இடப்பெயர்கள்

அன்புக்குரிய ஜெயமோகன் அண்ணாவிற்கு,

வணக்கம்.எனது ஊரின் பெயர் நாரந்தனை.இது யாழ்ப்பாண மாவட்டதில் உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன்பு நாரந்தனை மறுமலர்ச்சி மன்றமும் பாரதி சனசமூக நிலையமும் இணைந்து ஒரு நூலை வெளியிட்டிருந்தன.அந்த நூலில் எங்களின் ஊரின் பெயருக்குக் காரணம் என்ன என்பதை விளக்கி ஆய்வுக்கட்டுரையொன்றும் எழுதப்பட்டிருந்தது.நாரந்தனைக்கு அண்மையில் உள்ள ஊர்களில் இரண்டின் பெயர் சரவணை மற்றும் வேலணை ஆகும்.கட்டுரையில் இப்பெயர்கள் நாராயணன்+ தானை= நாரந்தனை,சரவணன்+தானை=சரவணை,வேலவன்+தானை=வேலணை என்று பொருள் பிரிக்கப்பட்டு நாராயணன்,சரவணன்,வேலவன் என்பவர்களின் படையணிகள் நின்ற இடங்கள் என்றும் அவர்கள் சோழர்களின் படைத்தளபதிகளாக இருந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிறுவயதில் அக்கட்டுரையை ஆர்வத்துடன் வாசித்தபொழுதும் அவ்விளக்கத்தை என்னால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.கட்டுரையை எழுதியிருந்தவர் அப்பாவிற்கு மச்சான் முறையானவர்.ஆயுர்வேத வைத்தியத்தை முறைப்படி பயின்றவர்,உள்ளூரளவில் ஒரு கவிஞர்.நான் அப்பாவிடம் “இந்த விளக்கம் நம்பிறமாதிரி இல்லை,டொக்டர் கற்பனையில் எழுதியிருக்கிறார்”என்று சொன்னதற்கு அவர் “பெரிய மச்சான் வரும்போது நீயே நேரில கேளு” என்று கூறிவிட்டார்.மருத்துவருடைய ஊர்ப்பெயர் விளக்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆதாரங்கள் எதையும் தரவில்லை என்று நான் நினைத்த போதிலும் அதை எதிர்த்து வாதிடுவதற்கு என்னிடம் எதுவும் இருக்கவில்லை என்பதனால் நான் கேட்கவில்லை.

சோழர்கால நாணயங்களும் ஐம்பொன்னாலான அம்மன் சிலையும் நாரந்தனை வடக்கில் நிலத்தடியில் இருந்து கிடைத்திருந்தன.அவ்விடத்திலேயே தற்போதைய தான்தோன்றி மனோன்மணி அம்மன் கோயில் அமைந்துள்ளது.நாரந்தனையில் இருந்து சில கிலோமீற்றர் தொலைவில் உள்ள ஊர்காவற்துறை பண்டைக்காலத் துறைமுகங்களில் ஒன்று.அத்துறைமுகத்தினூடாக நடந்த வர்த்தகத்தை ஒழுங்கு படுத்தும் குறிப்புக்கொண்ட முதலாம் பராக்கிரமபாகு மன்னனுடைய தமிழ் கல்வெட்டு கிடைத்துள்ளது.

இலங்கைத்தீவின் வட,கிழக்குப் பிராந்தியம் சோழர் காலத்தில் தென்னிலங்கை,தென்கிழக்காசியா போன்றவற்றுடனான வர்த்தக நடவடிக்கைகளுக்கும் படையெடுப்புக்களுக்குமான ஒரு துள்ளுபலகையாக(springboard) பல்லாண்டுகாலம் விளங்கிவந்திருக்கின்றது என்பதனை வரலாறு காட்டுகின்றது.அவருடைய ஊர்ப்பெயர் விளக்கத்திற்கு இவையே உந்துதலாக இருந்திருக்கக்கூடும்.அக்கட்டுரையை ஏற்றுக்கொள்ளமுடியாவிட்டாலும் ஊர்ப்பெயர்கள் எப்படிவந்தன என்ற தேடலுக்கு அது முக்கியமான ஆர்வமூட்டலாக அமைந்தது.அதன் பின்னர் இடப்பெயர்கள் தொடர்பாக பல கட்டுரைகள்,நூல்களைத் தேடிவாசித்திருப்பேன்.எவையும் திருப்தியளிக்கக் கூடியதாக இருக்கவில்லை.பெரும்பாலானவர்கள் ஆய்வு என்ற பெயரில் கதை அளந்திருந்தார்கள்.

இவர்கள் ஒரு புறம் என்றால் மறுபக்கம் சிங்கள இனவாத வரலாற்று ஆய்வாளர்கள் இவ்வாறான பெயர்கள் எல்லாம் அடிப்படையில் சிங்களப்பெயர்கள் தமிழ்ப்படையெடுப்பாளர்கள் எல்லாம் சிங்களவர்களைப் பூர்வீக இடங்களில் இருந்து விரட்டிவிட்டு இங்கு குடியேறிவிட்டனர் என்பதற்கு இவை சான்று என்று வெறுப்பைக் கக்குவார்கள்.அவர்களின் கருத்தே முரண்நகையானது.ஒரு பேச்சுக்கு அப்பெயர்கள் எல்லாம் சிங்களப்பெயர்கள் என்றே வைத்துக்கொள்வோம்.தமிழ்ப்படையெடுப்பாளர்கள் சிங்களவர்களைத் துரத்திவிட்டு அப்பகுதியில் குடியேறியிருந்தால் எவ்வாறு அப்பெயர்கள் நீடித்திருக்க முடியும்?அவர்கள் வேறுபெயரில் அல்லவா அழைத்திருப்பார்கள்.

இவ்வாறான பல்வேறு குழப்பங்களுக்கும் காரணம் பல ஊர்ப்பெயர்களும் இடப்பெயர்களும் தற்போதைய எளிய தமிழில் இல்லை என்பதுதான்.இது பெயர்களின் பழைமையையும் காட்டுகின்றது.ஆயினும் ஒன்றை உறுதியாகக் கூறலாம்.பண்டைக்காலத்தில் சிந்தித்து,திட்டமிட்டு சிக்கலான பெயர்களை இட்டிருக்கமாட்டார்கள்.பெரும்பாலானவை தேனீப்பாதை(beeline) போன்று நேரடியாகவே இருந்திருக்கும்.கால ஓட்டத்தில் மொழியின் மாற்றங்களால் புரிந்துகொள்வதற்குக் கடினமானவையாக மாறிவிட்டிருக்கின்றன.
இதை எவ்வாறு உடைப்பது?இதனை தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் ஆழ்ந்த அறிவு,மொழிகளின் ஒப்பியல் அறிவு,வரலாற்று அறிவு,புவியியல் அறிவு,சூழியல் அறிவு என்று பல்துறை அறிவு மிகுந்த ஒருவரினால்தான் செய்யமுடியும்.

மிகவும் புகழ்பெற்ற செய்தித்தளமான தமிழ்நெட்டின் வலதுமேல் மூலையில் தொடர்ச்சியாக வரும் (Know the Etymology) என்ற இடப்பெயர் ஆய்வுக்கட்டுரைத்தொடர் பல்வேறு கோணங்களில் புதிய பாதைகளைத் திறக்கின்றது.மிகவும் சிறந்த ஆய்வுத்தொடர்.இந்த வரலாற்றுப் பணியை ஆற்றும் அறிஞர் யார் என்பதை அறிய பலரிடம் விசாரித்துவிட்டேன்.உறுதியான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

http://www.tamilnet.com/art.html?catid=98&artid=22917

ந.சிவேந்திரன்

அன்புள்ள சிவேந்திரன்

இடப்பெயர் ஆராய்ச்சி பற்றி ஒருவகை ஒவ்வாமை எனக்குண்டு. அது இங்கே தமிழ்நாட்டில் இடப்பெயர் சார்ந்து ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் அடிக்கும் லூட்டிகளைக் கண்டு ஏற்பட்ட கடுப்பின் விளைவு

இடப்பெயர் ஆய்வு என்பது முதன்மையாக வரலாற்றாய்வுதான். தமிழக வரலாற்றின் விரிந்த சித்திரத்தையும் ,அந்தக் குறிப்பிட்ட இடத்தின் நுண்வரலாற்றையும் அறியாமல் செய்யக்கூடிய ஆய்வுகள் வெறும் அசட்டுக்கற்பனைகள் மட்டுமே

அதேபோல இடப்பெயர்கள் சமூகவியல் பின்னணியுடன் இணைத்துப்பார்க்கவேண்டியவை.ஒரு நிலப்பகுதியில் மக்கள்குடியேற்றம் நிகழ்ந்த விதம், அங்குள்ள சாதியமைப்பு, அங்கே செய்யப்பட்டும் தொழில்கள் என பலவிஷயங்களைக் கருத்தில் கொண்டே இடப்பெயர்களைப் புரிந்துகொள்ளவேண்டும்.

இங்கே என் இல்லத்தருகே கேரள இடப்பெயர் வரலாற்றாய்வின் முன்னோடியான பேராசிரியர் திரிவிக்ரமன் தம்பி வாழ்ந்திருந்தார், 2008இல் தன் எண்பத்திரண்டாவது வயதில் மரணமடைந்தார். தம்பியவர்களை நான் அனேகமாக தினமும் சந்தித்து உரையாடிவந்தேன்.

ஒருமுறை இடப்பெயர் ஆய்வுக்கு அவர் தனக்கென வகுத்து வைத்திருந்த விதிகளைச் சொன்னார்

1. ஒருபோதும் ஓர் இடத்தின் பெயர் ‘போடப்பட்டது’ என்ற கோணத்தில் ஆராயக்கூடாது. ‘உருவாகிவந்தது’ என்ற கோணத்திலேயே ஆராயவேண்டும். ஆகவே பெரும்பாலும் இடப்பெயர்கள் மக்கள்வழக்கிலிருந்து உருவானவையாகவே இருக்கும். அறிஞர்களின் உருவாக்கமாக இருக்காது.

உதாரணமாக மஞ்சாலுமூடு என்று ஒரு ஊர். அதன் பொருள் மஞ்சள் ஆல மரத்தின் அடி. அதை ஒரு ஆசாமி மஞ்சு அலையும் முகடு என்ற சொல்லின் மரூ என விளக்கிக் கட்டுரை எழுதியிருந்தார். அபத்தம்.

2. இடப்பெயர்கள் அமையும் விதத்துக்கு அச்சமூகத்தின் ஒட்டுமொத்தப் பண்பாடு சார்ந்து சில தர்க்கவிதிகள் இருக்கும். அந்தப்பண்பாட்டுக்குள் அந்தந்தப் பகுதிகள் சார்ந்து தனியான தர்க்கவிதிகள் இருக்கும். ஒரு இடத்தின் பெயர் அமைந்த அதே முறைமை அப்பகுதியில் உள்ள வேறுபல ஊர்களுக்கும் செல்லுபடியாகக்கூடியதாக இருக்கவேண்டும்.

தெற்குக் கேரளத்தின் ஊர்ப்பெயர்கள் கரை என்ற சொல்முடிவுடன் இருப்பது இப்பகுதியின் நிலவியல் சார்ந்தது. நீர்தேங்காத மேடுகளில்தான் இங்கே வீடுகள் அமைக்கப்படுகின்றன. அவை கரை என்றே புழங்கப்படுகின்றன. அவ்வாறு உருவான ஊர்களே கரை என்ற சொல்முடிவு கொண்டுள்ளன

அகவே திடீரென்று ஒர் ஊரை மட்டும் அங்கே கலங்கரை விளக்கம் இருந்தமையால் கரை என்று பெயர்வந்தது என்று ஒருவர் விளக்க ஆரம்பித்தால் அது மடமை

3. ஒரு ஊர்ப்பெயருக்கு அளிக்கப்படும் விளக்கம் முதலில் அப்பகுதியின் வரலாற்றாராய்ச்சியில் இருந்தே தொடங்கவேண்டும். ஒரு ஊரின் பெயர் ஆகப்பழைய ஆவணத்தில் எவ்வாறு இருக்கிறது என்பதைத்தான் முதலில் தேடவேண்டும்.

உதாரணமாக சுசீந்திரம்.தொழுநோய் வந்த இந்திரன் தன்னை சுத்தம் செய்துகொண்ட ஊரானதனால் சுசீ + இந்திரம் என்ற பொருளில் அப்பெயர் வந்தது இன்று புராணக்கதை சொல்கிறார்கள். இந்தப்புராணக்கதைக்கு நூறு வருட ஆயுள்தான். ஆனால் சுசீந்திரம் தலத்தின் பழைய கல்வெட்டுகள் அனைத்தும் அதை சிவிந்திரம் என்றே சொல்கின்றன. சிவ+ இந்திரம். இந்திரன் சிவனை வழிபட்ட தலம் அது.

4. ஒரு இடத்துக்கு ஒருபோதும் சம்ஸ்கிருதப்பெயர் மூலப்பெயராக இருக்காது. விதிவிலக்கு, திட்டமிட்டு அரசர்கள் உருவாக்கிய சில நகரங்கள். சம்ஸ்கிருதப்பெயர்கள் அதிகமும் பத்தாம்நூற்றாண்டில் ஆலயபூஜைகள் ஆகம மயமாக்கப்பட்டபோது உருவானவை என்பதே தமிழ்வரலாற்றைக்கொண்டு பார்க்கையில் கிடைக்கும் புரிதலாகும்.

இந்தவிதிகளெல்லாம் தமிழுக்கும் பொருந்தக்கூடியவை என்றே நான் நினைக்கிறேன். இவ்விதிகளைக்கொண்டு ஆராய்ந்தால் இடப்பெயர்களை முறையாகப் பொருள்கொள்ளலாம். அது ஒரு சமூகம் தன் நுண்வரலாற்றை எழுதுவதன் முதல்படியாகும். தனிநபர் செய்யக்கூடிய செயல் அல்ல. தொடர்ச்சியாக ஏராளமானவர்கள் செய்து ஓர் இயக்கமாகவே நிகழவேண்டியது

குடும்பவரலாறுகளும், குலவரலாறுகளும் ,கிராமவரலாறுகளும் எழுதப்படும்போதே நாம் நம் சமூகத்தின் வரலாற்றை , அதாவது மக்கள் வரலாற்றை எழுதமுடியும்.

என் வரையில் தம்பி அவர்களின் நூல்கள் நான் விஷ்ணுபுரத்தின் இடங்களுக்குப் பெயரிட பெரிதும் உதவின. அதில் ஒவ்வொரு ஊருக்கும் மூன்றடுக்குப் பெயர் இருக்கும். சம்ஸ்கிருதப்பெயர் சாஸ்திரங்களில். தமிழ்ப்பெயர் செவ்வியல் இலக்கியத்தில். அடியில் ஒரு பழங்குடிப்பெயர் இருக்கும்.

ஜெ

முந்தைய கட்டுரைஉளச்சிக்கலும் இலக்கியமும்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன்