மதிப்பிற்குரிய ஜெயமோகன்,
மனிதர்களைக் கொடுமைப்படுத்துவதை ஒரு மையமாக வைத்து பல ஆங்கில மற்றும் இதர மொழித் திரைப்படங்கள் எடுத்து வருகிறார்கள். இப்போதெல்லாம் torture-porn என்றே இதனை அழைக்க ஆரம்பித்து விட்டனர். ஹாஸ்டல் என்ற திரைப்படம் ஓரிரு ஆண்டுகள் முன்பு வந்தது – அதில் சித்திரவதைக் காட்சிகள் தத்ரூபமாகக் காட்டப் படுகின்றன. ஒரு வகையில் சித்திரவதை நிகழ்த்துபவர்களுடன் படத்தைப் பார்க்கிறவர்களும் சேர்ந்து உட்கார்ந்து கிடைத்த மனிதனை சித்திரவதை செய்வதை ரசிக்கட்டும் என்று படம் எடுக்கிறார்களோ என்று ஐயம் எழுகிறது. அதே படத்தில் இருந்து சில காட்சிகள் தமிழில் விலை, யுத்தம் செய் ஆகிய படங்களில் எடுத்தாளப்பட்டது.
Saw, Final Destination series, போன்ற பிரபலமான திரைப்படங்களும், train, human centipede, Devils rejects போன்ற அவ்வளவாக பிரபலமாகாத திரைப்படங்களும் கொடுமையை மையமாகக் கொண்டவை. அவற்றில் கதையோ, அழகியலோ, கருத்தோ எதுவுமே கிடையாது.
இவற்றுக்கு மாறாக ஒரு கருத்தை மையமாக வைத்தும் கொடுமை – சித்திரவதைகளைக் கொண்டு படங்கள் வந்துள்ளன.
பாவ்லோ பசொலினியின் Salo: 120 days of sodom என்ற திரைப்படம் போன்றவை. (இது குறித்து தமிழில் உள்ள கட்டுரை ஒன்று: (http://www.ponguthamil.com/shownewscontent.aspx?sectionid=5&contentid=34773e33-4ab1-4cc1-ac7b-552ae1a16a3e) இது போன்ற கொடூர திரைப்படங்களைக் கலை என்று வேறு அழைக்கின்றனர்.
உங்கள் எழுத்தில் உருவான நான் கடவுள் திரைப்படம் கூட இது போலக் கொடுமையை சித்தரித்தது – ஆனால் அதில் ஓரளவுக்கு மேல், மேல்நாட்டுத் திரைப்படங்கள் போல வன்முறை படமாக்கப்படவில்லை என்பது ஒரு ஆறுதல். விஷ்ணுபுரம் நாவலில் தாசிக் குலத்தில் பிறந்த ஒரு சிறுமியை, பாணர் ஒருவரைக் கவிதை பாடச் சொல்லி விட்டு வன்புணர்ச்சியில் ஈடுபடுகிறான் ஒரு பாத்திரம் – எனக்கு Salo திரைப்படம்தான் நினைவுக்கு வந்தது.
இது போன்ற திரைப்படங்களை எப்படிப் புரிந்து கொள்வது? திரைப்படங்களில் அப்பட்டமான வன்முறை, சித்திரவதை, நிர்வாணக் காட்சிகள், கற்பழிப்பு போன்றவற்றை அவை காட்சிக்குத் தேவை என்று அப்படத்தின் இயக்குனர்கள் சொல்வது உண்மை என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? Salo போன்ற ஒரு படம் என்னதான் அதற்கு metaphoric value இருக்கிறது என்று சொன்னாலும் என்னால் ஜீரணிக்க முடியவில்லை. அது போன்ற ஒரு படத்தை நீங்கள் எப்படிக் கருதுகிறீர்கள்? இதற்கெல்லாம் கலைப்படம் என்ற அந்தஸ்து கொடுக்கலாமா?
அன்புடன்
கிருஷ்ணன்
பெங்களூர்.
அன்புள்ள கிருஷ்ணன்,
கம்பராமாயணத்தில் பிற அனைத்துக் காண்டங்களைவிடவும் மிகப்பெரியது யுத்த காண்டம். அழிவையும் குரூரத்தையும் சித்தரிப்பது. கலிங்கத்துப்பரணியை இன்று ஒருவர் சினிமாவாக எடுத்தால் கசாப்புக்கடையில் ஒருவருடம் வாழ்ந்த அனுபவம் கிடைக்கும்
உலகம் முழுக்கவே பேரிலக்கியங்கள் அழிவை, வன்முறையை உக்கிரமாகச் சொல்லியிருக்கின்றன. தீமையின் பேருருவத்தைப்பற்றிப் பேசும்போதே பேரிலக்கியம் உருவாகிறது என்று ஐ.ஏ.ரிச்சர்ட்சின் கூற்று உண்டு. வேறு ஒருவகையில் டி.எஸ்.எலியட் அதைச் சொல்கிறார்.
உலகின் பேரிலக்கியங்கள் பெரும்பாலானவை போர்பற்றியவை. இலியட் ஒடிசி இரண்டுமே போரின் உக்கிரமான காட்சிகளாலானவை. மகாபாரதமும் ராமாயணமும் அப்படித்தான். ஏன், நவீன இதிகாசங்களான போரும் அமைதியும், கரமசோவ் சகோதரர்கள் இரண்டுமே போர் மற்றும் குற்றம் பற்றியவைதான்.
ஏன்? மனிதனையும் வரலாற்றையும் அறிவதே இலக்கியங்கள் மற்றும் கலைகளின் பணி எனலாம். இரண்டு வழிகள் அதற்கு. ஒன்று அவனுடைய சகஜநிலையில் வைத்து அவனை ஆராய்வது. அவன் அவனுடைய அன்றாட நிலையில் யார் என்று பார்ப்பது. அவ்வகையான கலையிலக்கியங்கள் பல உள்ளன. நவீன இலக்கியத்தில் நாம் சாதாரணமாக வாசிப்பவை பல அத்தகையவை
இத்தகைய கதைகளில் பேசப்படுபவர்கள் பெரும்பாலும் சாமானியர்கள். அவர்கள் மூலம் வெளிப்படும் உண்மையும் சாமானிய உண்மை. அது உலகமெங்கும் எல்லா சாமானியர்களின் வாழ்க்கையிலும் செல்லுபடியாகுமென்பதனால்தான் அதற்கு இலக்கியத்தின் கவனம் கிடைக்கிறது
இன்னொன்று, மனிதனை அவனுடைய அசாதாரணமான ,உச்சகட்ட நிலைகளில் வைத்து ஆராய்வது. பயங்கரமான நெருக்கடிகளில், தீவிர உணர்ச்சிநிலைகளில் மனிதன் எவ்வண்ணம் வெளிப்படுகிறான் என்று பார்ப்பது. செவ்வியல் எப்போதுமே இதில் ஆர்வம் கொண்டிருக்கிறது. ஏனென்றால் செவ்வியல்கலை எப்போதுமே மாமனிதர்களைப்பற்றிப் பேசுகிறது. ஒரு விழுமியத்தின் வடிவமாகவே ஆகிவிட்ட மனிதர்களை கவனிக்கிறது அது.
மகாத்மா காந்தியின் கடைசி 200 நாட்கள் என்று ஒரு நூல். ராமமூர்த்தி எழுதியது. இந்நூலில் மதக்கலவரத்தின் வெறுப்பும் வன்முறையும் பரவிய வங்காளத்தில் காந்தி செலவிட்ட கடைசி 200 நாட்களின் வெறும் நிகழ்ச்சிக்குறிப்புகள் உள்ளன. ஆனால் ஒரு பெரும் இதிகாசத்தை வாசிக்கும் மன எழுச்சி நமக்கு ஏற்படுகிறது.
காரணம், அந்தச்சூழல். கொலையும் ,கற்பழிப்பும் ,உச்சகட்ட வெறுப்பும், ஆற்றொணாத் துயரமும் மண்டிய சூழலில் அந்த மாமனிதர் தனித்து நடக்கும் சித்திரம். அங்கே மனிதனின் அதிகபட்ச சாத்தியங்கள் வெளிப்படுகின்றன. கீழ்மையின் கடைசி எல்லை. அந்தப்பின்னணியில்தான் காந்தியின் கருணையும் நீதியுணர்ச்சியும் உக்கிரமாக வெளிப்படுகிறது. அவர் வழியாக மானுட மேன்மையின் உச்சம் துலங்கிவருகிறது. செவ்வியல் அந்த வழியை எப்போதுமே தெரிவுசெய்கிறது.
மனிதனைப்பற்றிய கேள்விகள் எவை என்பதே முக்கியம். மனிதனின் சாரம் அன்பே என்று ஒரு வரியை எடுத்துக்கொள்ளும் ஓர் இலக்கியஆசிரியன் ‘எதுவரை?’ என்றுதான் அடுத்தாற்போல வினவுவார். உச்சகட்ட நிலைகளை உருவாக்குவான். அங்கும் அன்புதான் எஞ்சுகிறதா என்றுபார்ப்பான்.
பேரழிவு இலக்கியம் என்று ஒரு வகை ஐரோப்பிய இலக்கியத்தில் இன்று காணப்படுகிறது. ஜெர்மனியில் நிகழ்ந்த யூதப்படுகொலைகளைப்பற்றிய எழுத்து இது. அந்தக்குரூரங்களை விவரிப்பதல்ல அதன் நோக்கம். அந்த அதீதமான சூழல்களில் மனிதமனமும் மனிதப்பண்பாடும் எப்படி எப்படி மறுவரையறை பெற்றன என்பதை முன்வைப்பதே
பொதுவாக அடிப்படை மானுடவிழுமியங்களின் மீதான விவாதத்தை எடுக்கவே கலைஞர்கள் அதீதநிலைகளை புனைவின்களமாகக் கொள்கிறார்கள்.அதீதநிலைகளில் மட்டுமே மனிதனின் உண்மையான சாரம் வெளிவருகிறது என்று வாதிடும் அழகியல்மரபும் உண்டு. அதை மீமெய்யியல் [சர்ரியலிசம்] என்கிறார்கள். இலக்கியத்தில் சர்ரியலிசப்படைப்பாளிகள் மிகக்குரூரமான வாழ்க்கைச் சித்திரங்களை எழுதியிருக்கிறார்கள். உச்சகட்ட வதைகளின் விவரணைகளை அதில் காணலாம்.
தமிழ்நாட்டில் நாம் அத்தகைய எழுத்துக்களை அதிகமும் எழுதியதில்லை. அதற்கான சூழல் இங்கே இல்லை என்று சொல்லலாம். என்னைப்பொறுத்தவரை ஏழாம் உலகம் அப்படிப்பட்டது. நான்கடவுளும். அவை தேடும் வினாக்கள் அந்த உக்கிரமான கொடுஞ்சூழலிலேயே தீவிரமாக எழுப்பப்படமுடியும்
அப்படிப்பட்ட அடிப்படை வினாக்களை நோக்கி ஒரு கலையோ இலக்கியமோ செல்லுமென்றால் அது நியாயப்படுத்தப்படுகிறது. ஆனால் அதீதநிலைகளை வெறும் வணிக நோக்குடனும் கையாளலாம். ஏனென்றால் மனிதனின் பிரக்ஞை அந்த அதீதநிலைகளில் இருந்து ஒரு கணமும் விலகாது. அதிர்ந்து சொல்லிழந்து அதைப்பார்த்து நிற்கும். நாம் ஒரு விபத்தைப்பார்த்தால்கூட ஓடிப்போய் வேடிக்கைபார்ப்பவர்கள் அல்லவா? அப்படி வணிகநோக்குடன் கையாளப்பட்டிருந்தால் அதற்குக் கலைமதிப்பு இல்லை.
இதையே பாலியல் எழுத்துக்கும் சொல்லலாம். அதன்வழியாக மனிதனைப்பற்றிய அறிதல் உருவாகுமென்றால் அது கலை. வெறுமே கவனத்தைக் கவரும் உத்தி என்றால் கலை அல்ல. எனக்கு ஆல்பர்ட்டோ மொராவியோவும் ஹென்றிமில்லரும் முக்கியமான எழுத்தாளர்களாகப் படுவது அதனால்தான்
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் May 14, 2013 @