அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
“என் ஆக்கங்களில் நான் மிகச்சிறப்பானதாக எண்ணுவது கொற்றவை” என்று தாங்கள் சொல்லி இருக்கிறீர்கள். ” முன்னூறு பக்கங்கள் வரை உரைநடையில் எழுதிவிட்டு பின்னர் இது கோரும் வடிவம் வேறு என்பதை உணர்ந்து செய்யுள் நடையில் எழுதியதாக ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருக்கிறீர்கள். ” ஒரு யுகத்திற்கு ஒருமுறை ஆதிகேசவப் பெருமாள் புரண்டு படுக்கிறார் ” என்ற சொற்றொடரே விஷ்ணுபுரம் எழுதுவதற்கு ஆதாரமாக அமைந்தது என்றும் ஒரு குறிப்பு உண்டு. அது போல “கொற்றவை” என்ற புதுக்காப்பியத்தைப் படைப்பதற்குத் தங்களுக்கு ஆதார சக்தியாக அமைந்தது எது என்பதைப் பற்றி சில வார்த்தைகள் பகிர்ந்து கொள்ள இயலுமா? இதை எழுதுகையில் தங்களுக்கு சவாலாக அமைந்த விஷயங்கள் மற்றும் அவற்றை எதிர்கொண்டு வென்ற விதத்தையும் அறிந்து கொள்ள ஆவல். கடிதம், பல்கலைக்கழக வினாத்தாள் போன்று அமைந்தததற்கு மன்னிக்கவும்.
மிக்க அன்புடன்,
கணேஷ்
அன்புள்ள கணேஷ்
என்னுடைய எல்லா நாவல்களிலும் மையச்சரடாக ஒரு படிமம் ஓடுவதை நானே பின்னர் கண்டேன். நீலி என்று அதை சொல்லலாம். என்னுடைய குழந்தைப்பிராயத்தில் குலதெய்வமாக அறிமுகமாகிக் கதைகள் கற்பனைகள் வழியாக வளர்ந்துவந்த பிம்பம் அது. கட்டற்ற இயற்கை ஆற்றல். காடு என்னும் வடிவமாகக் கண்ணுக்குத்தெரிபவள்.
பின்பு நான் முதல்முறையாகக் கன்யாகுமரி அம்மனைக் கண்டேன். அப்போது அவள் எனக்கு வேறு வகை நீலியாகவே தெரிந்தாள். அங்கே கடலுக்குள் அம்மன்பாறையில் உள்ள ஒற்றைப்பாதத்தடம் என்னை சொல்லிழந்து நிற்கச் செய்தது. அந்த வயதில் அந்தப் பெருந்தவத்தை எப்படியோ என் மனம் கண்டுகொண்டது என்று படுகிறது
அதுதான் தொடக்கம். நான் சொல்ல நினைத்தது அந்தப்பாதத்தில் இருந்து நீளும் அத்தனை பெண்படிமங்களையும்தான் என்று எழுதியபின் அறிந்தேன்