கடிதங்கள்

ஜெ,
வணக்கம். நான் என்ன வாசித்தாலும் எல்லாம் மறந்து விடுகிறது. உண்மையிலேயே மறந்து விடுகிறதா இல்லை மறந்து விடுவது போல தோணுகிறதா என்று தெரியவில்லை. அதுபோல சில வரிகளை வாசித்தவுடன் மீண்டும் திரும்ப திரும்ப வாசித்தால்தான் புரிகிறது. இது கவனக் குறைவினாலா இல்லை வாசிப்பதில் அனுபவம் இல்லாமையைக் காட்டுகிறதா? இது போன்று நீங்கள் யாரிடமாவது கண்டு இருக்கிறீர்களா அல்லது உங்கள் வாசகர் யாராவது சொல்லிக் கேட்டு இருக்கிறீர்களா? இல்லை ஒருவேளை இது எனக்கு மட்டும் உள்ள குறைபாடா? எனது பத்து வயது மகன் தினமும் 30 நிமிடங்கள் தவறாது தடங்கலின்றி வாசிக்கிறான் பொறாமையாக உள்ளது. ஒருபக்கம் வெட்காமாகவும் உள்ளது. ஆம் ஒத்துக்கொள்கிறேன்…இது ஒன்றாம் வகுப்பு கேள்விதான்….

அன்புடன்
அருள்

அன்புள்ள அருள்

சின்னவினாவாக இருக்கலாம். ஆனால் இதை என்னிடம் பலர் கேட்கிறார்கள். இதற்கான பதிலையும் நான் திருப்பித்திருப்பிச் சொல்கிறேன்.

தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கும் ஒருவர் வாசித்த விஷயங்களைப்பற்றி யோசிக்காமலும் விவாதிக்காமலும் இருந்தால் அவை விரைவிலேயே மறந்துபோகும். நமக்குள் இன்னொருவரின் சொற்களும் சிந்தனைகளும் ஒருபோதும் எஞ்சாது. சாப்பிட்ட உணவு உடலில் தங்காதது போலத்தான். அவை நமது சொந்தச்சிந்தனைகளாக மாறினால் மட்டுமே நம்மிடம் அவை தங்கும். நேரடியான வரிகளாக எஞ்சக்கூடியவைகூட நமது சொந்த வார்த்தைகளாக மாறிவிட்டிருக்கும். உண்மையிலேயே சிந்திக்கக்கூடிய ஒருவர் ஒரு மேற்கோளைச் சொல்லும்போது அதில் அவருக்கான நுட்பமான மாறுதல் ஒன்று நிகழ்ந்திருப்பதைக் காணலாம்

வாசித்தவற்றைப்பற்றி யோசியுங்கள். யோசிப்பதற்கு பலவகையான பாவனைகள் உள்ளன. ஒரு மேடையில் அவற்றைப் பேசுவதுபோல, ஒரு எதிர்த் தரப்பிடம் விவாதிப்பது போல, ஒரு நண்பனுக்கு விளக்குவதுபோலக் கற்பனைசெய்துகொண்டு யோசிக்கலாம். வாசித்தவற்றை விவாதிக்கமுடிந்தால் மிக நல்லது. சொந்தச்சொற்களில் எழுதிவைக்கமுடிந்தால் மிகமிக நல்லது

ஜெ

ஆசிரியருக்கு ,
என்ன ஆயிற்று உங்களுக்கு ,
கம்பன் நிகழாத களங்கள்
“ஒரு பூவின் பொறியியல்கட்டுமானத்தை எந்த மகத்தான கட்டிடத்திலும் பார்க்கமுடியாது என்பார் லாரிபேக்கர்..”
“அது உள்ளே நிகழும் ஒரு குறியீட்டுச்சரடு. மொழியைப் பிரக்ஞையில் இருந்து மேலும் ஆழத்துக்குக் கொண்டுசென்று கனவுக்குள் நிலைநிறுத்துவதன் விளைவே இலக்கியம்”
“ஒரு காலகட்டத்தின் திறப்புத்துளை என்று சொல்லலாம். அப்படியென்றால் அவன் வழியாக நிகழ்வது அவனைவிடப்பெரிய ஒன்றுதான். அவன் அவனே அறியாத தெய்வங்கள் வந்து ஆடிச்செல்லும் உடலும் நாவும் மட்டும்தான்.”
கனி
“பேரழகும் பாவமும். தாய்மையும் பாவமும். களங்கமற்ற குழந்தைமையும் பாவமும். கைமாறப்படும் பாவம். அழியாமல் தலைமுறைகளில் நீடிக்கும் பேரழகு கொண்ட புனிதபாவம்”

போன்ற வரிகள் உண்மையில் அதிரச் செய்கின்றன , ஏதோ பேயின் பிடியில் இருக்கிறீர்கள் அல்லது கடவுளின். புனைவுக்கும் அபுனைவுக்கும் உள்ள வேறுபாட்டை அல்லது எல்லைக் கோட்டை உங்கள் தொடர்ச்சியான எழுத்துகளின்மூலம் இல்லாமல் செய்து விட்டீர்கள். கட்டுரைகளிலேயே கவித்துவமும் புனைவும் உங்கள் பிற புனைவுகளுக்கு ஈடாகப் பிறக்கிறது . இவ்வாளவு எழுதியும் , இவ்வளவு படிமங்களைக் கொட்டியும் , உவமைகளையும் குறியீடுகளையும் அள்ளி இறைத்தும் அவை அவ்வளவையும் படித்தும் ஏனோ சொற்றொடராக ஏதும் நினைவில் மிஞ்சுவதில்லை. நமது ஆலப் புழை சந்திப்பிற்குப் பின் திரும்பும் பொழுது அந்நகரின் அழகிய கடற்கரைக்குச் சென்றிருந்தோம் , அலைகளின் விளிம்பில் நினைத்தேன் எவ்வளவு நதிகள் , குளங்கள் , கடல்கள் எனப் பார்த்திருப்போம் எந்த அலையும் நினைவில் இல்லை. அலைகள் நம்மை நோக்கிக் கடலை வாரிக் கொட்டிக் கொண்டே இருக்கிறது , ஒரு அலை வந்து பதித்த தடத்தை மறு அலை வந்து அழிக்கிறது , நமது நினைவில் இருந்தும். அல்லது நாம் பயணிக்க பயணிக்க ,நிகழ்வுகள் நடக்க நடக்க , புது அனுபவங்கள் நமதாகிறது அது பழைய அனுபவங்களை அணைத்துத் தனதாகிக் கொள்கிறது. இதுதான் உங்கள் எழுத்தைத் தொடர்ந்து படிக்கும் எனக்கும் நிகழ்கிறது .

ஒன்றை உணர்கிறேன், இது போன்ற வாக்கியங்களால் நீங்கள் சற்று அன்னியமாகிறீர்கள், நமக்கிடையே சற்று இடைவெளி விழுகிறது .

கிருஷ்ணன்.

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைசோற்றுக்கல்வியும் சரியான கல்வியும்