கடிதங்கள்

அன்புள்ள ஜெயன்,
தங்களது குறுநாவல்கள் தொகுப்பை வாசித்துக் கொண்டு இருந்தேன். கிளிக்காலம், பரிணாமம், லங்கா தகனம் ஆகியவை மிகச் சிறப்பாக இருந்தன. நீங்கள் சொல்வது போல, நாவல்களுக்கு உரிய உள்விரிவும், சிறுகதைக்கு உரிய உச்சமும் இணைந்து வரும் ஆக்கங்கள். தங்களது டார்த்தீனியம் படித்தேன், அந்த நடையும் வர்ணனைகளும் இயைந்து அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தந்தது, ஆனால் அதன் உள் சிக்கல்களைப் புரிந்து கொள்ள முடியவில்லை. நீங்கள் இங்கே குறிப்பிடும் டார்த்தீனியம் என்பது ஒரு குறியீடு என்று புரிகிறது. ஆனால் அது எதைக் குறிக்கிறது?

ஒரு குடும்பத்தில் அந்த ஆண் எவர் பேச்சையும் கேட்காமல் பிடிவாதமாய் செயல்படுவதையா? அல்லது நான் மிகவும் எளிமைப் படுத்துகிறேனா?. அது அந்த மகனை பாதிக்கும் நிகழ்வுகள் உண்மை போலவே சுட்டப்படுகிறது, அவன் போதைப் பொருள் உட் கொண்டு இருக்கலாம் என மருத்துவர்கள் எண்ணும் இடத்தில். அப்படி ஆனால் இது வரை அது ஒரு குறியீடு என நினைத்து வந்த எண்ணம் உடைந்து, அது உண்மை எனவே நம்பத் தோன்றுகிறது.

இந்தக் கதையை எப்படி உள்வாங்கிக் கொள்வது என்பது பற்றி சில வரிகள் எழுதினால், அந்த நோக்கில் அதைப் படித்துப் பார்ப்பேன்.

நன்றியுடன்,
மதன்.எஸ்
இந்தியானா

அன்புள்ள ஜெயமோகனுக்கு,

உங்களுடைய எழுத்து எப்பொழுதும் பிரமிக்க வைக்கும் பிரும்மாண்டம் கொண்டது. வடக்குமுகம், ஈராறு கால்கொண்டெழும் புரவி போன்ற படைப்புகளைப் படித்து முடித்த பிரமிப்பு நீங்குவதற்குள், இப்பொழுது உலோகம். தவறுதலாகப் பதினாறாம் பகுதியை வெளியிட்டுப் பின் விலக்கிக் கொண்டு விட்டீர்கள் என நினைக்கிறேன். அதற்குள் அது ரீடரில் தங்கிவிட்டது. மிகவும் நுணுக்கமாகப் பல விஷயங்களைப் பதிவு செய்திருக்கிறீர்கள். பிரமிப்… அதான் ஏற்கெனவே சொல்லியாகிவிட்டதே. வேறு வார்த்தை தேடிக் கண்டுபிடித்து உபயோகப்படுத்தவேண்டும்.

நடுவில் மலேசியா பயண அனுபவங்களும், கேணி கூட்ட அனுபவங்களும் ஊடுபயிர் போல நட்டுவிடுகிறீர்கள். நான் எதையும் விட்டு வைப்பதில்லை.

சமயத்தில் நீங்கள்தான் எழுதுகிறீர்களா அல்லது ஒரு கூட்டமாக யாரும் எழுதுகிறார்களா என்று நினைக்கும் அளவிற்கு எழுதித் தீர்க்கிறீர்கள்.

உங்களின் படைப்புகளை என்னால் படிக்க மட்டுமே முடிகிறது. படித்து அசைபோட்டு அதன் கூறுகளை அலசும் முன்னர் உங்களுடைய அடுத்த படைப்பின் பிரமிப்பிற்கு ஆட்பட்டு விடுகிறேன்.

எனக்கு இந்த வாசகன் அவதாரம் மிகவும் சௌகரியமாகவும் வசதியாகவும் இருக்கிறது. உங்களைப் பொறுத்தவரை புத்திஜீவிகள் மற்றும் முத்திரைகளோடு (labels) அலையும் விமர்சகர்கள் நிலை மிகவும் பரிதாபம். உங்களை எந்த சட்டத்தில் அடைத்து அறுத்து ஆராய்வது என்று தீர்மானிப்பதற்குள் நீங்கள் பல அவதாரங்கள் எடுத்து விடுகிறீர்கள்.

இந்த அளவிற்கு செறிவான படைப்புத் தளம் ஆங்கிலத்தில் கூட இருப்பதில்லை என்பது என் அனுபவம். இதற்கு அப்பால் அசோகவனம் என்னும் டைனோசர் வேறு வளர்ந்து கொண்டிருக்கிறது.

வாழ்த்துகளுடன்
ஸ்ரீதர் நாராயணன்

முந்தைய கட்டுரைஇப்படி இருக்கிறார்கள்…
அடுத்த கட்டுரைபிரஜாபதியும் கிறித்தவர்களும்