பகுத்தறிவு ஒரு கடிதம்

ஆசிரியருக்கு,

வணக்கம். பகுத்தறிவு என்பது புறவயமான தர்க்கத்தினை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறை என்று சொல்லி இருந்தீர்கள். இந்த வரையறை பகுத்தறிவின் வெளிபாட்டினைக் குறுக்குவதாய் நினைகின்றேன். பகுத்தறிவு என்பது புறவய சுழலில் விழிப்புணர்வினைத் தேடும் ஒரு பயணம். புறவய சுழலில் விழிப்புணர்வு என்பது ஒரு மனிதன் தனது உரிமையையும் , உணர்வையும் புரிந்து கொண்டு தனது சக மனிதனது உரிமையையும் ,உணர்வினையும் மதிக்கக் கற்றுக் கொள்ளல் என்று நினைக்கின்றேன்.

இந்தப் பயணத்தின் பொது தருக்கம் கருவியாக உதவுகின்றது. தருக்கம் ஒரு கருவியே. தருக்கம் விளக்க முடியா இடங்கள் உண்டு. அந்த இடைவெளிகளுக்கான தருக்கங்கள் இன்னும் உருவாக்கப்படவில்லை, ஆனால் அவ்வகை தருக்கங்கள் சாத்தியப்படும் என அந்த தருக்கங்களை அமைக்கும் முறையைப் பகுத்தறிவு தேடுகின்றது. அறிவின் முடிவின்மை எவ்வளவு உண்மையோ அந்த அளவிற்கு அந்த முடிவின்மையைத் தேடும் தருக்கங்கள் அமைக்க செல்லும் பயணங்களும் உண்மை. நிரூபணவாத அறிவியலும் ,தொழில்நுட்பமும் அந்த தருக்க அடிப்படைக்கருவிகளே. இந்தக் கருவிகள் தொடர் மேம்பாட்டின், சுய உடைப்பின் மீதே அடுத்த தளத்துக்கு செல்கின்றன. தருக்கம் தீர்ந்து போவதால் பகுத்தறிவு தீர்ந்து போவதில்லை, புதிய தருக்கங்களை உருவாக்குவதில்தான் பகுத்தறிவின் வளர்ச்சி உள்ளது.

நம்பிக்கை அடிப்படையிலான மதம் தங்களது கருத்துகளை சக மனிதனது உரிமையையும் , உணர்வினையும் ஒடுக்கப் பயன்படுத்தும் தருணங்களிலே மோதல் வருகின்றது. ஒரு உயர்ந்த குடிமை சமுகமே
பகுத்தறிவின் வழியாய் இருக்க முடியும். அந்த வழிகள் புனிதமானவை அல்ல. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை அல்ல. உடைக்க உடையாதவை அல்ல. அதன் பயன்பாட்டாளர்கள் நுண்ணறிவு கொண்ட ஞானிகள் அல்ல. அது இருக்கப்பட வேண்டிய இடம் ஆலயங்கள் அல்ல.

பகுத்தறிவு அனைவருக்கும் பொது. எனவே அது ஆவணப்படுத்துதல்,அளவீடு செய்தல், அனைவர்க்கும் பொதுவான கல்வி அமைப்பினைப்பரவலாக்குதல் போன்ற செயல்முறைகளைத் தனது நெடிய பயணத்தில் துணையாய்க் கொள்கின்றது. இதில் செயல் முறைகளில் குறைபாடுகள் உண்டு , ஓர வஞ்சனை உண்டு , ஏன் என்றால் பகுத்தறிவு சகல மானுடரின் பங்கையும் கோருகின்றது. அனைவரும் ஒரே செயல் திறம், சிந்தனை கொண்டிருப்பதில்லை. தனி மனிதக் குறைபாடு பகுத்தறிவின் குறைபாடாய்த் தெரியலாம், ஆனால் இந்தக் குறைபாடுகளை ஒத்துக் கொள்ளவவும் பகுத்தறிவு அமைப்பு மறுப்பதில்லை.

நன்றி
-நிர்மல்

முந்தைய கட்டுரைகல்வியும் பெற்றோரும்
அடுத்த கட்டுரைகலைக்களஞ்சியம்