துறவுத்தகுதி

அன்புள்ள ஜெயமோகன்,

நான் உங்கள் வலைப்பூவைத் தொடர்ந்து வாசிக்கும் வாசகன்.

முதலில் என்னைப்பற்றி சிறு அறிமுகம். என் வயது 25. நான் சிறு வயதில் இருந்தே தனிமையை விரும்புவேன்.பள்ளிப் பருவங்களில் அதீத கடவுள் பக்தி கொண்டிருந்தேன். அப்போது எனக்கு ஈரோடு மாவட்டம், புன்செய் புளியம்பட்டி வேணுகோபால் சுவாமிகள் அவர்களின் பக்தி யோகமும்; பின்னர் சில வருடங்களில் வேதாத்திரி மகரிஷி அவர்களின் யோகமும் அறிமுகமாயின.அவற்றில் மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தேன்.

ஐந்து வருட இடைவெளிக்குப் பின்னர் கடந்த இரண்டு வருடங்களாக கோவை ஈஷா யோகா மையத்தின் பயிற்சிகளை செய்து வருகிறேன். இந்திய தத்துவ நூல்கள் நிறைய வாசிக்கும் பழக்கம் உண்டு.
என் வாழ்க்கைப் பாதை மற்றும் நோக்கம் பற்றிய கடும் குழப்பத்தில் உள்ளேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் வேலையைத் துறந்து விட்டு ஆறு மாதம் வடநாட்டில் இருந்தேன். பின்னர் மீண்டும் வேலையில் சேர்ந்தேன். எனது பெற்றோர் எனக்குத் திருமணம் செய்யும் முயற்சியில் இறங்கி விட்டனர். ஆனால் மற்ற சக தோழர்களுக்கு இருக்கும் பொருள் ஈடுபாடும், அதற்காகப் போராடும் ஆர்வமும் எனக்கு வேகமாகக் குறைவதாக உணர்கிறேன். துறவு மேற்கொள்ளும் ஆர்வமும் எண்ணமும் எனக்கு சில மாதங்களாக அதிகமாகி கொண்டே வருகின்றன.

ஆனால் எனக்கு உண்டாகும் இந்த எண்ணத்திற்கான அடிப்படை என்னவென்று என்னால் ஊகிக்க முடியவில்லை. என்னால் இந்த எண்ணத்தில் நிலைத்தும் இருக்க முடியவில்லை. ஆனால் இந்த எண்ணம் விடாமல் என்னைக் கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறது. துறவி ஆகும் உள்ளார்ந்த தகுதி உடையவன் இவ்வளவு குழப்பம் அடைய மாட்டான். ஆகவே எனக்கு அந்தத் தகுதி இல்லை என சில சமயம் தோன்றுகிறது. லௌகிக வாழ்வில் என்னைக் கட்டாயப்படுத்திக்கொள்ளும் போது, வேதம் பயிலவும், முக்தி அடைய பயிற்சிகள் செய்யவும் முடியாமல், என் உள்ளார்ந்த ஏக்கத்தால் துன்பமடைவேன் என்றும் சில சமயம் தோன்றுகிறது.

உங்கள் வாழ்க்கை அனுபவங்களைப் பற்றியும், உங்கள் தெளிவான விளக்கங்களையும் நிறைய வாசித்து உள் வாங்கி இருக்கிறேன்.

உங்களால் நிச்சயமாக என் குழப்பத்தின் அடிப்படை மற்றும் அதற்கான விளக்கமும் தர முடியும் என நம்புகிறேன்.

உங்கள் விளக்கத்திற்காகக் காத்திருப்பேன்.

தொந்தரவுக்கு மன்னிக்கவும்.

அன்புடன்,

ஜி

அன்புள்ள ஜி

இந்த கடிதத்தை மிகத்தாமதமாக இப்போதுதான் கண்டேன்,, ஸ்பாமுக்குள் கிடந்தது. என்ன நிமித்தம் எனத் தெரியவில்லை.

உங்கள் குழப்பம் இப்போது தீர்ந்திருக்குமென நினைக்கிறேன். இருந்தாலும் என் பதில் இது.

உங்கள் வினாவுக்கான பதிலை இருவர்தான் சொல்லமுடியும். ஒன்று நீங்கள் இன்னொன்று உங்களை நேரில் நன்கறிந்த உங்கள் குரு.

கீழ்க்கண்ட வினாக்களை உங்களிடம் அந்தரங்கமாகக் கேட்டுக்கொள்ளுங்கள்

1. நீங்கள் துறவுபூண விரும்புவது உங்கள் ஆளுமையைப் பெரிதாக ஆக்கிக்கொள்ளவா? அதன் வழியாக உங்களுக்கு மதிப்பும் சமூக அடையாளமும் கிடைக்கும் என்பதற்காகவா?

இதற்கான பதிலைப்பெறுவதற்கான ஆதாரம் ஒன்றே. துறவுபூண்ட பின்னர் நீங்கள் எப்படி எப்படி இருக்கப்போகிறீர்கள் என்பதை நீங்கள் உங்கள் மனதுக்குள் கற்பனைசெய்துகொள்வீர்களா? ஆம் என்றால் நீங்கள் விரும்புவது ஒரு பெரிய ஆளுமையை உருவாக்கிக்கொள்வதை மட்டுமே

2. துறவின் முதன்மையான சவால் காமத்தை வெல்வது. காமம் என்றால் உடலின் அனைத்து இச்சைகளும்தான். அதை முழுமையாகச்செய்ய உங்களால் முடியுமென நினைக்கிறீர்களா?

இதற்கான பதிலைப்பெறுவதற்கான ஆதாரம் இதுதான். உங்கள் நினைவுகளில் காமம் எத்தகைய இடம் வகிக்கிறது? காமம் சார்ந்த எண்ணங்கள் பகலில் சிந்தனைகளினூடாக இயல்பாக ஓடுகின்றன என்றால் நீங்கள் காமத்தை வெல்வது மிகக்கடினம். இரவுகளின் தனிமையில் மட்டுமே என்றால் நீங்கள் அதைக் கட்டுப்படுத்தித் தாண்டிச்செல்ல வாய்ப்புண்டு

3. நீங்கள் அவமதிக்கப்படுவதை உங்களால் இயல்பாகத் தாங்கிக்கொள்ளமுடியுமா?

அவமதிப்புகள் என்பவை நம்மைப்பற்றிய நமது பிம்பங்களை பிறர் ஏற்கவில்லை என நாம் அறியும்போது உருவாகும் மனக்கொந்தளிப்பு. ஒரு துறவிக்கு அது இருக்கக்கூடாது.வேண்டுமென்றே அவமதிப்புக்குள்ளாகும் ஒரு செயலைச் செய்துபாருங்கள். அந்த அவமதிப்பை அக்கணத்துக்கு அப்பால் நினைவில் நிறுத்தாமல் தாண்டிச்செல்லமுடிந்தால் நீங்கள் துறவிக்கான மன அமைப்பு கொண்டவர். பழைய அமைப்பில் இதற்காகவே பிரம்மசாரிகளைப் பிச்சையெடுக்க அனுப்புகிறார்கள்

இவையனைத்துக்கும் சாதகமான பதில் கிடைத்தால் நீங்கள் துறவுக்குச் செல்லமுடியுமென நினைக்கிறேன். முறையான குருகுல அமைப்புகளில் ஒரு குருவின் நேரடி உறவில்லாமல் துறவு சாத்தியமில்லை. குரு ஒருவனை மாணவராக ஏற்று பிரம்மசாரியாக சில வருடங்கள் கூடவே வைத்திருந்து மதிப்பிட்டு அதன்பின்னரே துறவை அளிக்கவேண்டும்

அத்தகைய முறையான குருகுல அமைப்பை நாடுங்கள். பிரம்மசரிய வாழ்க்கையின் எந்த ஒரு கட்டத்திலும் அதிலிருந்து விலகத் தயாராக இருங்கள். அது உங்களுக்கு விடுதலையுணர்ச்சியை, ஒவ்வொருநாளும் புதியதாக நிகழும் நிறைவை, முன்னேறிக்கொண்டிருக்கிறீர்கள் என்ற எண்ணத்தை அந்தரங்கமாக அளித்தால் மட்டும் தொடருங்கள்.

துறவு ஒரு நிலை அல்ல. ஒரு வழிமுறை மட்டுமே. துறவின்மூலம் எதை அடைகிறோமென்பதே முக்கியமானது

ஜெ

முந்தைய கட்டுரைஇரு கவிதைகளைப்பற்றி -சாம்ராஜ்
அடுத்த கட்டுரைசாதிகளின் மாற்றம்