பின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு

உங்களின் “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலைப் படித்துக்கொண்டிருக்கிறேன். அதில் நீங்களும் ஒரு கதாபாத்திரமாக வருகிறீர்கள். திரைப்படங்களில் “cameo” என்று வருவது போல, நகைச்சுவை கௌரவ பாத்திரமாக நீங்களே வந்திருக்கிறீர்கள். அதற்கான காரணம் கதையிலேயே இருக்கக்கூடும். இப்போது நான் இருநூறாம் பக்கத்தில் இருக்கிறேன். தத்துவங்களின் தருக்கங்களாகத் தீவிரமாக நகரும் பக்கங்களில், உங்களின் பாத்திரம் புன்முறுவலை வரவழைத்து, வாசிப்பைக் கொஞ்சம் லேசாக்குகிறது. இந்த உத்தி எந்த ரகத்தைச்சார்ந்தது?

நன்றி
கணேஷ்
நியூ டெல்லி

அன்புள்ள கணேஷ்

பின் தொடரும் நிழலின் குரல் எழுதிவந்தபோது ஒன்று தோன்றியது,அரசியல் கருத்துக்கள் வைரஸ்கள் போல. உடல் இல்லாமல் அவை வாழமுடியாது. எந்த அரசியல் கருத்தும் யாருடைய கருத்து என்ற வினாவால்தான் அர்த்தம் கொள்கிறது. ஆகவே எல்லாக் கருத்துக்களுக்கும் அவற்றைச்சார்ந்த வலுவான கதாபாத்திரங்கள் அமைந்தன.

ஒரு அரசியல் கருத்து ஒருவரில் வெளிப்படுகிறது. அதைப் பார்க்கும் இன்னொருவர்தான் அதை மதிப்பிடுகிறார். இப்படி எல்லாக்கருத்தும் இன்னொருவரால் மதிப்பிடப்படுகிறது அதில். ஒட்டுமொத்தமாக நாவல் எவருடைய பார்வையில் முன்வைக்கலாமென்ற எண்ணம் எழுந்தபோது ஆசிரியனே கதைக்குள் வந்தான்

நான் அன்று பிறருக்கு எப்படி இருந்தேனோ அப்படி. அல்லது என்னுடைய பல தோற்றங்களில் ஒன்று. உறுதியான நிலைப்பாடுகளில்லாத உணர்ச்சிகரமான ஓர் இளைஞனாக அந்த ஆசிரியர் கதாபாத்திரம் இருக்கையில்தான் நாவலின் அடிப்படையானஅறவிவாதம் அதற்கான சரியான நோக்கை அடையமுடியும் என்று பட்டது.

இத்தகைய உத்தியை நவீன நாவலில் மெட்டாஃபிக்‌ஷன் என்கிறார்கள். ஆனால் இது நமக்குப் புதியது அல்ல. இளங்கோவின் சிலம்பிலேயே அதை நாம் காண்கிறோம்.

ஜெ

முந்தைய கட்டுரைகாந்தியும் கம்யூனிசமும்
அடுத்த கட்டுரைபகத்சிங் ஒரு கடிதம்