தனிமை கடிதங்கள்

ஜெ,

பொதுவாக எந்தவொரு விவாதத்திலும் கடைசி உண்மை மிக எளியதாய் இருப்பதை அறிந்திருந்தும் கண்டறிவதற்கான வழிமுறைகளில் சிக்கலான உபாயங்களையும் நிச்சயமற்ற அளவுகோல்களையும் எடுத்துக்கொண்டு கிளம்புவது ஏன்..?

நெடுந்தூரம் கடந்துவந்துவிட்டதாகத் தட்டிக்கொடுத்துக்கொள்ளும்போதே ஒரே இடத்தில் சுற்றிவருவதாக மனம் பயம் காட்டியிருக்கிறதா..?

மற்றபடி ..’மகாகவி’ எல்லாம் ‘புரட்சித்தலைவி ‘ மாதிரியான சப்பை மேட்டராகப் படுகிறது எனக்கு.. மன்னிக்கவும் ..

இது மாதிரியான விஷயங்களில் விவாதம் .. விளக்கம் ..விவாதம் ..விளக்கம் என ஆயாசமாக இருக்கிறது.
நீங்கள் இதற்கான ஆளாகப் படவில்லை..

நன்றி.

நரேன்

அன்புள்ள நரேன்

உண்மைகள் இறுதிநிலையில் மிக எளியவை. ஆனால் கீழ்த்தளத்தில் அவ்வுண்மைகள் நடைமுறைவாழ்க்கையாக ஆகும்போது சிதறிப்பரந்து பலநூறு வழிகளாகப் பல்லாயிரம் முடிச்சுகளாக உள்ளன இல்லையா?

சூரிய ஒளி விண்வெளியில் மிகத்தூயது. ஆகவே அதை நாம் பார்க்கக்கூட முடியாது. ஆனால் அது மண்ணில் பல்லாயிரம்கோடி பொருட்கள் மீது படிந்து முடிவில்லாத காட்சிவெளியாக மாறும்போதுதான் நாம் அதைக் காண்கிறோம்.அந்தக்காட்சிகளில் இருந்துதான் நாம் சூரிய ஒளி என்ற தூய வடிவைக் கற்பனைசெய்ய முடிகிறது

பரமார்த்திக உண்மைகளை அன்றாட வாழ்க்கைமூலம் மட்டுமே மனிதனால் அறியமுடியும். அறிந்தவற்றைத் தொகுத்துத் தொகுத்து அதை அவன் செறிவாக்கித் தூய்மையாக்கி எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது

ஜெ

அன்புள்ள ஜெ,
வணக்கம். உங்களின் வலைத்தளத்தில் “நான் இந்துவா?” என்ற கேள்விக்கான பதிலைப் படித்தேன். உணர்ச்சிவசப்படவைத்தது. முக்கியமாக “உங்களுக்குக் கருப்பசாமி அல்லது சுடலைமாடனைப்பற்றி என்ன தெரியும்? ஏதாவது தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா?” என்ற வரிகள் ஓங்கி மண்டையில் அடித்தாற்போல இருந்தது, உங்களின் பல கட்டுரைகளில் பதில்களில் “தெரிந்துகொள்ள முயன்றிருக்கிறீர்களா” என்று அடிகடி கேட்கிறீகள். உங்களுடைய இந்தக் கேள்வி என்னை மீண்டும் மீண்டும் படிக்கத்தூண்டுகிறது. தெரிந்து கொள்ளத் தூண்டுகிறது. நாற்பத்திரண்டு வயதில்தான் தெரிந்து கொள்ள வேண்டுமென ஆர்வம் பிறப்பதை நினைத்து வெட்கமாக இருக்கிறது. ஆனால் இப்போதாவது ஆர்வம் வருகிறதே என்று ஒருபக்கம் சந்தோஷமாக உள்ளது. எனக்குள் தேடலைத் தூண்டியது நீங்கள்தான். என் மனமார்ந்த நன்றி. உங்களை நேரில் சந்தித்துப்பேசியபோது ஏதேதோ வீணாகப் பேசி வாய்ப்பைத்  தவற விட்டு விட்டோமே எனத் தோன்றுகிறது.

நன்றி நன்றி நன்றி
அருள்

அன்புள்ள அருள்

நேரில் பேசுவது எப்போதுமே மெல்லமெல்லத்தான் விரிந்து வரும். உடனடியான சந்திப்புகளில் சில சம்பிரதாயமான சொற்களுக்கப்பால் செல்லமுடிவதில்லை.

நாம் இளமையில் முடிவான கருத்துக்களைப் பிறரிடமிருந்து கேட்டறிகிறோம்.நம் இயல்புக்கு ஏற்ப சிலவற்றை ஏற்றுக்கொள்கிறோம். அதைப்பற்றி அறிவதில்லை. ஆனால் ஏற்றுக்கொண்ட கருத்துக்களுக்காக நம் அகங்காரம் நிலைகொள்கிறது. அதை எங்கும் முன்வைத்து வாதிடுகிறோம்

அந்த அகங்காரத்தை நோக்கிப் பேசும்போதே என்ன தெரியும், தெரிந்துகொள்ள என்ன செய்தீர்கள் என்று கேட்கவேண்டியிருக்கிறது

ஜெ

வணக்கம் ஜெ.

சமீபகாலமாக உங்களது எழுத்துக்களை வாசித்து வருகிறேன்.
ஆறு மாதம் முன்பு வரை எதற்கும் கவலைப்படாத ஒரு பையனாக, சமூக எதார்த்தங்களைப்
புரிந்து கொள்ளாமல் எல்லாம் நன்றாகவே நடக்கிறது என்ற பிரமையில் வாழ்ந்து வந்தேன்.

உலகைக் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்ததில் இருந்து ஒரு விதமான கசப்புர்ணர்வே மிச்சம்.
துல்லியமாக அரங்கேற்றப்படும் அருந்ததி ராய் நாடகம் முதல் அசட்டுத்தனமான அண்ணாவின்
எதிர்ப்பு வரை பிரமிக்க வைக்கும் ஊழல் முதல் மீடியாவின் அற்பத்தன்மை வரை மனச்சோர்வையே
அளிக்கிறது. சில நேரங்களில் என்னை இந்த hopelessness விழுங்கி விடுகிறது. சிகரட் மட்டுமே கை கொடுக்கிறது. இந்த உந்துதலை ஆக்கபூர்வமாக மாற்ற நினைத்தால், அது என்னையே ஏமாற்றுகிற வேலையோ என்ற எண்ணம் தோன்றுகிறது. இது எல்லோரும் தினசரி கடந்து செல்கிற மனநிலையா?

வெறுமையில்

அசோக்.

அசோக்,

இளமையில் எவருக்கானாலும் ஒருபுள்ளியில் அதீதமான உற்சாகமும் நம்பிக்கையும் இருக்கும். மறுபக்கம் சோர்வும் தனிமையும் நிகழும். அதாவது ஊஞ்சல் ஆடிக்கொண்டே இருக்கும்

நீங்கள் இருப்பதைவிடப் பெரிய வெறுமையை நானும் உணர்ந்திருக்கிறேன். நான் என்னுடைய படைப்பூக்கத்தைக் கண்டுகொண்டது வழியாக அதிலிருந்து மீண்டேன்

உங்களைச்சுற்றியிருக்கும் சமூகத்தில் , உலகத்தில் நீங்கள் செய்யக்கூடுவதாக ஒரு விஷயத்தைக் கண்டடைந்தால்போதும் இந்தச்சோர்வை வென்றுவிடலாம். அது என்ன என்பதைக் கண்டடையுங்கள்

அதுவே தன்னறம். அதைச்செய்யும்போதே நீங்கள் விடுதலைபெறுவீர்கள்

ஜெ

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கியக் கூடல் 2013
அடுத்த கட்டுரைஉன்னதமாக்கல்