நகைச்சுவை ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,
பல வருடங்கள் பல நாட்டவர்களுடன் வேலை செய்த அனுபவத்தில் இருந்து கிடைத்த சில அவதானிப்புகள்:

நகைச்சுவையாகப் பேசினால் கிட்டத்தட்ட எல்லா நாட்டினரும் சிரித்துகொண்டு நன்றாகப் பழகுகிறார்கள்; இந்தியர்களைத் தவிர. இந்தியர்களிடம் நகைச்சுவையாகப் பேசினால் கோமாளி என்றும், அவமானப் படுத்தப்பட வேண்டியவர் என்றும் நினைக்கிறார்கள். இதற்கான காரணம் இப்போது உங்கள் கட்டுரையைப் படித்தபோது புரிந்தது. அதாவது நகைச்சுவை என்பது ஒரு திறனாக/உணர்வாகக் கருதப்படுவதில்லை, ஒரு கேரக்டராகக் கருதப்படுகிறது. இதன் விளைவாக இந்திய மேலாண்மை அதிகாரிகள் சிடு சிடுவெனவும், நாகரீகமற்றவராகவும் இருந்தால் மட்டுமே வேலை நடக்கிறது. அமெரிக்கர்களிடம் வேலை செய்த இந்தியர்கள், இந்தியா திரும்ப விரும்பாமைக்கு இதுவும் ஒரு காரணமாகும்.

தமிழர்கள் மட்டுமல்ல, எல்லா இந்தியர்களுமே நகைச்சுவை உணர்வு பாதிக்கப்பட்டவர்களே. நகைச்சுவை உணர்வு மட்டுமல்ல, பலவித நுண்ணுணர்வுகள் பாதிக்கப்பட்டவர்கள் நாம். காதல் கூட பலரால் ஒரு உணர்வாகக் கருதப்படாமல் ஒரு வெற்றி இலக்காகவும், அதனை அடையப் பெண்ணைத் தனிமைப் படுத்துதலும், அபாண்டமும், பலப்பிரயோகமும் இயல்பாகக் கருதப்படுகிறது. இந்தப் பலவித நுண்ணுணர்வுகள் இல்லாத கூட்டத்தில் பிறந்ததனால்தான் பாரதியார் கூடப் படாத பாடுபட்டார், பைத்தியக்காரனாய்த் தோன்றினார். அவருடைய பல்லுணர்வுள்ள எழுத்துக்களிலும் நுண்ணுணர்வல்லாத கோஷங்களே பெரும்பான்மைத் தமிழரால் போற்றப் படுகின்றன.

காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை நகைச்சுவை என்பது பொதுவாக ‘toilet comedy ‘ அல்லது ‘கருவாடு காமெடி’ என்று வேண்டுமானால் சொல்லலாம். பொதுவாக இவற்றில் பிரதானம் ஒருவரை மற்றொருவர் ஏமாற்றுதல் அல்லது அவமதித்தல். அடுத்ததாக ஆள்மாறாட்டம், பொய், மிமிக்ரி இவற்றைத் தவிர வேறு நகைச்சுவை இவர்களால் செய்ய இயலாது. வில்லனோ வில்லியோ ஏமாற்றுவது துரோகமாகவும், துன்புறுத்துவது சாடிசமாகவும், வடிவேலுவோ, கோவை சரளாவோ ஏமாற்றுவது / ஏமாற்றப்படுவது, துன்புறுத்துவது / துன்புறுத்தப்படுவது காமெடி என்றும் கருதப்படுகிறது. உதாரணமாக ஒரு படத்தில் விவேக் “சிநேகிதனே” என்று பாடிக்கொண்டே கைகளை விரித்து ஒரு கண் பார்வையற்ற பூக்காரியின் மற்ற கண்ணையும் குத்திவிடுவார். கண்ணைக் குருடாக்குவது மட்டும் நகைச்சுவை இல்லை, கை எலும்பைப் பலவிதமாய் மடக்கி உடைத்தல், மூல வியாதி, பிணம், ஆண்மைக் குறைவு(இது மெட்ராஸ் டு பாண்டிச்சேரியிலேயே வந்தது) இதெல்லாம் தமிழ் நகைச்சுவையின் அடிப்படை. இதில் பாதிக்கப்படுபவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியாக இருந்தால் இன்னும் சிறப்பு மன்னிக்கவும் சிரிப்பு.

ஒருமுறை ‘படித்த’ கல்லூரி மாணவிகள் ஜெய்சங்கரிடம் ஆட்டோகிராப் வாங்கிக் கொண்டிருந்தபோது ஆர்.எஸ்.மனோகர் அங்கு வர ‘வீல்’ என்று கத்தி ஓடிப்போனர்களாம்!!. நடிகர் ஜெய்சங்கரின் மகன் திருமணத்தில் செந்திலைப் பார்த்தேன். “எதற்கு சார் செக்யூரிடியோட வரீங்க?” என்று கேட்டதற்குத் தன்னைப் பலர் குட்டி விடுவதாகச் சொன்னார். முப்பது வருடங்கள் கழித்தும் சினிமா என்பது உண்மையன்று என்று மக்களுக்குப் புரியவில்லை என்றே தோன்றியது. மலையாளத்தில் யதார்த்தைப் படம் பிடிக்க சினிமாக்கள் முயல்கின்றன. தமிழில் அபத்தத்தை (பொய்களை) உண்மை என மக்களை நினைக்க வைக்க சினிமாக்கள் உதவுகின்றன. இந்த மிகப்பெரிய பேதம் இருந்தாலும் இந்த இந்திய நகையுணர்வாளர்களுக்கிடையில் மலையாளிகள் ரொம்ப வித்தியாசமானவர்கள் என்று மற்றும் எனக்குத் தோன்றவில்லை.

அன்புடன்,
கார்கில் ஜெய்

முந்தைய கட்டுரைசாதி-வர்ணம்-முக்குணங்கள்
அடுத்த கட்டுரைசர்கம்