ஆய்வும் மேற்கும்

திரு. ஜெயமோகன் அவர்களுக்கு:

சுப்ரியாவுக்கு நீங்கள் அளித்த பதிலில் ”மேலைநாட்டுப் பல்கலை ஆய்வுலகம் காட்டும் ஜனநாயக முகமும் , புறவயமான அறிவியக்கம் மீதான பற்றும் போலியானது” என்று குறிப்பிட்டீர்கள். மேலும், ”அமெரிக்காவிலோ ஐரோப்பாவிலோ சமூகவியல் சார்ந்த துறைகளில் ஆய்வு செய்பவர்கள்,செய்து மீண்டவர்கள் பெரும்பாலும் அனைவருமே இந்தக் கருத்தியல் மேலாதிக்கத்துக்கு தங்கள் மூளையை விற்ற அடிமைகள்தான்” என்றும் சொல்லியுள்ளீர்கள்.

அமெரிக்காவின் பல்கலைக்கழகங்களில், குறிப்பாகக் கலையின் வரலாற்றுத்துறையில் (History of Art) இந்தியக்கலைகள் குறித்து, இந்திய நாகரிகம் குறித்தும் பெருமதிப்பு கொண்டுள்ள பலரை நான் சந்தித்திருக்கிறேன். நான் அறிந்த வரையில் Orientalism வகுத்துள்ளபடி மேற்கத்திய மேலாதிக்கத்தோடு, இந்தியாவை இழிந்த நோக்கோடு காண்பவர்களாய் எனக்குப் புலப்படவில்லை.

முனைவர் பட்டம் பெற்ற என் அமெரிக்க மனைவியின் ஆராய்ச்சி வழிகாட்டி ஆதிகாலத்து இந்து, மற்றும் புத்த மத சிற்பங்களின் ஆய்வில் நாற்பதாண்டு காலங்களாய் ஈடுபடுபவர்; புத்தரின் சிற்பங்களை வடிக்க இந்தியர்கள் கிரேக்கர்கள் மூலமே கற்றறிந்தனர் எனும் மேற்கத்திய வாதத்தைத் தகர்த்தெறிந்தவர். மற்றொரு நண்பர் தர்மசாத்திரங்களையும், சைவ சித்தாந்தத்தையும் இருபது வருடங்களாய் ஆராய்பவர். என் மனைவியின், மதுரை மீனாட்சியம்மன் கோவிலையும், சிதம்பரத்தின் நடராஜர் கோவிலையும் எவ்வாறு திருமலை நாயக்கர் திருவிளையாடற்புராணம் துணை கொண்டு திறமையாக ஒருங்கிணைத்தார் என்பதான ஆய்வு இவ்வூர்ப் பல்கலைக்கழகத்தின் பாராட்டைப் பெற்றது.

இவ்வுதாரணங்களை நான் கொடுப்பது, இங்குள்ள பல்கலைக்கழகங்களில் பலர் இந்தியா, மற்றும் இந்தியக்கலாச்சாரம் குறித்தும் நடுநிலையோடு அணுகுகிறார்கள் என்பதுதான். கீழை நாடுகள் குறித்து மதிப்பேதும் இல்லா ஆராய்ச்சியாளர்கள் கண்டிப்பாக இருக்கலாம், ஆனால் அவர்கள் பெரும்பான்மையில் இல்லை என்பது என் கருத்து.

மேலும் பல்கலைக்கழகங்களில் கிறித்துவ மதவாத சக்திகள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பது குறித்து என்னால் உடன்பட முடியாது. அமெரிக்க
பல்கலைகழகங்களில் நாத்திகர்களே அதிகம். பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மதங்களுக்கு முக்கியத்துவம் இல்லாத காரணங்களினால் கிறித்துவ மதவாதிகள் தங்கள் பிள்ளைகளுக்கு “home-schooling” முறையில் கல்வி கற்பிக்கும் நிலையில் உள்ளனர்.

இங்கு குறிப்பிடவேண்டிய விஷயம் இந்தியாவை ஆராய்பவர்களிடம் இந்திய அரசு கொண்டுள்ள அணுகுமுறை. இந்தியா, மற்றும் அதன் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சிகளுக்கு நம் அரசு எந்த ஊக்கமும் அளிப்பதில்லை என்பது தான். சீன அரசு அமெரிக்கா முழுவதும் சீன மொழியைக் கற்பிப்பதற்காகப் பல கலாச்சார மையங்களை அமைத்துள்ளது. ஆனால் இங்கு தமிழையும், சமஸ்கிருதத்தையும் கற்பிக்கும் பணி கோயில்களாலேயே செய்யப்படுகின்றது, நம் அரசின் எவ்வொத்துழைப்பும் இல்லாமல்.

சீனப்பொருளாதார வளர்ச்சியினால் சீனக்கலைகள் குறித்தும், அதன் கலாச்சாரம் குறித்தும் மேலையில் உருவாகியுள்ள கவனம், சிறிது காலத்தில் இந்தியா குறித்தும் ஏற்படவேண்டும் என்பதே என் ஆவல்.

அன்புடன்,

கார்த்திகேயன் வாழ்க்குடை

அன்புள்ள கார்த்திகேயன்,

நான் ஒருபோதும் ஐரோப்பாவோ, அமெரிக்காவோ இந்தியப் பண்பாட்டை சாதகமாக நோக்கியதே இல்லை என்று சொல்லவில்லை. ஒரு கருத்தை எப்போதும் அதன் மறு எல்லைக்குக் கொண்டு செல்ல வேண்டம் என்று கோருகிறேன். இந்தியவியலில் பல முக்கியமான ஆய்வுகளைச் செய்த ஐரோப்பிய, அமெரிக்க அறிஞர்கள் உள்ளனர்.நானே அவர்களில் பலரை மேற்கோள் காட்டியும் வருகிறேன்.

நான் இந்திய மரபிலக்கியம்,வரலாறு, நாட்டுப்புறவியல் குறித்த ஐரோப்பிய, அமெரிக்க ஆய்வுகளைத் தொடர்ச்சியாகக் கவனித்து வருபவன்.நான் சொல்வது அவ்வகையில் நான் அடைந்த பொதுவான ஒரு புரிதல். இதற்கு விரிவான புள்ளி விவரங்கள் தேவை என்றால் சிலமாதங்கள் அவற்றைக் கணக்குப் போட வேண்டும். போட்டு எழுதினாலும் வேறு புள்ளிவிபரங்கள் கொடுத்து மறுத்து விடலாம்.

ஒருவருக்கு மேற்குலகம் எந்தவித அரசியலும் இல்லாத சமநிலையான அறிவியல் பூர்வமான பண்பாட்டாய்வுகளை மட்டுமே நிகழ்த்துகிறது என்ற நம்பிக்கை இருக்குமென்றால் அது மதநம்பிக்கை போன்றது. அதனுடன் விவாதிப்பதில் அர்த்தமே இல்லை.

மற்றபடி மேற்கு நம் மீது வைக்கும் முன்முடிவுள்ள பண்பாட்டு-வரலாற்று ஆய்வுகளை இரு தளங்களில் ஒரு வாசகன் அடையாளம் கண்டுகொண்டே செல்லலாம். தொடர்ச்சியாக இந்தியாவின் பண்பாட்டுத்தேசியம், தேசிய மையச்சரடு, பண்பாட்டு உரையாடல்மூலம் உருவான சமரசம் போன்றவற்றுக்கு எதிரான கருத்துக்கள் கொண்ட ஆய்வுகள்தான் வந்தபடியே இருக்கும்.

அவர்களின் நோக்கில் இந்தியா உக்கிரமான முரண்பாடுகள் மட்டுமே கொண்ட ஒரு நிலப்பரப்பு. இனமுரண்பாடுகள்,பண்பாட்டு முரண்பாடுகள். இந்தியாவின் கடந்த காலம் சுரண்டலால் ஆனது, அதன் பண்பாடு அந்தச் சுரண்டலின் விளைவு. இந்தியாவின் பண்பாடும் வரலாறும் தேக்கநிலை கொண்டவை. அந்தத் தேக்கநிலைக்கு இந்துமதமும் இந்துப்பண்பாடும் அடிப்படைக் காரணங்கள்.

நான் சற்று அப்பட்டமாக ஆக்கிச் சொல்கிறேன். பெரும்பாலான ஆய்வுகள் கடைசி முடிவாக சுற்றிச்சுற்றி இந்தப் பார்வையையே முன்வைக்கும். ஒவ்வொரு பகுதியிலும் இந்த மேனாட்டு ஆய்வுகள் முரண்பாடுகளை மட்டுமே கண்டு கொள்வதைக் காணலாம்

நான் சமீபத்தில் கண்டு மனச்சோர்வடைந்த விஷயத்தை இங்கே சொல்கிறேன். சமணத்துக்கும் இந்துமதத்துக்குமான முரண்பாட்டை ஒருவகை ரத்தக்களரியான போராட்டமாகவே அனேகமாக எல்லா ஐரோப்பிய அமெரிக்க ஆய்வுகளும் காட்டுகின்றன. மாறான ஆய்வு ஏதாவது வந்திருந்தால் எனக்குத் தகவல் கொடுங்கள்.

ஆனால் நடைமுறையில் சமணம் தொடர்ந்து இந்துமதத்துடன் குறிப்பாக வைணவத்துடன் ஓர் உரையாடலில்தான் இருந்துள்ளது. மெல்லமெல்ல வைணவத்தை சமணம் உள்ளிழுத்துக்கொண்டது. சமணத்தின் பல பண்பாட்டுக்கூறுகளை வைணவம் உள்ளிழுத்துக்கொண்டது. ஒரு கட்டத்தில் அவை இரட்டை மதங்களாகவே ஆயின. ஒருவர் ஒரே சமயம் தத்துவார்த்தமாக சமணராகவும், வழிபாட்டுரீதியாக வைணவராகவும் இருக்க முடியுமென்ற நிலை வந்தது.இன்றுகூட நாம் சமண ஆலயங்களில் இந்த இணைப்பைக் கண்கூடாகக் காணலாம். வைணவ தெய்வங்கள் இல்லாத சமண ஆலயங்களே இல்லை.

முரண்பாட்டை மட்டும் விரித்துரைக்கும் மேனாட்டு ஆய்வாளர்கள், இல்லாத முரண்பாடுகளைத் தேடி அலையும் அறிஞர்கள் இந்த உரையாடலையும், இணைப்பையும் கூடவே சொன்னால் என்ன என்பதுதான் எளிமையான வினா. ஆனால் இந்த வினாவை முன்வைக்கும் ஓர் இந்திய ஆய்வாளரை ஏளன நோக்கில் ‘தேசியவாதி’ என்று தள்ளி விட்டுச் சென்று விடுவார்கள்.

இன்னொரு உதாரணம். சமீபத்தில் அஜந்தா குகைகள் பற்றிய ஒரு வாசிப்பை மேற்கொண்டேன். மிச்சிகன் பல்கலை ஆய்வாளரான Walter M. Spink என்பவரின் ஆய்வுகள் சிக்கின. அவரது ஆய்வுகளை பௌத்தப் பண்பாடு மீதான கீழ்த்தரமான தாக்குதல்கள் என்றே நான் எடுத்துக்கொள்வேன். எந்தவகையான அறிவியல் நோக்கும் இல்லாத, வரலாற்றுப் பார்வையும் இல்லாத அதிரடிக் கருத்துக்கள் அவை.

ஸ்பிங்க் அஜந்தா குகைகளுக்கும் பௌத்த வழிபாட்டுக்கும் சம்பந்தமில்லை என்கிறார். அவை வணிகர்கள் தங்கிப் போவதற்காகக் கட்டப்பட்ட கேளிக்கை மையங்களாம். அந்த ஓவியங்கள் வணிகர்களின் மனமகிழ்ச்சிக்காக வரையப்பட்டவை. மன்னர்கள் அந்த குகைகளை வணிகர்களை குஜால்படுத்த செதுக்கிக் கொடுத்தார்களாம். மொத்தக் குகைகளும் வெறும் இருபதாண்டுக் காலத்தில் வாகாடகர் ஆட்சிக்காலத்தில் [கிபி 460 முதல் 480 வரை] செதுக்கப்பட்டவை என்கிறார்

அப்படிச் சொல்லக் கூடாதென்றில்லை, அது ஒரு தரப்பு. ஆனால் அந்தத் தரப்பு மேனாட்டுப் பல்கலைக்கழகங்களில் பெற்ற வரவேற்பு போல எரிச்சலூட்டுவது வேறில்லை. இன்று அஜந்தா பற்றிய எந்த மேனாட்டு ஆய்வேட்டிலும் ஸ்பிங்தான் முதன்மையாக மேற்கோள் காட்டப் படுகிறார். ஏன் விக்கிப்பீடியாவையே பாருங்கள், அஜந்தாவை உருவாக்கியவரே அவர்தான் என்ற வகையில் மேற்கோள் மழை தெரியும்

இந்தியாவின் சுவரோவிய மரபை அடிப்படையாகக் கொண்டு, அஜந்தாவின் சிலைகளையும் ஓவியங்களையும் அடிப்படையாகக் கொண்டு வால்ட்டர் ஸ்பிங்கின் கூற்றுக்களை முழுமையாக மறுத்திருக்கிறார்கள். இந்தியாவில் எங்கும் கேளிக்கைக்கூடங்களில் தெய்வச்சிலைகள் இருப்பதில்லை.அது அடிப்படையான இந்திய வாழ்க்கை நோக்குக்கே எதிரானது. அதைச்சொன்ன அனைவருமே தேசியவாதிகள் என எள்ளிப் புறமொதுக்கப்பட்டார்கள்.

வால்ட்டர் ஸ்பிங்க் வழியாகவே இனி உலகம் அஜந்தாவைப் பார்க்கும். பார்த்துக்கொண்டே இருங்கள் கால்நூற்றாண்டுக்குள் சர்வதேச ஆவணங்கள் அனைத்திலும் அவரது அரைவேக்காட்டுக்கருத்துக்களே பதிவாகியிருக்கும். இந்தியாவின் கூலி ஆய்வாளர்கள் எல்லாரும் அதைத்தான் மேற்கோள் காட்டுவார்கள்

நம் பண்பாட்டைப்பற்றி நம்மிடமே திரித்துச் சொல்லி அதைப்பரப்ப நம்மிடையே கூலிப்படையை உருவாக்குவதன் உண்மையான நோக்கம் என்ன என்பதே என்னுடைய கேள்வி. தேசியவாதி என்ற முத்திரைவழியாக இந்த ஏகாதிபத்தியவாதிகள் உருவாக்கும் இளக்காரம் பற்றியதே என் கேள்வி.

அந்த முத்திரைக்குக் கண்மூடித்தனமான நம்பிக்கை கொண்டவர், அறிவியல்ரீதியான நோக்கு இல்லாதவர் என்று பொருள். அந்த ஆய்வாளரின் ஆய்வுகள் அதன்பின் எங்குமே அதிகாரபூர்வமானதாகக் கருதப்படாது. என்னிடம் தனிப்பட்டமுறையில் இதைச்சொல்லிக் குமுறிய பத்து மூத்த ஆய்வாளர்களையாவது நான் அறிவேன்.

இந்த ஒட்டு மொத்தப்போக்கு ஆராய்ச்சிக்காகச் செல்லும் இளம் மாணவர்களை அடிமையாக்கி விடுகிறது. அதற்கு அடிமையானாலொழிய ஆய்வுக்கு அங்கீகாரம் கிடைக்காது என்ற கட்டாயம் சிலரை வீழ்த்துகிறது. பெரும்பாலானவர்கள் அதுதான் அறிவியல்ரீதியான அணுகுமுறை என்ற மாயைக்குள் சிக்கி மெல்லமெல்ல அதன் பிரச்சாரகர்களாக ஆகிவிடுகிறார்கள்

நான் கேட்பது பிரசுரமான ஆதாரங்களை. கைக்குச்சிக்கும் ஆய்வுகளை. எந்த ஒரு களத்தில் ஆராயப் புகுந்தாலும் என் கைக்குச்சிக்கும் ஆய்வுகளில் நூற்றுக்குத் தொண்ணூறு பங்கு இந்தியா பற்றியும் இந்து மதம் பற்றியும் எதிர்மறையான முன்முடிவுகளை மட்டுமே முன்வைப்பவையாக இருக்கும் யதார்த்தத்தைப்பற்றி நான் பேசுகிறேன். அதற்கு அங்கே ஒருவர் அப்படிச் சொல்கிறார், இங்கே ஒருவர் இப்படி எழுதியிருக்கிறார் என்பதல்ல பதில்.

இதை அமெரிக்க-ஐரோப்பியப் பல்கலைகள் அறியாமல் செய்கிறார்கள் என்று நம்ப நான் தயாராக இல்லை. அப்பல்கலைகள் செயல்படும் விதம் அனைவருக்கும் தெரிந்ததே. தொழில்நுட்ப ஆய்வு உட்பட அனைத்துத் தளங்களிலும் தனியார்நிதி சார்ந்தே ஆய்வுத்துறைகள் செயல்படுகின்றன. அந்த நிதிகளை அளிப்பவர் யார், ஏன் அளிக்கிறார்கள் என்று ஆராயும் ஒருவர் மிக எளிதில் அதன்பின்னுள்ள மத அரசியலையும் ஆதிக்க அரசியலையும் கண்டு கொள்ளலாம். கண்களை மூடிக்கொள்வது அவரவர் விருப்பம்

என்னளவில் நான் என்னுடைய தர்க்க புத்திக்கு நிறைவளிக்கும்படி இவ்விஷயங்களைத் தேடி ஆராய்ந்திருக்கிறேன். அமெரிக்க பண்பாட்டு மானுடவியலாளரான் Cora Du Bois அமெரிக்க பல்கலைகளில் மானுடவியல் ஆய்வுகள் எப்படி திடீரென்று பெருகின, அதற்குப்பின்னால் இருந்த நிதியூட்ட அரசியல் என்ன என்பதைப்பற்றி எழுதிய விரிவான அறிக்கை ஒன்றை 1987ல் நான் மொழியாக்கம் செய்திருக்கிறேன். சுருக்கமாகத் தமிழிலும் பிரசுரமாகியிருக்கிறது.

என்வரையில் நான் எனக்கு உறுதியாகத் தெரியும் விஷயங்களையே சொல்கிறேன். இந்தியப்பண்பாடு, இந்துமதம் பற்றிய ஐரோப்பொ-அமெரிக்கப் பல்கலை நோக்குகளை, அவர்களின் நிதி பெற்று அவற்றை அங்கே விழுங்கி அப்படியே இங்கே கக்கும் நம்மூர்க்காரர்களைக் கொஞ்சம் கவனிக்கும் எவருக்கும் கண்ணெதிரே பாறைபோல நிற்கும் இந்த உண்மை தெரியவரும்.

வேண்டுமென்றால் நீங்கள் இந்தியாவில் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதிக்கொண்டிருக்கும் மேனாட்டுப்பல்கலைகளின் தொடர்புள்ள ஆய்வாளர்கள் என்று ஒரு நூறுபேரை எடுத்துக்கொள்ளுங்கள். அத்தனைபேரும் கிட்டத்தட்ட அரசியல்கட்சியின் தொண்டர்களைப்போல ஒரேகுரலில் பேசக்கூடியவர்கள்.

அத்தனைபேரும் சுதந்திரமாக ஆய்வுசெய்து அந்த ஒரேகுரலை அடைந்திருக்கிறார்கள், காரணம் அவர்கள் சொல்வது புறவயமான கல்தூண்போன்ற உண்மை என்று சொல்லமாட்டீர்கள் என நினைக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஉரைகள்
அடுத்த கட்டுரைகமகம்