அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம் ,நான் கடந்த ஐந்தாறு வருடங்களாக ,தங்கள் தளத்தைத் தொடர்ந்து வருகிறேன்…சங்க சித்திரங்களின்(விகடன்) வாயிலாகத் தங்களை அறிந்தேன். நான் வாசித்த உங்களது முதல் நூல் “அமர்தல் அலைதல்”,பிறகு தங்களது பெரும்பான்மையான “தத்துவம் ,ஆன்மிகம் ,மதம் ” சார்ந்த கட்டுரைகள், மற்றும் “ஊமைச்செந்நாய் “,”யானை டாக்டர் “,”மாடன் மோட்சம் “,”உற்று நோக்கும் பறவை “,போன்ற சில பிற கதைகளையும் ,கட்டுரை வகைகளையும் வாசித்திருக்கிறேன்…உங்களை எழுத்தாளர் என்ற எல்லையைக் கடந்து எனது நெருங்கியவராகவே உணர்கிறேன்.
இந்தக் கடிதம் ஒரு வாசகனாக என்னை அறிமுகம் செய்வதோடல்லாமல் எனது தனிப்பட்ட சில பகிர்தலாகும் .
எனக்குக் கடந்த பத்தாண்டுகளாக உளச்சிக்கல் உள்ளது.ஆரம்ப கால இரண்டாண்டுகளுக்குப் பிறகே சிக்கலைத் தீர்க்க இயலாமல் மருத்துவரை அணுகினேன் (இருபத்திமூன்றாம் வயதில்) EEG,MRI SCAN போன்ற பரிசோதனைகளுக்குப் பிறகு எனக்கு மூளையில் எண்ணஅலைகள் ஓட்டம் அதிகரிப்பதாகவும்(Fits, but not Physically) மற்றும் OCD (obsessive compulsive disorder )இருப்பதாகவும் கூறினார் .இதற்கு counselling மற்றும் மருந்துகளும் அளித்தார் .ஒரு வருடத் தொடர்சிகிச்சையில் சிறிது முன்னேற்றம் ஏற்பட்டது.ஆனால் பகல் தூக்கமும், கை நடுக்கமும் ஏற்பட்டது.இதன் காரணமாக சிகிச்சையைத் தொடரவில்லை,இரு மாதங்களில் பிரச்சனை மீண்டும் ஏற்பட்டது .மீண்டும் மருத்துவரை அணுகியபோது பாதியில் நிறுத்தினால் சிக்கல் அதிகமாகும் என்றார் .எனவே மறுபடியும் ஒருவருடம் தொடர்ந்தேன்,குணமாகப் பல வருட சிகிச்சை தேவைப்படும் என்றார் . பின் எனது பொருளியல் சிக்கல் காரணமாக சிகிச்சை தொடர முடியவில்லை.தற்போது எனது வயது 32,இன்னும் மணமாகவில்லை.ஒரு தனியார் நிறுவனத்தில் Mechanical Design Engineer ஆகப் பணிபுரிகிறேன்.
இந்த சிக்கல் இன்னும் தீரவில்லை.இன்னும் உக்கிரமாக இருக்கிறது.உதாரணமாக எனக்கு மிக நெருக்கமானவரையே கொடூரமாகத் துன்புறுத்துவது போன்று நினைத்து என்னை நானே துன்புறுத்திக்கொள்கிறேன். இந்த எண்ணம் எனது கட்டுப்பாடில்லாமல் வருகிறது .இன்னும் இது போல் பல உள்ளது.நான் ஒரு நாள் கூட நிம்மதியாக இருந்ததில்லை.
எனது பதின்மூன்றாம் வயதில் தியான வகுப்புகளுக்குச் சென்றேன் (வேதாத்ரி மகரிஷி ) ..பிறகு இருபதுகளில் ஓஷோ,ஜே.கே,போன்றவர்களின் நூல்களைப் படித்துப் பல உளச் சிக்கல்களுக்கு ஆளானேன்,இவர்களின் வழியாக தியானம் போன்ற சில முயற்சிகளை செய்தேன்.
எனது சிக்கல் இதன் காரணமாகவா அல்லது உயிரியல் ரீதியாகவா என்று தெரியவில்லை.அலோபதி மருத்துவத்தில் நரம்புத் தளர்ச்சி போன்ற பக்க விளைவுகள் உண்டு.
இயற்கை மருத்துவம், மற்றும் ஆயுர்வேதத்தில் ஏதேனும் சிகிச்சை முறைகள் உள்ளனவா என்று வழிகாட்ட வேண்டுகிறேன் .
சமீபத்தில் விஷ்ணுபுரம் விழாவிற்கு வந்திருந்தேன் ,தயக்கம் காரணமாக அறிமுகப்படுத்திக்கொள்ளவில்லை,பிறிதொரு சந்தர்ப்பத்தில் தங்களுடன் நேரில் உரையாட ஆவலாய் உள்ளேன்.
அன்புடன் ,
ராஜ்
அன்புள்ள ராஜ்
உங்கள் கடிதத்தைத் தாமதமாகவே பார்த்தேன். ஸ்பாமில் கிடந்தது. மன்னிக்கவும்
உங்கள் சிக்கல் மருத்துவம் சார்ந்தது. அதற்கு முறையான மருத்துவ ஆலோசனைதான் பெறவேண்டும். மருத்துவ உதவியை அளிப்பவர் அனுபவம் உள்ள முதிர்ந்த மருத்துவராக இருப்பது நல்லது. கூடவே உங்கள் மனத்தின் அலைகளை மாற்றிக்கொள்ள நீங்களும் தொடர்ந்து முயலவேண்டும்
ஒன்றைமட்டும் சொல்லிக்கொள்வேன். மனநிலை சீராக இல்லாத போது இலக்கியங்கள் வாசிப்பது, சினிமாக்கள் பார்ப்பது எல்லாமே தவறுதான்.அவை மனதின் அலைகளை அதிகரிக்கும். எளிய இனிய விஷயங்களில் மட்டும் ஈடுபடுவதே நல்லது
அதேபோல தியானம் போன்றவற்றையும் கண்டிப்பாகச் செய்யக்கூடாது. அவை பிரச்சினையை அதிகரிக்கும். உளவியல் வழிகாட்டலை மட்டுமே தொடருங்கள்
ஜெ