உன்னதமாக்கல்

அன்புள்ள ஜெ,

நம் ஊட்டி கூட்டத்தில் ‘sublimation of lust’ என்ற கருத்தைப் பற்றிப் பல எண்ணங்கள் பகிரபட்டன. எனக்கு அடிப்படையாக ஒரு கருத்து உண்டு. உண்மையில் அப்படி ஒரு sublimation (உன்னதநிலை, பதங்கமாதல்?) தேவையா? இயலுமா? என்பதே.

பரவலாக அடிப்படை உந்துதல் (basic instinct) என்றே இச்சையை (lust) அழைக்கிறார்கள். அந்த இச்சையை கலாச்சார ரீதியாக ஒரு கீழ் எண்ணமாக சொல்லியே பழக்கப்பட்டதால் அந்த எண்ணத்தின் பல வெளிப்பாடுகளை வெளிச்சொல்லமுடிவதில்லை. அந்த இச்சையை ஒரு சாதாரண உந்துதலாகக் கருதினால் நம்மை பண்படா மனிதராக நினைப்பார்களோ என்ற எண்ணமும் பரவலாக உள்ளது. இந்த ஒரு நிதர்சன சூழலில் இந்த இச்சையின் வெளிபாட்டை ஒரு புனிதமயமாக்கலாகவே உருமாற்றி சொல்லவேண்டியிருக்கிறது. அதுவே இச்சையின் உன்னதப்படுத்துதல் என்ற கூற்றாக நான் பார்கிறேன்.

ஆகவே என்னளவில் இச்சையை உன்னதமயமாக்குதல் என்பது தன் எண்ணத்தை வெளிப்படுத்த பயந்து நடக்கும் பூசிமெழுதலே என்று பார்கிறேன். An expression of guilt. ஆனால் நான் உடல் இச்சையை ஒரு கீழ்த்தரமான எண்ணமாகப் பார்ப்பதில்லை. அது ஒரு இயற்கையின் அடிப்படை உந்துதல், அவ்வளவே. இங்கு உன்னதப்படுத்த ஒன்றுமில்லை.

மேலும் இந்த இச்சையின் வழியாக இறையுனர்வைப் பெறலாம் என்ற அடிப்படையிலேயே சாக்த தந்திர வழிமுறைகளில் ஒரு சில நடைமுறைகள் உள்ளன. மேலைநாடுகளில் பரவலாக tantric sex என்று அழைப்பதில் tantraவை மறந்து sexஐ மட்டும் வைத்துகொண்டார்கள். ஏனெனில் தந்திர முறைகளில் ஒரு சூட்சமம் உள்ளதைப் பலர் குரு வழி போதனை இல்லாமையால் அறிவதில்லை. ஆனால் நான் பார்த்த உன்னத சாக்தர்களும் இந்த வழிமுறையை ஆதரிப்பதில்லை. இந்த இச்சையை உன்னதமயமாக்கலே சக்தி வழிபாடு என்பதையும் அவர்கள் ஏற்பதில்லை.

நான் உணர்ந்த வரையில் அடிப்படை உந்துதல் என்பது lust அல்ல survival. இந்த வாழ்வூக்கத்தின் (survival instinct) ஒரு வெளிப்பாடே இச்சை (lust) என்று பார்க்கிறேன். ஏனெனில் இந்த இச்சையின் காரணமாக நாம் கூடுதலில் விரிவடைகிறோம். இந்த அற்பகால வாழ்தலிலிருந்து விடைபெற்று நிரந்தர கால எல்லையற்ற வாழ்நிலையைத்தான் ஆன்மீகத்தில் தேடுகிறோம். நம் தனிமனித அகந்தையின் வழியாக இந்த survival instinct வெளிப்படும்போது ஆதிக்க உணர்வாக மாறுகிறது. ஆகையால், இந்த இச்சை பல நேரங்களில் ஆதிக்கத்தின் கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது. படைகளின் வன்புணர்ச்சியை இப்படியும் பார்க்கலாம். அதிகாரவர்க்கம் பலருடன் கூடுதலும் இதன் அடிப்படையிலேயே.

அன்புடன்,

திருச்சி வே.விஜயகிருஷ்ணன்

அன்புள்ள விஜயகிருஷ்ணன்,

நீங்கள் சொல்வது ஒரு பொதுவான புரிதல், அவ்வளவுதான்

ஆனால் உன்னதமாக்கல் பற்றி இரண்டாயிரத்துக்கும்மேல் வருடங்களாகத் தொடர்ந்து நம்முடைய மரபில் பேசப்பட்டுள்ளது. அது வெவ்வேறு ஞானமார்க்கங்களில் வெவ்வேறு வழிகளில் பேசப்படுகிறது. அவற்றை முழுக்க இப்படி ஒரே வரியில் தாண்டிச்செல்ல முடியாது. இபப்டி ஒரு நிலைப்பாடு எடுப்பது உங்கள் இயல்புக்கும் வாழ்க்கைக்கும் ஒத்துவருகிறது என்றால் அது உங்களைப்பொறுத்தவரை சரி அவ்வளவுதான். ஆனால்யோக, ஞான, பக்தி மார்க்கங்களின்படி மெய்மை நோக்கிப்பயணிப்பவர் அந்தந்த வழிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது, எவ்வாறு வழிகாட்டப்பட்டிருக்கிறது என்பதை முறைப்படி புரிந்துகொள்வதே சரியானதாகும்

பதஞ்சலியோகசூத்திரம் ‘யோக சித்தவிருத்தி நிரோத:’ என்ற வரியுடன் ஆரம்பிக்கிறது. மொத்தநூலுக்கும் இதுவே சாவி. சித்தம் [மனம்] என்பதை ஒரு விருத்தி [செயல்] என அது முதலிலேயே வகுத்துவிடுகிறது. அதை நிரோதிப்பது [தடுப்பது]தான் யோகம்.

மனம் தொடர்ச்சியான கட்டற்ற செயல்பாடு. கீழே விழுந்த நீர் சிதறிப்பரவிக்கொண்டே இருப்பதுபோல வாய்ப்புகிடைத்த திசையிலெல்லாம் பரவி விரிந்துகொண்டே இருப்பது அது. நம்மால் புரிந்துகொள்ளவே முடியாத தொடர்பாடல் [association] வழி அது தன்னை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறது.

நீங்கள் சொல்வதைவைத்துப்பார்த்தால் அதன் இயல்பு இதுதான் என்று புரிந்துகொண்டு அதை அப்படியே விட்டுவிடவும் அதன் எந்த அம்சத்தைப்பார்த்து விலக்கம் கொள்ளாமலிருக்கவும் ஒருவனால் முடிந்தால்போதும். அவன் விடுதலைபெற்றவன். அவனுக்கு மேலே ஒன்றும் தேவை இல்லை. ஆனால் பதஞ்சலி அச்செயல்பாட்டை ‘ஒறுத்தல்’ யோகத்தின் முதல்படி என்கிறார்.

நாம் காணும் சித்தவிருத்தி என்பது மனதின் அலைகளே. அது மனம் அல்ல. அலை ஓய்ந்தால்தான் அதைப்பார்க்க முடியும். அலையை ஓயவைப்பதுதான் யோகத்தின் முதல் நடவடிக்கை.

மனதில் அலைகளை உருவாக்குவது எது? காமம்-குரோதம்-மோகம் என்னும் மூன்று அடிப்படை இச்சைகள். அவை மனிதனுக்குள் அவன் இங்கே போராடித் தங்கிவாழ்ந்து சந்ததிகளை உருவாக்கிச் செல்வதற்காக அளிக்கப்பட்டவை. ஆனால் அவைதான் அவனை முழுமையாக உலகியலில் கட்டிப்போடுகின்றன. அவற்றை அவன் வெல்லாமல் மனதின் அலைகளை அடக்கமுடியாது.

காமம்-குரோதம்-மோகம். மூன்றையும் எந்த மனிதனாலும் ‘அடக்க’ முடியாது. அடக்க முயலும்போது அந்த மூன்றுவேகங்கள் ஒருபக்கமும் அவற்றை அடக்கும்முயற்சி இன்னொருபக்கமுமாக மனம் இரண்டுமடங்கு அலைக்கொந்தளிப்பை அடைகிறது. ஆகவேதான் அவற்றை உன்னதமாக்கலைப்பற்றி மரபு பேசுகிறது.

யோகத்தின் உன்னதமாக்கல் என்பது அந்த அலைகளை கவனிப்பது அவற்றின் ஒழுங்குமுறைகளைப் புரிந்துகொள்வது என்ற நிலையில் ஆரம்பிக்கிறது. அதற்கு முதலில் புறவாழ்க்கையில் காமம்-குரோதம்-மோகம் மூன்றையும் முடிந்தவரை கட்டுப்படுத்தவேண்டும். யமம் நியமம் போன்ற வாழ்க்கைநெறிகள் அதற்கு உதவுகின்றன. அதன்பின் அகப்பயணம். அதைப் பல நுட்பமான படிகளாக வகுத்து விளக்குகிறது யோகம்.

ஞானமார்க்கமும் இதையேதான் சொல்லும். ஆனால் அகத்தின் அலைக்கழிப்பைத் தர்க்கபூர்வமாக அறிந்துகொள்வதைப்பற்றி அது பேசுகிறது. அறிந்துகொள்ளுதல் மட்டுமே ஒன்றைத் தாண்டிச்செல்லும் வழி என்பது ஞானமார்க்கத்தின் விளக்கம். காமம்-குரோதம்-மோகம் ஆகியவை தன்னுள்ளும் வெளியேயும் செயல்படும் முறையை அறிந்தவன் மெல்லமெல்ல அதை வெல்ல ஆரம்பிக்கிறான் என அது சொல்லும்.

தூய ஞானமார்க்கமான அத்வைதத்தின் நோக்கில் காமம்-குரோதம்-மோகம் மூன்றும் மமகாரம் என்னும் இருத்தல்பிரக்ஞையின் நடைமுறை வடிவங்கள். அந்த இருத்தல்பிரக்ஞை என்பது முதல்முழுமையாகிய பிரம்மத்திலிருந்து தன்னைப் பிரித்துப்பார்க்கும் பேதபுத்தியின் விளைவு. ஞானம்மூலம் அந்த பேதபுத்தியை வெல்பவன் இருத்தல்பிரக்ஞையை வெறும் மாயத்தோற்றம் என உணர்வான். காமம்-குரோதம்-மோகம் ஆகியவை அந்த மாயத்தோற்றத்தின் மாயத்தோற்றங்கள்.

அத்வைதத்தின் உன்னதமாக்கல் என்பது காமம்-குரோதம்-மோகம் ஆகிய மூன்றையும் பிரம்மத்தில் அலகிலா விளையாட்டாக காண்பதுதான். மனிதனின் காமமானாலும் சரி பூக்கும் மரங்களானாலும் சரி பின்னிநெளியும் புழுவானாலும் ஒட்டிப்பறக்கும் பூச்சியானாலும் சரி ஒரே லீலையின் பலமுகங்களே என உணரும் நிலையையே அவன் உன்னதமாக்கல் என்பான்.

பக்திமார்க்கம் காமம்-குரோதம்-மோகம் மூன்றும் தன்னகங்காரத்துடன் இணைந்து மட்டுமே செயல்படமுடியும் என்று சொல்லும். அகங்காரமே அம்மூன்றுக்கும் கால்களாகவும் கைகளாகவும் அமைகிறது. ஆகவே பரிபூரண சரணாகதி மூலம் முழுமையாக அகங்காரத்தை வெல்லும்போது காமம்-குரோதம்-மோகம் மூன்றையும் தாண்டிச்செல்லலாம் என்று அது சொல்கிறது.

ஆழ்வார்கள் நாயன்மார்கள் முதல் ராமகிருஷ்ணர் அத்தனை பக்திஞானிகளும் பூரணசரணாகதி மூலம் தங்கள் காமம்-குரோதம்-மோகம் மூன்றையும் வென்று செல்வதற்காக முயன்றிருப்பதை அவர்களின் பாடல்கள் வழியாக சொல்லியிருக்கிறார்கள். அவர்களின் உன்னதமாக்கல் என்பது காமம்-குரோதம்-மோகம் மூன்றையும் இறைவனின் தோற்றமாக உருவகித்துக்கொள்வதில் உள்ளது. தேவியைக் காமரூபிணி என்றும் காமநாசினி என்றும் வழிபடும் பக்தன் காமத்தை உன்னதமாக்கவே செய்கிறான்.

இவ்வாறு உன்னதமாக்கல் நம் மரபின் முக்கியமான மூன்று வழிகளிலும் பல ஆயிரம் வருடங்களாகச் சொல்லப்பட்டுள்ளது. இவற்றை முழுமையாக நிராகரித்து, இவையெல்லாம் முற்றிலும் தேவை இல்லை என்றும் காமம்-குரோதம்-மோகம் மூன்றையும் ஒளித்துவைக்காமல் அப்படியே வெளிப்படுத்தினால் மட்டும் போதும் என்றும் நீங்கள் உணர்ந்தீர்கள் என்றால் உங்கள் விடுதலைக்கான ஒரு வழியை நீங்களே கண்டுகொண்டீர்கள் என்றே பொருள். அதில் உங்களுக்கு முழுநிறைவு என்றால் அதை நீங்கள் தொடரலாம்.

யோகம், ஞானம்,பக்தி மூன்று வழிகளும் அவ்வாறு தாங்கள் இருக்கும்நிலைகளில் முழுமையான நிறைவை அடையாமல் மேற்கொண்டு தேடிச்செல்பவர்களுக்கானவை. அதாவது உலகியல்நிறைவுக்கு அப்பால் ஆன்மீகமான நிறைவை நோக்கிச்செல்பவர்களுக்கானவை.

கடைசியாக உன்னதமாக்கல் சமூகத்தில் நிகழ்வது பற்றி. வரலாறெங்கும் எந்தப் பண்பாட்டிலும் காமம்-குரோதம்-மோகம் மூன்றும் ’அப்படியே’ விடப்பட்டதில்லை. விடமுடியாது. காமம்-குரோதம்-மோகம் மூன்றும் கட்டுப்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டதும்தான் மானுடப்பண்பாடே தொடங்கியது. இன்றும் உலகின் எந்தப் பழங்குடி இனத்திலும் ஒருவனின் காமமோ குரோதமோ ஆசையோ கட்டில்லாமல் தன்னிச்சையாக வெளிப்படலாமென்ற அனுமதி கிடையாது.

இந்தக்கட்டுப்பாடுமூலம் அவை அவன் அகத்தில் தேங்கி அழுத்தம் கொடுக்கின்றன. ஆகவேதான் அவனுடைய அகம் அலைக்கொந்தளிப்பு மிக்கதாக ஆகிறது. ஆம், ‘சித்தவிருத்தி’ என்பதே அடக்கப்பட்ட அடிப்படை இச்சைகளின் அலைதான்

ஒரு பண்பாடு எந்த அளவுக்கு வளர்ச்சி பெறுகிறதோ அந்த அளவுக்கு அதன் உறுப்பினர்கள் மீது கட்டுப்பாடும் அழுத்தமும் அதிகரிக்கும். அந்த அளவுக்கு அங்கே தனிமனித அகம் அலைக்கொந்தளிப்பு மிக்கதாக ஆகும்.

அந்த அலைக்கொந்தளிப்பை வெல்வதற்காகவே மானுடப்பண்பாடு உன்னதமாக்கலைக் கண்டுகொண்டது. காமம்-குரோதம்-மோகம் மூன்றையும் உன்னதமாக்க மானுட இனம் மேற்கொண்ட முயற்சியின் விளைவாகவே கலைகளும் இலக்கியமும் விளையாட்டும் உருவாயின. காமத்தைக் காதலாக மாற்றிக்கொள்வது உன்னதமாக்கலே. நடனமும் ஓவியமும் கவிதையும் அந்த உன்னதமாக்கலைத்தான் நிகழ்த்துகின்றன. போரை விளையாட்டாக ஆக்கிக்கொள்வது உன்னதமாக்கலே.

ஆகவே உன்னதமாக்கல் தேவை இல்லை, நான் ‘அப்படியே’ இருப்பேன் என்று மானுடப்பண்பாட்டுக்குள் இருக்கும் ஒருவர் சொல்லமுடியாது. ஒரு பழங்குடிச்சமூக உறுப்பினர் கூட சொல்லமுடியாது. காமம்-குரோதம்-மோகம் ஆகிய அடிப்படை இச்சைகள் கட்டுப்படுத்தப்பட்டு உன்னதமாக்கப்பட்ட ஒரு பண்பாட்டுச்சூழலில்தான் ஒவ்வொருவரும் பிறந்து வளர்கிறார்கள். நாம் பேசிக்கொண்டிருப்பது சமூகத்தில் ஏற்கனவே இருக்கும் உன்னதமாக்கலை மேலும் நுட்பமாக அகவயமாக நிகழ்த்திக்கொண்டு சுயவிடுதலையை நோக்கிச் செல்வதைப்பற்றி மட்டுமே.

தாந்த்ரீக மரபு என்பது இந்திய மெய்ஞானப்பரப்பில் ஒரு சிறிய வழி. அதன் தொடக்கம் கலைகளில் உள்ளது.காமம்-குரோதம்-மோகம் ஆகியவற்றை கலைகள் உருமாற்றி உன்னதப்படுத்துவதைத் தொன்மையான காலகட்டத்திலேயே கவனித்திருக்கிறார்கள். கலைகள் எப்படி உன்னதமாக்கலை நிகழ்த்துகின்றன? அவை அடிப்படையான இச்சையின் ஈர்ப்பை மட்டும் தனித்துப்பிரித்துப் பிறவற்றுடன் கலந்து அதை ஒரு தூய உணர்வாக ஆக்கிக்கொள்கின்றன.

ஒரு பெண்ணின் உடலழகுக்கு என்ன அர்த்தம்? பாலுறவுக்கான இச்சையை அது தூண்டுகிறது அவ்வளவுதான். ஆனால் ஓவியக்கலை அல்லது கவிதை அதை இன்னொன்றாக ஆக்குகிறது. இயற்கையுடன் அதை ஒப்பிடுவதன் வழியாக அதிலிருக்கும் நேரடியான காமத்தை அது விலக்குகிறது. அதை தூய அழகனுபவமாக ஆக்குகிறது. ஒரு மலரை ரசிப்பதுபோல வானவில்லை ரசிப்பதுபோல பெண்ணழகை ரசிக்கச்செய்கிறது கலை. அதுவே அதன் உன்னதமாக்கல். அதன் வழியாகக் காமம் என்ற அடிப்படை இச்சையை அது வென்று முன்னகர்கிறது. அகோரவீரபத்ரரின் உக்கிரமான சிலை வீரம் என்ற உணர்வை மட்டுமே முன்னிறுத்தி குரோதம் என்ற அடிப்படை இச்சையை வென்றுமேலே செல்கிறது..

அந்த வழியை மேலும் பயிற்சியுடன் மேலும் தீவிரத்துடன் செய்தால் என்ன என்ற எண்ணமே தாந்த்ரீகத்தை உருவாக்கியது. தாந்த்ரீகம் காமம்-குரோதம்-மோகம் என்னும் அடிப்படை இச்சைகளைக் குறியீடுகளாகவும் குறியீட்டுச்செயல்பாடுகளாகவும் மாற்றிக்கொள்கிறது. அதற்குக் கலைகளைப் பயன்படுத்திக்கொள்கிறது. முதன்மையாகச் சிற்பக்கலையை. அந்தக்குறியீடுகள் காமம்-குரோதம்-மோகம் என்னும் அடிப்படை இச்சைகளின் சாராம்சத்தை மட்டும் பிரித்து அளிப்பவை.அவற்றைப் பயில்வதன் வழியாக அடிப்படை இச்சைகளை அறியவும் தாண்டிச்செல்லவும் முடியும் என்பது அவர்களின் கொள்கை

தாந்த்ரீகம் இருவகை. வலதுவழி,இடதுவழி. வலதுவழி என்பது அடிப்படை இச்சைகளைக் கலையாக ஆக்கிக்கொண்டு அகவயமான பயிற்சிகள் வழியாக அறியவும் தாண்டிச்செல்லவும் முயல்வது. அதாவது மென்மையானது. காலப்போக்கில் அது பெரும்பாலும் பக்திமார்க்கத்துடன் கலந்துவிட்டது. சைவ,வைணவத்தில் உள்ள உபாசனைகள் அதன்பாற்பட்டவை . இடது வழிதான் இன்று தாந்த்ரீகம் என்று அறியப்படுகிறது. அது அடிப்படை இச்சைகளைக் குறியீட்டுச்செயல்பாடுகள் வழியாக உன்னதமாக்கித் தாண்டிச்செல்லமுயல்வது. அகோரிகள் போன்ற சைவக்குழுக்கள் ஆனந்தமார்க்கம் போன்ற நவீன மதக்குழுக்கள் இவற்றைப் பயில்கிறார்கள்.

தாந்த்ரீகமரபு இல்லாமல் நம்முடைய சிற்ப-ஆலயக்கலை இந்த அளவுக்கு வளர்ந்திருக்காது. ஒருகட்டத்தில் தாந்த்ரீகத்தை உள்ளிழுத்துக்கொண்டதன் வழியாகவே பக்திமரபு தழைத்தது. வலதுவழியை உள்ளிழுத்து இடதுவழியை நிராகரித்து பக்திமரபு வளர்ந்தது எனலாம். நாம் வழிபடும் சிலைகள் ,நாம் செய்யும் சடங்குகள் பெரும்பாலும் தாந்த்ரீகத்தின் கொடையே. அடிப்படை இச்சைகளைக் கலைகள் மூலம் உன்னதமாக்கும் தாந்த்ரீகத்தின் முயற்சியின் விளைவுகள் அவை.

நான் இதுவரை பேசியது இந்து மரபை. இதற்கிணையாகவே பௌத்த மரபுக்குள்ளும் உன்னதமாக்கல் உண்டு. அங்கே ஞானம், யோகம், தாந்த்ரீகம் என மூன்று வழிகள் மட்டுமே. ஞானமரபை தேரவாதம் என்றும் யோகமரபை யோகாசாரம் என்றும் தாந்த்ரீக மரபை வஜ்ராயனம் என்றும் சொல்வார்கள். சமண மரபில் உன்னதமாக்கல் ஞானம் யோகம் என்னும் இரு மரபுகள் மட்டுமே கொண்டது

நீங்கள் இவை எதுவுமே தேவையில்லை என ஒதுக்கியபின் நான் இவ்வளவு சொல்லவேண்டியதில்லை. ஏனென்றால் நீங்கள் உங்கள் நிலைப்பாட்டை எடுத்துவிட்டீகள். நான் இதை சந்தர்ப்பமாக ஆக்கி இந்த விஷயத்தின் வரலாற்றுப்பின்னணியைச் சொல்லலாம் என்று நினைத்தேன். நிராகரியுங்கள், ஆனால் அது தேவையில்லை என்ற நிலைப்பாட்டைப் பிறருக்குச் சொல்வதற்கு முன்னால் இத்தனை பிரம்மாண்டமான பின்னணி அதற்குண்டு என்பதையும் தெரிந்துகொள்ளுங்கள்

ஜெ

முந்தைய கட்டுரைதனிமை கடிதங்கள்
அடுத்த கட்டுரைசராசரி-கடிதங்கள்