20-11-2011 அன்று பாண்டிசேரியில் கி.ராவை சென்று சந்தித்தோம். நான் கிருஷ்ணன், அரங்கா, கடலூர் சீனு, செந்தில்குமார் தேவன், மதுரை ரவி.
கிருஷ்ணன் எழுதிய கடிதம்
ஆசிரியருக்கு ,
நமது புதுவைப் பயணம் ஒரு எதிர்பாராத சந்திப்பின் மூலம் ஒரு வாழ்வனுபவத்தை வழங்கியது. கி.ரா நான் அதிகமும் படிக்காத, வட்டார வழக்குக் குவியலுக்குள் கரைந்துபோன ஒரு ஆசிரியர் – திராணியற்ற வாசகர்களே அவ்வகை எழுத்துக்குப் பாம்பாடுவார்கள் , பாவனையாக ரசிப்பார்கள் என எண்ணியிருந்தேன்.
அவருடன் ஆன சந்திப்பும் உரையாடலும் வாழ்வின் நுண்மைகளை எனக்கு வெளிச்சத்தில் காட்டியது. கோவில் தூண்களின் நிழலான இடுக்குகளில் செதுக்கப்பட குறும் சிற்பத்தினை விளக்கு வெளிச்சத்தில் ஒரு லென்சின் உதவிகொண்டு பெரிதாக்கிப் பார்த்து ரசித்த அனுபவம் உங்கள் இருவருக்கும் இடையே ஆன உரையாடல். உங்கள் கேள்விகள் மேலோட்டமாகப் பார்த்தால் சம்பந்தமற்றது போல முதலில் தோன்றியது, நாம் அறிந்திராத ஒரு பெரும் கட்டிடத்தின் ஒரு மின்விளக்கின் பொத்தானை அழுத்துவதைப் போல உங்கள் கேள்வி , விளக்கெரிவது போல கி.ரா வின் பதில் , இடையில் மின்கம்பி சுவற்றில் எங்கு பதிக்கப் பட்டுள்ளது அதில் எங்கு எப்படி மின்சாரம் பாய்கிறது என்ததெல்லாம் பார்ப்பதோ உணரவோ முடியாததது, எனக்குத் தெரிவதெல்லாம் பொத்தான் அழுத்தப்பட்டது பிறகு விளக்கு எரிவது. எந்த விளக்குக்கான பொத்தான் எது என்பது உங்களுக்கு மட்டுமே தெரிந்தது.
மண்ணு தின்னி நாயக்கர் நிலத்தின் தன்மையை மதிப்பிடுவது, வீடு வாங்கப் போகும் போது குளவிக்கூடைப் பார்த்து வசிக்கத்தக்கது என சான்றளிப்பது, இனிக்கும் இளநீரைக் குரங்கு கண்டு பிடிப்பது, அதன் பதம், -ரசிகமணியின் ரசனை, ராஜரத்தினத்தின் சீவாளி தயாரிப்பு, இண்ட முள்-மீன் தூண்டில்- மைக் கூடு எனத் தொடர்பு படுத்துதல், சீமைப் பலா , முள் கத்திரிக் காய் , மேலும் மேலும் என இயற்கையில் விரிந்துள்ள உலகின் சாத்தியமான எல்லா அம்சத்தையும் கண்டுகொள்வது, ரசிப்பது என வாழ்க்கையை இப்படித்தான் வாழவேண்டும் என கணம் தோறும் உணர்த்தியது உங்கள் இருவரின் உரையாடல்.
வயோதிகம் கொண்டுவந்து கொட்டும் கவலைச் சுமை சிறிதும் இன்றி , உண்பதெல்லாம் ரசித்து உண்ணும் ஒரு போஜனப் பிரியன் போலக் காண்பதெலாம் ரசிக்கும் நுண்பார்வை உடைய ஒரு வாழ்க்கை ரசிகனாகத் தனது வாழ்முறையை நமக்கு அறிமுகப் படுத்திய கி,ராவுக்கும் எதிர்பாராமல் அவரை அறிமுகப்படுத்திய உங்களுக்கும் நாங்கள் பார்க்க இந்த உரையாடலை நிகழ்த்தியமைக்கும் நன்றி. ஒரு மாபெரும் படைப்பாளி ஒரு அனுபவம் கனிந்த ஒரு மொழியின் மூத்த படைப்பாளியை சந்திக்கும் ஒரு மேலைநாட்டு சந்திப்பென்றால் இந்நேரம் படைப்பாளிகள் பல்லாயிரம் டாலர்களைக் கட்டணமாக நிர்ணயித்திருப்பார்கள், பண்பட்ட வாசகர்களும் அதைப் போட்டிபோட்டுக்கொண்டு செலுத்தி இந்த சந்திப்பின் ஒரு இருக்கையை முன்பதிவு செய்திருப்பார்கள். கி,ராவின் வீட்டைப் பார்க்கும் போது இது தமிழகம் என துயரத்துடன் நினைத்தேன்.
கி.ரா வை மேலும் படிக்கவேண்டும்
கிருஷ்ணன்.