சாதி-வர்ணம்-முக்குணங்கள்

http://www.youtube.com/watch?v=GLRltYWQ0TM

அன்புள்ள ஜெயமோகன்,

பிறரிடம் கேள்விகள் கேட்கும்போது அவை அசட்டுத்தனமானவையாக அமைந்துவிட்டால் சபையில் அசடு வழிய நேரிடுமோ என்ற பெரும் தயக்கத்துடனேயே எப்போதும் என் சந்தேகங்களை முன்வைக்கிறேன்.இக்கடிதமும் அப்படியே.

நம் மரபில் மனிதர்களைப் பொதுவாக அன்பு – குரூரம்-இவை இரண்டையும் சம அளவில் கொண்டவர்கள்(தேவர்-மானுடர்-ராக்ஷசர்?) என மூன்றாகப் பிரித்திருக்கிறார்கள்.குறிப்பாக மகாபாரதக் கதாப்பாத்திரங்கள். ஆனால் மகாபாரதத்தில் சாதிப் பிரிவினை பற்றித் தெளிவான சித்திரம் இல்லை என்றே எண்ணுகிறேன். நமது மரபு குணத்தின் அடிப்படையில் மனிதனை வேறுபடுத்த முனைந்தது சாதிப் பிரிவினைக்கு முன்பா? அதற்குப் பிறகா? இவ்விரண்டும் கலந்தே இருந்தபோது (இருந்திருக்குமானால்?) தொழிலை மட்டும் அளவுகோலாகக் கருதாமல் குணத்தையும் ஒரு பொது அம்சமாக கருதி மக்களைக் குழுக்களாகப் பிரித்தார்களா? (இன்ன இன்ன கடமைகளை ஒழுக்கங்களைப் பயின்று வாழ்பவனே பிராமணன் என புத்தரில் ஆரம்பித்து ஜெயகாந்தன் வரை பலர் குறிப்பிட்டு இருக்கிறார்கள்) குணமே பிரதானமாகக் கருதப்பட்டதெனில் கூட்டு வாழ்க்கையும் தொழிலும் சாதியினால் விளைந்த நற்பயன்களும் குணப் பிரிவினையை மறக்கடிக்கச் செய்துவிட்டனவா? தயவு செய்து தெளிவுபடுத்தவும்.

அன்புடன்
கோகுல்பிரசாத்

அன்புள்ள கோகுல்,

நீங்கள் இவ்விஷயத்தைப்பற்றி இந்த வினாவுடன் இருக்கையில் இதுசார்ந்து கிடைக்கும் தகவல்களை இன்னும் கொஞ்சம் வாசித்திருக்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் சாதிப்பிரிவினை, குணப்பிரிவினை போன்றவற்றைப் பலவகையில் கலந்துகொள்கிறீர்கள். உங்கள் கேள்வி ஒட்டுமொத்தமாகவே ஒரு பெருங்குழப்பம்.

இந்தியசிந்தனையில் வர்ணம் சார்ந்த ஒரு பிரிவினை தொல்பழங்காலம் முதல் காணப்படுகிறது. வர்ணத்திலிருந்து சாதிமுறை உருவானது என்பது ஆரம்பம் முதலே இந்தியவியலாளர்களான ஆய்வாளர்கள் அடைந்த தவறான புரிதல். அவர்கள் ஆராய ஆரம்பித்தபோது இரண்டும் ஒன்றாகக் கலந்து பிரிக்கமுடியாதவையாகவே இருந்தன என்பதுதான் காரணம்.

வர்ணப்பிரிவினை என்பது ஒரு கொள்கையடிப்படையிலான பகுப்பு. வர்ணம் என்ற சொல்லுக்கு நிறம் என்று பொருள். தொடக்கத்தில் அந்த நேர்ப்பொருளிலேயே இந்தப் பகுப்பு ஆரம்பித்திருக்கலாம். பின்னர் அது shades என்று ஆங்கிலத்தில் சொல்லப்படுவதற்கு நிகரான பொருளிலேயே கையாளப்பட்டுள்ளது. ஒருபோதும் நேரடியாகத் தோல்நிறத்தை அது சுட்டவில்லை.

வர்ணப்பகுப்பு இயற்கையின் இயல்பு மனித இயல்பு பற்றிய ஒரு கொள்கையின் விரிவாக்கம். இயற்கையானது நேர்சக்தி, எதிர்சக்தி, சமநிலைச்சக்தி என்ற மூன்று விசைகளால் ஆனது எனப் புரிந்துகொண்டதிலிருந்து உருவானது அந்தக்கொள்கை. நேர்ச்சக்தி என்பது மனிதர்களின் இயற்கையில் வெளிப்படுவதை ரஜோகுணம் என்றார்கள். எதிர்சக்தி தமோகுணம். சமநிலைச்சக்தி சத்வகுணம். இப்படி மனிதர்களில் வெளிப்படும் மூன்றுகுணங்களின் அடிப்படையில் நால்வர்ணம் வகுக்கப்பட்டது. தமோகுணம் கொண்டவர்கள் சூத்திரர்கள். ரஜோகுணம் கொண்டவர்கள் சத்ரியர்கள். தமோகுணமும் ரஜோகுணமும் கலந்தவர்கள் வைசியர். சத்வகுணம் கொண்டவர்கள் பிராமணர்கள் என்று பிரிக்கப்பட்டது.

குணங்களின் அடிப்படையில் பிரிக்கப்படும் நால்வருணம் என்ற அமைப்பு இந்தியசிந்தனைமுறையில் ஒரு நிரந்தரமான சட்டகமாகவே இருந்துள்ளது. மனிதர்களை மட்டுமல்ல மிருகங்களையும் தாவரங்களையும்கூட அப்படிப் பிரித்துப்பார்த்திருக்கிறார்கள். பிங்களசந்தஸ் சாஸ்திரம் போன்றவற்றில் அப்படிப்பட்ட விரிவான பிரிவினைகளைக் காணலாம். இது ஒரு புராதனமான மரபு. இயற்கையை அறியவும் பயன்படுத்திக்கொள்ளவும் அன்றிருந்தோர் கையாண்ட ஒரு முறை, அவ்வளவுதான்

இது ஒரு தத்துவார்த்தமான பகுப்பாக இருந்ததே ஒழிய எங்கும் எப்போதும் இதனடிப்படையில் சமூகம் நிரந்தரமாகப் பிரிக்கப்படவில்லை. அது நடைமுறைச்சாத்தியமும் இல்லை. உதாரணமாக சத்ரியர் என்ற சாதியே இந்தியாவில் இல்லை. சூத்திரர் என்ற சாதியில் எவர் மண்ணைவெல்ல முடிகிறதோ அவர்களே ஆட்சியாளர்களாக ஆனார்கள். மகாபாரதத்தின் சத்ரிய வம்சம் பெரும்பாலும் சூத்ரசாதியிடமிருந்தே உதயமாகிறது. தன்னை சத்ரியனல்ல என்று சொல்லி அவமதிக்கும் சிசுபாலனைக் கொல்வதற்குமுன் கிருஷ்ணன் அதைச் சொல்கிறான், மண்ணாள்பவனே சத்ரியன் என்று.

வர்ணப் பிரிவினையின் அடிப்படையில் நூல்களில் இவர்களுக்கான தொழில்கள் ஒதுக்கப்பட்டன. ஆனால் இதுவும் கொள்கையடிப்படையில்தான், நடைமுறையில் அல்ல. உதாரணமாக இந்தியவரலாற்றில் ஒருதருணத்திலும் பிராமணச் சாதியினர் பிராமணர்களுக்கு என வர்ணாசிரமம் ஒதுக்கிய பணிகளை மட்டும் செய்ததில்லை. மகாபாரத காலம் முதலே அவர்கள் போர்செய்திருக்கிறார்கள்.நாடாண்டிருக்கிறார்கள். மிகச்சமீபகாலத்தில் நாயக்கர் ஆட்சியின்போதுகூட நியோகிபிராமணர்களே போர்த்தளபதிகளாக இருந்திருக்கிறார்கள்.ஆக இந்த வர்ணாசிரமப் பிரிவினையும் அதன் அடிப்படையிலான கடமைகளும் நெறிகளும் எல்லாமே ஒருவகையான கொள்கைகளே ஒழிய யதார்த்தங்கள் அல்ல.

சாதி என்பது முற்றிலும் வேறான ஒன்று. அது இந்தியாவின் ஆயிரக்கணக்கான பழங்குடிக்குலங்கள் நிலப்பிரபுத்துவ அடுக்குக்குள் கொண்டுவரப்பட்டபோது உருவான அதிகார அடுக்கின் விளைவாகப் பிறந்துவந்தது. நிலத்தைவென்று அதிகாரத்தை அடைந்த குலங்கள் மேல்சாதியாகவும் அவர்களால் ஆதிக்கம் செய்யப்பட்டவை கீழ்சாதிகளாகவும் உருவாயின. மிகமெல்ல பலநூற்றாண்டுகளாக நிகழ்ந்துவந்த இந்த செயல்பாடு இன்றும் தொடர்கிறது. சென்ற நூறுவருடங்களுக்குள் பல பழங்குடிக்குலங்கள் சாதிய அடுக்குக்குள் வந்திருப்பதைக் காணலாம்.

ஆகவே சாதிப்படிநிலை என்பது நிலையானது அல்ல. நிலத்தைவெல்லும்சாதி அப்படிநிலையில் மேலே செல்வதும் நிலத்தை இழக்கும் சாதி கீழே வருவதும் சாதாரணம். பல அடித்தள சாதிகள் பேரரசுகளை உருவாக்கி ஆளும்வர்க்கமாக மாறி நூற்றாண்டுகளாக ஆட்சிசெய்திருக்கின்றன.

இப்படிச் சொல்லலாம். சாதி கீழிருந்து உருவாகி வந்தது. வர்ணாசிரமம் மேலிருந்து உருவாக்கப்பட்டது. சாதிகளை மேலிருந்து புரிந்துகொள்ளவும் வகுக்கவும் முற்பட்டவர்கள் அவற்றை வர்ணாசிரமத்தின் சட்டகத்திற்குள் அடைக்க முயன்றார்கள். அது ஒரு அதிகாரச்செயல்பாடு. சமூகத்தைப் பிரித்து அடுக்கி ஒவ்வொருவருக்கும் அதிகார அமைப்பில் ஓர் இடத்தை வகுத்தளிக்கும் முயற்சி

அதன்விளைவாகப் பூசாரிக்குலங்கள் எல்லாமே பிராமணர் என்ற வர்ணத்துக்குள் சென்றனர். இந்தியாவில் பிராமணர் என்ற அடையாளத்துக்குள் முற்றிலும் வேறுபட்ட பல்வேறு சாதிகள் இருப்பது இதனால்தான். இந்த நிகழ்வை சமீபகால உதாரணமாகப்பார்க்கவேண்டுமென்றால் வீரசைவ மரபில் வீரசைவ பூசைக்காக பசவரால் உருவாக்கப்பட்ட பிரிவினர் சில தலைமுறைக்குள் வீரசைவ பிராமணர்களாக மாறியதைச் சுட்டிக்காட்டலாம். வணிகம் செய்த சாதிகள் வைசிய வர்ணத்துக்குள் செலுத்தப்பட்டன. நாடாண்ட சாதிகள் ஷத்ரியர்களாக அடையாளம்காணப்பட்டன. உதாரணமாக, மாடுமேய்க்கும் யாதவர்கள் பேரரசை உருவாக்கியபோது ஷத்ரியர்களாக ஆனார்கள்.இவ்வாறுதான் சாதியும் வர்ணமும் ஒன்றாகக் கலந்துகுழம்ப ஆரம்பித்தன.

ஆனால் இவ்வாறு வர்ணத்தின் சட்டகத்திற்குள் சாதிகளை அடைக்கும்போக்கு ஒருபோதும் முழுமையாக நிகழ்ந்ததில்லை. சாதிகள் மாறிக்கொண்டே இருந்தன. ஒருசாதி, தான்செய்யும் தொழிலோ தன்னுடைய அதிகாரமோ மேம்படும்போது வர்ணாசிரம அமைப்பில் மேம்பட்ட இடத்தைக்கோரியது. அதை மெதுவாகப் போராடி அடையவும்செய்தது. ஷத்ரிய வைசிய அடையாளங்களுக்காக சூத்திரர் என வகுக்கப்பட்ட சாதிகள் போராடுவதை இன்றும்கூடக் காணலாம்.

சாதியை இனக்குழுக்கள் உருமாறி உருவாகிவந்த அமைப்பு என்றும் வர்ணத்தை அந்தச்சாதிகளை அதிகாரவர்க்கம் தொகுப்பதற்காக பயன்படுத்திய அமைப்பு என்றும் புரிந்துகொள்வது தெளிவைத்தரும்.

இதேபோன்ற வேறுபல பிரிவுகள் புராணங்களில் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. பொதுவாக அனைத்திலுமே இந்த முக்குணங்கள் என்ற அளவுகோல் இருப்பதைக் காணலாம். தேவர்கள் சத்வகுணம் கொண்டவர்கள், அசுரர் தமோகுணம் கொண்டவர்கள், மனிதர்கள் ராஜஸகுணம் கொண்டவர்கள் என்ற பிரிவினையை சிலபுராணங்களில் காணலாம். . கதகளிபோன்ற கலைகளில் கதைமாந்தர் இவ்வாறு பிரிக்கப்பட்டு அதற்கேற்ப அவர்களின் முகங்களின் நிறங்கள் தீர்மானிக்கப்படுகின்றன. தமோகுணம் கொண்ட கதைமாந்தர் கரியவேடம். ரஜோகுணம் கொண்டவர்களுக்கு சிவப்பு. சத்வகுணத்துக்கு பச்சை. சில சிகிழ்ச்சைமுறைகளில் இப்பிரிவினை நோய்களுக்குக்கூட செய்யப்படுகிறது

இவற்றையெல்லாம் ஒன்றோடொன்று குழப்பிக்கொண்டு சிந்திப்பது வீண்வேலை. இவற்றுக்கான வரலாற்றுப்பின்புலத்தைப் புரிந்துகொண்டு இவை எவ்வாறு செயல்பட்டன என்று புரிந்துகொள்வதே ஒரு நவீனமனம் செய்யவேண்டியது.

முக்குணங்கள் என்ற பிரிவினை இந்தியசிந்தனையின் தத்துவம், மருத்துவம், யோகம் ஆகியவற்றைப்புரிந்துகொள்ளப் பயன்படக்கூடிய ஒன்று.அதைக் குறியீட்டுரீதியாக விளக்கிக்கொள்வதுதான் பயன்தரும்

ஜெ

முந்தைய கட்டுரைவாசிப்பின் வாசலில்
அடுத்த கட்டுரைநகைச்சுவை ஒரு கடிதம்