அன்புள்ள ஜெயமோகன்,
அண்ணா ஹசாரேவிற்கு வீட்டு இருக்கையிலிருந்து நகராமல் ஆதரவு கொடுத்த பல்லாயிரக் கணக்கான நடுத்தர வர்க்கத்தாரில் நானும் ஒருவன். இந்தப் போராட்டம், என் மனதின் அடி ஆழத்தில் இருந்த, இந்தியாவின் முன்னேற்றம் குறித்த ஆசைகளைப் புதுப்பித்தது. அதிகார வர்க்கத்தின் அநியாயங்களை எதிக்க இயலாத கையாலாகாத்தனத்திற்கு முடிவு கட்ட முடியும் என்று நம்பிக்கை வந்தது.
என் தம்பி காந்தி குறித்த தங்களது கருத்துக்களைப் படித்து முன்பே பரிந்துரை செய்திருந்தான். அப்போது செய்தி நிலையங்களிலேயே மூழ்கியிருந்ததால், உங்கள் வலைப்பூக்களை கவனிக்கவில்லை.
அதே நேரம் ஓஷோவின் எச்சரிக்கையும் நியாபகம் வந்தது. அண்ணாவை ஒரு அரசியல் வாதியாகப் பார்க்காமல் இருக்க முடியாது. ஓஷோ ‘அரசியல்வாதிகளின் பலமே மக்களின் மனதில் நம்பிக்கையை உருவாக்குவது தான்’ என்றார். காந்தியைக் கடுமையாக (திறமையாக) விமரிசிப்பார். அகிம்சை ஆழத்தில் ஒரு வன்முறைதான் என்ற கருத்தை முதன் முதலில் ஓஷோவிடம் இருந்துதான் கேட்டேன். அதனால் அகிம்சை முறை குறித்து எனக்கு அதிக மரியாதை இல்லாமல் இருந்தது.
அண்ணாவின் டிசம்பர் போராட்டம் நீர்த்துப் போனவுடன் மிகுந்த சோர்வில் இருந்தேன். அரசியல் வர்க்கம் ஆரம்பத்தில் தடுமாறினாலும், இறுதிக் கட்டத்தில் அற்புதமாகக் காய்களை நகர்த்தி வென்று விட்டது தெரிந்தது.
இந்த சமயத்தில் இந்த மன நிலைகளுடன் தங்கள் புத்தகத்தை அணுகினேன். வழக்கமாக ‘உத்தமர் காந்தி’ போன்ற புத்தகங்கள் தமிழில் ஏராளம். பள்ளி நூலகங்களுக்காகவே எழுதப் படுகிறது என்று தோன்றும். புதிதாக, சிந்தனை சுத்தமாக இருக்காது.
உங்களது கட்டுரைகள் எனக்கு பரிச்சையம் உண்டு. முக்கியமாக நம் சூழ்நிலைகளை ஆழ்ந்து கவனித்த பார்வைகள் எனக்குப் பிடித்தம். உங்களது ஆன்மீகமும் (தியானம்) இந்த ஆழ்ந்த சிந்தனைக்குக் காரணம் என்று தோன்றுகிறது. இதனாலேயே பொத்தாம் பொதுவாக தலைப்பிலிருந்தாலும் நம்பி வாங்கினேன். (உடுமலை.காம்)
வேறு வேலைகள் இருந்தாலும் (நாளைக்கு அலுவலகத்தில் ட்ரெய்னிங் தர வேண்டும்), ஒரே மூச்சில் படிக்க வைத்து விட்டது. அண்ணாவின் பின்வாங்குதலின் அர்த்தம் விளங்குகிறது. அவர் திரும்பவும் போராட்டத்தைப் புதிய புரிதலுடன் தொடருவார் என்று புரிகிறது.
ஆனாலும் இது குறித்து உங்கள் சிந்தனையைப் பதிவு செய்திருக்கிறீர்களா? உங்கள் வலைமனையில் கண்டு பிடிக்க முடியவில்லை.
—
சத்தியாக்கிரகத்தைப் பற்றிய புரிதல் குறித்து எனக்குள் முதன் முதலாய் கேள்வி எழுப்பிய ஓஷோவின் கருத்திற்கு அடுத்த படிக்கு (அதற்கு எதிரான முடிவிற்கு) என்னைக் கொண்டு சேர்த்து விட்டது. அந்த பாதிப்பில், என் அரைகுறை தமிழ்’99 layoutல் தட்டுத் தடுமாறித் தட்டச்சு செய்து கொண்டிருக்கிறேன். நான் கேட்க விரும்புவது இது தான்.
சொந்தமாக, எந்தக் கருத்துகளின்; எந்த ஊடகங்களின் பாதிப்பு இல்லாமல் யோசிப்பது எப்படி?
எந்தப் புதுமையான கருத்துக்களையும் (ஓஷோவின், உங்களது) மனது உடனடியாக ஏற்றுக் கொண்டு விடுகிறதே! எல்லாக் கருத்துக்களையும் சந்தேகத்தோடு அணுகுவது சற்று கடினமாக இருக்கிறது. ஏற்கனவே கேட்கப்பட்ட, நான் யோசித்து தெளிவுக்கு வந்த விஷயமாக இருந்தால் இது இயலும். எனது முடிவுகளைப் புரட்டிப் போடும் கருத்துக்கள் பச்சக்கென்று ஒட்டிக்கொள்கின்றன. உண்மைக்குப் பல்வேறு layers (தமிழில் தெரியவில்லை) இருப்பது புரிகிறது. முடிவுகளைத் திரும்பவும் புரட்டிப் போடும் கருத்து யாராவது சொல்லும் வரை, இதற்கும் அடுத்த layer குறித்து யோசனை வருவதில்லை.
சொந்தமாக யோசிப்பது எப்படி என்று கேட்பதின் நகைச்சுவை உங்களுக்குப் புரிந்தாலும், சற்று தீவிரமாக பதிலளித்தால் தேவலை. ;–)
அன்புடன்,
ரகு
அன்புள்ள ஜெ,
இந்தக் கடிதத்திற்கு பதிலாக தங்களுடைய இரண்டு பதிவுகளையும் படித்தேன்.
—
சுய சிந்தனை குறித்து அருமையான பதிவு. பிறரின் கருத்துக்களைத் தனது வாழ்க்கையுடன் அனுபவத்துடன் பொருத்திப் பார்ப்பது நல்ல உத்தியாகத் தெரிகிறது. என்னை அறியாமலே, சில சமயம் இதைப் பின்பற்றி இருக்கிறேன் என்று தோன்றுகிறது.
ஆனால், இதிலும் ஒரு போதாமை இருக்கிறது. நாம் சில சமயம் சில கருத்துக்களில் விடாப் பிடியாக இருப்பதற்கு (biases) அந்த சிந்தனை நம் வாழ்வனுபவத்துடன் ஒத்து வருவது காரணமாக இருக்கும் என்று எண்ணுகிறேன்.
தங்களது காந்தியின் எடுத்துக் காட்டிலிருந்தே இது தெரிய வருகிறது. சாதி குறித்து ஆரம்பத்தில் இருந்த கருத்தை மாற்றிக் கொள்ள நேர்ந்தது. இன்னும் கொஞ்சம் வாழ்ந்திருந்தால் அது குறித்துப் புதிய புரிதல் வந்திருக்கலாம். குருடர்களின் யானை அனுபவங்கள் தான் நம்முடைய அனுபவங்களின் பாடமும் என்று தோன்றுகிறது. ‘ஆசை’ படத்தில் பூர்ணம் விஸ்வனாதன் அவர்கள் ‘நான் பாத்தவுடனே சொல்லிடுவேன், நல்லவனா இல்லையான்னு’ என்று சொல்லுவது நினைவிற்கு வருகிறது.
விக்கிபீடியாவில் நமது cognitive biases பற்றிய கட்டுரையைப் படித்துப் பார்த்ததில் (http://en.wikipedia.org/wiki/List_of_cognitive_biases) ஒன்று மட்டும் தெளிவு. உண்மை என்பது ஒரு எளிமையான விஷயம் அன்று. அதற்கு எண்ணற்ற layers இருக்கிறது. நம்முடைய சிந்தனைகள் ஒரு அளவுக்கு மட்டுமே உட் செல்கிறது. ஆன்மீகம் சொல்லுவது போல் உண்மை சிந்தனைக்கு அப்பாற்பட்டதாகத் தோன்றுகிறது. அதுவும் எந்த அளவிற்கு உண்மை என்று சொல்ல முடியாது என்றே தோன்றுகிறது!
குறைந்த பட்சம், பிறருடைய கருத்துக்களைக் கேட்கும் போது, நீங்கள் தெளிவுறுத்தும் மூன்று மாயைகளை அடையாளம் கண்டு கொள்ள முயற்சிக்கிறேன்.
—
அண்ணாவின் போராட்டம் தோல்வி என்ற முடிவிற்கு நீங்கள் வந்து விட்டது கவலை கொள்ள வைக்கிறது. இதனைத் தற்காலிகத் தோல்வி என்றாவது எடுத்துக் கொள்ளலாமா? காந்தியின் சத்தியாகிரகத்தில் இது போல் பல முறை நடந்ததாகக் கூறியிருந்தீர்களே?
ரகு
அன்புள்ள ரகு
உங்கள் கடிதம் ஸ்பாமுக்குள் கிடந்தமையால் மிகத்தாமதமாகவே கண்டேன். மன்னிக்கவும்
அண்ணா ஹசாரே போராட்டம் தோல்வியடைந்துவிட்டது என நான் சொல்லவில்லை. அது உத்தேசித்த இலக்கை எட்டவில்லை என்பதையே சொன்னேன். ஊடகங்களும் நம் நடுத்தரவர்க்கத்தின் ஐயங்களும் அதை முடக்கிவிட்டன
ஆனால் எந்த ஒரு காந்தியப்போராட்டமும் அதனளவில் வெற்றியே ஆகும். ஏனென்றால் காந்தியப்போராட்டம் மக்களை ஒரு விஷயத்தைப்பற்றிக் கற்பித்து ஒருங்குதிரட்டுவதையே போராட்டம் என்கிறது. அந்தக் கல்வியையும் போராடவேண்டுமென்ற உணர்வையும் அது ஊட்டியதே அதனளவில் வெற்றியாகக் கொள்ளப்படும். அண்ணா ஹசாரே போராட்டம் நம் பொதுவாழ்க்கையிலுள்ள ஊழலுக்கு எதிராக இளைஞர்களிடம் ஒரு விழிப்புணர்வை உருவாக்குவதில் வெற்றியடைந்தது என்றே நினைக்கிறேன்
பொதுவாக நாம் வாசிக்க ஆரம்பிக்கையில் இளமை மனநிலைக்கு உகக்கக்கூடியவற்றையே வாசிப்போம். அவ்வகைக் கருத்துக்களுக்கே செவிகொடுப்போம். அதிரடிக் கருத்துக்கள், எதிர்மறைக் கருத்துக்களே இளமையில் நம்மைக் கவர்கின்றன. ஒரு கிளை அடிமரத்தை விட்டு விலக நினைப்பதுபோல ஒவ்வொரு இளையதலைமுறையும் முந்தையதை நிராகரித்து வளரமுயல்கிறது. ஆகவே அவ்வயதில் மரபானது, அங்கீகரிக்கப்பட்டது என முன்வைக்கப்படும் அனைத்தின்மேலும் எதிர்ப்பு உருவாகிறது.
மேலும் அவ்வயதில் நாம் பரபரப்பை விரும்புகிறோம். நம்முள் உள்ள கொந்தளிக்கும் ஆற்றல் அப்படி எண்ணச்செய்கிறது. நிதானமான , சீரான பரிணாமகதி கொண்ட மாற்றங்கள்தான் சமூகத்தில் உண்மையில் நிகழமுடியும் என்றும், அதிரடிமாற்றங்கள் அதேயளவு எதிர்விசைகளையும் உருவாக்கும் என்று எவரேனும் சொன்னால் நாம் ஏற்றுக்கொள்வதில்லை
இந்தமனநிலைகளே நம்மை இளமையில் காந்திக்கு எதிரானவராக ஆக்குகின்றன. அவர் இந்திய தேச அமைப்பின் பிரதிநிதியாக நமக்குப்படுகிறார். ஒரு தந்தைவடிவமாக இருக்கிறார். ஆகவே அவரை நிராகரிப்பது ஒரு மோஸ்தர். அதை இடதுசாரி இயக்கங்களும் திராவிட இயக்கங்களும் இந்துத்துவ இயக்கங்களும் பயன்படுத்துக்கொள்கின்றன
இளமையில் நம்மிடம் வந்துசேரும் சிந்தனைகளை எல்லாம் நாம் மீறி முன்னகரவே செய்கிறோம். அரைச்சதவீதம்பேர் கூட அச்சிந்தனைகளின் அடிப்படையில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வதில்லை. ’சின்ன வயசில் நான் ஒரு ரேஸ் டிரைவரா ஆகணும்னு நினைச்சேன் சார், இப்ப கடைவச்சிருக்கேன்’ என்று சொல்கிறவர்களே அதிகம். அந்தமாற்றத்தை இயல்பாகக் கொண்டுவருவது யதார்த்ததுடனான நேரடி அறிமுகம்
அத்தகைய நேரடி அனுபவம் சார்ந்து சிந்தனைகளையும் பார்க்க ஆரம்பித்தால் மிக எளிதாக உண்மையான சிந்தனைகளை நோக்கி வந்து சேர்ந்துவிடலாம். புறச்சிந்தனைகளின் பாதிப்பில்லாமல் ஒருவர் இருக்கமுடியாது. ஏனென்றால் அச்சிந்தனைகள் நம்மைச்சுற்றி மூச்சுக்காற்றுபோல சூழ்ந்துள்ளன. அவற்றில்தான் நாம் பிறந்து வளர்கிறோம். அவைதான் நம் மூளையாகவும் மனமாகவும் உள்ளன
அச்சிந்தனைகளின் பயன்மதிப்பை, உண்மைத்தன்மையை நாமே உணர்வதுதான் முக்கியம். அதற்கு நமக்கு அளிக்கப்பட்டுள்ள உரைகல் நமது வாழ்க்கையே. நம் வாழ்க்கையனுபவங்களுடன் ஒத்துப்போகாத கருத்துக்களை நிராகரிக்கப்பழகிக் கொண்டாலே போதுமானது.நாம் உண்மையை நோக்கி செல்ல ஆரம்பித்துவிடுவோம்
இளமையில் நாம் நம்பிய அதிரடிகளுக்கெல்லாம் வாழ்க்கையில் பொருளில்லை என்று நம் சுய அனுபவங்களே காட்டும். வாழ்க்கை என்பது ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்த பலநூறு விசைகளால் இயக்கப்படுவது, அங்கே ஒற்றைப்படைவேகத்துக்கெல்லாம் அர்த்தமே இல்லை என்று அறிந்துகொள்வோம்
பலசமயம் அப்படி உள்ளூர உண்மையை அறிந்தபின்னரும்கூட ஒரு சுயபிம்பத்துக்காக வாயளவில் அதிரடிக்கருத்துக்களை அள்ளிவீசுவோம். புரட்சியாளனாகவும் கலகக்காரனாகவும் நம்மைக் காட்டிக்கொள்வோம். அந்த சுய ஏமாற்றுக்களில் நாம் சிக்காமலிருப்பதும் உண்மையை நோக்கிச்செல்ல அவசியமானது
சிந்தனைகளைப் பரிசீலனை செய்ய அவசியமான அளவுகோல்கள் இரண்டே. ஒன்று அனுபவபூர்வமான அணுகுமுறை. இரண்டு நேர்மை
ஜெ