சர்கம்

திரு ஜெ

நாம் நிரந்தரமாக சில பாட்டுக்களையும் படங்களையும் நம்முடன் வைத்திருப்போமில்லையா ? அவ்வகையில் ஹரிஹரன் படவரிசையில் நகத்ஷதங்கள், பரிணயம், ஒரு வடக்கன் வீரகாதா, சர்கம் போன்றவையும் அடக்கம். மலையாள இயக்குனர்களில் பரதன், பத்மராஜன், சிபிமலயில், சத்யன் அந்திக்காடு, ஸ்ரீனிவாசன், அடூர், முக்கியமாக எம்.டி. போன்றோர்களின் ஆக்கங்களைத் தவறாது பார்ப்பது வழக்கம். இவர்களுடைய படங்களைக் குறைந்தது நான்கு முறையாவது பார்ப்பது வழக்கம்.

ஹரிஹரனின் “சர்கம்” மீண்டும் ஒருமுறை பார்த்தேன். என்னவோ தெரியவில்லை இப்படத்தை 1992இல் பார்க்கையிலும் சரி இப்பொழுதும் சரி மிகுந்த ஒரு சங்கடத்தைத் தருகிறது. மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. (தமிழில் எனக்கு மூன்றாம்பிறை மட்டும் இதுபோல் எற்படுத்தியுள்ளது). சமீபத்தில் நான் இரின்ஜாலக்குடா பரதனின் கோவிலுக்குச் சென்றபோது அக்குளக்கரையில் அமர்ந்திருந்த சமயம் சம்பந்தமில்லாமல் குட்டன் தம்புரானின் நினைவு தாக்கியது. கேரளத்தின் ஒருபழைய வீட்டைப் பார்த்தாலே இப்பட கதாபாத்திரங்களின் தாக்கம் ஏற்படுகிறது. நான் எனது நாற்பது வருட வாழ்க்கையில் எத்தனையோ அருமையான படங்களால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறேன். இப்படமும் ஹரிஹரனும் அனைத்திலும் உச்சமாகப் படுகிறது.

படத்தின் துவக்கமே பார்த்தீர்களானால் ஒருவித பெரும்சுமையுடன் கூடிய இசையில்தான் ஆரம்பிக்கும். இதுபோன்ற ஆக்கங்களை ஒருபோதும் நீங்கள் தமிழிலோ பிறமொழிகளிலோ பார்த்திருக்க வாய்ப்பில்லை. மனோஜ் கே ஜெயனை எப்படி இந்தப் படத்தில் பொருத்தியிருக்கிறார்கள் பார்த்திருக்கிறீர்களா? வினித்தின் செக்ரட்டரியாக வரும் ஒரு சாதாரண கதாபாத்திரம்கூட மிகுந்த இயல்புடன் பொருத்தியிருக்கிறார்கள். தேவாசுரத்தின் டெல்லி கணேஷைப் போல !

நீங்கள் இதைப்பற்றித் தங்களது கட்டுரைகளில் எங்கும் சொன்னதாக எனக்குப் படவில்லை. தங்களுக்கு தெரிந்தவரையில் இது ஏதேனும் உண்மை சம்பவத்தின் தழுவலா என்று தெரியப்படுத்தவும்.

நிச்சயம் இப்படம் உங்களுக்கும் பிடித்திருக்கும். இசையும் பாட்டும் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. ஒருவேளை எனது ரசனையில் மட்டுமே இப்படம் அதிமுக்கியமாகப்படுகிறதா ? நீங்கள் ஹரிஹரனைச் சந்தித்திருக்கிறீர்களா ?

தங்களின் கருத்தை சுமையுடன் எதிர்பார்க்கிறேன்.

சுரேஷ்

அன்புள்ள சுரேஷ்

சர்க்கம் ஒரு நல்ல படம் தான். ஆனால் மலையாளத்தின் மிகச்சிறந்த படங்களில் ஒன்றல்ல. ஒருபடத்தின் கதைக்குத்தேவையான ஒருமை இல்லாமல் பிற்பகுதியில் சற்றே அலைபாய்கிறது அது. மலையாளத்தில் அதைவிடமுக்கியமான ஏராளமான படங்கள் உள்ளன. தொடர்ந்து பல மலையாளப்படங்களைப் பார்த்தீர்கள் என்றால் அந்த மனப்பிம்பம் மாறக்கூடும்.

ஹரிஹரன் எழுதியபடம் சர்கம். நெடுமுடிவேணுவின் மிகச்சிறந்த நடிப்பால் துலக்கப்பட்டது. எனக்குப்பிடித்த படங்களில் ஒன்று. நான் பழசிராஜா வசனங்களை மொழியாக்கம் செய்தபோது ஹரிஹரனிடம் அப்படம் பற்றிப் பேசியிருக்கிறேன். அவர் அதைத் தமிழில் செய்யலாமா என்று என்னிடம் கேட்டார். நான் வேண்டாம் என்று ஆலோசனை சொன்னேன்

இரு காரணங்கள். ஒன்று தமிழகத்தில் உருவானதும், தமிழ்ப்பண்பாட்டின் சொத்துமான கர்நாடக இசை பற்றிய ஒரு எதிர்மறை எண்ணம் இங்கே வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த இசைக்குச் செவிகொடுக்கும் மனநிலை தமிழில் இல்லை. இளையராஜா போன்ற மேதை இசையமைத்தால்கூட அந்தப்படம் முழுமையான இசைப்படமாக இருந்தால் நம்மவர்கள் அமர்ந்து பார்க்கமாட்டார்கள்.

ஆகவே இங்கே எடுத்தால் பொதுரசிகனுக்காக படத்தின் தீவிரத்தையும் கவித்துவத்தையும் வெகுவாகக் குறைக்கவேண்டியிருக்கும். அது எனக்கு உடன்பாடல்ல. ஒரு நல்ல படம் அப்படியே இருந்துவிட்டுப்போகட்டும் என நினைத்தேன். ஹரிஹரன் ஒரு சின்ன இசைப்படம் மலையாளத்துக்காக எழுது என்றார். எழுதுகிறேன் என்றேன். எழுதலாம்

ஜெ

http://www.youtube.com/watch?NR=1&v=Z9Vx1NDOIKg&feature=endscreen

http://www.youtube.com/watch?v=GLRltYWQ0TM

முந்தைய கட்டுரைநகைச்சுவை ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைவிற்பனையும் இலக்கியமும்