கதைகள் நிராகரிக்கப்படுவது பற்றி…

ஜெ,

தொடர்ந்து உங்களின் ஆக்கங்களைப் படித்து வருகிறேன்… இரவு நாவல் படித்தேன்… அருமையாக இருந்தது… ஆனால் உங்கள் பல இடங்களில் எனக்குப் பிரச்சனையும் உருவானது… இரவு நாவல் பற்றி ஒரு நீண்ட கடிதம் எழுத வேண்டும்… தற்போது அலுவலகத்தில் இருந்து இந்த மெயிலை அனுப்புவதால் இப்போது வேண்டாம்…

நான் ஏதோ ஓர் ஆர்வக் கோளாறில் கதைகள் எல்லாம் எழுத ஆரம்பித்து விட்டேன்… கீற்று இதழில் முதல் இரண்டு கதைகள் வந்தன.. மூன்றாவது கதை மார்ச் மாதக் கணையாழி இதழில் வெளி வந்துள்ளது… நேரம் கிடைத்தால் படிக்கவும்…

தங்களின் ஆளுமை என்னை மிகவும் கவர்ந்து விட்டது என்று நினைக்கின்றேன்.. எப்போது இணையத்தைத் திறந்தாலும் உங்கள் வலைப் பக்கத்துக்கு மட்டும் போகிறேன்… யூ ட்யூப் சென்றாலும் தங்களின் வீடியோ பதிவு ஏதேனும் புதிதாக வந்திருக்கிறதா என்று பார்க்கத் தொடங்கி விட்டேன்… இந்த ஆளுமைப் பிரதிபலிப்பு எந்த விதத்தில் என்னை செதுக்கும் என்று தெரியவில்லை… சாதாரண விஷயங்களில் கூட உங்களைப் போன்று சிந்திக்க வேண்டும் என்று தோன்றுகிறது… திடீரென்று ஓர் உச்ச கட்ட உணர்ச்சியில் நீங்கள் சுந்தர ராமசாமியிடம் சென்று சேர்ந்தது போல் உங்களிடம் நான் வந்து விடலாமா என்று தோன்றும்… அதெல்லாம் அசட்டு எண்ணம் என்று என்னை அமைதிப்படுத்திக்கொள்வேன்…

எனக்கு சமீபத்தில் ஏற்பட்ட மனக்கசப்பு நான் மிகவும் மதிக்கும் உயிர்மை மற்றும் காலச்சுவடு இதழ்களினால்… அதுவும் காலச்சுவடு இதழை முதல் பக்க அட்டையிலிருந்து கடைசிப்பக்க அட்டை வரை படித்து விடுவேன்… ஆனால் இவர்களுக்கு என் கதைகளை அனுப்பி தயவு செய்து படித்தாவது பாருங்கள் ஐயா என்று கூறி இருந்தேன்… முதல் கதையிலிருந்து கடைசியாக நான் எழுதிய கதை வரை அனுப்பிப் பார்த்தாயிற்று… உண்மையிலேயே அவர்கள் வாசகர்கள் அனுப்பும் கதைகளைப் படித்து பதில் அனுப்ப வேண்டும் என்பது தேவை இல்லாத விஷயம்தான்… இருந்தாலும் இப்படியே எல்லா வாசகர்களின் ஆக்கங்களையும் இது போன்ற பெரிய பத்திரிக்கைகள் புறக்கணிக்க ஆரம்பித்தால் எப்படிப் புது எழுத்தாளர்கள் உருவாகுவார்கள் என்று தெரியவில்லை…

ஒரு நான்கைந்து எழுத்தாளர்களை வைத்து மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கும் பெரிய பத்திரிக்கைகள் ஏன் ஒரு படி கூட இறங்கி வந்து வாசகர்களைக் கண்டு கொள்ள மாட்டேன் என்கிறார்கள்… என் கதையைக் கண்டு கொள்ளவில்லை என்பதற்காகக் கூறவில்லை…எனக்குத்தெரிந்தே என் நண்பர்கள் சிலர் மிகவும் இலக்கியத்தரம் வாய்ந்த கதைகளை அனுப்பியும் அவர்களுக்கும் எந்த பதிலும் கிடைத்ததில்லை… ஏதோ ஓர் அக எழுச்சியால்தான் என் போன்ற வாசகர்கள் கதையை எழுதுகிறார்கள்… புது எழுத்தாளர்களைப் பெயர் தெரியாத சிற்றிதழ்களில்தான் காண முடிகிறது… சிலர் அங்கேயே நின்று விடுகின்றனர் சிலர் பெரிதாகக் கண்டு கொள்ளப்பட்டு, மென்மேலும் வளர்கிறார்கள்… உண்மையிலேயே பெரிய பத்திரிக்கைகள் என் போன்ற வாசகர்களின் ஆக்கங்களைத் திறந்து கூடப் படிக்காதா??… அல்லது பெரும்பாலான வாசகர்களின் ஆக்கங்கள் அவ்வளவு தரமானதாக இருக்காதா??…

சந்தேகங்கள் இது போன்று பல… நேரம் கிடைத்தால் பதில் போடவும்..

நன்றி,

சு.பிரசன்ன கிருஷ்ணன்

அன்புள்ள பிரசன்ன கிருஷ்ணன்,

நீங்கள் எழுதுவது குறித்து மகிழ்ச்சி. தொடர்ச்சியாக எழுதுங்கள். ஆரம்பகாலத்தில் எழுதுவதன் அளவு எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ அவ்வளவுக்கு நல்லது. அந்த அளவு மொழி சரளமாக ஆகும்.

மொழியைக் கச்சிதமாக, பிழையற்றதாக ஆக்கிக்கொள்ளவேண்டுமென்ற பிரக்ஞைக்குள் செல்லவேண்டியதில்லை. மனதுக்குள் ஒரு மொழி ஓடிக்கொண்டே இருக்கிறதல்லவா, அதற்குச் சமானமானதாக எழுத்துமொழி ஆகவேண்டும் என்று முயலுங்கள். அப்படி ஆகிவிட்டதென்றால் உங்களுக்கென ஒரு மொழிநடை உருவாகிவிடும். அதுவே நீங்கள்.

காலச்சுவடு, உயிர்மை பற்றி எழுதியிருந்தீர்கள். இந்த இதழ்கள் எப்படியானாலும் நல்ல கதைகளை வெளியிட விரும்பக்கூடியவைதானே? அவற்றுக்கான வணிகத்துக்காகவேனும்? ஆகவே உண்மையான ஒரு நல்ல கதையை அவர்கள் ஏன் புறக்கணிக்கவேண்டும்?

காலச்சுவடில் கதைகளை எம்.எஸ் வாசிக்கிறார். பொறுமையாகவும் கவனமாகவும் படிக்கக்கூடியவர். சுயமான ரசனை கொண்டவர். ஆகவே கசப்புகளை வளர்த்துக்கொள்ளவேண்டாம்.

ஆனால் அப்படி கசப்போ சோர்வோ உருவாவது பிழையும் அல்ல. என்னுடைய கதையை நிராகரித்த சுந்தர ராமசாமியை வைது நான் கடிதம் அனுப்பியிருக்கிறேன். அந்த ஆரம்பகாலத்தில் அது சாதாரணம். சுந்தர ராமசாமி என் கடிதம் கண்டு சிரித்திருப்பார்.

என்னுடைய புகழ்பெற்ற பல கதைகளை சுந்தர ராமசாமி நிராகரித்திருக்கிறார். உதாரணம் இன்று என்னுடைய முதன்மையான கதையாகப் பலரால் சொல்லப்படும் படுகை. அந்தவகைக் கதையை அவரால் அன்று புரிந்துகொள்ளமுடியவில்லை. அது நிகழில் வெளிவந்தது. அதுவும் சாத்தியமே.

அக்காலகட்டத்தில் மிகமிகக் குறைவாகவே இதழ்கள் இருந்தன. அதாவது வருடம் பத்துக்கதைகளுக்குள்தான் அச்சேறவே முடியும் . என் ஆரம்பகாலக் கதைகள் பல 200 பிரதிகள் அச்சிடப்பட்ட நிகழ் இதழில் வெளிவந்தவை.ஆனால் அவை அவற்றின் ஆழத்தாலும் அழகாலும் தங்களுக்கான வாசகர்களைக் கண்டடைந்தன.

ஆகவே கதைகளுக்குப் பிரசுரம் முக்கியமே அல்ல. நாம் நம்முடைய தகுதியை மேம்படுத்திக்கொள்வதே முக்கியம். அப்படி நாம் நம்மை மேம்படுத்திக்கொள்வதற்கு நம் படைப்புகள் உடனுக்குடன் பிரசுரமாவதை விட தொடர்ச்சியாக நிராகரிக்கப்படுவதே உதவியானது. அந்த நிராகரிப்பு நமக்கு சவால். நம் முன் ஓர் அளவுகோல் இருந்துகொண்டே இருக்கிறது அல்லவா?

ஜெ

உண்மையில் தமிழில் சிறந்த கதைகள் எழுதப்படுகின்றனவா? நான் தொடர்ந்து படித்துக்கொண்டே இருக்கிறேன் என்றாலும் என் கண்ணுக்குச் சிக்காமல் தவறியிருக்கலாம்.

இரண்டுமாதகாலம் தொடர்ச்சியாக என் தளத்தில் வேறு கதைகளை வெளியிட்டாலென்ன என்று எண்ணம் வந்துள்ளது.

வாசகர்கள் , இளம் எழுத்தாளர்கள் அனுப்பும் கதைகளில் இருந்து எனக்குப் பிடித்த முக்கியமான கதைகளைக் குறிப்புடன் பிரசுரிக்கலாமா என நினைக்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைசிவகாமியின் நாவல் பற்றி…
அடுத்த கட்டுரைஸௌரத்தின் மிச்சங்கள்