காந்தியும் கம்யூனிசமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம். நேற்று எஸ் பொ எழுதிய காந்தி தரிசனம் படித்து கொண்டிருந்த பொது அதில் வினோபா பாவே சொல்கிறார் காந்தியம் = கம்யூனிஸ்ட் – வன்முறை .

(என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை அப்படி இல்லையோ என்று படுகிறது) . ஆனால் சற்று யோசித்தால் காந்தியப் போராட்டம், ஒரு குறிக்கோளுடன் ஆரம்பித்து , பின் சில சமரசங்களுடன் உடன் , இருபக்கம் சார்ந்தவர்களுக்கும் ஏற்றுக்கொள்வது மாதிரியான புள்ளியை நோக்கி முடிவடைந்திருக்கும்.

ஆனால் கம்யூனிஸ்ட் வன்முறை இல்லாமல் போராடினாலும் தங்களது ஒற்றை முடிவை நோக்கி சமரசம் இல்லாமல்தான் செல்வார்கள் .  வினோபா பாவே சொல்வது குழப்புகிறது [விளக்கமாக ஆகக் கொடுத்தால் நன்றாக இருக்கும்)

இன்னொரு கருத்தையும் சொல்கிறார். கம்யூனிஸ்டின் இறுதியான பலப்பரீட்சை காந்தியத்துடன் தான் இருக்கும் என்கிறார் . எங்கேயும் சமரசம் என்ற காந்தியமும் , எங்கேயும் சமரசம் இல்லை என்ற கம்யூனிஸ்ட் . அடிப்படை சூத்திரமே மாறுபடும் போது எப்படி இது சாத்தியம் .

வினோபா பாவேவின் பூதான இயக்கத்தையும் வைத்துப் பார்க்கும்போது அவர் ஒரு சமரச கம்யூனிஸ்ட் போல் தெரிகிறது . அவருக்கு கம்யூனிஸ்ட் மற்றும் காந்தியம் இரண்டுமேலும் inclination இருப்பதால் இந்தக் கருத்தோ ? ( தப்பாக இருந்தால் மன்னிகவும்) .

இப்படிக்கு

பன்னீர் செல்வம்

அன்புள்ள பன்னீர்செல்வம்,

வினோபா பாவே கோட்பாட்டு ரீதியாக சிந்திக்கக்கூடியவர் அல்ல. கொள்கைகளை விளக்கும் திறன் கொண்டவரும் அல்ல. ஆகவே அவரது கருத்துக்களை அவர் செயல்பட்ட தளங்களில் எழுந்த கேள்விகளை விளக்குவதற்கான நடைமுறைப்பதில்கள் என்று மட்டும் எடுத்துக்கொள்வதே சரியாக இருக்கும்.

பாவே கோட்பாட்டு ரீதியாக விளக்கமுடியாதவர்.ஆனால் தன் அந்தரங்கத்துக்குத் தோன்றியதை மட்டுமே சொன்னவர். ஆகவே அவர் சொன்னவை எளிதாகப் புறந்தள்ளிவிடக்கூடியவை அல்ல.

நீங்கள் சொல்வது சரிதான். காந்தியம் கம்யூனிசம் இரண்டும் முரண்படும் புள்ளி மிக வலுவானது. ‘உண்மைக்குப் பலமுகங்கள் உண்டு’ என்ற ஒற்றை வரியையே காந்தி தன்னுடைய தரிசனத்தின் மையப்புள்ளியாகச் சொல்கிறார்.

“நான் சொல்வது என் அறிவுக்குப்பட்ட உண்மை. நீ சொல்வது உனது அறிவுக்குப்பட்டது. இரண்டுமே சரியாக இருக்கலாம்” என்ற புரிதல் எப்போதுமே காந்தியத்தில் உண்டு. ஆகவே இரு அறிதல்களும் ஒன்றை ஒன்று கண்டடைந்து ஒரு சமரசப்புள்ளியை உருவாக்குவதே காந்திய தரிசனத்தின் வழி.

ஏனென்றால் எல்லாக் கருத்துக்களும் அக்கருத்துக்களை முன்வைப்பவர்களின் சொந்த நலன்கள் சார்ந்து ,அவர்கள் வாழும் சூழல் சார்ந்து, அவர்களின் வரலாறு சார்ந்து உருவாகி வந்துள்ளன. அவற்றை முற்றாக அழித்தொழிப்பது சாத்தியமல்ல. சாத்தியமென்றால்கூட மாபெரும் வன்முறைமூலமே அது நிகழமுடியும். அவ்வளவு பெரிய வன்முறையை நிகழ்த்த நாம் நம்மை வன்முறையாளர்களாக ஆக்கிக்கொள்ளவேண்டும். விளைவாக நமது சொந்த அரசியலே வன்முறையரசியலாக ஆகும்.

அப்படி நாம் வன்முறையாளர்களாக ஆகும்போது நமது எதிரிகளிடம் மட்டுமல்ல நமக்குள்ளேயே கூட வன்முறையைத்தான் கையாள்வோம். அது நம்மை நாமே அழிப்பதில்தான் சென்று முடியும். சோவியத் ருஷ்யா முதல் ஈழப்போராட்டம் வரை ஒவ்வொரு வன்முறையரசியலும் மாற்றமே இல்லாமல் இந்த ஒரே பாடத்தை மட்டுமே அளிக்கின்றன.

வன்முறையை விலக்குவது காந்தியத்தின் முக்கியமான செயல்திட்டமாக இருக்கிறது. மாற்றானின் இருப்பையும் அவனுடைய நலன்களையும் அவனுடைய எண்ணங்களையும் அங்கீகரிப்பதே வன்முறையை விலக்குவதற்கான முதல் நிபந்தனை. அதாவது காந்தியத்தில் ‘பிறன்’ [The other] இல்லை. காந்தி போராடியது பிரிட்டிஷ் மக்களின் நலன்களுக்ககவும்தான். அதை அவர் சொல்லிக்கொண்டே இருந்தார்.

நேர்மாறானது கம்யூனிசம்.அதற்கு ஒரு உலகப்பார்வை உள்ளது. அந்தப் பார்வையில் உலகவரலாற்ரையும் பொருளியலையும் பண்பாட்டையும் ஆராய்ந்து அது கண்டடைந்த ஒரு வழி உள்ளது. அந்த வழியே உண்மையானது. அதை ஏற்காத எவரும் அதை எதிர்ப்பவர்களே. அவர்களுடன் சமரசத்துக்கே இடமில்லை. அவர்களை முழுமையாக ஒழிப்பதோ முற்றிலுமாகப் பணியவைப்பதோதான் கம்யூனிசத்தை உருவாக்குவதற்கான ஒரே வழி.

ஆகவே கம்யூனிசம் மாற்றானைத் திட்டவட்டமாக உருவகிக்கிறது. பூர்ஷ்வா, குட்டிபூர்ஷ்வா, குளக்குகள் என்றெல்லாம் அது எதிரிகளைத் திட்டவட்டமாக வரையறைசெய்துகொண்டே இருப்பதைப்பார்க்கலாம். சொல்லப்போனால் மார்க்சிய சிந்தனையே இப்படி எதிரிகளை வரையறை செய்வதில்தான் அடங்கியிருக்கிறது. ஒழிக்கப்படவேண்டிய எதிரிகளின் பட்டியலைத்தான் எந்த மார்க்சிய சிந்தனையாளனும் சொல்லிக்கொண்டிருக்கிறான்.

நேர்மாறாக காந்தி எங்குமே எதிரிகளைப்பற்றிப் பேசவில்லை. அவரைப்பொறுத்தவரை போராட்டம் என்பது நம் தரப்பை நாம் ஒன்று திரட்டி மேலும் மேலும் நம்மை தகுதிப்படுத்திக் கொள்வதுதான். உண்மையான போராட்டம் நம்முடன் நாம் நடத்துவதே என காந்தி பலமுறை சொல்கிறார். சத்யாக்கிரகம் என்று அவர் தன் போராட்டத்திற்குப் பெயரிட்டதைக் கவனிக்கவேண்டும். உண்மைக்கான பெருவிருப்பும் அதற்கான முயற்சியுமே அவரது போராட்டம். அது எதிரியை வெல்வதற்கோ ஒழிப்பதற்கோ உருவானது அல்ல.

மாற்றானை ஒழிப்பதன் மூலமாக மட்டுமே செயல்படமுடியும் சிந்தனை என்று கம்யூனிசத்தைச் சொல்லலாம். அதில் எங்கும் சமரசமே இருக்கமுடியாது. தற்காலிகமான போர்நிறுத்தங்களே சாத்தியம். ஆகவே அது வன்முறையைத் தவிர்க்கமுடியாது.

கம்யூனிசம் உருவகிக்கும் சமூகமாற்றம் என்பது ஒரு தலைகீழாக்கம்.அதையே புரட்சி என்ற சொல் குறிக்கிறது.ஒட்டுமொத்தமாக அனைத்தையுமே மாற்றியமைப்பது அது. அரசியல்பிரக்ஞை கொண்ட ஒரு சிறுபான்மையினர் அரசாங்கத்தைக் கைப்பற்றி அதிகாரம் மூலம் அந்த மாற்றத்தை நிகழ்த்தவேண்டும்.

அதாவது பெரும்பான்மையினர் மீது சிறுபான்மையினர் செலுத்தும் அதிகாரம் அது. அங்கும் வன்முறை இன்றியமையாததாகிறது.ருஷ்யாவிலும் சீனாவிலும் நடந்தது அதுதான். அந்நாடுகளின் அரசுகள் தங்கள் எதிரிகள் மீது நிகழ்த்திய வன்முறையையும் அழிவையும் விடப் பலமடங்கு அவர்களின் சொந்த மக்கள் மீது நிகழ்த்தியிருக்கிறார்கள்.

நேர்மாறாக காந்தியம் சமூக மாற்றமும் அரசியல் மாற்றமும் நிதானமாகவே நிகழும் என்ற தரிசனத்தைக் கொண்டுள்ளது. இயற்கையில் வளர்சிதைமாற்றம் நிகழ்வதுபோலத்தான் அதுவும். பயனற்றுப்போன ஒன்று மெல்லமெல்லத் தேய்ந்து அழியும். தேவையான ஒன்று அந்த அழிவின் இடைவெளி வழியாக மெல்லமெல்ல உருவாகி வரும்.

அப்படி உருவாகும் மாற்றமே நீடிக்கக்கூடியது. ஏனென்றால் அது உருவாகி வரும்போதே தனக்குரிய சவால்களைச் சந்தித்து அதற்கேற்ப மெல்லமெல்ல தன்னை மாற்றிக்கொண்டு உருவாகி வருகிறது. சோவியத் ருஷ்யாவிலும் சீனாவிலும் பெரும்வன்முறைமூலம் மாபெரும் மானுட அழிவை விலையாகக் கொடுத்து உருவாக்கப்பட்ட நிலப்பொதுவுடைமையாக்கங்கள் ஒரு தலைமுறைக்காலம் கூட நீடிக்கவில்லை என்ற வரலாறே காந்தி சொன்னதென்ன என்பதற்கான திட்டவட்டமான உதாரணம்.

இப்படி சமூகத்தில் வளர்சிதைமாற்றம் நிகழ்கையில் வளரவேண்டிய விஷயங்களின் தேவையை உருவாக்கவும் அழியவேண்டிய விஷயங்களின் பொருத்தன்மின்மையை நிறுவவும் தேவையான கருத்தியல்நடவடிக்கைகளைச் செய்வதே சமூகசீர்திருத்தமாகவோ அரசியல்நடவடிக்கையாகவோ இருக்கமுடியும்.

அதாவது காந்தியம் என்பது உண்மையில் சமூகத்தின் கருத்துத்தளத்தில் ஒட்டுமொத்தமாக உருவாக்கப்படும் மாற்றத்தையே இலக்காக்குகிறது. அரசியலின் நேரடி நடவடிக்கைகள் கூட அந்த அகமாற்றத்துக்கானவைதான். அது வன்முறை இன்றி நிகழவேண்டும். அப்போதுதான் உண்மையான இயல்பான மாற்றமாக அமையும். ஒரு காட்டில் தேவையில்லாத மரம் பட்டு தேவையான தளிர் முளைப்பதுபோல.

இந்தக்கோணத்தில் வினோபா பாவே சொல்வதை யோசித்துப்பாருங்கள். கம்யூனிசத்தில் இருந்து வன்முறையை வெளியேற்றினால் என்ன நிகழும்?

முதல் விஷயம், உண்மை பலமுகங்கள் கொண்டது என்பதையும் தங்கள் மறுதரப்பிலும் உண்மை இருக்கலாம் என்பதையும் ஏற்கவேண்டியிருக்கும். மாற்றானின் இருப்பை அங்கீகரிக்கவேண்டியிருக்கும். அவனுடன் ஏதோ ஒரு புள்ளியில் பேச்சுவார்த்தை நிகழ்த்தவும் சமரசம் செய்துகொள்ளவும் வேண்டியிருக்கும்.

இரண்டாவதாக, அரசியல்நடவடிக்கை என்பது சிறுபான்மையினரின் அதிரடிச்செயல்பாடு என்ற பிரமையைக் களையவேண்டியிருக்கும். புரட்சியாளர்கள், அரசியல்பிரக்ஞைகொண்ட உள்வட்டம் போன்ற கருதுகோள்களைத் துறக்கவேண்டியிருக்கும். அரசியல் நடவடிக்கை என்பது ஒட்டுமொத்தமாக சமூகத்தின் கருத்தியலில் மாற்றத்தை உருவாக்குவதே என்று ஏற்றுக்கொள்ளவேண்டியிருக்கும்

கடைசியாக, சமூக மாற்றம் என்பது மிகமெதுவாக ஒரு வளர்சிதைமாற்றமாகவே நிகழமுடியும் என்று ஒத்துக்கொள்ளவேண்டியிருக்கும். புரட்சி என்ற சொல்லின் எல்லா அர்த்தங்களையும் மாற்றியமைக்கவேண்டியிருக்கும்.

இந்த மூன்று மாற்றங்களும் நிகழ்ந்தபின் எஞ்சியிருக்கும் கம்யூனிசத்துக்கும் காந்தியத்துக்கும் என்ன பெரிய் வேறுபாடு இருக்கமுடியும்? சில கொள்கை விளக்கங்கள் சில நடைமுறைகள் தவிர?

உலகில் முதன்முறையாக வன்முறையைக் கைவிட்டவர்கள் கேரளக் கம்யூனிஸ்டுகள். இ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு தலைமையில். அதன்பின் மிகச்சில வருடங்களில் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி முழுக்கமுழுக்க காந்திய வழிமுறைகளில் செயல்படக்கூடிய இயக்கமாக ஆகியது. சத்யாகிரகம், உண்ணாவிரதம், தர்ணா போன்ற அனைத்து காந்தியவழிகளையும் மிக அதிகமாகப் பயன்படுத்துபவர்கள் அவர்களே.

வாழ்ந்த காலத்தில் இந்தியாவின் மகத்தான காந்தியவாதிகளில் ஒருவராகவே இ.எம்.எஸ் இருந்தார். தனிவாழ்க்கையில் தனக்கு காந்தியே ஆதர்சம் என்று சொல்லியுமிருக்கிறார். இன்று அரசியலில் காந்தியின் அரசியல்குரலில் பேசக்கூடிய மூத்த தலைவர் என நான் கம்யூனிஸ்டுத்தலைவர் அச்சுதானந்ததனையே சொல்வேன்

மறுபக்கம் பார்த்தால் காந்தி நிலவுடைமை பற்றியும் சமத்துவத்தின் அடிப்படையில் அமையும் கிராமசுயராஜ்யங்கள் பற்றியும் பேசக்கூடியவை எல்லாமே ஒரு வகை கிராமியக் கம்யூனிசம் என்றே விளக்கத்தக்கவை.

ஆமாம், வினோபா பாவே சரியாகவே சொல்லியிருக்கிறார்.

ஜெ

முந்தைய கட்டுரைஇணைவைத்தல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைபின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்