நித்யாகுருகுலம் பற்றி…

ஜெ

இங்கே “scott teitsworth” என்ற ஒருவரை சந்தித்தேன். அவர் தான் ( http://scottteitsworth.tripod.com/ ) அன்பும் ஆசீர்வாதங்களும் என்ற குரு நித்யாவின் சுய சரிதையைத் தொகுத்தவர். இங்கு அவருடைய மகள் வீட்டிற்கு வந்திருந்த பொழுது எனக்கு அதே புத்தகம் வேண்டும் என நான் தொடர்பு கொண்டேன். அருகில் இருக்கிறார் என தெரிந்து போய்ப் பார்த்தேன். ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்தேன். அவர் குரு நித்யாவை சந்தித்ததைப் பற்றியும் குரு குலத்தைப் பற்றியும் பேசிக் கொண்டிருந்தார்.

“குருவின் முன்னால் உட்காருவதற்கே பயமாக இருக்கும்….அவரிடம் இருந்து எதையும் மறைக்க முடியாது..அத்தனை திரைகளையும் விலக்கி உண்மையான நம் அகத்தைப் பார்த்து விடுவார். சில சமயம் நான் நிர்வாணமாக உட்கார்ந்திருப்பதைப் போல இருக்கும்” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
மேலும், நடராஜ குரு அவருடைய சுயசரிதையில் தன்னைப் பற்றிக் கூறியதை விட ரொம்ப “radical”. என்னவோ அவர் அதையெல்லாம் எழுத்தில் மறைத்துவிட்டார். “he kept his integrity but he dint want to tell that to others because he felt that people will take them in the wrong way”.

எனக்குப் புரியவில்லை என்றவுடன், அவர் கூறினார், நடராஜ குரு இருந்த சமயத்தில் குரு குலத்தில் சிலர் போதை மருந்து உபயோகித்தனர் (psychedelic drugs) ஆனால் நடராஜ குரு அதை ஒரு குற்றமாகப் பார்க்கவில்லை.எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நம்பினேன் நம்பவில்லை என்பதை விட ஆச்சரியமாக இருந்தது.

குரு நித்யா அவர் கட்டுரைகளில் போதை மருந்துகளால் கிடைக்கும் “தரிசனம்” என்பதை அவர் போலியானது என்று மறுத்து விடுகிறார். ஆனால் அவருடைய குரு அதை அனுமதித்தார் என்பது ஆச்சரியமாக இருந்தது.

மேலும் ஒன்று சொன்னார், “இது சுய சரிதையில் வரவில்லை…ஆனால் நடந்தது…நடராஜ குரு மறைவதற்கு முன் வாதம் தாக்கியது…அவர் நித்யாவைக் கூப்பிட்டு “நான் என் கருத்துக்களிலும். பாடங்களிலும் மிகுந்த உக்கிரத்தைக் கடைபிடித்ததால் தான் இந்தப் பக்க வாதம் உண்டானது. நீ இனிமேல் கொஞ்சம் மிதமாக உன் கருத்துக்களையும், போதனைகளையும் செய்” என்றார்.
அதற்குப் பின் நித்யாவின் பாடங்களிலும், செயல்பாடுகளில் கடுமை குறைந்தது என்றார்.
இவை எல்லாம் அவர் கூறியவை…நான் கேட்டுக் கொண்டிருந்தேன்…

“பிரசாதிற்கு (முனி நாராயண பிரசாத்) அவருடைய குரு போல உலகம் தழுவிய குருகுல நோக்கம் இல்லை. நான் பலமுறை அவரிடம் அமெரிக்காவில் குருகுல நடவடிக்கைகள் பற்றி…ஆனால் அவருக்கு மரபு சார்ந்து அங்கேயே செயல்பட வேண்டும்..அது போதும் என்ற முடிவில் இருக்கிறார்…” என்றும் சொன்னார்.

முத்துக்கிருஷ்ணன்

அன்புள்ள முத்துக்கிருஷ்ணன்,

நடராஜ குருவின் காலகட்டத்தில் மட்டுமல்ல தற்போதுகூட குருகுலத்தில் நடத்தைக்கட்டுப்பாடுகள் என ஏதுமில்லை. நடராஜகுருவின் நேரடி மாணவரான வினயசைதன்யா அன்றும் இன்றும் கஞ்சா புகைப்பவர். நம்மவர்களுக்கு நீட்டவும் செய்வார். பொதுவாகவே எந்த வகையான கட்டுப்பாடுகளுக்கும் இங்கிதங்களுக்கும் அடங்காத விசித்திரமான மனிதர்

ஆனால் அபாரமான இலக்கிய அறிவும் மொழிநுட்பமும் நகைச்சுவையும் கொண்டவர். மேலை கீழை தத்துவங்களை ஆழமாகக் கற்றவர். கன்னட வசன கவிதைகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம்செய்தவர். பல முக்கியமான நூல்களை எழுதியவர்

ஒரு சரியான குருகுலம் எப்படி நடக்கும் என்றால் அது ஒருவகை தன்னிச்சையான அராஜகம் வழியாகவே முன்னகரும் என்றே சொல்லமுடியும். ஒரு குருகுலத்தில் போதையை சாதாரணமாக அனுமதித்தால் அது குருகுலமாக இருக்காது. ஆனால் கறாராக அனுமதி மறுத்தால் ஒருவேளை மிகச்சிறந்த மனங்கள் அங்கே இல்லாமலும் ஆகிவிடும். இதை ஒரு குருவின் அன்றன்றைய விவேகம் மட்டுமே முடிவுசெய்யமுடியும். விதிகள் அல்ல.

நித்யாவிடம் நான் கண்ட முக்கியமான அம்சமென்னவென்றால் அவர் நிறுவன மனிதர் அல்ல என்பதே. குருகுலம் ஒரு நிகழ்வாக இருந்ததே ஒழிய நிறுவனமாக அமையவில்லை. அவர் மறைந்ததும் அந்நிகழ்வும் இல்லாமலாகியது அதனால்தான். நிறுவனம் திட்டவட்டமான புறவயமான விதிகளின்படி மட்டுமே செயல்பட முடியும்.

நடராஜகுருவோ நித்யாவோ மாறாத கொள்கைகளை முன்வைத்தவர்கள் அல்ல. அவர்களுடையது தொடர்ச்சியான ஒரு உரையாடல் மட்டுமே. முனி நாராயணப்பிரசாத்தும் அப்படித்தான். அவரும் நிறுவனத்தைக் கட்டி எழுப்ப நினைக்கவில்லை. ஒப்புநோக்க முந்தைய குருநாதர்களிடமிருந்த ஆளுமை இவரிடமில்லை என்பதனால் இன்று குருகுலம் எளிமையாக இருக்கிறது, அவ்வளவுதான்

நான் பார்த்தவரை குருகுலத்தில் எப்போதும் மனநோயாளிகள் இருந்துகொண்டே இருந்தார்கள். விருந்தினர்களிடம் தனிப்பட்ட தகவல்கள் கேட்பதில்லை என்பதனால் மனம்கலங்கியவர்களும் குற்றவாளிகளும் இருந்தனர். ‘அவர்கள் செல்ல ஓர் இடம் சமூகத்தில் இருந்தாகவேண்டும் என்பதனால்தான் இப்படிப்பட்ட நிறுவனங்கள் உருவாகி வந்தன’ என்று நித்யா சொல்வதுண்டு. கூடவே உலகின் மிகச்சிறந்த சிந்தனையாளர்களும் இருப்பார்கள். அது ஒரு விசித்திர நிகழ்வாகவே இருந்தது

இன்று சிந்திக்கும்போது இப்படித் தோன்றுகிறது. ஞானம் என்பது எப்போதுமே வாழ்க்கையை விட்டு விலகிச்சென்று தேடுபவர்களுக்கானது. அவர்கள் அன்னியர்கள். ஆகவே எல்லா வகை அன்னியர்களும் அவர்களுக்கு நெருக்கமானவர்களே

ஜெ

முந்தைய கட்டுரைவிருது-கடிதங்கள்
அடுத்த கட்டுரைதிருச்சி நட்புக்கூடல்- விஜயகிருஷ்ணன்