கன்னிநிலம் – நாவல் : 1

குறுநாவல்

அந்திவரை வாழப்போகும்
பூவின் மடியில்
அந்த காலைப்பொழுதிலேயே
மடிந்துவிடப்போகும்
பனித்துளிதான்
எத்தனை அழகு!

-தேவதேவன்

1

நெல்லையில் இருந்து பஸ்ஸில் நாகர்கோயில். கௌகாத்தி எக்ஸ்பிரஸில் மூன்று இரவுகளும் நான்கு பகல்களும் தாண்டி கௌகாத்தி .அங்கிருந்து ராணுவ டிரக்கில் நான்கு நாள் விட்டு விட்டு குலுங்கி குலுங்கி மழையினூடாகப் பயணம் செய்து இம்பால். புகையும் பனியும் மூடிய மேடுபள்ளமான தெருக்கள் கொண்ட  நகரத்தை விட்டு இடுங்கிய தார்ச்சாலைகளில் சுழன்று சுழன்று ஏறி இறங்கி , சேற்று உளை பொங்கிய செம்மண் சாலைகளில் சக்கரங்கள் புதையப் புதைய புகை கக்கி முன்னேறி, யுதங்களை பூட்டு விடுவித்து தயாராக பிடித்தபடி கேன்வாஸ் கூரையில் மழை அறைவதைக் கேட்டபடி முறைவைத்து விழித்திருந்து , பதினெட்டு மணிநேரம் பயணம் செய்தால் பர்மா எல்லையோரமாக மோரே பகுதியில் சந்தேல் மாவட்டத்தில் காங் டால் கிராமத்தில் காவல் கோபுரங்களாலும் சுற்றுமதில்களாலும் யந்திரத்துப்பாக்கிகளாலும் கடுமையாக பாதுகாக்கப்படும் எங்கள் ராணுவ முகாம்.  அங்கிருந்து பயனெட் நுனி கூர்மை ஒளிர நீட்டிய ·ரைபிள்களுடன் படகுகளில் பயணம் செய்து தௌபால்  என்ற காட்டாற்றின் எதிர் ஓட்டத்தை டீசல் கக்கி முனகிக்கடந்து பத்தொன்பது கிலோமீட்டர் அடர்ந்த காட்டுக்குள் சென்று எட்டு கிலோமீட்டர் தூரத்தை செங்குத்தான மலைச்சரிவில் ஏறிசென்றால் மலையிடுக்கு ஒன்றில் புல்வெளியில் பிளாஸ்டிக்காலும் கம்பிகளாலும் கட்டி எழுப்பப்பட்ட எட்டு கூடாரங்கள் கொண்ட எங்கள் யூனிட் முகாம். வெகுதூரம்தான். ஆனால் அப்போது மென்மூங்கிலும் காட்டுசேம்பும் பலவகையான சேற்றுத்தாவரங்களும் மண்டிய பாதையில்லா அடர்காட்டுக்குள் பூட்ஸ¤கள் முழங்காலளவு சேற்றில் அழுந்தி அழுந்தி நீர் ஊறும் ஒலியெழுப்ப நடக்கையில் அதிகபட்சம்  று கிலோமீட்டர் அப்பால் இருந்த யூனிட் முகாம் வெகுதொலைவில்,இருந்தது.இருபதடி  தள்ளி நடந்த என் சகா செகண்ட் லெ·ப்டினெண்ட்  நாயர் கூட தொலைவாகத் தெரிந்தான். மூச்சு இரைக்க உடல் வலியில் தெறிக்க நாற்பது எட்டுகள் எடுத்து வைத்தால்தான் அவனை நான் அடைய முடியும்.

எங்கள் ஊர் காடுகளைப் போலத்தான் இருந்தன மணிப்பூர் காடுகளும். முக்கியமாக அட்டைகள் இல்லை. பசுமை மாறாக்காடுகள் தான் இவையும். திரும்பதிரும்ப மழை. மழைநீர்  ஓங்கிய மரங்களில் இருந்து புதர்ச்செடிகளின் அகன்ற இலைகள் மீது விழும் ஒலிதான் அந்தக்காட்டின் குரல். விலங்குகள் அதிகமில்லை. அல்லது நாங்கள் விலங்குகளை எங்கள் பூட்ஸ் ஒலிகளால் விரட்டியபடித்தான் காட்டுக்குள் நுழைகிறோம். தவளைகள் மிக அதிகம். பச்சைத்தவளைகள். பெரிய கண்கொண்ட சாம்பல்தவளைகள். துள்ளிப்பறந்து இலைகளில் அமர்ந்து ஊசலாடும் சிறிய தேரைகள்… பாம்புகள் உண்டு. புதர்களின் அடியையும் சருகுக்குவியல்களையும் மிதிக்கக் கூடாது. கனத்த கம் பூட்டுகள் இன்றி உள்ளே நுழைந்தால் விஷக்கடி உறுதி. அதிகமும் கண்ணாடிவிரியன்கள்…எப்போதாவது காட்டுபன்றி ஒன்று சேறு பூசிய கொழுத்த உடலுடன் தாடை தொங்கித் ததும்ப புதர்களை ஊடுருவிச்செல்லும், தலைமுடிக்கு நடுவே பேன் செல்வதுபோல. புதர்க்கோழிகள் எங்கள் காலடிக்கு அஞ்சி மேலும் புதராழத்துக்குச்செல்லும். தலைக்குமேல் பலவகையான பறவைகளின் கூட்ட இரைச்சல் மழை ஒலியுடன் சேர்ந்தே ஒலிக்கும். இந்தக்காட்டின் ஓயாத மழையிலும் பறவைகள் எப்படி தாக்குப்பிடித்து வாழ்கின்றன என்று தெரியவில்லை.

நான்காண்டுகளில் நான் தாக்குப்பிடிக்க பழகிவிட்டேன். எங்கும் உயிர்கள் தங்கி வாழும். எங்கும் மூச்சுவிட சிறிதளவு ஆ க்ஸிஜனையும் ருசிக்க சற்று இனிமைகளையும் அவை கண்டுகொள்ளும். ஓயாத மழை கூடாரத்தின் கித்தான்கூரை மீது  மீண்டும் மீண்டும் ஒலிக்க உள்ளேயே தூங்கி எழுந்து அமர்ந்து படுத்து வாழும் பெருஞ்சலிப்பு இல்லாவிட்டால் என் வானொலி எனக்கு இத்தனை அரியதாகியிருக்காது. யிரம் கரகரப்புகளும் பல்லாயிரம் சீறல்களும் கலந்து ஒலிக்கும் தமிழ் சினிமாப்பாடல்கள்ஆ  த்மாவில் தேனை பெய்திருக்காது. எப்போதாவது சுசீலாவின் மணிக்குரல் ‘ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்’ என்று எழும்போது உடல்நரம்புகளிலெல்லாம் இசை அதிர கண்பனிக்க நினைவழிந்து படுத்திருக்க முடியாது. நெல்லை தெருக்களின் வெயிலும் புழுதியும் சாக்கடை வியாகும் வீச்சமும் ரத்னா பாப்புலர் திரையரங்கு முகப்பின் போஸ்டர்களும் நினைவில் மீள மீள இனிய கனவென  ஓடியிருக்காது.

சினிமாப்பாட்டுதான் எங்கள் முகாமின் மூச்சு. முகாமில் பதிநான்குபேர் தமிழர்கள். மூன்று மலையாளிகள். நான்கு கன்னடர்கள். எட்டு தெலுங்கர்கள். இரவுகளில் சிறிய முட்டை மின்விளக்கு பூச்சிகள் சூழ்ந்து சுடர்ந்து பறக்க எரியும். பெரிய மடக்குமேஜைமீது ரம் பாட்டில்கள். தண்ணீர். பொரித்த கோழி. பெரும்பாலும் காட்டுகோழி . பல சமயம் பிற காட்டுப்பறவைகள். டப்பாவில் அடைக்கப்பட்ட மீன். பாக்கெட் சிப்ஸ். நாயர்தான் முதலில் பாடுவான். போதையில் அவனுக்கு வயலார் ராமவர்மாவின் பாட்டுகள் நினைவின் ஆழத்திலிருந்து பரல்மீன்கள் போல ஒளியுடன் எழுந்து வரும். ” மந்த ஸ்மீரனில்ல்ல்ல்…. ஒழுகி ஒழுகியெத்தும் …இந்த்ர சாபம் நீ…” நாயருக்கு நல்ல குரல். ஜேஸ¤தாஸை நினைவூட்டும். நான் டி.எம்சௌந்தரராஜன் பாட்டுகளைத்தான் எப்போதும் பாடுவேன் ”நான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்…” கிருஷ்ணமராஜு பழைய கண்டசாலா பாட்டுகள். எப்போதுமே பழைய பாட்டுகளைத்தான் பாடுவோம். அவற்றில்தான் ஏக்கம் நிறைந்திருக்கிறது. இழந்தவை விட்டுவந்தவை எட்டமுடியாதவை அனைத்துக்கும் அவை கைநீட்டுகின்றன. உருகி உருகி மறைகின்றன. நேரமே இல்லை. இரவு ஒருமணி இரண்டுமணி… மாறி மாறிப் பாடிக்கொண்டே இருப்போம்.ஒரு பாட்டு ஒன்பது பாட்டுகளை நினைவில் கிளத்தும். காப்டன் சௌகான் பியூகிளை ஊதியபடி அவரே வந்து ”கம்பெனி வைன்ட் அப்!”என்று கூவுவார். விளக்கை அணைத்து காம்ப் கட்டில்களில் படுத்து கம்பிளியால் போர்த்திக் கொள்வோம். இதமான சூட்டுக்குள் பாடப்படாத பாட்டுகளாக மனம் ரீங்கரிக்கும். நாயர் போர்வையைத் தாழ்த்தி மெல்லிய குரலில் ”பிள்ளைவாள் இதைக் கேட்டிருக்கிங்களா? – ‘சாம்யமகந்நோர் உத்யானமே…கல்ப கோத்யானமே…” என்று பாடுவான். பாட்டு தேய்ந்து ஒரு கட்டத்தில் குரல் உடைய இருளில் அவனது சிறு விம்மல்கேட்கும்.நான் அதை விசாரிக்க மாட்டேன். இரவில் இருளில் ததும்பிவரும் அழுகை மிக தூயது. மிக மென்மையானது. மிக மிக இனியதும்கூட…

என் எண்ணங்களை கட்டுப்படுத்திக் கொண்டேன். காட்டுக்குள் தேடலுக்குச் செல்லும்போது மிக மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டியது இது என்று அழுத்திக் அழுத்திக் கற்பிப்பார்கள் ராணுவத்தில். காட்டு விலங்குகள் போல ஐம்புலன்களும் கூர்மை கொண்டிருக்கவேண்டும். அவற்றை தொகுத்து பகுத்து ஆராயும் புத்தி எப்போதும் விழிப்புடன் இருக்க வேண்டும். அதற்கு முக்கியமான தடையாக ஆகின்றவை இரண்டு விஷயங்கள். ஒன்று, நம்மையறியாமலேயே நம் மனம் நம்முள் நுரைக்கவைத்துக் கொள்ளூம் பகற்கனவுகள். காலத்தில் முன்னும் பின்னும் ஓடி நம் அகம் அள்ளிக் கொள்ளும் நினைவுகள். இந்த சூழலின் கடுமையை தாங்கிக் கொள்ள மனம் கண்டுபிடிக்கும் இயல்பான வழிமுறை அதுவே. இரண்டு, கண்ணிலோ காதிலோ படும் ஏதேனும் ஒன்றில் கவனம் ஆழமாகச் சென்று பிறவற்றை கவனிக்காமலாகிவிடுதல்.

”காடு ஒரு குறிப்பேடு. அதன் தாள்களில் அங்கு நடந்தவை அனைத்துமே எழுதப்பட்டுள்ளன. அந்த எழுத்துக்களை கவனிக்கும் கூர்மை நமக்கு வேண்டும் .அந்த மொழி நமக்குத் தெரிந்திருக்கவேண்டும். ” பயிற்சிநிலையத்தில் மேஜர் தாராவாலா சொல்வார். ” வடகிழக்கு காடுகள் இந்திய ராணுவம் சிக்கிக் கொண்ட புதைகுழி என்று சொல்லலாம். ஒவ்வொரு வருடமும் இங்கு நாம் சிலஆ யிரம் பேரை பலி கொடுக்கிறோம். பெரும்பாலும் கவனக்குறைவுக்கு பரிசாகவே அம்மரணங்கள் அமைகின்றன. காட்டுக்குள் இருக்கையில் காட்டுவிலங்காக இருங்கள். நினைவுகள் இல்லாத விலங்கு. கடந்த காலமோ எதிர்காலமே இல்லாத எளிய உயிர். போதும்….”

என் கையின் சிக்னல் பேஜர் மெல்ல அதிர்ந்தது. அதில் எனக்கான கட்டளை இருந்தது. விரிந்து பரந்த எங்கள் வட்டம் முழுமையடைந்துவிட்டது. ஒவ்வொருவரும் இன்னொருவருடன் சேர்ந்து இணைந்து மீண்டும் குழுவாகத்திரள வேண்டும்.  உறையிடப்பட்ட சுட்டுவிரலால் பேஜரில் நெருடி செய்திபெற்றுக்கொண்டமைக்கான குறியீடை அனுப்பினேன்.

என் முன் கையில் எம்9 மல்டி பர்பஸ் பயனெட்டால் புதர்களை வெட்டியபடி இன்னொரு கையில் பூட்டு  விடுவிக்கப்பட்ட எம்16 ஏ 2  ரை·பிளுடன் சென்ற சுபேதார் மேஜர் திம்மையாவின் முதுகு தெரிந்தபடியே இருந்தது. சற்று கீழே மூங்கில் இலைப்பரப்புக்கு அப்பால் செகண்ட் லெ·ப்டினெண்ட் நாயர் என் முதுகைப்பார்த்து நடந்துகொண்டிருப்பான். காட்டுச் சோதனையின்போது ஒருவரை ஒருவர் காண முடியாதபடி விலகிச்செல்லுதல் இங்கு மிக அபாயம். சில அடிதொலைவிலேயே எல்லா அடையாளங்களையும் மறைத்து முற்றாக மூடிக்கொள்ளும் அடர்காடு. பயிற்சியின்போது வழிதவறிச்சென்று அலைப்புற்று மீண்டது எல்லாருக்கும் நினைவில் இருக்கும். பயனெட்டால் புதர்களை வெட்டி கால்வைக்கும் இடத்தை ஒருகணம்பார்த்து சேற்றில் அழுந்திய பூட்ஸை சளக் ஒலியுடன் தூக்கி அங்கே வைத்து உடலை உந்தி தூக்கி முன்னெடுத்தால் ஒரு அடி வைத்தாகிவிட்டது. அப்படி அடிகள் அடிகளாக காலைமுதல் இப்போதுவரை. இப்போது மதியம் ஒன்றரை. ஆனால் அது கடிகாரத்தில் . இந்தக்காட்டுக்குள் பகலென்பதே மங்கலான ஒருவகை பச்சை வெளிச்சம்தான். அதை நேரடியாக நோக்க முடியாது. மேலே இலைக்கூரையிலிருந்து கசிந்து கீழே இலைகளை சுடர வைக்கிறது அவ்வொளி. இலையிலிருந்து என் முகத்தில் குதித்து அப்பால் சென்றது ஒரு பச்சைத்தவளை. அதன் கால் வாயில் பட்டது. மெல்லத் துப்பிக் கொண்டு அசப்பில் திரும்பியபோது—

உலகின் மகத்தான அதிர்ஷ்டசாலிகளில் நானும் ஒருவன் என்று உணர்ந்தேன் . என் பிடரி சிலிர்த்து விட்டது.சேற்றில் அந்த காலடித்தடத்தைக் கண்டேன். உயிர்வாழும் ஆசை உருவாக்கும் ஆற்றலுக்கு எல்லையே இல்லை. சட்டென்று அந்தக்காலடியின் திசையை ஊகித்து என் கையிலிருந்த எம்4 கார்பைன் துப்பாக்கியுடன் சட்டென்று திரும்பி மரப்பொந்துக்குள் மூங்கில் இலைஅடர்த்திக்குள் இருந்த சிறு பெண்ணை நோக்கி குறிவைத்து விட்டேன். அதே கணம் அவளும் தன் கத்தியை என்னை நோக்கி குறிவைத்திருந்தாள். ஒரே கணம். அதற்கு முந்தைய கணத்தில் அவள் குறிவைத்திருந்தால் அப்போது நான் இறந்திருப்பேன். அவர்கள் பாரம்பரிய முறையில் விஷம் தீட்டப்பட்ட குக்கி என்று சொல்லப்படும் கத்திகளை பயன்படுத்துகிறார்கள்.

ஓங்கிய கரத்துடன் அவள் சிலைபோல நின்றாள். என் துப்பாக்கி விசையில் விரலுடன் நானும் . என் கார்பைன் கோல்ட்  5.56 எம் எம் காலிபர் கொண்டது. 600 மீட்டர்தூரம் குண்டுகளை சீறியடிக்கும். எந்தச் சிந்தனையும் இல்லாது விசையை அழுத்த எட்டுவருடம் பயிற்சி பெற்றபின்னரே லெ·ப்டினெண்ட் காப்டன் ஆகியிருந்தேன். னால் அப்போது என் மனம் விரல் நுனியைச் சென்றடையவில்லை. கார்பைன் குளிர்ந்த இரும்புத்துண்டாக கனத்து அமர்ந்திருந்தது. ஒலி எழுப்ப முடியவில்லை. என் உதடுகள் மொழியிலிருந்து வெகுதொலைவில் இறுகி நின்றிருந்தன. ஒரு கணமோ ஒரு வாழ்நாள் முழுக்கவுமோ அப்படியே நின்றிருப்போம். நாயர் என்னைக் கண்டு கணத்தில் ஊகித்து பேஜர் செய்தியனுப்பிவிட்டு தன் எம்16 ரை·பிளை நீட்டியபடி முன்னகர்ந்தான். சில கணங்களுக்குள் திம்மையாவும் குறிபார்த்துவிட்டான். கார்பைன் கணம் கணமாக எடைகூடி வந்து தோள்களை அழுத்துவதுபோலிருந்தது. தசைநார்கள் கடுத்தன. இலகுவானபோது என் தாடையும் கழுத்துச்சதைகளும்தான் மிக இறுகியிருந்தன என்று உணர்ந்தேன். கண்களிலும் காதுமடல்களிலும் வெப்பமான ரத்தம் பரவ மெல்ல விழிப்படைந்தபோது காமிராவில் ·போகஸ் பொருந்தி சித்திரம் துலங்குவது போல எண்ணங்கள் உருவம் கொண்டன. அவளைச் சூழ்ந்துகொண்டோம்.

அவள் இளம்பெண். பதினெட்டு பத்தொன்பது வயதிருக்கும். மணிப்பூரிலும் பர்மாவிலும் பரவி வாழும் அங்கமி இனக்குழுவைச் சேர்ந்தவள். அடர்பச்சை நிறத்தில் கவுன் அணிந்து ண்பிள்ளைகளுக்கான சட்டையை உள்ளே செருகி இரட்டைப்பின்னலை மடித்து கட்டியிருந்தாள். பச்சைநிறத்தாலான பிளாஸ்டிக் துணியை முக்கோணமாக மடித்து  தலையில் மழைக்காகப் போட்டிருந்தாள். சிறிய மங்கோலியக் கண்கள் இலேசான நீலநிறத்தில் இருந்தன.கருமையில் நீலம் ஊடுருவிய பொன்வண்டுகள் போல. துல்லியமான இளமையான குழந்தைக் கண்கள்.

சட்டென்று அவள் கத்தியை தன் கழுத்துக்குக் கொண்டு போவதை, அந்நினைப்பு அவளில் எழுந்தபோதே முகமாற்றம் மூலமும் உதடுகளின் அசைவு மூலமும் ஊகித்து ,நான் கத்தினேன். ”நில். வேண்டாம். வேண்டாம். ” .

காப்டன் சௌகான் உரத்தகுரலில் மணிப்புரி மொழியில்  ” உன்னை ஒன்றும் செய்யப்போவதில்லை.உன் ஊர்த்தலைவரிடம் சான்றுகேட்டு சரிபார்த்ததுமே விட்டுவிடுவோம். ”என்றார்.

அவள் நம்பாத கண்களுடன் எங்களையே பார்த்தாள்.

காப்டன் மீண்டும் திடமான குரலில் ”நாங்கள் சட்டத்துக்கு உட்பட்டுதான் செயல்படுவோம். உன்னை விசாரணை செய்து நீ சாதாரண பெண்தான் என்று தெரிந்தால் விட்டுவிடுவோம்” என்றார்.

அவள் மெல்ல கத்தியை தழைத்தாள்.

திம்மையா அவளை நோக்கி ஒரடி எடுத்து வைத்ததும் ” ம் ” என்ற எச்சரிக்கை ஒலியுடன் கத்தியை மீண்டும் தன் கழுத்தை நோக்கி தூக்கினாள். காப்டன் திம்மையாவை கையசைவால் நிறுத்தினார். அவளிடம் ”நீ உன் கத்தியுடனேயே இருக்கலாம். உன் ஆட்கள் வந்து உன்னை கூட்டிப்போவது வரை உன் கத்தியை நீ விடவேண்டியதில்லை ”என்றார்.

அவள் முகத்தின் தசைகளில் மெல்லிய இலகுவாதலை கண்டென். பிறகு மெல்லிய சிவந்த சிறிய உதடுகளை அழுத்தியபடி பெருமூச்சுவிட்டாள்.

நான் ஆங்கிலத்தில் ”இங்கே வேறு ட்கள் ஒளிந்திருக்கக் கூடும்”என்றேன் .

காப்டன்”இல்லை. இவள் கண்களின் அசைவைப் பார்த்தேன். தனியாகத்தான் வந்திருக்கிறாள். அனேகமாக ஒரு தூதுசொல்லி….பார்ப்போம்” என்றார். அவளிடம் ”நட”என்று மணிப்புரியில் சொன்னார்

அவள் தன் கவுனை ஒரு கையால் இலேசாக ஒதுக்கிவிட்டு தரையை ஒருகணம் கூர்ந்து நோக்கி சரிந்துகிடந்த ஒரு மரத்தடியை தாண்டிக்குதித்து இப்பால் வந்தாள். அந்த அசைவில் ஒரு சிறிய காட்டுபறவை போலிருந்தாள். அவ்வளவு இலகுவாக, அவ்வளவு எச்சரிக்கையாக. எங்காவது ஒரு நகரத்தில் பிறந்திருந்தால் இந்நேரம் சுடிதார் துப்பட்டா பறக்க சைக்கிளைத்தள்ளிக் கொண்டு, ஜிமிக்கி கன்னங்களில் மோத தலையைத் தலையை ட்டியபடி ஓயாது பேசிக்கொண்டு, கல்லூரிக்குச் போய்க்கொண்டிருப்பாள்.

ஒரு கணம் பாவம் என்ற எண்ணம் ஏற்பட்டது.ஆ னால் மறுகணம் கோபம் எழுந்தது. இவர்களை நம்ப முடியாது. இவர்கள் கண்ணில் இந்திய ராணுவ ஜவான்கள் மனிதர்களல்ல. இயந்திரங்கள். எத்தனை மரணங்கள்! ஆபத்திலிருப்பதுபோல கதறி அருகே வந்த்தும் சுட்டிருக்கிறார்கள். இளநீருக்குள் சயனைட் விஷத்தை ஊசி மூலம் செலுத்தி உபசரித்திருக்கிறார்கள். கள்ளமற்ற முகத்துடன் அருகே வந்து கையெறிக்குண்டுகளை வீசியிருக்கிறார்கள். ‘ஒவ்வொரு முகமும் ஒரு கண்ணிவெடி நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்’ என்பதே ராணுவம் அளித்த முதல் பாடம். சென்றவாரம்கூட ஒரு ராணுவ ஜீப் மீது கையெறிக்குண்டு வீசப்பட்டு எட்டுபேர் இறந்திருக்கின்றனர். எறிந்தது ஒரு சிறுவன். பதினாறுவயதானவன்.. எங்கள் தேடுதலே அதன்பொருட்டுத்தான்….இவர்களுக்குள் வெறுப்பு கொந்தளிக்கிறது. எங்கோ எவரோ உருவாக்கிய வெறுப்பு. எல்லைக்கு அப்பால் பர்மாவில், கடலுக்கு அப்பால் மிஷனரிகளின் தலைமையகங்களில் வெறுப்பு நாற்றங்கால்களில் விதைத்து வளர்க்கப்படுகிறது. இங்கே பிடுங்கி நடப்படுகிறது. இந்தப்போர் தொடங்கி இருபத்தைந்து வருடங்களாகின்றன. இன்னும் பல தலைமுறைக்கு முடியவும் போவதில்லை. எதற்காக? யாருடைய நன்மைக்காக?

மீண்டும் பாவம் என்றுதான் தோன்றியது.

[மேலும்]

முந்தைய கட்டுரைகிளி சொன்ன கதை : 6
அடுத்த கட்டுரைவாக்களிக்கும் பூமி:கடிதங்கள்