வடக்கும் தெற்கும்

அன்புள்ள ஜெமோ,

வணக்கம். தங்களின் பயண அனுபவங்கள் உங்களுக்கே உரிய பார்வையுடன் எழுதியிருந்தீர்கள். நானும் மிக ஆவலுடனே படித்துவந்தேன்.

இதே போல் பயணங்களில் ஆர்வமுடன் செல்பவன் என்ற முறையில் தங்களின் அனுபவங்களையும் உணர்வுகளையும் தங்களின் எழுத்து மூலமே என்னால் பெறமுடிந்தது. சில நேரங்களில் அலுவல் நிமித்தமாவும் பல நேரங்களில் ஆர்வத்தாலும் பயணம் செய்யும் நான் ‘இந்தியா ஆபத்தான நாடா’ என்ற கட்டுரை காரணமாக சில கருத்துக்களைத் தங்கள் முன் வைக்கிறேன்.

இந்தியாவில் வடதென் பிரிவு நம் கலாச்சார ரீதியிலேயே உள்ளது என்றே நினைக்கிறேன். ஒரே இதிகாச பின் புலத்தில் கட்டப்பட்ட இரு வேறு கட்டமைப்புகளாக இருக்கிறது. உதாரணம் நம் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் தெய்வ விக்கிரகங்கள். வடக்கு கிழக்கு மேற்கு மாநிலங்களில் கோயில்களும் வழிபாட்டு முறைகளும் ஏறத்தாழ ஒரே மாதிரியே உள்ளன. ஆந்திரா கர்நாடகம் தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிகங்களில் ஒரு மாதிரியாகவும் கேரளத்தில் வேறு மாதிரியாகவும் தென் இந்தியாவில் உள்ளது. இந்தப் பிரிவின் வரலாற்று அறிவு எனக்கு எட்டவில்லை. இரு வேறு கலாச்சாரங்கள் எங்கே இணைந்தன? காரணங்கள் யாவை?

இந்து மதத்தின் ஆறு பெரும் வழிபாட்டு தெய்வங்களில் சுப்பிரமணிய வழிபாடு பெருமளவு வட இந்தியாவில் இல்லை. அது ஏன்?

என் பார்வையில் வறுமை மற்றும் பொருளாதார ஏற்றத்தாழ்வு தென் மாநிலங்களைக் காட்டிலும் வட மாநிலங்களில் அதிகம்.

ஜாதியின் சமுதாய ஆளுமை கேரள தமிழ் நாட்டைக் காட்டிலும் மற்ற பிரதேசங்களில் இன்றும் வலுவாகவே உள்ளது. வளமான மாநிலமான மகாராஷ்டிராவில் சில பெரும் நகரங்கள் பொருளாதார மேன்மையில் இருந்தாலும் பரவலாக வறுமை இருக்கிறது. மாநில உள் கட்டமைப்புகள் மிக குறைவாகவே உள்ளது. ம. பி., ஓடிசா, உ. பி., பிஹார், சட்டிஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்கள் இன்னும் மோசம். அவர்களின் நிலைமையும் பிரச்சினைகளும் பரவலான ஊடகங்களில் இடம் பெறுவதேயில்லை.

குஜராத் உள் கட்டமைப்பிலும் வாழ்வின் தர வரிசையிலும் முதன்மையாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன்.

வாரலாற்றுக் காரணங்களால் மத நல்லிணக்கம் சற்றுக் குறைவாகவே வட மாநிலங்களில் உள்ளது. உள்ளழுத்தம் எந்த ஏதுவான சூழலிலும் உடனே வெடிக்குமளவு உள்ளது என்பதே என் எண்ணம்.

இவை எல்லாவற்றிற்கும் கீழே இழையும் இறையாண்மை நம்மை இணைக்கும் கருவாகவே உள்ளது. அப்படி இந்த பூலோகப் பகுதியை இணைக்கக் காரணம் என்ன? ஒரு காலத்தில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் பகுதிகளும் நம் கலாச்சார ஆளுமையிலும் பிராந்திய எண்ண ஓட்டத்திலும் இணைந்தே இருந்தது. ஆனால் இன்று நாடுகள் பிரிந்தமையால் காலப்போக்கில் இந்த வரலாற்றுத் தாக்கங்களிலிருந்து விலகிவிடும். அதே போல் வெறும் ஒன்று பட்ட நாடாக நாம் இருக்கிறோம் என்ற காரணத்தினால்தான் இந்த ஒற்றுமையை காணவிழைகிறோமா அல்லது வேறு ஏதாவது பிராந்திய உள்ளுணர்வு ஒன்று இருக்கிறதா?

அன்புடன்
திருச்சி வே. விஜயகிருஷ்ணன்

அன்புள்ள விஜயகிருஷ்ணன்,

1. இந்தியாவின் பிரம்மாண்டமான பண்பாட்டுவெளியைப்பற்றி எளிதாக புரிதல்களையோ முடிவுகளையோ உருவாக்கிக் கொள்ளலாகாது என்பதே இந்தியப்பயணம் வழியாக நான் உணர்ந்தது. ஆகவே பொதுவாகச் சொல்லப்படும் மனப்பதிவுகளை எப்போதும் பரிசீலனை செய்தபடிதான் இருப்பேன்.

2. இந்தியாவின் சிற்பக்கலைமரபு இந்த தேசத்தை மூன்றாகப்பிரித்து மூன்றுபாணிகளை வகுத்திருக்கிறது. தட்சிண,நாகர, வேசர பாணிகள். தென்னிந்தியபாணி தட்சிணம். ஆனால் இதற்குள் கேரளம் கிடையாது. அந்தப் பாணி முழுமையாகவே வேறு. வேசர பாணிக்குள் வடகிழக்குக் கோயில்கள் வராது. ஆகவே வடக்கு தெற்கு என்ற பிரிவுகள் உள்ளது என்று சொல்வது பிழை. மூன்று பெரும்பிரிவுகளும் ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுபிரிவுகளும் உள்ளன என்பதே உண்மை.

3. இந்தச்சிற்பப் பிரிவினையை உருவாக்கியவை நிலப்பகுதியின் தனித்தன்மைகளும் ஆங்காங்கே கிடைக்கும் பொருட்களும்தான். தட்சிண சிற்பக்கலையையும் கட்டிடக்கலையையும் உருவாக்கியதில் இங்கு கிடைக்கும் வலுவான கருங்கல் பெரும்பங்கு வகிக்கிறது. ஆனால் மழைகொட்டும் கேரளத்திற்கு அந்த மரபு உதவவில்லை. செம்பால் கூம்புவடிகக்கூரைபோட்டால்தான் அங்கே தாக்குப்பிடிக்கமுடிந்தது.

4. கட்டிடக்கலையில் முதல்பார்வையில் கண்கூடாகத்தெரியும் இந்த வேறுபாடு ஒரு மாயத்தோற்றமே. இந்தியக் கட்டிடக்கலை மூன்றுபாணிகளும் தொடர்ந்து கலந்து உருவானதுதான். கஜுராஹோவின் காந்தரியமகாதேவர் ஆலயத்திற்கும் ராஜராஜனின்தஞ்சைப்பெரியகோவிலுக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

5.அதேபோல வட இந்தியாவின் தட்சிண மரபைச்சேர்ந்த பல கோயில்களைப் பார்த்தோம். பெரும்பாலான கோயில்கள் இஸ்லாமிய ஆட்சிக்காலத்தில் அழிக்கப்பட்டவை. ஆகவே அவற்றின் எஞ்சியபகுதிகளைக்கொண்டு ஊகிக்கத்தான் முடிந்தது

6. கட்டிடக்கலையில் உள்ள இந்த வேறுபாட்டை சிற்பக்கலையில் காணமுடியவில்லை. ஒரு சிற்பத்தை மட்டும் காட்டி இந்தச் சிற்பம் வடக்கிலா தெற்கிலா உள்ளது என்று கேட்டால் ஒரு சாமானியனால் பதில் சொல்ல முடியாது.

முதன்மையாகச் சிற்பங்களில் வேறுபாட்டை உருவாக்குபவை அவற்றுக்குப் பயன்படுத்தப்பட்ட பொருட்கள். தென்தமிழகத்தில் கருங்கல் சிலைகள் தனிச்சிறப்பானவை. ஆந்திரத்தில் கரியசலவைக்கல். மத்தியபிரதேசத்தில் சிவந்தகல். மேற்குப் பகுதிகளில் மணல்கல். ஆனால் வட இந்திய மணற்கல்சிற்பம் அப்படியே சோழர்கால மணற்கல்சிற்பம் போலத்தான் இருக்கும். சிற்பக்கலைதெரிந்த ஒருவர்தான அழகியல் வேறுபாட்டைக் கவனிக்கமுடியும்

7 இந்தியா முழுக்க சைவ வைண மரபுகள் கிட்டத்தட்ட ஒன்றே. உண்மையில் இந்தியாவில் பயணம்செய்ய ஆரம்பிக்கையில் இந்தியாவின் பன்மைத்தன்மை பிரமிக்கச்செய்யும். மேலும்மேலும் நுட்பமாகப் பார்த்துக்கொண்டு அதிகமாகப் பயணம்செய்யும்போது இந்தியாவின் ஒருமைத்தன்மை பிரமிக்கச்செய்யும். காஷ்மீர் முதல் கன்யாகுமரிவரை பரவியிருக்கும் பண்பாடு ஒன்றே என்ற உண்மை கண்முன் பூதாகரமாக வந்து நிற்கும்

8. இந்தியாவின் இந்த ஒருமை தொடர்ச்சியாக பல்வேறு அகிலஇந்தியப் பண்பாட்டியக்கங்களால் உருவானது. முதல்அலை வைதிகம். இரண்டாவது சமணம். பின்பு பௌத்தம். கடைசியாக பக்தி இயக்கம். அதன்பின் நவீன காலகட்டத்தில் மதச்சீர்திருத்த அமைப்புகள். அதன்பின் தேசியமறுமலர்ச்சி விடுதலை இயக்கம். இந்தியா என்ற ஒருமை இந்த இயக்கங்களின் கொடை

9. இந்தியா அரசியல்ரீதியாக ஒன்றாக ஆனது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில். ஆனால் பண்பாட்டுரீதியாக ஒன்றாக ஆனது வேதகாலத்தில். ‘ஆசேது ஹிமாசலம்’ என்று மூவாயிரமாண்டுக்காலமாக ஒரு தேசிய அடையாளத்தைப்பேணிவருகிறோம்.

அந்தப்பண்பாட்டு அடையாளம் சிதறும்போது அதனடிப்படையில் உருவான தேசிய அடையாளமும் அழிகிறது. ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் அப்படித்தான் பிரிந்துசென்றன

10. இந்தியாவின் பொருளியல்நிலைமை பற்றிய சித்திரங்களைத் தொடர்ச்சியாக மறுபரிசீலனை செய்துகொண்டே இருக்கவேண்டியிருக்கிறது. எண்பதுகளில் நான் கண்ட ஆந்திரம் தேங்கிக்கிடக்கும் வளர்ச்சியற்ற மாநிலம். இன்றைய ஆந்திரா ஒரு பொருளியல் சக்தி. அதேபோல பத்துவருடம் முன்பு நான் கண்ட ஒரிசா ஒரு பிற்பட்ட மாநிலம். இன்று அது தொடர்ந்து வளரும் ஒரு பொருளாதாரம். நவீன் பட்நாயக்கின் ஆட்சியே காரணம்

எண்பதுகளில் தொடர்வளர்ச்சி கண்ட தமிழகம் இன்று பெரும் வீழ்ச்சியைக் கண்டுகொண்டிருக்கிறது. விரைவில் அது கண்கூடாகவே தெரியும்.

ஜெ

முந்தைய கட்டுரைஇந்தி இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைபெண்களிடம் சொல்லவேண்டியவை-கடிதங்கள்