கு வருகின்றது. இம்முறையைப் பொறுத்தவரையில் வரலாறு, கல்வெட்டுகள், மனிதர்களால் எழுதப்பட்ட ஆதி நூல்கள், பரம்பரையாக வாய்வழி வந்த போதனைகள், நம்பிக்கைகள் அனைத்துமே திருமறைக்கு ஒப்பான அதிகாரம் கொண்டவையல்ல. இவற்றைவிட திருமறையே மேலான, உறுதியான அதிகாரம் கொண்ட கர்த்தருடைய வார்த்தை. இதன் அடிப்படையில் இந்திய வேதங்களும், வரலாற்று அம்சங்களும் திருமறைக்கு நிகரான எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை. அவை கறைபடிந்தவை; அவற்றின் அடிப்படையில் சத்தியத்தை நிரூபிக்க முயல்வது சத்தியத்திற்கு எதிரான முறையாகும்.

ஆகவே இந்த மோசடி கிறித்தவர்களுக்காகச் செய்யப்படுவது அல்ல என்பது தெளிவு. இது இந்துக்களை மட்டுமே குறியாகக் கொண்டு செய்யப்படுகிறது. இந்து நூல்களை நம்பும் ஒருவரிடமே இது பேசுகிறது. அவர் மதம் மாறிவிட்டாரென்றால் மெல்ல மெல்ல இந்து நூல்கள் ‘கறைபடிந்தவை’ என்றும் பைபிள் மட்டுமே ஒரே உண்மையான நூல் என்றும் அவர் நம்ப வைக்கப்படுவார்.

இந்து மதத்தினரே இந்துமதம் பற்றி ஏதுமறியாமலிருப்பதே இத்தகைய மோசடிகள் செல்லுபடியாகும் நிலையை உருவாக்குகிறது. இந்துமதத்தின் ஞானமரபைப்பற்றிப் பேசுபவர்களே இன்றில்லை. வெறும் பக்திநெகிழ்ச்சி, சடங்குகள் ,சோதிடங்களையே இங்குள்ள ஆன்மீகப் பேச்சாளர்கள் முன்வைக்கிறார்கள். கூடவே நாத்திகப் பகுத்தறிவு என்ற பேரில் இந்துஞானமரபுக்கு எதிராக வளர்க்கப்பட்டுள்ள காழ்ப்பும் இவர்களுக்கு உதவியாகிறது.

பிரஜாபதி என்றால் யார்? பௌராணிக அடிப்படையில் சொன்னால் பிரஜாபதி என்பவர் படைப்புச் சக்தியின் ஒரு துளி. பிரபஞ்ச சிருஷ்டிக்கு வெவ்வேறு பிரஜாபதிகள் வெவ்வேறு வகையில் தேவையாக இருந்திருக்கிறார்கள். 21 பிரஜாபதிகள் உண்டு என்பது பௌராணிக தரப்பு. மகாபாரதம் சாந்திபர்வத்தில் அவர்களின் பட்டியல் உள்ளது.

முதல் பிரஜாபதி பிரம்மாவேதான். ருத்ரன், மனு, தக்‌ஷன், பிருகு, தர்மன், தபன், யமன், மரீசி, ஆங்கிரஸ், அத்ரி, புலஸ்த்யன், புலகன், கிருது, வசிஷ்டன், பரமேஷ்டி, சூரியன், சந்திரன் கர்தமன், குரோதன், விக்ரீதன் என அவர்களை குறிப்பிடுகிறது மகாபாரதம்.

இந்தப் பட்டியலைப் பார்க்கையிலே தெரியும், பிரஜாபதி என்பதற்கு என்ன அர்த்தம் வேதங்களில் கொடுக்கப்பட்டுள்ளது என. இவர்களில் பெரும்பாலானவர்கள் ரிஷிகள். பிரம்மா, ருத்ரன் இருவரும் தெய்வங்கள். சூரியன், சந்திரன் இருவரும் இயற்கை வடிவங்கள். அதாவது ஒரு வம்சத்தை, அல்லது குலத்தை, அல்லது குருமரபை உருவாக்கியவர்களே இந்த பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள். பிரஜாபதிகள் என்றால் ‘தொன்மையான தந்தையர்’ என்று எடுத்துக் கொள்வதே சரியானதாகும்.

வேதங்கள் மூன்று வகையான கடவுள் உருவகங்களை முன்வைக்கின்றன. வேதம் சொல்லும் முழுமுதல் கடவுள் என்றால் அது பிரம்மம்தான். பிரம்மம் முழுமையாக அறியப்பட முடியாததும் விளக்கப்பட முடியாததுமான பிரபஞ்ச மூலம். அதை ஓர் ஆற்றல் என்றோ இருப்பு என்றோ கூடச் சொல்லிவிடமுடியாது. அது என்ற சொல்லால் வேதம் அதைக் குறிப்பிடுகிறது. வேதத்தின் கடவுள் அது மட்டுமே.

அந்த பிரம்மத்தின் அல்லது பரம்பொருளின் பல்வேறு தோற் றநிலைகளாகப் பலவகை தெய்வங்களை வேதங்கள் குறிப்பிடுகின்றன. அவையெல்லாம் நாம் அறியும் சாத்தியங்களால் உருவகிக்கப்படுபவையே. அவர்களில் இந்திரன், வருணன் போன்ற தேவர்கள் உண்டு.அவர்கள் குறிப்பிட்ட செயல்களுக்கு உரியவர்கள். பிரபஞ்சத்தைப் படைத்தவர்கள் அல்ல. ராத்ரிதேவி, உஷாதேவி என காலங்களையும் பருவங்களையும் கடவுள்களாக உருவகித்திருப்பதும் உண்டு. சூரியன், சந்திரன் போன்ற இயற்கை இருப்புகளும் உண்டு.

பிரஜாபதி இந்த எவ்வகையிலும் சேரும் தெய்வம் அல்ல. பிரஜாபதி என்பவர் படைப்புக்குக் காரணமாக அமைந்த ஒருவர், குரு அல்லது மூதாதை- அவ்வளவுதான்.

வேதங்களைக் கூர்ந்து வாசித்தால் மேலும் பல பிரஜாபதிகளைக் காணமுடியும். பெயரே இல்லாமல் வெறுமே பிரஜாபதி என்ற சொல்லால் சுட்டக்கூடியவர்களும் உண்டு. அதாவது வேதங்களின் பிரஜாபதி என்பது ஒரு கருதுகோள். பிரபஞ்சத்தை ஒரு காடு என்று கொண்டால் பிரஜாபதி அந்த மரங்களின் விதை.வேதங்களின் படி ஒரு கருத்து ஒரு பிரஜாபதியாக ஆகிறது. அவரில் இருந்து சிருஷ்டி நிகழ்கிறது.

வேதங்கள் பிரஜாபதியை வைஸ்வாநரன் என்றும் சொல்கின்றன. பிரபஞ்ச மனிதன், பேருரு மனிதன் என்று மொழிபெயர்க்கலாம். அதாவது ஒரு மனிதத்திரளின் தொடக்கமும் பிரஜாபதியே, அந்த ஒட்டுமொத்தத் திரளும்கூட பிரஜாபதியே.

சில பாடல்களில் பிரம்மா பிரஜாபதியைப் பிறப்பித்து சிருஷ்டியைச் செய்ததாக வருகிறது. சில பாடல்களில் பிரஜாபதி மனிதகுலத்தின் முதல்குழந்தை என்ற பொருளில் வருகிறது. இப்படிச் சொல்லலாம், பிரஜாபதி என்பது வேதங்கள் உருவாக்கிக் கொண்ட ஒரு கவித்துவமான படிமம், ஓர் உருவகம். அதைப் பயன்படுத்தி அவர்கள் வெவ்வேறு வகையில் சிருஷ்டி என்பதை விளக்க முயன்றார்கள். நவீன அறிவியல் அணு என்றோ குவாண்டம் என்றோ உருவகிப்பதைப்போல.

இன்றுகூட வேண்டுமென்றால் அந்த உருவகத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.முதல் பாக்டீரியா ஒரு பிரஜாபதி. முதல் முதலாக உருவான குளோனிங் ஆடு ஒரு பிரஜாபதி, அது பிற ஆடுகளை உருவாக்குமென்றால்.

வேதங்களில் பிறந்ததுமே ஃபாண் என அழும் பிரஜாபதியை நாம் காண்கிறோம். பிறந்ததுமே புசிக்க ஆரம்பிக்கும் பிரஜாபதியைப் பார்க்கிறோம். அவையெல்லாமே சிருஷ்டியின் குறியீடுகள். சில ரிக்வேதப் பாடல்கள் விதையையே பிரஜாபதி என்று உருவகிக்கின்றன. அது இறந்து இன்னொன்றை உருவாக்குகின்றது. ஒருவகையில் அது உயிர்த்தெழுகிறது. அந்த வரியைப் பிடித்துக்கொண்டு அது ஏசு உயிர்த்தெழுதலைக் குறிக்கிறது என்று சொல்ல முனைவதெல்லாம் அசட்டுத்தனம் அல்ல, இந்திய ஏழைகளின் அசட்டுத்தனம் மீது ஆழமான நம்பிக்கை கொண்டவர்களின் அயோக்கியத்தனம்.

வேதங்களில் ஈசா என்று வந்தால் அது ஏசுவைக் குறிக்கிறது என்றும் முகமது அல்லது நபி என்று மாற்றிக் கொள்ளத்தக்க ஒலி வந்தால் நபியைக் குறிக்கிறது என்றும் சமீபகாலமாக மேடைகளில் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். ஜெய என்று வருவதெல்லாம் புரட்சித்தலைவியையும் கருணா என்று வருவதெல்லாம் தானைத்தலைவரையும் குறிக்கிறது, அவர்களின் வருகை வேதங்களால் முன்னறிவிக்கப்பட்டுவிட்டது என்றெல்லாம் மேடைப்பேச்சுகள் கேட்கும் நாள் தொலைவில் இல்லை. கஷ்டகாலத்துக்கு ஸ்டாலின் என்று எங்காவது இருக்கப்போகிறது என்றும் அச்சமாக இருக்கிறது.

ஜெ

***

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைபாண்டிச்சேரி மொண்ணையும் இணைய மொண்ணைகளும்