தன்னறத்தின் எல்லைகள்

அன்புள்ள ஜெயமோகன்,

எனது முந்தைய தன்னறம் பற்றிய கடிதத்திற்கு பதில் வரும் என்று எதிர் பார்த்தேன். உங்கள் பயணங்கள் மற்றும் இதர அலுவல்களின் நடுவே இது போன்ற அச்சு பிச்சு கேள்விகளுக்கு பதில் எதிர்பார்ப்பது தவறு தான்.
ஆனாலும், முயற்சியில் மனம் தளராமல் இன்னும் இரண்டு கேள்விகள் :-)

இன்று உங்கள் வலைத்தளத்தில் ஒரு பழைய கட்டுரை படித்தேன். நீங்கள் உங்கள் சிறு வயதில் கதகளி பார்க்கப் போவது பற்றியது. இதே போன்று நான் கர்நாடக இசை கேட்டு வளர்ந்தேன். தஞ்சாவூரில் வருடா வருடம் ஆகஸ்ட் மாதத்தில் ஆஞ்சநேயர் லோவில் உற்சவம் நடக்கும். வீதியின் குறுக்கே மேடை அமைத்து, கொட்டகை போட்டுக் கச்சேரி. பெரும்பாலான இசை மேதைகள், வல்லுனர்கள் வந்து இசைப்பார்கள். என் அம்மா மடியில் படுத்துக் கேட்ட டிவி. சங்கரநாராயணன் பாடிய கல்யாணி இன்றும் நினைவில் இருக்கிறது.

என் கேள்விக்கு வருகிறேன். நான் இப்பொழுது புனேவில் வசிக்கிறேன். நான் இருக்கும் சூழலில் இது போன்ற மனதில் நிற்கும் அனுபவங்களை என் மகனுக்கு (இப்பொழுது அவனுக்கு இரண்டு வயது தான்) கொடுக்க முடியுமா என்று தெரியவில்லை. இன்றைய பெருநகர வாழ்கையில் குழந்தைகளுக்குக் கிடைக்கும் அனுபவங்கள் உங்கள் (அல்லது எனது) அனுபவம் போல் அவர்கள் நினைவில் இருக்குமா? பெருநகர் சூழலில் வளரும் குழந்தைகளின் எண்ணங்கள் சார்ந்த கதை ஏதாவது எழுதி இருக்கிறீர்களா?

தொடர்புடைய இன்னொரு கேள்வி. பிள்ளைகள் வளர்ப்பில் சரியான முறையில் பங்களிப்பது பற்றி உங்கள் கருத்துக்களைக் கூற முடியுமா? பல நேரங்களில் குழந்தைகளின் பால் கோபப்படுகிறோம், அவர்களின் பிடிவாதங்கள் சரிவரப் புரிவதில்லை. உங்கள் பிள்ளைகளைப் பற்றிய வெளிப்படையான பகிர்தல்களைப் படித்திருக்கிறேன். உங்கள் அனுபவம் எனக்கும் (வலையில் எழுதினால் மற்றவர்களுக்கும்) பயன் அளிக்கும் என் நினைக்கிறேன்.

அன்புடன்,
ஸ்கந்த நாராயணன்

அன்புள்ள ஸ்கந்தா

உங்கள் வினாவுக்கான எல்லா பதில்களையும் வெவ்வேறு கட்டுரைகளில் எழுதியிருக்கிறேன் என்றே நினைக்கிறேன்.

நாம் வாழும் வாழ்க்கைச்சூழலை நாம் விரும்பியபடி அமைத்துக்கொள்ள முடியாது. ஆனால் நாம் நம்மை நமக்குப்பிரியமானபடி தகவமைத்துக்கொள்ள முடியும். அதற்குத்தடையாக இருப்பவை எவை என்பதையே நாம் கவனிக்கவேண்டும். பலசமயம் அதை நாம் காண்பதைத் தவிர்க்கிறோம். அதற்காகவே புறச்சூழலை அதிகமாகக் குற்றம்சுமத்துகிறோம்

நான் பணியில்சேர்ந்தபோது என்னுடன் பணியாற்றிய இன்னொருநண்பர் இருந்தார். இலக்கிய ஆர்வம் இருவருக்கும். சமீபத்தில் அவரைச் சந்தித்தேன். எழுத்தும் வாசிப்பும் ஏதும் இல்லை. ‘எல்லாமே போச்சு, இந்தவேலையால, அலைச்சலாலே’ என்றார்

நானும்தான் வேலையில் இருந்தேன். என் நேரத்தை நான் உருவாக்கிக் கொண்டேன். என்னுடைய இலக்கியப்பணிகளைக் குலைக்குமளவுக்கு வேலையைப் பெரியதாக ஆக்கிக்கொள்ளலாகாது என்று கவனமாக இருந்தேன்.நண்பர் கடுமையாகப் படித்து அதிகாரியாக ஆனார். அதிகாரி வேலையில் மேலே சென்றார். அவரது சவால்கள் அங்கே இருந்தன.

அவர் அந்தவேலைக்குத் தேவையான முழு உழைப்பையும் கொடுத்தார். பதிலுக்கு அதிக ஊதியம், கௌரவம், அதிகாரம் அனைத்தையும் அடைந்தார். விளைவாக இலக்கியத்தை இழந்தார். அந்த இழப்புணர்வு எழும்போதுதான் ’வேலையில்’ சிக்கிக்கொண்டதாக சொல்லிக்கொள்கிறார்

ஒருவர் தனக்கு உண்மையிலேயே எது முக்கியம் என உணர்கிறாரோ அதை செய்யமுடியும் என்றே நான் நினைக்கிறேன். பலசமயம் எளிய உலகியல் ஆசைகளால் அவர் தன்னைத் திசைதிருப்பிக்கொள்கிறார். தன் அகத்துக்கு முக்கியமானதை அழித்துக்கொள்கிறார்.

குழந்தைகள் விஷயத்திலும் இதையே சொல்வேன். குழந்தைகளை நாம் விரும்பியபடி ஆக்க முடியாது. அவர்களின் அகஇயல்பும் அவர்களுக்குரிய சூழலும் சேர்ந்து அவர்களை வடிவமைக்கின்றன. அவர்கள் முன் நாம் இயல்பாக முழுமையாக நம்மை முன்வைத்தாலே போதுமானது

ஜெ

முந்தைய கட்டுரைமத்தகம்-கடிதம்
அடுத்த கட்டுரைசாதி-கடிதங்கள்