சடங்குகளை எப்படி தேர்ந்தெடுப்பது?

அன்புள்ள ஜெ.

சடங்குகள் மற்றும் உருவ வழிபாடுகளின் பயன், மதம் என்ற மாபெரும் குறியீட்டமைப்பு போன்றவை பற்றிப் பேசியிருக்கிறீர்கள்.வைதீக மதச் சடங்குகளைப் பற்றி எனக்கும் என் தம்பிக்கும் ஒரு கேள்வி:

உண்மையான அர்த்தங்கள் கொண்ட சடங்குகளைக் கூடவே சேர்ந்த வறட்டு ஆசாரங்களிலிருந்து பிரித்து அடையாளம் காண்பது எப்படி ? எல்லாவற்றிலும் ஒரு உள்ளர்த்தம் இருக்கும் என்று நம்பி செய்தாலும் சில சமயம் அலுப்பாக இருக்கிறது – இதோடு பெரிசுகளின் அரைகுறை ஞானமும் தோரணையும் வேறு
கடுப்பைக் கிளப்புகிறது.

மொத்த வாழ்க்கையுமே தேடலுக்கு என்று அர்ப்பணிக்காமல் ஒரு சாமானியப் பொருளியல் தளத்தில் நின்றுகொண்டு, தர்க்கம் வாசிப்பு போன்றவற்றின் மூலம் இன்று இந்தச் சடங்குகளின் ஆழங்களை அறிந்து கொண்டுவிட முடியுமா ?

நன்றி
மது

அன்புள்ள மது,

ஒரு இந்து எந்தச்சடங்கையும் செய்தாகவேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. சடங்குகளைச் செய்ய மறுப்பதற்கான எல்லா உரிமையும் இந்துவுக்கு உள்ளது. ஆகவே வேண்டாவெறுப்பாக எதையுமே செய்யவேண்டியதில்லை என்று சொல்லலாம்

எவற்றைத் தவிர்ப்பது?

1. ஒருசடங்கு அடிப்படை மனித உரிமைக்கு எதிரானதாக இருக்குமென்று தோன்றினால் ஒருபோதும் அதைச் செய்யக்கூடாது. பல சடங்குகள் நமது சென்றகாலப் பழங்குடி வாழ்க்கையின் எச்சங்கள். அன்றைய சாதியமைப்பு குலஅமைப்பு சார்ந்தவை. இன்று அவை சகமனிதர்களை அவமதிப்பவையாக ஆகிவிட்டிருக்கலாம்.

உதாரணமாக இறந்த வீடுகளில் சலவைக்காரர், நாவிதர் போன்றவர்களை சிலவற்றைச் செய்யச் சொல்லி நிகழ்த்தப்படும் சடங்குகளைச் சொல்லலாம். எந்த விரிவான வாசிப்பும் இல்லாத என் அண்ணா என் அப்பா அம்மா இறந்த தருணங்களில் சலவைக்காரர், நாவிதர் போன்றவர்களுக்குக் கொடுக்கவேண்டிய பணத்தைக் கொடுத்துவிட்டு எல்லாவற்றையும் தானே செய்தார். ‘அவர்கள் என் நண்பர்கள், நாளை அவர்கள் முகத்தை நான் பார்க்கவேண்டும், ஜே.ஹேமச்சந்திரனுக்கு அவர்களிடம் ஓட்டு கேட்கவேண்டும்’ என்று அவர் சொன்னதை நான் நினைவுகூர்கிறேன்

2. ஒருசடங்கு சுகாதாரக்குறைவானதாக , நாகரீகமற்றதாக இருக்குமென்றால் அதைச்செய்யலாகாது. நான் பொதுவாகக் கோயில்களில் மொட்டை போடுவதையும் மண்சோறு சாப்பிடுவதையும், எச்சில் இலையில் உருள்வதையும் எல்லாம் அசுத்தமான நாகரீகமற்ற சடங்குகளாகவே நினைக்கிறேன்.

அதேபோல பல மரணச்சடங்குகள் அபத்தமானவை, நாகரீகமற்றவை. உதாரணம் செத்துப்போனவரைப் படுக்கச்செய்து வாய்க்கரிசி போடுவது, அவருடன் சேர்த்து கோழியைப் புதைப்பது, எலும்பை எடுத்துப் பால்விட்டுக் கழுவி சேமிப்பது போன்றவை. என் பெற்றோருக்கு இவை எதையுமே செய்யவில்லை. அப்பாவைப்  படுக்கவைத்து வாயில் அரிசியைப்போடும் காட்சியை நினைக்கவே முடியவில்லை.

பெண்ணை விதவையாக்கும் சடங்குகள், பெண் வயசுக்குவந்தால் செய்யப்படும் சடங்குகள் போன்றவை சென்ற நிலப்பிரபுத்துவ காலத்தையவை. அச்சமூகத்தில் ஏதேனும் தேவை அவற்றுக்கு இருந்திருக்கலாம். இன்று அவை பொருத்தமற்றவை. பெண்களை இழிவுபடுத்துபவை

3. ஆலயத்தில் உள்ள சடங்குகளில் ஒன்று சுகாதாரமற்றது நடைமுறைச்சிக்கல்கள் கொண்டது என்று தெரியவந்தால் அவற்றைத் தவிர்த்துவிடலாம். உதாரணமாக, கோயில்களில் சிற்பங்களுக்கு வெண்ணை சாத்துவது. மிகக்குறைவாக எப்போதாவது வெண்ணை சாத்தும் வழக்கம் முன்பிருந்தது. கிலோக்கணக்காக வெண்ணை சாத்தப்படுகையில் அது அழுகி நாறுகிறது.

அதேபோல கற்பூரம் கொளுத்துதல். பக்தி மரபில் இறைவனுக்கு பதினாறு உபச்சாரங்கள் செய்து வழிபடும் வழக்கம் உண்டு. அதில் ஒன்று நறுமண தூபம். அக்காலத்தில் பச்சைக்கற்பூரம் என்ற இயற்கைப்பொருள் அதற்கு பயன்படுத்தப்பட்டது . இன்று கிடைப்பது ஒரு ரசாயனப்பொருள். அதைப் பெரிய அளவில் ஆலயங்களில் எரியவிடுவதனால் சூழல் சீர்கேடே மிஞ்சுகிறது

எவற்றைச் செய்யலாம்?

1. ஒரு சடங்கு உண்மையிலேயே மகிழ்ச்சியையும் நிறைவையும் அளிக்குமென்றால் அதைச்செய்யலாம். உதாரணமாக குழந்தைக்கு சோறுகொடுப்பது போன்றவை.

2. சிலசடங்குகள் குறியீட்டு ரீதியாக மனதின் சில உணர்வுகளை வெளிக்காட்டவும் சிலவற்றை அழித்துக்கொள்ளவும் உதவக்கூடியவை. இறந்த பெற்றோருக்குச் செய்யும் பலிச்சடங்குகள், ஆலயத்தில் அவர்களுக்காக ஏற்றப்படும் மோட்சதீபம் போன்றவை உதாரணம்.

3.ஒருசடங்கு நம்மிடம் சொல்லப்படும்போது அதன் ஊற்றுமுகம் என்ன, அர்த்தம் என்ன என்று கேட்டுத்தெரிந்துகொள்ளவெண்டும். அது நமக்கு உவப்பானதாக இருந்தால் அதைச்செய்யலாம்.

சித்திரை பிறக்கும்போது நெற்கதிராலும் கொன்றைமலராலும் ஆன செண்டுகளை வீட்டுக்குள் தொங்கவிடும் ஒரு சடங்கு குமரிமாவட்டத்தில் உண்டு. சங்ககாலம் முதலே உள்ள சடங்கு இது. இயற்கையுடன் நேரடியாகவே தொடர்புள்ளது. அழகானது.

அவ்வாறு செய்தால் வீட்டுக்குள் லட்சுமி வரும் என்ற நம்பிக்கை உள்ளது. லட்சுமியாவது பார்வதியாவது என்று பகுத்தறிவு பேசினால் நாம் நம் நீண்டமரபுடனான உறவை இழக்கிறோம். அதன்பின் வாழ்க்கையில் எஞ்சுவதுவெறும் நுகர்வின் இன்பம் மட்டுமே

ஜெ

முந்தைய கட்டுரைசுட்ட பழம்
அடுத்த கட்டுரைஅசோகமித்திரனுக்கு விருது