அன்புள்ள ஜெ,
நான் தங்களுடைய எழுத்தைக் கடந்த ஆறு மாதங்களாகத்தான் தீவிரமாக வாசித்து வருகிறேன். அதுவும் உங்கள் வலைப்பூவை என் கண்கள் அசையாமல் நான்கைந்து மணி நேரம் ஒவ்வொரு நாளும் படித்துக்கொண்டிருக்கும். என் சந்தேகத்தை முன் வைக்கும் முன்பு என்னைப் பற்றி சில..
எஸ்.ரா வின் கட்டுரைகளினால் வாசிப்பு என்னும் பிரிவிற்கு வந்தவன் நான். பின்பு சுஜாதா வில் தீவிரமாகி(இப்போது அலுத்து விட்டது என்பது வேறு விஷயம்), சுந்தர ராமசாமி, புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், வண்ணதாசன், வண்ணநிலவன், அசோகமித்திரன், லா.ச.ரா, பிரபஞ்சன், பாவண்ணன், அம்பை, ந.பிச்சமூர்த்தி, நாஞ்சில் நாடன்,…………(இன்னும் சில) என்று இவர்களின் ஆக்கங்களைப் படித்து வருகிறேன்.
அதிலும் சுந்தர ராமசாமி மற்றும் வண்ணதாசனின் பைத்தியம் நான். இன்றும் என் மனதில் நான் வாசித்த சிறுகதைகளிலே முதன்மையாக இருப்பது சுந்தர ராமசாமியின் ஜன்னல் என்ற சிறுகதைதான். அதன் தரத்திற்கு, நான் சமீபத்தில் வாசித்த சிறுகதைகள் கண் மற்றும் வலை(நீங்க எழுதுனதுதான்).
சுயபுராணம் போதும் என்று நினைக்கிறேன். என் சந்தேகத்திற்கு வருகிறேன். இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜெயகாந்தனின் ரிஷிமூலம் படித்தேன். கதை வித்தியாசமாக இருந்தது. ஆனால் மற்ற எழுத்தாளர்களின் எழுத்தில் முதல் முறையே ஈர்க்கப்பட்ட நான் ஜெயகாந்தனின் எழுத்தில் ஈர்க்கப்பட்டவில்லை. பிறகு அவரைத் தொடர்ந்து படிக்கும் சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. ஐந்தாறு சிறுகதைகள் படித்தேன். பாதி பிடித்தன பாதி ஓரளவுக்கு பிடித்தது. அண்மையில் அவரின் ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் படித்தேன். சரியாக 150 பக்கம் படித்து அதற்கு மேல் படிக்கப் பிடிக்காமல் ஒரு ஓரமாக வைத்து விட்டேன்.
எனக்கு அதில் உள்ள பிரச்சனை, எழுத்து நடை சுத்தமாக சுவாரஸ்யம் அற்று இருக்கிறது(நீங்கள் நான் வணிக எழுத்து நடையைக் குறிப்பிடுகிறேன் என்று நினைக்க வேண்டாம், வேறு மாதிரியாக வித்தியாசமானதாக இருக்கும் என்று எதிர்பார்த்தேன்). Characterகள் வித்தியாசமாக இருந்தாலும் அந்த characterகளை அவர் அவருக்குள் கொண்டுவராமல் எழுதி விட்டாரோ என்று தோன்றியது. Cinematicஆக நிறைய இடங்கள் உள்ளது. இன்னும் பல இருக்கிறது. என்னைப் பொறுத்த வரையில் வாசிப்பனுபவத்தில் மூன்று நிலை உள்ளது. புரியல பிடிக்கல, புரியுது பிடிச்சிருக்கு, புரியுது பிடிக்கல. இதில் இந்த நாவல் எனக்கு மூன்றாம் நிலையில் உள்ளது.
பலராலும் புகழ்ந்து பேசப்பட்ட நாவல் இது என்று நினைக்கிறேன். ஆனால் எனக்குப் பிடிக்கவில்லை. மனதோ உறுத்துகிறது. எல்லோர்க்கும் பிடித்த நாவல் எப்படி எனக்கு மட்டும் பிடிக்கவில்லை. அதுவும் புரிந்து பிடிக்கவில்லை. ஆரம்பத்தில் லா.சரா. வைக் கஷ்டபட்டுப் படித்த நான், பிறகு அவருடைய எழுத்துக்கு அடிமையாகி விட்டேன். அதுபோல் இல்லாமல், பல இலக்கிய விருதுகளை வாங்கிய ஜெ.கா வின் எழுத்து நடை ஏன் எனக்கு அலுப்பூட்டுகிறது. இதில் பிரச்சனை என்னவென்றால், இந்தப் புலம்பலை என் நண்பனிடம் கூறியபோது, ஜெ.கா வைப் பிடிக்காதவன் எல்லாம் ஒரு இலக்கிய வாசகனா என்ற ரீதியில் என்னைப் பார்த்தான்.
என் வாசிப்பு முறையில் ஏதேனும் தப்பு இருக்கிறதா? இல்லை ஜெ.கா வின் முக்கியமான புதினங்களைப் படிக்காமல் இப்படிப் புலம்புகிறேனா? என்னிடம் உள்ள பிரச்சனை என்ன?
பிரசன்னா கிருஷ்ணன்
அன்புள்ள பிரசன்னா
உங்கள் தொடர்ந்த வாசிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது
நாம் வாசிக்கும் முறை இயல்பாகவே கடைசியிலிருந்து முதல்புள்ளி நோக்கிச் செல்வதாக அமைந்துள்ளது இல்லையா? அதாவது சமகாலத்தின் முக்கியமான எழுத்தாளரிடமிருந்து சென்றகால எழுத்தாளர் நோக்கிச் செல்கிறோம். தமிழ் உரைநடையில் சுந்தர ராமசாமியையும் வண்ணதாசனையும் வாசித்துவிட்டு நீங்கள் ஜெயகாந்தனை நோக்கிச் செல்கிறீர்கள்.
இந்த செயல்பாடு இதற்கே உரிய சில சிக்கல்களைக் கொண்டிருக்கிறது. மொழிநடை என்பது சமகாலத்தின் பொதுமொழிக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கிறது. நான் இன்று எழுதும் நடை என்பது என்னைச்சுற்றி இன்று நிகழும் தமிழில் இருந்து செறிவுபடுத்தி உருவாக்கப்பட்ட ஒன்று. பேச்சுமொழி, நாளிதழ்மொழி, சட்டமொழி, அறிவியல் மொழி என பலவகையான தமிழ்கள் நம்மைச்சுற்றி உள்ளன. அந்தத் தமிழ்களில் இருந்து நான் உருவாக்கிக்கொள்வது என் நடை. ஆகவேதான் அது சமகாலநடையாக உள்ளது.
மொழிநடை என்பது எழுத்தாளனின் அகத்துக்கும் அவன் வாழும் காலகட்டத்துக்கும் நடுவே உள்ள முரணியக்கத்தால் தீர்மானிக்கப்படுவது என்று வேண்டுமென்றால் சொல்லலாம்.
ஆகவே காலத்தால் பின்னால் சென்று அப்படைப்புகளை வாசிக்கையில் நடை பழைமையானதாக இருப்பதை உணரலாம். எந்த மாபெரும் உரைநடையாளனின் நடையும் பழமையாக மாறியபடியேதான் இருக்கும். சுந்தர ராமசாமியின் நடையைவிட என்னுடைய நடை நவீனமானது. சுந்தர ராமசாமி புதுமைப்பித்தனைவிட நவீனமானவர்.
ஆகவே முந்தையகால எழுத்தாளர்களை வாசிக்கையில் சமகாலத்தன்மை கொண்ட நடையை எதிர்பார்க்கலாகாது. அந்த நடை அந்தக்காலகட்டத்திற்குரியது என எண்ணி அதற்கும் நமக்குமான இடைவெளியை நம்முடைய கற்பனையால் கடந்துசெல்லவேண்டும். அப்போதுதான் நாம் அவர்களை அறியமுடியும். இது உலக அளவில் எங்கும் உள்ள விஷயம்தான்.
மிக எளிய விஷயம்தான் இது. உண்மையில் எழுதப்பட்டு நம் கைக்குக் கிடைக்கும் இலக்கியவடிவம் என்பது நம் கற்பனையைத் தூண்டக்கூடிய ஒரு முகாந்தரம் மட்டுமே. ‘பனிபடர்ந்த மலைமுகடு’ என்ற வரியை வாசித்ததுமே நாம் அதைக் கற்பனைசெய்துகொள்கிறோம்.அதுதான் இலக்கியத்தின் வலிமை. அப்படி நாம் கற்பனை செய்யமுடிந்தால் ஒரு படைப்பின் இத்தகைய குறைகளை எளிதில் கடந்துவிடலாம்.
இதில் இன்னொரு முக்கியமான விஷயத்தைச் சொல்லவேண்டியிருக்கிறது. படைப்பு என்பது எழுத்தாளனுக்கும் அவனுடைய வாசகர்களுக்கும் நிகழக்கூடிய அருவமான உரையாடலின் விளைவாக வடிவம் கொள்வதாகும். ஓர் எழுத்தாளன் மானசீகமாக எவரைத் தன் வாசகர்கள் என்று உருவகித்திருக்கிறான் என்பது படைப்பின் இயல்பைத் தீர்மானிக்கும் முக்கியமான விஷயம்.
இதை ஒரு மேடைச்சொற்பொழிவுடன் ஒப்பிடுங்கள். நான் தேர்ந்த இருபதுபேர் கொண்ட சபையில் உரையாடுவதற்கும் ஆயிரம்பேர்கொண்ட கலவையான சபையில் உரையாடுவதற்கும் வேறுபாடுள்ளது அல்லவா? என் உரையின் அமைப்பும் தரமும் வேறுபடும்தானே?
லா.ச.ராமாமிருதமோ சுந்தர ராமசாமியோ தரமான சிறுபான்மையினரான வாசகர்வட்டம் ஒன்றை முன்னிலையாக உருவகப்படுத்தி எழுதியவர்கள். ஆகவே அவர்கள் தங்கள் அகத்தை நோக்கித் திரும்பி எழுதமுடிந்தது.எழுத்தாளர் x வாசகர் என்ற முரணியக்கத்தில் அவர்களின் தரப்பு மிகவலுவாகவும் வாசகர்தரப்பு மிகப்பலவீனமாகவும் இருந்தது.
மாறாக, ஜெயகாந்தனும் சுஜாதாவும் பெருவாரியான கலவையான இலக்கியநாட்டமோ பயிற்சியோ அற்ற வாசகர்களை நோக்கி எழுதினார்கள். ஆகவே அவர்கள் அந்த வாசகர்களின் புரிதலையும் அவர்களின் ரசனையையும் கருத்தில்கொண்டு எழுத நேர்ந்தது.முரணியக்கத்தில் அவர்களின் தரப்பு பலவீனமானதாகவும் வாசகர் தரப்பு வலுவானதாகவும் இருந்தது
வாசகர்கள் எப்போதும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தைச் சேர்ந்தவர்கள்.அவர்களுக்காக எழுதப்படும் ஆக்கம் அந்தக் காலகட்டத்தைத் தாண்டியதும் அடுத்த காலகட்ட வாசகர்களுக்கு அன்னியமானதாக, சலிப்பூட்டுவதாக ஆகிவிடும். லா.ச.ராவும் சுந்தர ராமசாமியும் பழைமையானவர்கள் ஆவார்கள். ஆனால் ஜெயகாந்தனைப் போன்றவர்கள் ஒரு தலைமுறைக்குள் பழையவர்களாக ஆகிவிடுவார்கள்.
ஜெயகாந்தன் விகடன் போன்ற பேரிதழ்களில் எழுதினார். அந்த வாசகர்களுக்குப் புரியும்படியாக எழுதவேண்டியிருந்தது. அவர்களின் உணர்ச்சிகளை நோக்கிப் பேசவேண்டியிருந்தது. ஆகவே இன்று வாசிக்கையில் அவரது நடை உரக்க ஒலிப்பதாகவும் ,அவர் திருப்பித்திருப்பி சொல்வதாகவும், மிகையாக விளக்குவதாகவும் தோன்றுகிறது. அவரது கதைகள் எல்லாவற்றையும் சொல்லிவிடுவனவாக, நுட்பங்கள் அற்றவையாகத் தெரிகின்றன.
இந்த விஷயத்தைப் புறக்கணித்து ஜெயகாந்தனில் இன்று எஞ்சக்கூடியவை என்ன என்று பார்த்தால் அவர் இன்றும் முக்கியமான ஒரு படைப்பாளி என்பதைக் காணமுடியும். அவர் தன்னுடைய அறிவார்ந்த தரிசனத்தால் இன்றும் நம்முடன் பேசுகிறார். அவரது பல கதைகள் இன்று பொருளிழந்துவிட்டன என்பது உண்மையே. ஆனால் இன்றும் நம் அகமனதிடமும் நீதியுணர்ச்சியிடமும் பேசும் பல கதைகள் உள்ளன
ஒருமனிதன் ஒரு வீடு ஓர் உலகம் நாவலின் நடையை, சம்பிரதாயமான தொடர்கதை அமைப்பை ‘மன்னித்து விட்டு’ அதை வாசியுங்கள். அது ஒரு முக்கியமான கருத்துவிவாதத்தைத் தொடங்கிவைப்பதைக் காணலாம். பல்லாயிரமாண்டு பழைமையான இந்திய ஆன்மீகத்தின் முன் அது ஒரு புதிய ஆன்மீகத்தை முன்வைக்கிறது .
அந்நாவல் வெளிவந்த காலகட்டத்தை நீங்கள் பார்க்கவேண்டும். உலகமெங்கும் ஹிப்பி இயக்கம் வலுவாக உருவான காலம் அது. உலகப்போர்களின் சோர்வில் இருந்து அரசியலமைப்புகள், சமூகஅமைப்புகள் ,சிந்தனை அமைப்புகள் அனைத்திலும் நம்பிக்கை இழந்துபோன ஒரு தலைமுறை உருவாகியது. அவர்களுக்கான அராஜ இலக்கியமும் ,கட்டற்ற கலையும், பித்தெடுத்த இசையும் உருவாயின. அந்தத் தலைமுறையை நோக்கிப் பேசுகிறது அந்த நாவல்.
அதன் மகத்தான தலைப்பு அந்த தரிசனத்தைச் சொல்கிறது. ஒரு மனிதன் -> ஒரு வீடு – > ஓர் உலகம். ஆம் ஒரு மனிதனே ஓர் உலகமாக ஆகமுடியும். அவன் உலகை அவனே உருவாக்க முடியும். ஹென்றி ஒருவகை ஹிப்பி. ஆனால் கொஞ்சம்கூட எதிர்மறைப்பண்பு இல்லாத மனிதாபிமானியான ஹிப்பி. நம்பிக்கையும் பிரியமும் கொண்ட ஹிப்பி. அவனுக்குள் உள்ள ஒளியால் தன் உலகையே அவன் ஒளியாக்கிக் கொள்கிறான்
அன்றைய தலைமுறைக்கு ஜெயகாந்தனின் பதில் அது. காம்யூவின் அன்னியனுக்கும் காஃப்காவின் கரப்பாம்பூச்சிக்கும் ஜெயகாந்தன் வைக்கும் மாற்று ஹென்றி.
அந்த வாசிப்பு ஜெயகாந்தனை அப்படித் தவிர்த்துவிடமுடியாதென்பதைக் காட்டும். அப்படி மொழிநடையை, புனைவுமுறையைக் கற்பனையால் தாண்டிக் காலத்தால் அழியாமல் எஞ்சியிருக்கும் தரிசனத்தையும் கவித்துவத்தையும் கண்டுகொள்ளமுடிந்தால் மட்டுமே நீங்கள் உலகின் செவ்வியல் படைப்பாளிகளை வாசிக்கமுடியும்
ஜெ