மன்னர்களின் சாதி

 

moovendar

 

அன்புள்ள ஜெ ,

 

பல சாதி சங்கங்கள் சில காலமாகத் தங்களை ‘ ஆண்ட பரம்பரையே படையெடுக்க வாரீர் ‘ என்று தெருவெங்கும் போஸ்டர் அடித்து அவர்களின் சாதி மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறார்கள் . சில வருடம் முன்பு வரை அதைப் பற்றிப்பெரிதாக எடுத்துக்கொண்டதில்லை ஆனால் இன்று ஒவ்வொரு சாதியும் தங்களை ‘ மன்னர் பரம்பரை ‘ என்று கூறிக்கொள்கிறார்கள் குறிப்பாக சோழர்களையே இவர்கள் குறி வைக்கிறார்கள் . விக்கிபீடியாவில் பிராமணர் நீங்கலாக ஒவ்வெரு சாதியையும் தங்களை ‘ சோழரின் ‘ வம்சமாகக் கூறிக்கொண்டு தங்களின் சாதி உணர்வைத் தங்கள் சாதி மக்களிடும் எரியூட்டுகின்றனர் .’ உலகமே சுருங்கிய காலத்தில் பெற்றோர் புகழே தனி மனிதனுக்கு உதவாதபோது இப்படிப் பண்டைய மன்னர்களின் பரம்பரை என்று பேசுவது வீண்வம்புக்கு மட்டுமே வழிவக்குக்கும் .

 

நான் இங்கே உங்களிடம் கேட்க காரணம் உண்டு . சிலவருடம் முன்பு எங்கள் வீட்டில் புதுமைப்பித்தன் பற்றி ஒரு பழைய விமர்சனப்புத்தகம் குப்பைகளுக்கு நடுவே கண்டெடுக்கப்பட்டது . 1955 இல் அச்சிடப்பட்டது என்று நினைக்கிறேன் . எழுதியவர் ஒரு காந்தியவாதி ,பெயர் ஞாபகம் இல்லை . அவர் சிறுபிள்ளை போல் காந்தியையும் புதுமைப்பித்தனையும் ஒப்பிட்டு புதுமைப்பித்தனைக் கேவலமாக எழுதியிருந்தார் . அந்தப் புத்தகத்தில் கூறப்பட்ட பல கருத்துக்கள் இன்று ‘ புதுமைப்பித்தனை ‘ வசைபாடுவோரின் கருத்துகளாக இருக்கிறது . இது போல் இன்னும் இருபது வருடங்களில் பண்டைய மன்னர்களின் வாரிசு என்று பல சாதிகளை மக்கள் நம்பினாலும் நம்பலாம் …
கிடைத்த சில விஷயங்களை மட்டும் வைத்துக் கொண்டு ஊகிக்கலாம் ‘ உண்மையான முழுமையான வரலாற்றை ‘ தீட்ட இயலாது .வரலாற்று ஆய்வாளர்களுக்கும் இந்த சாதி ‘சார்பு ‘ பற்றிக்கொண்டால் உண்மையான வரலாறு வரும் காலங்களில் மறைக்கப்படும் . பல வரலாறுகள் ரத்ததாலும் துரோகத்தாலும் எழுதப்பட்டது .பண்டைய மன்னர்களின் குலங்கள் அழிந்தே போயிருக்கலாம் . யாருக்கும் தெரியாது ஆனால் அதைவைத்துக்கொண்டு சாதி அரசியல் , சாதி உணர்வை தூண்டுவது எந்த விதத்திலும் சரியான போக்கு இல்லை .

 

யு எம் துளி

 

 

 

அன்புள்ள துளி,

 

இந்தியா எங்கும் பொதுவாகக் காணப்படும் ஒரு சமூகப்பரிணாமத்தின் சில கூறுகளை சுட்டிக்காட்டியபடி இதைப்பற்றிப் பேச ஆரம்பிக்கலாம்.

நம் அரசுகள் உருவான வரலாறு

 

*  பலகாலமாக ஐரோப்பிய ஆய்வாளர்களால் நமக்குச் சொல்லப்பட்டபடி இந்தியச்சாதியமைப்பு என்பது இந்துமதத்தாலோ அதைப்போன்ற வேறெந்த கருத்துநிலைகளாலோ மேலே இருந்து வடிவமைக்கப்பட்டு கீழே வரை அமல்படுத்தப்பட்டதல்ல. அப்படி இந்தியாவிலுள்ள கோடிக்கணக்கான மக்களை உள்ளிட்டு, ஆயிரக்கணக்கான சாதிகளையும் உபசாதிகளையும் தொகுத்து அமல்படுத்துவது நடைமுறைச்சாத்தியமும் அல்ல

சாதியமைப்பு மதத்தால் உருவாக்கப்படுவது என்ற கூற்று என்பது ஐரோப்பியர் இந்திய சாதியமைப்பின் நுட்பங்களை உணராமல் மேம்போக்காக ஆராய்ந்து சொன்னது மட்டுமே. அதை மதமாற்ற நோக்குடன் இந்து பௌத்த சமண மதங்களை அவதூறு செய்வதற்காகப் பின்னர் பயன்படுத்திக்கொண்டார்கள். அதை இங்குள்ள அரசியல்வாதிகள் திருப்பித்திருப்பிச் சொல்கிறார்கள். வலுவாகச் சொல்லக்கூடியவர்களுக்கு இன்றும் மதமாற்ற சக்திகளின் நிதி ஆதரவு உள்ளது

* இந்தியச் சாதியமைப்பு என்பது இங்கிருந்த பல்லாயிரக்கணக்கான பழங்குடி இனக்குழுக்கள் நிலப்பிரபுத்துவ அதிகார அமைப்புக்குள் மேல்கீழாகத் தொகுக்கப்பட்டதன் விளைவாக உருவான ஒருமுறை. அதற்கு நிலப்பிரபுத்துவ அமைப்பில் முக்கியமான பொருளியல் பங்களிப்பு உண்டு. ஆகவே அதை அன்றைய அரசுகள் பேணின. ஒவ்வொரு சாதியும் தன் கீழே உள்ள சாதியைக் கட்டுப்படுத்தியதன் வழியாக சாதியமைப்பைப் பேணியது. ஒவ்வொரு சாதியும் அதனால் பயன்பெற்றது.அதற்கு மதமும் ஆசாரங்களும் எல்லாமே கருவியாகப் பயன்பட்டன. அது உலகமெங்கும் நிகழ்ந்ததுதான். நிலப்பிரபுத்துவ அதிகார அடுக்கத்தின் கருவியாக பயன்படாத மதம் என எதுவுமே உலகில் இன்றில்லை

 

* இந்தியச்சாதியமைப்பு என்பது அதிகார உருவாக்கத்தின் முறைமை. அதிகாரம் ஒருபோதும் நிலையானதல்ல. ஆகவே இந்தியச் சாதியமைப்பு மாறிக்கொண்டுதான் இருந்தது. ஐரோப்பியர் சொன்னதைப்போல எப்போதைக்குமாக உறைந்துபோன ஒன்றல்ல.

இங்குள்ள ஒவ்வொருசாதியும் நிலத்துக்காக, அதிகாரத்துக்காகப் போராடியபடியேதான் இருந்திருக்கிறது. நிலத்தையும் அதிகாரத்தையும் அடையும்போது சாதிப்படிநிலையில் மேலே செல்கிறது இழக்கும்போது கீழே வருகிறது. இந்தியாவிலுள்ள ஆளும்சாதிகளில் பல கீழிருந்து மேலே வந்தவை. அடித்தளச்சாதிகளில் பல வீழ்த்தப்பட்டவை. நிலம் பெரும்பாலும் தீர்மானிக்கும் சக்தியாக இருந்துள்ளது.

* .இந்தியாவில் உள்ள பல அரச வம்சங்கள் அடித்தள வாழ்க்கையில் இருந்த சமூகங்களோ பழங்குடிகளோ எழுச்சி கொண்டு உருவாக்கிக் கொண்டவை. இந்திய வரலாற்றைக் கூர்ந்து பார்க்கும்போது ஆரம்பத்தில் நிலத்தை பண்படுத்தி விவசாயம் செய்து மெல்லமெல்ல நிலஉடைமையாளர்களாக ஆன சாதிகள் உபரியைத் திரட்டிக்கொண்டு அதன்வழியாக வலுவான சமூகக்கூட்டுக்களை அமைத்து அரச அதிகாரத்தைக் கைப்பற்றியதைக் காணலாம்.

தொல்தமிழ் வரலாற்றில் வேளிர்கள் என்னும் மருதநில குறுநில மன்னர்கள் ஏராளமாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. மருதநிலம் அதிகமாக செல்வத்தை உருவாக்கக்கூடியது. ஆகவே பெரிய குலத்தலைவர்கள் சிறிய மன்னர்களாக ஆனார்கள். அவர்கள் கூட்டாகச்சேர்ந்து தமிழகத்தை ஆண்டார்கள். சங்ககாலத்திலேயே இவர்களின் அதிகாரம் பெருமளவு ஒடுக்கப்பட்டாலும் கூட பிற்கால சோழர்க்ளின் அரசில் கூட வேளிர்குல குறுமன்னர்கள் பெரும் அதிகாரத்துடன், மன்னர்களை கட்டுப்படுத்துபவர்களாக இருந்திருப்பதைக் காணமுடிகிறது. மன்னர் அவர்களின் சபைத்தலைவர் என்றமுறையிலேயே ஆட்சி செய்தார். மன்னர்களுக்குப் பெண்கொடுப்பதும் இவர்களே.

இந்தமுறையே இந்தியா முழுக்க இருந்திருக்கிறது. ஆரம்பகால இந்திய மன்னர்கள் விவசாயத்துக்குள் வந்த இனக்குழுக்களில் இருந்து உருவானவர்க்ள். இதை விரிவாக விவாதிக்கும் டி டி கோசாம்பி குறியீட்டுரீதியாகக் கூட இதை விளக்கமுடியும் என்கிறார். கங்கைச் சமவெளியில் வலுவான மன்னர்கள் உருவான காலகட்டம் இப்படிப்பட்டதே.அதாவது மகாபாரதம்போன்ற நூல்கள் எழுதப்பட்ட காலகட்டம்.

* இந்திய வரலாற்றின் அடுத்த கட்டத்தைக் கவனித்தால் மேய்ச்சல்சாதிகள் அரசதிகாரத்தைக் கைப்பற்றுவதைக் காணலாம். மேய்ச்சல்சாதிகள் வலுவான ஒருங்கிணைப்பு கொண்டவர்களாகவும் நெடுந்தூரப்பயணம் செய்யக்கூடியவர்களாகவும் கடும்சூழல்களை சந்திக்கக்கூடியவர்களாகவும் இருந்தமையால் நிலவுடைமைச்சமூகங்களைவிட அவர்கள் அதிக வலிமைகொண்டார்கள். இந்தியாவின் அடுத்தகட்ட பேரரசுகள் மேய்ச்சல் சமூகங்களால் அமைக்கப்பட்டவை. மௌரிய பேரரசு மூரா பழங்குடிகளால் அமைக்கப்பட்டது. அதன்பின் யாதவப்பேரரசுகள். அதன்பின் நாயக்கர் பேரரசு. அதன்பின் மராட்டியப்பேரரசு. இவர்கள் அனைவருமே மேய்ச்சலைத் தொழிலாகக் கொண்டிருந்த மக்கள்தான்

* இந்த வரலாற்றுப்பின்னணியில் நவீன இந்தியாவில் ஒரு பொதுப்போக்கு காணப்படுகிறது. சுதந்திரத்துக்குப் பின்னர் கிடைத்த பொருளியல் வாய்ப்புகளைப்பயன்படுத்திக்கொண்டு முன்னேற்றம் அடையும் ஒவ்வொரு சாதியும் தன்னை சாதிப்படிநிலையிலும் மேலே கொண்டுசெல்ல முயல்கிறது. அதற்கு அது இரண்டு அடையாளங்களை உருவாக்கிக்கொள்ளவேண்டியிருக்கிறது. ஒன்று ஒரு புராண அடையாளம். இன்னொன்று ஆட்சியதிகாரம் சார்ந்த அடையாளம்.

புராண அடையாளம் என்பது இந்தியாவின் புராணமரபில் ஒரு இடத்தை, ஒரு தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்வதாகும். இந்திரன், விஸ்வகர்மா போன்ற தேவர்கள் அல்லது காஸ்யபர் போன்ற ரிஷிகளின் மரபில் வந்தவர்கள் என்ற அடையாளத்தை உருவாக்கிக் கொள்ளுதல். இதன்மூலம் இந்தியாவின் பிரம்மாண்டமான இறந்தகாலத்துடன் அவர்களால் தங்களை பிணைக்கமுடிகிறது. அந்த அடையாளம் அவர்களுக்குத் தன்னம்பிக்கையை அளிக்கிறது.

அடுத்தபடியே ஆண்ட வம்சம் என்னும் அடையாளத்தை உருவாக்கிக்கொள்ளுதல். ஒருகாலத்தில் ஆட்சிசெய்த வம்சமாக இருந்தோம் என்பது பெருமிதத்தை அளிக்கக்கூடியதாக உள்ளது. உண்மையில் இந்தியாவில் உள்ள மிகச்சில சாதிகளைத் தவிர அனைத்துச்சாதியினரும் எங்கோ ,எப்போதோ சிறிய அளவிலேனும் ஆட்சியாளர்களாக இருந்திருப்பார்கள். அவர்கள் அந்த அடையாளத்தைப் பெரிதாக ஆக்கிக்கொள்ளமுடியும்

இதன் விளைவாகவே இன்று ‘ஆண்ட பரம்பரை’ என்ற சுயவரலாற்று உருவாக்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது இது சாதிய அரசியலின் ஒரு பகுதியே ஒழிய இதற்கு வரலாற்று அடிப்படை என ஏதும் இல்லை. இன்று அதிகமும் பொருளியல் முன்னேற்றமும் ஆட்சியதிகாரமும் பெற்று வருபவர்கள் இடைநிலைச்சாதிகள். அவர்களுக்கு இந்த இரு அடையாளங்களும் பெரிதும் தேவைப்படுகின்றன.

தமிழக மன்னர்களின் சாதி

 

தமிழகத்தை ஆண்ட ஆட்சியாளர்கள் எந்தெந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள்? மிகவிரிவான ஆராய்ச்சிக்குரிய தலைப்பு இது.சுருக்கமாக இப்படி ஒரு விவரணையை அளிக்கலாம்

*.சங்க காலகட்டத்தில் எல்லா சாதிகளும் அந்தந்த பிராந்தியங்களில் ஆட்சியமைத்திருந்ததைக் காணமுடிகிறது. மீனவர்கள் கடற்சேர்ப்பர்கள் என்ற ஆட்சியாளர்களாக இருந்தனர். மருதநிலத்தில் வேளிர் மன்னர்கள் இருந்தார்கள். மலைகளில் குறவ மன்னர்கள் இருந்தார்கள். ஆய் அண்டிரன் போன்ற ஆய் குல மன்னர்கள் மேய்ச்சல் சாதியைச்சேர்ந்தவர்கள் .நாஞ்சில் குறவன் போன்ற குறவமன்னர்கள் பெரும் வல்லமையுடன் இருந்திருக்கிறார்கள். குறவ அரசியான குறத்தியறையார் சிதறால்மலையில் இருந்த சமணப்பள்ளிக்கு பெரும் நன்கொடை அளித்ததாக அங்கே உள்ள கல்வெட்டு சொல்கிறது.மறவ மன்னர்கள் இருந்திருப்பதை சங்க காலத்தில் இருந்தே காண்கிறோம்.

* அனைத்துச்சாதியில் இருந்தும் உருவாகி வந்த மன்னர்களை சிறுகுடிமன்னர்கள் என்று சொன்னார்கள். இவர்களில் இருந்து உருவாகி வந்தவர்களே சேரர்,சோழர், பாண்டியர் என்னும் மூன்று பெருங்குடி மன்னர்கள். இவர்களின் வேர் என்ன, இவர்கள் எப்படி உருவானார்கள் என்பதெல்லாம் இன்றும் எந்தவகையான உறுதியான முடிவையும் சொல்லக்கூடிய அளவில் ஆராயப்படவில்லை

* பாண்டியர்குலமே இவர்களில் பழைமையானது. பண்டையோன் என்பதில் இருந்து பாண்டியன் என்னும் சொல் வந்திருக்கலாம். பல கல்வெட்டுகளில் பழையர் என்றும் பரதர் என்றும் இவர்கள் குறிக்கப்படுவதில் இருந்து தொன்மையான பரதவ மன்னர்களின் மரபினர் என ஊகிக்கலாம்.

* சேரர்கள் தொன்மையான குறவர்குலத்தில் இருந்து வந்திருக்கலாம். அதற்கான சான்றுகள் ஐங்குறுநூறு போன்ற சேரர்குலவரிசையைச் சொல்லும் பாடல்களில் உள்ளன

* முற்காலச் சோழர்கள்கூட வெளியே இருந்து வந்தவர்கள் என ஊகிப்பதற்கான எல்லா சாத்தியங்களும் சங்கப்பாடல்களில் உள்ளன. காவேரி வழியாக வணிகம்செய்தவர்கள் மன்னர்களானார்கள். கோழிக்கொடி அடையாளமே பின்னர் குல அடையாளமாக ஆகியது.

* முற்கால மூவேந்தர்களின் அடையாளம் எந்த சாதியுடனும் முழுக்கப்பொருந்துவதில்லை. அவர்களைப்பற்றிய ஊகங்கள் மிகமிக தோராயமானவை. ஆனால் அவர்கள் இங்குள்ள சிறுகுடி மன்னர்களிடம் போரிட்டு அவர்களை அடக்கி ஒடுக்கினர்.சங்க காலம் மூவேந்தர்கள் சிறுகுடிமன்னர்களை அழிக்கும் சித்திரத்தைக் காட்டுகிறது. தமிழக வரலாற்றின் இந்த நாற்றங்கால் பகுதி இன்றுவரை முறையாக எழுதப்படாமலேயே உள்ளது.

* சிறுகுடிமன்னர்களும் பழைமையான குலங்களும் மூவேந்தர்களுக்குப் பெண்கொடுக்க மறுப்பது வழக்கமாக இருந்திருக்கிறது. அது ஒரு சடங்குபோலவே புறநாநூற்றில் குறிப்பிடப்படுகிறது. மகட்கொடைமறுத்தல் என்ற பேரில் பின்னாளில் ஒரு துறையாக வகுக்கவும் பட்டது. இது மூவேந்தரும் தமிழின் எந்தத் தொல்குடியையும் சேர்ந்தவர்கள் அல்ல, அவர்கள் அன்னியர்களாக இருக்கலாமென்பதற்கான ஆதாரமாகக்கொள்ளப்படலாம்

*  களப்பிரர் காலம் உருவாக்கிய முந்நூறு ஆண்டு இடைவேளைக்குப்பின்னர் வந்த சேர சோழ பாண்டிய  குலமரபுகள் பெரும்பாலும் நடுவே முந்நூறாண்டுக்காலம் தொடர்ச்சி துண்டிக்கப்பட்டவை.பழைய மன்னர்குலங்கள் சிதறிப்பரந்துவிட்டிருந்தன. அவர்களில் ஏதேனும் ஒரு வம்ச அடையாளம் கொண்டிருந்தவர்கள் படைதிரட்டிக் களப்பிரரை வென்று தங்களை சோழர் பாண்டியர் என்று அறிவித்துக்கொண்டார்கள். களப்பிரர் காலமும் அவர்களை வென்று பிறகால பாண்டியர் சேரர் சோழர் உருவான காலமும் தெளிவாக இன்றும் எழுதப்படவில்லை

*  பிற்காலச் சோழர்கள் தமிழர்களே அல்ல என்று பல ஆய்வாளர்கள் வலுவாகக் குறிப்பிடுகிறார்கள். அவர்கள் ஆந்திரநிலத்திற்குச் சென்று அங்கே குடியேறி மணம் செய்து வாழ்ந்தவர்கள். கோதாவரிநிலமே வெங்கிநாடு. சோழர்கள் வெங்கிநாட்டிலிருந்து களப்பிரரை வெல்ல படைகொண்டுவந்தார்கள். அவர்களின் மண உறவுகள் எல்லாமே வெங்கிநாட்டைத்தான் சார்ந்திருந்தன

* பிற்காலப்பாண்டியர்களைப்பற்றி இன்று வரை முறையான எந்த ஆய்வும் இல்லை. அவர்களின் குலங்கள் சிதறிப்பரந்து கிடந்திருக்கலாம். அவற்றில் ஏதேனும் ஒன்று அந்த பழைய அடையாளத்தை முன்வைத்து மதுரையைக் கைப்பற்றியிருக்கலாம் என்று மட்டுமே ஊகிக்கமுடிகிறது

* பிற்காலச்சேரர்கள் பற்றி இந்த அளவுக்குக் கூட ஏதும் வரலாற்றில் இல்லை. ஆய்வாளர் இளங்குளம் குஞ்சன்பிள்ளை ஓர் ஊகமாகச் சொல்லியவற்றையே அப்படியே இன்றும் சொல்லிவருகிறார்கள். அதாவது பழங்கால சேரர் ஆட்சி களப்பிரரால் அழிந்தது. அதன்பின்னர் சேரர்குலங்கள் சிதறி வாழ்ந்தன. களப்பிரர் காலத்திற்குப்பின்னர் பதினெட்டு சேரர்கள் கேரளமண்ணை ஆண்டார்கள். அவர்களை ராஜராஜசோழன் வென்று சோழ ஆட்சியை நிலைநாட்டினான்.

சோழர் ஆட்சி வீழ்ச்சியடைந்தபின்னர் சேரர்குலத்தின் நேரடிவாரிசுகள் பெருமாள்கள் என்றபேரில் வஞ்சி என்னும் கொடுங்கல்லூரை ஆண்டனர். அவர்களில் கடைசிப்பெருமாள் குலசேகரப்பெருமாள். அவர் தன் உடைவாள் மற்றும் மணிமுடியுடன் தெற்கே வந்தார். இங்கே இருந்த தலக்குளம் திருப்பாம்பரம் ஸ்வரூபம் என்ற சிற்றரசி குடும்பத்திற்கு அவற்றை அளித்தார். ஆகவே அவர்கள் சேர வாரிசுகள் ஆனார்கள். அவர்களிடமிருந்தே திருவிதாங்கூர் அரசவம்சம் உருவாகியது.

* ஆக தமிழகத்தின் மூவேந்தர்கள் உண்மையில் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்று இன்று சொல்லமுடியாது. அவர்கள் இன்றுள்ள எந்த பெரும்சாதியையும் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அவர்கள் தனிக்குலங்களாகவே நூற்றாண்டுகளாக நீடித்தார்கள் என்றும் மட்டுமே சொல்லமுடியும்.

* சோழர்குலம் பாண்டியர்களால் முழுமையாக அழிக்கப்பட்டது. பாண்டியர் குலம் நாயக்கர்களால் கடைசியாகத் தோற்கடிக்கப்பட்டு மதுரையை விட்டு விரட்டப்பட்டது. அவர்கள் தென்காசி, கயத்தாறு பகுதிகளில் வாழ்ந்து பின்னர் அரியநாதமுதலியாரால் அழிக்கப்பட்டார்கள். தென்காசிப்பாண்டியர்களின் கடைசிப் பெண்வாரிசு கொல்லம் மன்னரால் மணக்கப்பட்டபின்னர் அந்த பரம்பரை அழிந்தது. சேரர்களின் கடைசிக் கண்ணி குலசேகரப்பெருமாள். அவருக்குப்பின் ஆண்ட மன்னர்கள் எல்லாருமே பல்வேறு வகையில் அதிகாரத்தைக் கைப்பற்றிய சிறிய குலமுறை ஆட்சியாளர்களே.

அதாவது மூவேந்தர்கள் குறிப்பிட்ட சாதியினர் அல்ல. அவர்கள் எந்தச்சாதியிலும் இருக்கவில்லை. அவர்கள் தனித்தனி குலவரிசையினர். அக்குலவரிசை அழிக்கப்பட்டபோது அவர்கள் முழுமையாகவே அழிந்தனர்

* மூந்தர்கள் அவர்களுக்குக் கீழே இருந்த எல்லா சிறுகுடிமன்னர்களிடமும் பெண் எடுக்கும் உறவை கொண்டிருந்தனர். பிற்காலச் சோழர்கள் வேளிர் மன்னர்களிடமும் மறவ மன்னர்களிடமும் பெண் எடுத்ததைக் காணமுடிகிறது. ஜடாவர்மன் சுந்தர பாண்டியன் தேவதாசிக்குடும்பத்தில் இருந்து பெண்ணெடுத்துப் பட்டத்தரசியாக்கினான். ஆகவே பெண்கொடுத்த வகையில் எந்த சாதியும் மூவேந்தர்களை உரிமைகொண்டாட முடியாது.

* இந்தியாவில் உள்ள பெரும்பாலான சாதிகளுக்கு ஏதேனும் ஒரு ஆட்சியதிகாரம் இருந்த வரலாற்றைச் சுட்டிக்காட்டமுடியும். சேரநிலப்பகுதியில் புலையர்களின் இரு சிற்றரசுகள் இருந்திருக்கின்றன என்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. புலையனார்கோட்டை என அதற்கு பெயர். அனந்தபத்மநாபன் ஆலயம் இருந்த பகுதி புலையனார்காடு என்றே சொல்லப்படுகிறது. பதினைந்தாம் நூற்றாண்டில்கூட மீனவ அரசன் இருந்திருக்கிறான் என்பதை அவனைப்பற்றி ஒரு வேளாளக் கவிஞரால் பாடப்பட்ட செண்பகராமன் பள்ளு காட்டுகிறது. வெண்கலராஜன் கதை நாடார்களின் அரசனைப்பற்றிச் சொல்கிறது. ஆகவே ஒருவகையில் எல்லா சாதிகளும் ஆண்டபரம்பரை என்று சொல்லிக்கொள்ளமுடியும். ஆனால் மூவேந்தர்கள் தாங்களே என்பது எவர் சொன்னாலும் வெறும் சாதிப்பெருமை மட்டுமே

தமிழக வரலாறு இன்னும்கூட முழுமையாக எழுதப்படவில்லை.அதன்பெரும்பகுதி சொல்லப்படாமலேயே உள்ளது. அதை புறவயமான சார்பற்ற தரவுகளின் அடிப்படையில் எழுதும் முயற்சியே இன்றைய தேவை. சாதியமைப்புகளும் அதன் ஆதரவாளர்களும் அரைகுறைத்தகவல்களைக்கொண்டு உருவாக்கும் ஒட்டுவேலை வரலாற்றை முழுமையாகப் புறக்கணிப்பதே சரியான வழி.சமநிலையுள்ள ஆய்வாளர்களின் வழி.

 

ஜெ

 

 

மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Apr 28, 2013

முந்தைய கட்டுரைமாமங்கலை – கடிதங்கள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–11