அன்புள்ள ஜெயமோகன்,
பாலகுமாரன் பற்றிய கட்டுரையில் நீங்கள் பலமுறை விளக்கி வந்த வணிக எழுத்தையும், சீரிய இலக்கியத்தயும் மீண்டும் எளிமையாக சொல்லியிருந்தீர்கள். இவ்விரண்டிற்க்குமான அடிப்படை வேறுபாடுகள், அவைகளின் வளர்ச்சி அவற்றின் மேலான வாசகர்களின் கவனம் ஆகியவை உங்கள் மூலம் எளிதில் புரியும்படியானது. முன்னர் நானும் என் அண்ணனும் சுஜாதா, பாலகுமாரனின் தீவிர வாசகர்கள். யார் முதலில் படிப்பது என எங்களுக்குள் சண்டையே வரும். பின் நான் நீங்கள் சொல்லியவண்ணம் பாலகுமாரனின் சிற்சில மாறுபாடுகளுடன் கூடிய பிரதியை உணர ஆரம்பித்தேன். எளிதில் அடுத்தபக்கத்தை படிக்கும் முன்பே என்ன எழுதியிருப்பார் என்று தெரிய ஆரம்பித்தது. பின் அதிலிருந்து மெல்ல எனையறியாமல் நழுவி அங்கிங்கு அலைந்து ஜெயமோகனை வந்தடைந்தேன். ஆம் அப்படித்தான் சொல்லவெண்டியிருக்கிறது. ஆனால் இது பற்றிய விவாததில் என் அண்ணனுடன் ஈடுபடும்போது அவன் சொல்லுவான் ” எது எப்படியோ எனக்கு நிறைய தன்னம்பிக்கையை பாலகுமாரன் அளித்தார்” என்று. என் அண்ணன் இன்று ஒரு சிறந்த வியாபாரி என்பதை தெரியபடுத்துகிறேன். அவரது ஒரு கதைதான் (தலையனை பூக்கள் என் நினைக்கிறேன்) அவனுக்கு வியாபாரத்தில் ஒரு உத்வேகம் தந்தது என்பான்.
அனல்காற்றில் அருணின் அப்பா இறந்தபின் அவர் தகனம் முடியும்வரை வரும் இடங்கள் பாலகுமாரனை எனக்கும் ஞாபகப்படுத்தின. இந்த இடத்தில் மட்டும் தான். அவ்விடத்தில் வரும் சுசியின் ஆளுமை பாலகுமாரனின் கதாநாயகிகளை நினைவுபடுத்தின. அனல்காற்று உங்கள் நடையிலிருந்து முற்றிலும் வேறுபட்ட ஒன்றாக, எளிமையாக, நேரிடையாக இருப்பதாலும் இந்த ஒரு பிம்பத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தோன்றுகிறது. இது எனது பிழையான கண்ணோட்டமாக கூட இருக்கலாம். மன்னிக்கவும்.
பாலகுமாரனனின் ஞானிகள் பற்றிய கதைகள் மிகவும் அருமையானவை.
அன்புடன்
தனசேகரன்
அன்புள்ள தனசேகர்
பாலகுமாரன் எழுதுவதை ஏன் வணிக எழுத்து என்று சொல்கிறேன் என்றால் அதில் ஒரு நிரந்தரமான மொழி, வடிவத்தன்மை இருப்பதனாலும் அது வாசகனை மகிழ்விக்கும் நோக்கம் கொண்டிருபதனாலும்தான். ஆனால் எல்லா வணிக எழுத்தும் நல்ல இலக்கியத்தின் ஜனரஞ்சக வடிவமே. பாலகுமாரனும் அப்படித்தான். இலக்கியம் அளிக்கும் கற்பனையின் பரவசத்தை, வாழ்க்கையை கூர்ந்துநோக்கும் கண்ணை கண்டிப்பாக எல்லா எழுத்தும் ஏதோ ஒருவகையில் அளிக்கத்தான் செய்யும். தயக்கத்துடன் வெளியுலகுக்கு நுழையும் ஒரு பெண்ணுக்கு பாலகுமாரன் அளிக்கும் தன்னம்பிக்கையும் நம்பிக்கையும் மிக அபாரமானது. அவரது சமூகப்பங்களிப்பும் அதன்மூலம் முக்கியமானதே
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
பாலகுமாரன் என்ற தங்களது கட்டுரையை படித்தேன். அவரின் பாக்கெட் நாவல்களை பற்றி மேலும் ஒரு விஷயம் சொல்ல ஆசை படுகிறேன். நான் பெரும்பாலும் தற்கால சமூகத்தை சித்தரிக்கும் கதைகளை படிப்பதில்லை. வரலாற்று கால கதைகளை மட்டும் படிப்பேன். அந்த வகையில் பாலகுமாரனின் பல பாக்கெட் நாவல்கள் வரலாற்றில் வாழ்ந்த மனிதர்கள் , நிகழ்வுகளை பற்றி விவரிகின்றன. அவற்றுள் சில குன்றிமணி (சுசீந்திரம் கோவிலில் உள்ள ஒரு சிற்பத்தை பற்றிய கதை ),கடிகை (வீரபாண்டியன் ஆபத்துதவிகள் பற்றிய கதை), பேய்கரும்பு ( பட்டினத்தார் கதை), தாயுமானவர் கதை, சாக்தம் போன்ற விஷயங்களை கையாளுகின்றன. ஆண் பெண் உறவு என்பதை தவிர்த்து பாலகுமாரனின் இது போன்ற எழுத்துகளையும் (அவையும் வணிக ரீதியானவையே ) நீங்கள் கணக்கில் எடுத்து கொண்டிருக்கலாம் என்பது என் கருத்து.
—
Thanks and Regards,
Ramkumar
அன்புள்ள ராம்குமார்
நான் பாலகுமாரன் யோகி ராம் சுரத் குமார் சார்ந்து எழுதியவற்றை வாசித்திருக்கிறேன். அவர் ஆன்மீகமான நிலையை எளிமையான பக்தியாகவும் மாயமந்திரங்களாகவும் விளக்குகிறார் என்ற எண்ணம் ஏற்பட்டது
நீங்கள் சொன்ன நூல்களை வாசித்தது இல்லை.
ஜெ
அன்புமிக்க ஜெயமோகன்
வணக்கம்.
பாலகுமாரன் பற்றிய உங்கள் கருத்துக்களைப் படித்தேன்.பாலகுமாரன் தன் எழுத்துப்பாணியில் இன்னொரு பரிமாணத்திற்கும் நகர்ந்தார்.சமயம்-ஆன்மீகம் சார்ந்த நாவல்கள் அவை. பாத்திரங்கள்-சித்தரிப்புகள் ஆகியவற்றில் தென்பட்ட மிகைநிலை மாறி சமச்சீரான ஓட்டத்தில் அவை எழுதப்பட்டுள்ளன.
அவற்றில் இதிகாசங்கள்-புராணங்களின் அடிப்படையில் எழுதப்பட்டவை
ஒருவகை.யோகம்,தியானம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டவை இன்னொரு வகை.
இவற்றில்- இரண்டாவது வகைமையின் கீழ் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கியமான பங்களிப்புகளைத் தந்துள்ளார். என் நினைவு சரியாக இருக்குமானால் ‘புருஷ விரதம்’ அந்த வகைமையில் முதல் நாவல்.
விழிப்புநிலையுற்ற உயிரின் சூட்சுமப் பயணங்கள் குறித்து அவர் எழுதிய ‘திருப்பூந்துருத்தி’ மிகவும் முக்கியமான படைப்பு.அத்தனை விரிவாக சூட்சுமமான அம்சங்கள் புனைவிலக்கிய உலகில் இதற்குமுன் எழுதப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை .
அதே போல ராஜ ராஜ சோழன் பற்றிய உடையார் நாவலும் தமிழின் வழமையான வெகுமக்கள் படிக்கும் சரித்திர நாவல்களைவிட பலமடங்கு
பக்குவத்தோடும் துல்லிய விவரணைகளோடும் எழுதப்பட்டுள்ளது என்றே எண்ணுகிறேன்
முத்தையா
அன்புள்ள முத்தையா
ஆம், உடையார் ஒரு முக்கியமான ஆக்கம் என்றார்கள். நான் இன்னமும் அதை வாசிக்கவில்லை. வாசிக்கிறேன்
நன்றி
ஜெ