தேடியவர்களிடம் எஞ்சுவது

அன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம்!

மனம் குழம்பிய நிலையில் அர்ச்சுனன் கிருஷ்ணனிடம் கேட்டதைப் போல் நான் உங்களிடம் சில விஷயங்களைக் கேட்க விரும்புகிறேன்.

என் இருபதாவது வயது தொடக்கத்தில் லட்சிய வெறியும், வாழ்க்கையை வென்றெடுக்கக் கூடிய தீவிர உழைப்பும் கொண்ட இளைஞனாக இருந்தேன். ஒரு பிரபல அரசியல் கட்சியின் தீவிர உறுப்பினர். பேச்சாளன். கொள்கை ரீதியாகப் பேசுவதிலும், விவாதிப்பதிலும் ஆர்வமுள்ளவனாக இருந்தேன்.

இது எல்லாம் என் 30 வயது வரை. அதற்கப்புறம், நிரந்தரத் தொழில், வருவாய் இல்லாமையால் சந்தித்த வறுமையும் – நான் இருந்த கட்சியில் ஏற்பட்ட சில ஏமாற்றங்களும் என்னை சோர்வடைய வைத்து, அரசியலில் இருந்தே வெளியேற்றியது. ஆன்மீகம் – ஜோதிடம் போன்ற துறைகளில் பரிச்சயம் ஏற்பட்டது.

அதற்கப்புறம் ஒரு வியாபாரத்தின் மூலம் கொஞ்சம் வாழ்க்கை வசதிகளைப் பெற்றேன். பிள்ளைகளுக்குத் திருமணம் முடித்தேன்.

இப்போது, ஒரு புகழ்பெற்ற கல்வியாளர் நடத்தும் அரசியல் கட்சியில் மாநிலப் பொறுப்பு வகித்து, அந்தக் கட்சி தரும் மாத சம்பளத்துடன் அரசியல், எழுத்துப் பணி செய்து வருகிறேன் (பிழைத்து வருகிறேன்)

நான் நம்பும் ஒரு நேர்மையான மனிதர் என்கிற முறையில் தங்களிடம் ஒரு கேள்வி!

எதிலும் ஆர்வமோ, வேட்கையோ, எதிர்காலக் கனவோ இன்றி ஒவ்வொரு நாளையும் கழித்துக் கொண்டிருக்கிறேன். ஓரளவிற்கு ஜோதிடத்திலும் பயிற்சி பெற்றதால், ”என் அமைப்பிற்கு இப்படித்தான் நடக்கும்” என்கிற மனநிலைக்கு நானே வந்துவிட்டேன். இனி எந்த இலக்கையாவது அடைய வேண்டும் என்கிற வெறியோ – வேகமோ இல்லை (கற்பனையில் கூட)

வாழ்க்கையை நான் எங்கே தவறவிட்டேன்? அல்லது வாழ்க்கை என்னை எங்கே கைவிட்டு விட்டது?

அன்புடன்,

ஆர்.

அன்புள்ள ஆர்

இத்தகைய வினாக்களுக்குத் திட்டவட்டமான பதில்கள் இல்லை. பதில்கள் ஒருவரால் அவரது வாழ்க்கையை வைத்துச் சொல்லப்படுபவை மட்டுமே. அவை இன்னொருவருகு சரியானதாக இருக்கவேண்டுமென்பதில்லை. சரியாக இருந்தால்கூட அவற்றை ஒருவர் தன் வாழ்க்கையில் நடைமுறைப்படுத்திப் பார்க்காவிட்டால் அவற்றால் பொருளேதுமில்லை. பெரும்பாலும் அப்படி எவரும் செய்வதில்லை.

இருந்தாலும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஆறுதலும் ஆலோசனைகளும் சொல்லிக்கொள்கிறார்கள். அது ஒருவர் இன்னொருவரிடம் காட்டும் பிரியத்தின் அடையாளம் மட்டுமே. இந்தக்கடிதமும் அதற்காகத்தான். இது நான் உணர்ந்தது அவ்வளவுதான்.

இருவர் இசைக்கச்சேரி செய்கிறார்கள். கச்சேரி முடிந்தபின்னர் கிடைக்கும் பணத்துக்காக ஒருவர். கச்சேரியில் பாடும்போது வரும் இன்பத்திற்காக இன்னொருவர். இதில் எவரது கச்சேரி சிறப்பானதாக இருக்கும்? எந்தப் பாடகர் மகிழ்ச்சியாக இருப்பார்?

அதே பதில்தான் வாழ்க்கைக்கும். வாழ்க்கை என்பது ஏதோ ஒன்றை அடைவதற்காக, வெல்வதற்காக நிகழ்வது என்ற எண்ணத்திலிருந்துதான் இத்தகைய பிரச்சினைகள் ஆரம்பிக்கின்றன. வாழ்க்கையின் இளமைப்பருவத்தில் நாம் நம் வாழ்க்கை ஏதோ ஒரு பெரிய விஷயத்துக்கான கருவி என்ற எண்ணத்திற்கு ஆட்படுகிறோம் அதீத உற்சாகத்துடன் பலவற்றில் ஈடுபடுகிறோம்.

ஒருவர் உலகியல்சார்ந்த எந்த விஷயத்திலும் ஒற்றைப்படையான தீவிரத்துடன் ஈடுபட்டாரென்றால் அவர் ஒரு வெறுமையைச் சந்திப்பது உறுதி. அதில் அவர் வென்றாலும் தோற்றாலும். வாழ்க்கை என்பது அதன் பல்வேறு கூறுகள் நடுவே உள்ள சமநிலையாலானது.

வாழ்க்கையின்போக்கில் அனைவரும் அறியும் ஒன்று உண்டு. நம்மைச் சூழ்ந்துள்ள உலகியல் வாழ்க்கை என்பது மிகச்சிக்கலான ஒரு வலை போல. பல்லாயிரம்பேரின் ஆசைகளும் வேகங்களும் முட்டிமோதும் ஒரு வெளி. தற்செயல்களினாலான மாபெரும் பின்னல். அதில் ஒருவர் செயல்படமுடியுமே ஒழிய விளைவைக் கண்டிப்பாக எதிர்பார்க்கமுடியாது. எதிர்பாராமைகள்தான் வாழ்க்கையைப் பெரும்பாலும் தீர்மானிக்கின்றன.

அந்தப் புரிதலை அடையும்போது வாழ்க்கையை ஒரு நோக்கத்துடன் செலவிட்டவர்கள் ஏமாற்றமடைகிறார்கள். வாழ்க்கை வீணாகிவிட்டதாக உணர்கிறார்கள். முடிந்துவிட்டதென்ற எண்ணத்தை அடைகிறார்கள்.

நீங்கள் அடைந்த அதே எண்ணத்தை என் வாழ்க்கையிலும் நான் அடைந்திருக்கிறேன். அதிலிருந்து எப்படி மீண்டு வந்தேன் என்று பலமுறை எழுதியிருக்கிறேன்.காசர்கோடில் தங்கியிருந்த நாட்களில் தற்கொலைசெய்யும் நோக்குடன் அதிகாலை வீட்டைவிட்டுக்கிளம்பிப் பக்கத்தில் உள்ள கும்பளா என்ற சிற்றூரை நோக்கிச்சென்றேன். ரயில் தண்டவாளம் வழியாக.

ஆழ்மனம் தற்கொலைசெய்ய விரும்பவில்லை என இன்று ஊகிக்கிறேன். அது வாழ்வதற்கான காரணங்களைத் தேடிக்கொண்டிருக்கவேண்டும். ஆகவே ஒரு திறப்பு நிகழ்ந்தது. நான் இலைநுனியில் உடலே ஒளியாக அசைந்த ஒரு புழுவைக் கண்டேன். அது ஒரு தரிசனம்.

அன்று அறிந்தது என்ன என்று புறவயமாகச் சொல்லமுடியாது. ஆனால் வாழ்க்கை மிகமிக அரிதானது என்றும், ஒருநாளை ஒரு கணத்தைக்கூட வீணாக்க எனக்கு உரிமை இல்லை என்றும் உணர்ந்தேன். என்னைச்சுற்றி இயற்கையின் அழகும் மகத்துவமும் நிறைந்திருக்க, கலையின் சிந்தனையின் உன்னதங்கள் எனக்குச் சாத்தியமாக இருக்க, என்னுடைய இயலாமையால் சோம்பித் துயருறுவேன் என்றால் நான் மிகமிகக் கீழானவன் என்று அறிந்தேன். எனக்கு இவையனைத்தையும் அளித்த அதை நான் அவமதிக்கிறேன் என

அதன் பின் இத்தனை வருடங்களில் எனக்குத் துயரம் என எதையும் நிகழ நான் அனுமதித்ததில்லை. சற்றே மனச்சோர்வு வந்தாலும்கூட ‘நேரமில்லை…இதற்கான நேரம் எனக்கு ஒதுக்கப்படவிலலை என்றே சொல்லிக்கொள்வேன். வீணடிக்க நேரமில்லை என்ற பிரக்ஞையே என்னை உருவாக்கியது என்று நினைக்கிறேன்

நான் என் கனவுகளில் மகத்தான வாழ்க்கையை வாழமுடியுமென அறிந்தேன். எழுதுவதும் வாசிப்பதும் அந்தக் கனவை நிகழ்த்திக்கொள்வதற்கே. பயணம்செய்வதும் உரையாடுவதும் அக்கனவில் வாழ்வதற்கே. வாழ்நாளின் ஒவ்வொரு துளியையும் வீணாக்காமல் எனக்கு இனிய விஷயங்களால் நிறைத்துக்கொள்ள முயன்றேன்

அப்போது தெரிந்தது இந்த வாழ்க்கை போதாது என. நான் வாசிக்காத நூல்கள்,எழுதவேண்டிய நாவல்கள்,செல்லவேண்டிய ஊர்கள் விரிந்துபரந்துகிடக்கின்றன. இருபத்தைந்து வருடங்கள் இமைப்பொழுதாக ஓடிவிட்ட்ன. இன்னும் அதேயளவு நேரம் கிடைத்தால் நான் ஆசிபெற்றவன்

ஒருவேளை அந்த சிருஷ்டிசக்தி என்னிடம் கேட்டால் ‘நீ இன்னும்கூட எனக்கு அள்ளிக்கொடுக்கலாம். ஏனென்றால் நீ கொடுத்த எதையும் நான் வீணடிக்கவில்லை’ என்று என்னால் சொல்லமுடியும்

ஜெ

பனித்துளியின் நிரந்தரம்

அலைகளென்பவை


கதைகளின் முடிவில்


நான்குவேடங்கள்


நான்குவேடங்கள் கடிதம்

முந்தைய கட்டுரைதொழிற்சங்கத்தின் எதிர்மறைத்தன்மை
அடுத்த கட்டுரைசடங்குகள் ஒரு கடிதம்