பகத்சிங் ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,

இன்று என் நண்பர் ஒருவர், உங்களது தளத்தில் 2009 மே27 காந்தியின் துரோகம் என்ற கேள்விக்கான பதிலில் நீங்கள் பகத்சிங்கைப் பற்றி “வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன.” என்று குறிப்பிட்டிருப்பதாகவும் அதைப் பாருங்கள் என்றும் சொன்னார். அதன்பேரில் அக்கட்டுரையை இன்று வாசிக்க நேர்ந்ததால் இத்தனை கால தாமதமாக இந்தக் கேள்வி.

அக்கட்டுரையில் முரண்படுவதற்கு அநேகம் இருந்தாலும் நான் ஒரு கம்யூனிஸ்ட் என்ற முறையிலும் நீங்கள் ஒரு காந்தியவாதி என்ற முறையிலும் அந்த முரண்பாடுகள் தவிர்க்க முடியாதவை; அவற்றை விவாதிப்பதென்றால் அடிப்படைப் பார்வையிலிருந்து விவாதிக்க வேண்டும். எனவே என் கேள்வி அவை பற்றியல்ல.

“கேளாத செவிகள் கேட்கட்டும்”(நெம்புகோல் பதிப்பகம் -2006 மார்ச்) என்ற தலைப்பில் பகத்சிங்கின் கடிதங்கள் கட்டுரைகளைtத் தமிழில் மொழிபெயர்த்தவன் என்ற முறையில் பகத்சிங்கின் தத்துவார்த்த உணர்வு மட்டம் பற்றி எனக்கு ஆழமான புரிதல் உண்டு. என் கேள்வி இதுதான்:

நீங்கள் “வரலாற்றுணர்வும் சமநிலையும் இல்லாத கற்பனாவாதப் புரட்சியாளராகவே பகத் சிங்கை அவரது கடிதங்கள் காட்டுகின்றன.” என்று குறிப்பிடுவது பகத்சிங்கின் கடிதங்கள் கட்டுரைகளின் ஆழ்ந்த வாசிப்பு- வரலாற்றுப் புரிதலுடன் முன்வைக்கப்படும் ஆய்வு முடிவா? அல்லது “பொதுவாக நம்முடைய பொது அரட்டைகளில், ஆழ்ந்த வாசிப்போ வரலாற்றுப்புரிதலோ இல்லாத மேடைப்பேச்சாளர்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு முன்வைக்கப்படும் திரிபுகளும் அவதூறுகளும்தான் இவை.” என்று நீங்கள் காந்தியின் மீது துரோகக் குற்றம் சுமத்துபவர்கள் பற்றிச் சொல்வதுபோல்தான் பகத்சிங் மீது நீங்கள் முன்வைக்கும் இந்த திரிபுகளும் அவதூறுகளுமா?

பகத்சிங்கின் கடிதங்கள் கட்டுரைகளின் ஆழ்ந்த வாசிப்பு- வரலாற்றுப் புரிதலுடன் முன்வைக்கப்படும் ஆய்வு முடிவே இது என்றால் அதுபற்றி அவரது கடிதங்கள் கட்டுரைகளில் இருந்து மேற்கோள் காட்டி விளக்க முடியுமா?

நன்றி!
த.சிவக்குமார்

அன்புள்ள சிவக்குமார்

நீங்கள் என்னுடைய கட்டுரைகளில் நான் பேசிவருவனவற்றைத் தொடர்ந்து கவனித்துவருவீர்கள் என்றால் நான் பகத் சிங் பற்றிச் சொல்வதென்ன என்று எளிதில் புரிந்துகொள்வீர்கள்.

பகத்சிங்கின் கடிதங்களில்இருந்து அவர் வாசிப்பும் மனிதாபிமானமும் கொண்டவர், அவர் நம்பிய புரட்சியில் ஆழ்ந்த அக்கறை கொண்டிருந்தார் என்பதைக் காணமுடியும். கூடவே அவரது அரசியலென்பது இளமையின் கற்பனாவாதநோக்கினால் தூண்டப்பட்டது, முதிர்ச்சியற்றது என்றும்.

நான் அவரது எழுத்துக்களையும் அவர் மீது அவரது சமகாலத்திலேயே காந்தியும், லோகியா, எம்.என்.ராய் போன்ற இடதுசாரிகளும் மார்க்சியர்களான இ.எம்.எஸ் போன்றவர்களும் முன்வைத்த விமர்சனங்களையும் விரிவாக வாசித்தபின்னரே என் கருத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன்.

நான் அவர் மீது வைக்கும் மறுப்பு என்பது தன்னுடைய வன்முறைப்பாதையின் வரலாற்றுப்பொருத்தப்பாடு பற்றி அவர் என்ன புரிதலைக்கொண்டிருந்தார் என்பதே. உங்களுக்கு ஆர்வமிருந்தால் நீங்களே அவரது எழுத்துக்களில் அதைத் தேடிப்பார்த்துக்கொள்லலாம்.

1. ஐரோப்பாவில் அவரது சமகாலத்திலேயே வன்முறைப்புரட்சியைக் கையிலெடுத்திருந்த இயக்கங்களின் சரிவுகள் பற்றி அவருக்கு என்ன புரிதல் இருந்தது?

2 இந்தியாவின் பரந்துபட்ட யதார்த்தம் பற்றி அவருக்கு என்ன புரிதல் இருந்தது? இந்தியாவில் பஞ்சாபுக்கு வெளியே அவர் எவ்வளவு பயணம்செய்திருக்கிறார்? அவரது பட்டறிவு என்ன?

3. தன்னுடைய முழு ஆற்றலைக்கொண்டும் ஒரு எளிய மக்களியக்கத்தைக்கூட ஏன் அவரால் உருவாக்க இயலவில்லை? ஏன் ஒரு குறுங்குழு அரசியலைமட்டுமே சாதிக்கமுடிந்தது?

அந்த வினாக்களுடன் அவரது எழுத்துக்களை வாசிப்பவர்களுக்கு நான் என்ன சொல்கிறேன் என்று எளிதில் அறியமுடியும்

ஒரு நிகழ்ச்சி. நேருவின் சுயசரிதையில் வருகிறது. அவர் அலகாபாதில் தங்கியிருக்கையில் ஒருநாள் இரவு அவரை ஒருவர் சந்திக்கவேண்டும் என்று விரும்புகிறார். அவர் சந்திக்க வந்தபோதுதான் தெரிகிறது, அவர் சந்திரசேகர ஆசாத்.பகத்சிங்கின் இயக்கக் கூட்டாளி.

போராளிவாழ்க்கை சலித்துப்போய் விரக்தியில் இருக்கும் ஆசாதையே நேரு சந்திக்கிறார். பிரிட்டிஷ் அரசிடம் பேசி ஒரு கௌரவமான சரணாகதிக்கு ஒழுங்குசெய்யும்படியும் சிறையில் தூக்குத்தண்டனைக்காகக் காத்திருக்கும் பகத்சிங்கின் உயிரைக் காப்பாற்ற முயலும்படியும் ஆசாத் கோருகிறார். நேரு அந்தக்கோரிக்கையின் நடைமுறைச்சிக்கல்களைப்பற்றிச் சொல்கிறார்.

ஆசாத் நேருவிடம் அந்தச்சந்திப்பில் ‘இன்னும் எவ்வளவு மாதங்களில் சுதந்திரம் கிடைக்கும்?’ என்று கேட்டதாக நேரு எழுதுகிறார்.1931ல். நேரு அந்தச்சந்திப்பு வரை புரட்சியாளர்களைப் பற்றிக் கொண்டிருந்த பிம்பமே வேறு. அவர்கள் நடைமுறை அரசியலையோ உலக அரசியலையோ யதார்த்தத்தின் கோணத்தில் பார்க்கமுடியாத வெற்றுக்கற்பனாவாதிகள் என்ற உணர்வு அவருக்கு எழுகிறது

அன்றிரவு அலகாபாதில் ஆசாத் பிரிட்டிஷ் காவலர்களால் கொல்லப்பட்டார். அவருக்கு அலகாபாதில் அடைக்கலம் கொடுத்த இயக்கத்தோழர் ஒருவரால் துப்பு கொடுக்கப்பட்டு.

பகத்சிங்கின் கடிதங்களை மட்டுமல்ல அவரது ஒட்டுமொத்த அரசியலை வைத்தே அவர் வரலாற்றுப்பிரக்ஞை அற்றவர், கற்பனாவாதப்புரட்சியாளர் என்று சொல்லிவிடமுடியும். ஆர்வமிருந்தால் வாசியுங்கள்.

ஒரு மதிப்பீட்டுக்கும் அவதூறுக்கும் இடையே வேறுபாடு தெரியாத உங்களைப்போன்றவர்களிடம் நான் அவரது நூலை எடுத்துவைத்து வரிவரியாக விவாதிக்கவேண்டுமென எதிர்பார்த்தீர்கள் என்றால் அது கொஞ்சம் அதிகப்படியான ஆசை

ஜெ

முந்தைய கட்டுரைபின் தொடரும் நிழலின் குரலில் ஆசிரியன்
அடுத்த கட்டுரைஇதிகாசங்கள் இன்னொரு பார்வை