கன்னிநிலம் – நாவல் : 2

முகாமுக்குத் திரும்பும் வழியில் மழை வலுத்துக் கொட்டியது. காட்டின் பச்சைக்கிளைச்செறிவுக்குள் நீராவி நிறைந்து மூச்சுத்திணறி£யபோதே மழைக்கான அறிகுறி என்று அறிந்து நடையை வேகப்படுத்தினோம். அவளை நடுவே விட்டு முன்னால் நீட்டிய பயனெட்களுடன் நால்வர் செல்ல நானும் திம்மய்யாவும் நாயரும் காப்டனும் பின்னால் நடந்தோம். பாயின்ட் 801/A என்ற செம்மண் குன்றை ஏறி மறுபக்கம் இறங்க வேண்டும். சரிவில் மேலும் ஒரு கிலோமீட்டர் சென்றால் எங்கள் முகாம் தெரியும். மலைகளின் மடிப்பில்  பொத்திய கைகளை சற்றே விரித்து ஒளித்துவைத்திருப்பதைக் காட்டியது போல. எங்கள் முகாமுக்கு இருபக்கங்களில் பச்சை எழுச்சியாக செங்குத்தாக எழுந்த மலைச்சரிவுகள். மறுபக்கங்களில் அதேயளவுக்குச் செங்குத்தாகச் சரிந்து அதல பாதாளத்தில் ஓடும் தௌபால் ஆறு கண்ணாடிச்சிதறல்கள் போல வெண்ணிற நுரை ததும்பி பாசிப்பாறைகளினூடாகச் செல்வதைக் காணலாம். அதற்கு அருகே உள்ள படகுத்துறையை மேலிருந்து பார்த்தால் காண முடியாது. பசுந்தழைக்குள் முற்றாக மூடப்பட்டிருக்கும். தழைகள் மூடிய நதிவழியாகவே படகுகள் வரும்போகும்.

செம்மண் குன்றில் ஏறத்தொடங்கும்போதே தூரத்தில் பெரும் அருவி ஒன்று நெருங்கிவருவது போல மழை வருவதைக் கேட்டோம். சற்று நேரத்தில் எங்கள் கைகளையே நாங்கள் காணமுடியாதபடி மழை மேலிருந்து இறங்கி மூடியது. மழை நல்லதுதான். இவளைக் கொண்டு செல்வதை இவளது ஆட்கள் காணாமல் இருக்க அதிக வாய்ப்பு. இந்தக்காட்டில் அவர்களுக்குத்தான் வசதிகள் அதிகம். இலைகளின் வழியாக அவர்களால் நீண்ட தூரம் பார்க்க முடியும். இது அவர்களின் காடு. மழையில் அந்த செம்மண் குன்றே கரைந்து சரிவதுபோல நீரோடைகளில் செம்மண்நீர் சுழித்து சீறி ஓடிவந்து எங்கள் பூட்ஸ்களை இழுத்து நிலைகுலையச்செய்தது. மலைக்கு கீழே எங்கெங்கோ சரிவுகளில் அருவிகள் போல அவ்வோடைகள் கொட்டுவதைக் கேட்டோம். புதர்களின் அடர்த்தியினால் மட்டுமே அக்குன்றில் ஏறமுடிந்தது. திடமான புதர் வேரால் மண்ணைக்கவ்வியிருக்கும் மேட்டில் கால் வைத்து நடந்தால் வழுக்காது. தவறினால்கூட புதர்களைப்பற்றிக் கொள்ளலாம்.நல்லவேளையாக இங்கே புதர்களில் முட்கள் மிகவும் குறைவு. நீர் நிற்காதபடி நுண்ணிய பூனைமுட்கள் கொண்ட ரம்ப நுனியுள்ள இலைகள்தான் அதிகம். வெறுங்கைகளை அரித்து ரத்தக் களரியாக்கிவிடும்.

‘யாரோ தொடர்கிறார்கள் ‘ என்று காப்டன் சுருக்கமாக மைக்ரோவேவ் ஷாட் ரேஞ்ச் பேஜரில் சொன்னார்.

மழையின் ஆவேசத்துக்குள் எனக்கும் அப்படி பல பிரமைகள் மனதைக் கவ்விக் கொண்டுதான் இருந்தன.

”?” என்றேன்.

”மனிதக்குரல்” காப்டன் எழுதினார் ” ஓரு சொல் ”

”பிரமை?”

“நம்பலாம்”

குன்றைத்தாண்டி மறுசரிவை அடைந்தோம். மழை மெல்ல வெளிறத் தொடங்கியது. சரிவாக குவிந்து ஓலமிட்டு அதிர்ந்து கொண்டிருந்த மரங்கள் உதறிச்சிலுப்பிக் கொண்டு நிமிர்ந்தன. இலைகளை ஊடுருவி காற்று செல்லும் ஊளை மட்டும் கேட்டது.

”வேகம்” என்றார் காப்டன்.

சட்டென்று டுய்ய் என்று விசில் ஒலியைக் கேட்டேன். குண்டுதான். களம் கண்ட ராணுவ வீரனுக்கு ஐயமே இருக்காது. விசில் ஒலி கேட்டதென்றால் குண்டு நம்மைக் கடந்துசென்றுவிட்டது என்று பொருள். யாரை? குப்பென்று உள்ளே பொங்கிய வெப்பமான ஆவியை மூச்சு வழியாக வெளிவிட்டேன்.

எங்கள் பேஜர்கள் சிவப்புப் புள்ளிச்சுடருடன் அதிர்ந்தன.”அலெர்ட்”. எங்கள் குழுவில் பாதிப்பேர் பின்பக்கமாகத் திரும்ப குழுவின் கண்கள் நான்குதிசைக்குமாக பங்கிடப்பட்டன. அதற்குள் அடுத்த குண்டு திம்மப்பாவைத்தாக்கியது. ”ழக்” என்ற ஒலியுடன் அவன் வயிற்றில் உதை பட்டவன் போல எம்பி சரிந்து புதர்களுக்குள் முகம் புதைய சரிந்தான். ஒரே ஒரு பூட்ஸ்கால் மட்டும் விசித்திரமாகத்திரும்பிக் கொண்டு உதறியது. ரெயின்கோட் விலகியதில் அவனுடைய சிவந்த கழுத்தில் நீல நரம்புகள் புடைத்திருப்பது தெரிந்தது. அடுத்த குண்டில் ஹவல்தார் சரவணன்.. அவனைப்பிடிக்க முனைவது போல காப்டன் முன்னோக்கிச் சரிந்து புல்லில் கவிழ்ந்தார்.

இரண்டும் சில கணங்களுக்குள் நடந்துவிட்டன. அதற்குள் எத்தனை எண்ணங்கள். எத்தனை துல்லியமாக காட்சிகளை உள்வாங்குகிறது நெஞ்சு. இரு குண்டுகளுக்கும் இடையேயான கோண ஒற்றுமையை எப்படி ஒரே கணத்தில் கணித்தேன்! காப்டன் விழுந்தால் உடனடியான பொறுப்பாளன் லெ·ப்டினெண்ட் ஆகிய நான் என்று உணர்ந்து எப்படி அப்பதவியை அதேகணத்தில் எடுத்துக் கொண்டேன்! அதை அத்தனைபேருக்கும் சொல்லும் அதிகாரத்தொனி எப்படி எனக்கு கிடைத்தது….!

”’ … ஆங்கிள் டூ பார் த்ரீ பாயிண்ட் எயிட்– சார்ஜ்! ”என்று நான் ஆணையிட்டதும் செகண்ட் லெ·ப்டினெண்ட் நாயர் சரசரவென்று  எம் 16 ரை·பிளால் சுடத் தொடங்கிவிட்டான். நெருப்புகள் மழைக்குள் மின்னி மின்னி அணைந்தன. குண்டுகள் மரங்களில் பட்டு தெறிக்கும் ஒலி. மழைக்கணைந்த பறவைகள் சடசடவென சிறகடித்து எழுந்து வானை அறையும் ஒலி. வெடிமருந்தின் வீச்சம்….

அமைதி.

” அவர்கள் சிலர் இறந்திருக்க வேண்டும் சார்” என்றான் நாயர். சார் போடுகிறான். என்னை கமாண்டராக ஏற்றுக் கொண்டுவிட்டான். நான் போட்ட கணக்கை அவனும் அதே கணத்தில் போட்டு மிகச்சரியாகவே சுட்டுவிட்டான். இதோ இதுவரை இருந்த அதிகார அமைப்பின் அனைத்துமே மாறி இன்னொரு காலகட்டம் தொடங்கிவிட்டது. முதல்விசில் கேட்டு இப்போது பத்து கணங்கள் தாண்டவில்லை. காலம் என்பது என்ன?

அவள் கண்களை திரும்பிப்பார்தேன். அதில் பயமே இல்லை. இடுங்கிய இமைகளுக்குள் கருவிழிகள் இரு நீலக்கற்கள் போலிருந்தன.. அவள் மிக முக்கியமானவள் . ஐயமே இல்லை. தற்செயலாக இவளை நாங்கள் கொண்டுபோவதை அவர்கள் பார்த்திருக்கலாம். சுட்டிருக்கலாம். தாக்குதல் இங்கு அன்றாட நிகழ்வு. ஆனால் இது அப்படி அல்ல. அவளைக் கொண்டுபோயாக வேண்டும். எப்படியாவது… ஆனால் காப்டன்…

” என்னை விட்டுவிடு. சிக்கிரம் செல் ” என்றார் காப்டன் சௌகான். தரையில்  ஒருக்களித்துச் சுருண்டு உதடுகளை ரத்தம் வரக் கடித்தபடி. அவரது தோள் துடித்தது

நான் ஒரு கணம் அமைதியாக இருந்தேன்

”உங்களுக்கு நேரமில்லை. கணங்கள் கூட முக்கியம் . எங்களை பணயக்கைதிகளாக்குவார்கள். கொல்லமாட்டார்கள். கொல்வதில் அவர்களுக்கு லாபமில்லை. அவளை விடாதே… ” காப்டன் வலியில் பல்லைக் கிட்டித்தபடி சொன்னார்.

“எஸ் சார்” என்றேன்

சரிவில் இறங்குவது என்பது மலைமீதிருப்பவர்களுக்கு சரியான இலக்கு ஆவதுதான். ஆனால் வேறு வழி இல்லை. நால்வர் பின்னால் திரும்பி இடைவெளியில்லாமல் சுட்டபடியே நடக்க நாங்கள் முடிந்தவரை தலைகுனிந்து புதர்களுக்குள் பன்றிகள் போல நகர்ந்தோம்.

திடீரென்று பக்கவாட்டில் இருந்து குண்டுகள் வந்தன. எம்3 வரிசை கார்பைன்கள் இரண்டு அவர்கள் தரப்பில் இருக்கக் கூடுமென ஊகித்தேன். ஏ.கே.47 கள் கூட ! எங்களுக்குத்தான் ஏ.கெவரிசைகள் அபூர்வமானவை. எங்கள் எதிரிகளுக்கெல்லாம் அவை எளிதாகக் கிடைக்கின்றன. மியான்மார் அரசால் அளிக்கபப்ட்டவை.

சீறி சீறிச்செல்லும் விசில்களை பற்களைக் கிட்டிக்கவைக்கும் பதற்றத்துடன் கேட்டேன். விலுக்கென மின்னதிர்ச்சி பட்டதுபோல உதறி குழறும் தொண்டை ஒலியுடன் கிருஷ்ணனும் முருகதாஸ¤ம் விழுந்தார்கள்.

அனிச்சையான வேகத்துடன் நாங்கள் புதர்களுக்குள் சரிந்து குப்புற விழுந்தோம். நாயரும் சிவநாராயணும் அச்சுதன் மடக்கப்பிள்ளியும் நாரணப்பாவும் மரங்களுக்குப் பின் மறைந்து நின்று வெறியுடன் சுட்டார்கள். எதிரொலி கலந்தால் சிலசமயம் எம் 4 கார்பைன்  டாபர்மான் நாய் குரைப்பது போல ஒலியெழுப்பும்.

இன்னும் குறைந்தது இரண்டு கிலோமீட்டர் இருக்கிறது. ஒரே வழிதான். சில சமயம் மூடத்தனமானது. ஆனால்……

”அவளைத் தூக்குங்கள்…நம் தலைக்குமேல் அவள் உடல் இருக்கட்டும்” என்றேன்.

சேகரும் சிவப்பாவும் அவளை சட்டென்று பற்றினார்கள். அவள் திமிறி தன் கத்தியை நீட்டுவதை பொருட்படுத்தாமல் தங்கள்  இருகைகளையும் பற்றி அதன் மீது பல்லக்கு போல அவளை ஏற்றிக் கொண்டனர்.

”அவள் நன்றாகத்தெரியட்டும்…..”  என்றேன்

அவளைச் சுமந்தபடி நடந்தோம். நெஞ்சின் ஒலியை உடல் எங்கும் கேட்டோம்.

டுய் டுய் என்று இரு குண்டுகள் பறந்தன. ஒன்று மரப்பட்டையை பிய்த்தது.

” நம்மை பயமுறுத்துகிறார்கள். குண்டுகள் அவ்வளவு தள்ளிச் செல்கின்றன. இவளைக் கொல்ல விரும்ப மாட்டார்கள். இவள் முக்கியமானவள்….சந்தேகமே இல்லை ” என்றேன்.

குண்டுகள் வந்த திசையை நோக்கி நாயர் சந்தேகத்திற்கு மும்முறை சுட்டான்.

பிறகு குண்டுகள் வரவில்லை. நான் ”அவள் அருகேயே நடப்போம். விலகிச்செல்பவர்களை சுட்டுவிடுவார்கள்..” என்றேன்.

மழை நன்றாக விட்டுவிட்டது. மலைச்சரிவில் எங்கள் முகாம் தெரிந்தது. மேகம் புகைப்பொட்டலங்கள் போல அதைச்சூழ்ந்து கிடந்தது. இரும்புக்கம்பிகளை ஸ்க்ரூவால் இணைத்து எழுப்பப்பட்ட கோபுரம் மீது மைக்ரோ வேவ் அண்டனா வடமேற்கில் முப்பது டிகிரி கோணத்தில் திரும்பி ஒலிக்குச் செவிகூரும் பூனை போல கவனித்து நின்றது. அதன் கீழே  காவல் பரண் மீது எம்கெ 19-3 ,40 எம் எம் கிரெனெட் மெஷின் துப்பாக்கியின் சிலிண்டர் மங்கும் மாலை வெளிச்சத்தில் இனிய நீல நிறத்துடன் ஒளிவிட்டதைக் கண்டேன். அதன் திறந்த வாயைக் கண்டேன் .அதன் எல்லை 2200 மீட்டர். இந்த மண்ணில் அதுதான் இந்திய எல்லையும்.

நான் என் ரேடியோவில் எங்கள் வருகையை அறிவித்தேன். அங்கிருந்து பயனெட் ஒளிரும் 16 எம் எம் ரை·பிள்களுடன் எங்கள் கம்பெனி ஜவான்கள் பதினைந்துபேர் கம்பிவேலியின் வாயில் வழியாக ஈசல்கள் போல கிளம்பி வீசப்பட்ட மீன்வலையாக விரிந்து எங்களை நோக்கி வந்தார்கள்.

முந்தைய கட்டுரைவாக்களிக்கும் பூமி:கடிதங்கள்
அடுத்த கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 3