கயா ஒரு கடிதம்

திரு ஜெமோ


உங்கள் மேற்கூறிய கட்டுரை படித்தேன்.

கயாவில் புரோகிதர்களின் ஆதிக்கம் பயங்கரம். அவர்களின் அசுத்தமான வீதிகளும், வீடுகளும் என் நண்பர்கள் கூறியது போல இன்னும் படு பயங்கரமாக ஆக இருக்கக் கூடும் பிராம்மணர்களே அவர்களைக் கண்டு நடுங்கும் போது, பிறரைப் பற்றி சொல்லத் தேவையில்லை.

பிரயாகையில் என் (நாயுடு) நண்பர் தன் மாமனாரின் அஸ்திக் கலசத்துடன் சென்று கரைக்க முற்பட்ட போது, அவர்கள் பேரம் படியாததால் பிடுங்கி வைத்துக் கொண்டார்களாம். பின்பு நண்பரின் தமிழ் வசவு எப்படியோ வேலை செய்து திருப்பிக் கொடுத்து விட்டார்களாம். காசியோ சொல்லத் தேவையே இல்லை. காந்தியே பயந்து சலித்த இடம்.

இந்தக் கட்டுரையில்; நீங்கள் சைவ மடமான சங்கர மடம் தகராறு பண்ணியதாகக் கூறியுள்ளீர்கள். சங்கர மடத்துக்கு மஹந்து என்று இருக்க மாட்டார்கள். மகாந்துக்கள் எல்லாரும் பைராகிகள். திருப்பதி கோவில் கூட ஒரு காலத்தில் மஹந்து ஒருவருடையது தான். இவர்கள் தசனாமிகள்தான் என்றாலும் இவர்களும் சங்கர மடமும் வேறு. சங்கர மடத்தில் வைதீக பிராம்மணர் மட்டுமே பீடாதிபதி ஆக முடியும். விவேக சூடாமணியில், சங்கரர் தகுதியான பிராம்மணனுக்கு , அவனுடைய குலம் பற்றி விசாரம் செய்து தெளிந்த பின்னரே மோக்ஷ ஞானம் அளிக்கப் பட வேண்டும் என்று ஆரம்பத்திலேயே அறுதிபடக் கூறியுள்ளார். இது என்னை என்னமோ செய்தது என்றாலும், இது தான் நிலை.

தசனாமிகள் எல்லா ஜாதியிலும் இருந்தும் வரலாம். இதைத் திருத்திக் கொள்ளவும். ஏதோ நீங்கள் முன் வெறுப்பை உமிழ்வது போல இது காட்சி அளித்து விடும். கயையில் சங்கர மடத்தின் ஐந்து பீடங்களின் ஏதாவது ஒன்றின் கிளை உள்ளதா ? இருப்பின், அவை எப்போது இருந்து செயல்படுகின்றன ?

இதைத் தேடினாலே உங்கள் கூற்றின் உண்மை நிலை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம். இன்னொன்று . இதில் தெளிவாக யாரும் இல்லை. சங்கர மடம் பிரம்மணர்களுக்குரியது. எப்படி பேரூர் மடம் கவுண்டர்களுக்கு உரியதோ , (அவர்கள் கொங்கு கவுண்டர்கள் வரலாறு நூலே வெளியிட்டுள்ளனர் ) அது போல சங்கர , மாத்துவ மடங்கள் அந்தந்த அந்தண குலத்துக்கு உரியவை. அங்கே அவரவர்களுக்கு உரிய சடங்குகளும், விழாக்களும், உபன்யாசங்களும் நடக்கும். இதுதான் நூறு ஆண்டுகளுக்கு முன் வரை நடைமுறை. அதே போல் சைவ மடங்களுக்குள் உயர் சாதி இந்துக்களான வேளாளர்களும், இன்ன பிறர்களும் மட்டுமே சென்று வந்தனர். ஒரு பிரிவு அந்தணர் தமக்குரிய சடங்குகளை செய்தல் தவறு போலப் பேசுகிறீர்கள்.

சங்கர மடத்தின் சிறந்த பீடமாகக் கருதப்படும் சிருங்கேரியில் , வைதீகப் புரோகிதம் ஒரு புறம் கற்றுத் தரப் பட்டாலும், இன்னொரு பிரிவிற்கு விசாரம் சொல்லித் தரப்படுகின்றது. முதல் பிரிவு வெறும் பிரயோகம் என்ற அளவில் வேதங்களைக் கையாள்கிறது. பின்னவர்கள் வேத, வேதாங்க, வேதாந்த பாடங்களில் விசாரம் செய்யவும், உள் நுட்பங்களை அறிந்து கொள்ளவும் பயிற்சி உள்ளது. முன்னவர்கள் குறுகிய மனப்பான்மையுடையவராக இருப்பினும், அவரிலும் சிறந்த பலரைக் காண்கிறேன். இதனால் அனைவருக்கும் கெட்ட பேர்.

நான இதை விரிவாக எழுதக் காரணம், உங்கள் “இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்” நூலில் சங்கர மடங்கள் வெறும் புரோகித மையங்கள் என்று எழுதியதே. இப்போதும் அதே வகையான தாக்கு. ஸ்மார்த்தர்களுக்குக் கோவில்கள் மையம் இல்லை. அவை தந்திர மதங்களுக்கு மட்டுமே. ஸ்மார்த்தர்கள் மடங்களை மட்டுமே மையமாகக் கொண்டு உள்ளவர்கள். அவர்களின் சடங்குகள் அவரவர் மடங்களில் அல்லாமல் வேறு எங்கு நிகழ முடியும் ? செட்டியார் மடங்களில் எவ்வாறு பிறர் சடங்கு செய்ய முடியாதோ, அதே போல இங்கும் பிறர் செய்ய முடியாது. விவேகானந்த இயக்கம் நிகழ்த்திய ஒரு கருத்துத் தாக்கத்தால், அனைத்து சந்நியாசிகளும் பொதுவாக இந்து மதத்தின் பொது சாதுக்கள் என்று ஒரு மிகையான கருத்து வேரூன்றி விட்டது. இதில் ஒரு பாதிதான் உண்மை

வெங்கட்

முந்தைய கட்டுரைப.சிங்காரம் நாவல்போட்டி
அடுத்த கட்டுரைசெயலின்மையைச் சொல்கிறதா இந்துமதம்?