கவிஞர்களின் முன் விமர்சனம்

அன்புள்ள ஜெயமோகன்,

சமீபத்தில் தேவதேவன் மற்றும் யுவன் கவிதையரங்கை நடத்தினீர்கள். எனக்கு இது தொடர்பாக நீண்ட நாட்களாக உங்களிடம் கேட்க வேண்டுமென்று ஒரு சந்தேகம். ஒரு படைப்பை எழுதிய எழுத்தாளனையோ கவிஞனையோ வைத்துக்கொண்டு அவரது படைப்பைப் பற்றிப் பேசலாமா.

பொதுவாக ஒரு உண்மையான படைப்பாளியிடம் படைப்புக்கான கரு அல்லது தரிசனம் கிடைத்தவுடம் தன சமநிலை இழந்து Sub-Conscious Mind or may be Elevated Mindக்கு சென்று செயலாற்றுகிறான். இதை நீங்களே ஒரு முறை எழுதியிருந்தீர்கள். அந்தப் படைப்பை அவன் சமநிலைக்குத் திரும்பிக் காணும்போது அவனாலேயே அந்தப் படைப்பை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியுமா.

நான் சொல்லவருவது உங்களுக்குப் புரியும் என்று நினைக்கிறேன்.

அன்புடன்,
இளஞ்செழியன்.

அன்புள்ள இளஞ்செழியன்,

படைப்பாளிகளில் இருவகை உண்டு. தங்கள் படைப்பைத் தாங்களே விமர்சன ரீதியாகப் பார்க்கக்கூடியவர்கள். பார்க்கமுடியாதவர்கள்.

பொதுவாகக் கவிஞர்கள் தங்கள் ஆக்கங்களைப் புறவயமாகப் பார்க்கக்கூடியவர்களாக இருக்க மாட்டர்கள். தங்களின் மிகச்சிறந்த கவிதைக்கும் மிக மோசமான கவிதைக்கும் அவர்களுக்கு வேறுபாடு தெரியாது. சில சிறுகதையாசிரியர்களும் அவ்வகைப்பட்டவர்கள்.

மாறாக நாவலாசிரியர்கள் புறவயமான நோக்கில் தங்கள் ஆக்கங்களைப்பார்க்கக் கூடியவர்களாக இருப்பதைக் காணலாம். ஒருவேளை உடனடியாக அவர்களால் அவ்வாறு ஆராய முடியாமலிருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக அந்த விலக்கத்தை அடைந்துவிடுவார்கள்.

ஏனென்றால் கவிஞர்கள் முழுக்கமுழுக்க உள்ளுணர்வின் பாய்ச்சலை நம்பியே எழுதுகிறார்கள். கவிதை அவர்களில் நிகழ்கிறது, அவ்வளவுதான். ஆனால் நாவலாசிரியர்கள் அவ்வாறு நிகழும் உள்ளுணர்வின் பலநூறு பாய்ச்சல்களைத் தர்க்கபூர்வமாக அணுகித் தொகுத்து ஒரு பெரிய வடிவை உருவாக்கக்கூடியவர்கள்.

அப்படியிருந்தாலும் ஏன் கவிஞர்களை வைத்துக்கொண்டு கவிதையரங்கை நடத்துகிறோம்? அது விமர்சன அரங்கு அல்ல என்பதைச் சொல்லவிரும்புகிறேன். அது வாசிப்பரங்கு மட்டுமே. கவிதையை ரசிப்பதுமட்டுமே

அத்தகைய அரங்குகளில் கவிஞர்கள் ஒருகவிதையை அவர்களின் பிற கவிதைகளுடன் தொடர்புறுத்துவதும் வாழ்க்கை நிகழ்வுகளுடன் இணைத்துக்காட்டுவதும் இன்னொருவகை உள்ளுணர்வின் வெளிப்பாடாக அமையும்/ அந்தத் தருணங்கள் மிக முக்கியமானவை

ஜெ

முந்தைய கட்டுரைஇதிகாசங்கள் இன்னொரு பார்வை
அடுத்த கட்டுரைகல்வியும் பெற்றோரும்