அன்புள்ள ஜெ ,
அம்மையப்பம் பற்றி
எவ்வளவு சிறந்த தொழில் நுட்ப வடிவமும் வெகு சீக்கிரத்திலேயே அதன்
வசீகரத்தை இழந்து விடும் ,(எனக்கு காந்தி பாரிசில் கண்ட ஈபிள் டவரைப் பற்றி எழுதியிருந்தது ஞாபகம் வருகிறது) .கலையில் அதன் படைப்பாளி எப்படியோ அதனுள் உயிரைக் கொண்டுவந்து விடுகிறான்,அதற்காக அவன் மற்ற அனைத்திலும் தோல்வி அடைவதுதான் சோகம், என்ன செய்வது காளி மார்பில் வைத்து அமுதூட்டுவதில்லை,காலடியில் கிடத்தியே அமுதூட்டுவேன் என்கிறாள். எந்தஅளவு அவன் சமூகத்தின் முன் கோமாளியாகப் பார்க்கப் படுகிறானோ அந்த அளவு கலை அவனை
நெருங்கும். நன்றாக சம்பாதிக்கும் கணவனே நல்ல கணவன் என்று நினைக்கும் ஒரு பெண் அவன் மனைவியானாள் என்றால் எப்படியும் மூன்று மாதத்திற்குள் ஓடி விடுவாள் ,பின்பு அவள் நினைவுடன் அலைய வேண்டியதுதான் கிறுக்கு ஆசாரி போல.
உண்மையில் அந்தக் கிறுக்கு ஆசாரியின் மகத்துவம் அவளுக்குத் தெரியும் ,அதனால் தான் அவனை அடிக்கும் தன் இரண்டாவது கணவனைக் கண்டிக்கிறாள், வசதியுடன் ஒரு சுகமான வாழ்வு திருமணத்தின் மூலமாக அமைய வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெண்ணும் விரும்புவாள் ,ஆசாரி போன்ற ஒரு கணவர் வாய்க்கும் போது பாவம் அவளும் என்ன செய்வாள், ….
தொழில் நுட்பம் எனது ஒரு கணிதம்(சமன் பாடு) , இந்த அளவில் இப்படி
இப்படி வைத்தால் இந்த உருவம் வரும் என்பது மாதிரியான ஒரு கணக்கு,அதை அறிந்து கொண்டால் போதும், நாம் நினைத்ததை விட சிறப்பாக ஒன்று வந்தால் கூட போதும் அதில் கலையின் கை சரஸ்வதியின் கை துளியாவது இருக்கும், திட்ட மிட்டு உருவாக்கப் படுவதில் அதன் சாத்தியம் மிகக்குறைவு,இருந்தும் அதற்கான அழகு அதில் உண்டு,ஆனால் ஒரு வட்டம் காம்பஸ் இல் வரையும் போது கிடைக்கும்
வட்டம் ஒரு போதும் கைகளால் கொண்டு வந்து விட முடியாது, இது போன்ற
சாத்தியங்கள்தான் தொழில் நுட்பத்தின் இடத்தைத் தக்க வைக்கிறது,ஆனால்
தொழில் நுட்பம் நமக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணுமே ஒழிய ,
புன்னகையை நம்மிடம் ஏற்படுத்தி விட முடியாது .
அன்புள்ள ராதாகிருஷ்ணன்
ஒரே வரியில் சொல்லலாம். தெரிந்ததைச் செய்வது தொழில்நுட்பம். தெரியாததையும் செய்வதுதான் கலை.
ஜெ