காமம் என்னும் யட்சி

ஜெ,

இன்று ஒரு பதிவில் “காமம் நேர்மாறான ஒரு யட்சி. திரும்பிப் பார்க்காமலிருக்கும் தோறும் வல்லமை பெறும். பார்க்கப் பார்க்க சாதாரணமாக ஆகி மறையும்.” என்று குறிப்பிட்டு இருந்தீர்கள்.  ஆனால் வெகு நாட்களுக்கு முன்னால், வேறொரு பதிவில், காமம் என்பது எல்லையற்றது, பெருகிக் கொண்டே இருப்பது என்று நீங்கள் கூறியதாக எனக்கு நினைவு? இந்த இரண்டு வேறு நிலைபாடுகளின் அர்த்தம்தான் என்ன? ஒன்றோடொன்று முரணாக இருக்கிறதே?

-சிவா

அன்புள்ள சிவா,

அகத்தில் உள்ள காமத்தைப்பற்றி எல்லா தியான மரபுகளிலும் நிறையவே பேசியிருப்பார்கள்.

அதை இவ்வாறு சுருக்கிச்சொல்லலாம் –

1. காமம் மிக இயல்பான உயிராற்றல். ஒவ்வொரு உயிர்த்துளியிலும் உள்ளது. உயிர்கள் தங்களை பெருக்கிக் கொள்ளவும் இவ்வுலகில் தங்கி வாழ்வதற்கான உறவுகளை உருவாக்கிக் கொள்ளவும் அது அளிக்கப்பட்டுள்ளது.

2. ஆனால் எல்லா அடிப்படை உணர்ச்சிகளைப்போலவும் அதுவும் கட்டற்றதே. ஒரு புல் கட்டுப்படுத்தப்படாவிட்டால் உலகை மூடிவிடும் இச்சையுடன் இருப்பதுபோலத்தான் மானுட மனதும்.

3. இயற்கையில் எல்லாமே இன்னொன்றால் கட்டுப்படுத்தப்படுகிறது. வன்முறை அன்பினால். சுயநலம் உறவுகளால். அதேபோல காமம் விவேகத்தால் கட்டுப்படுத்தப்படவேண்டும்.

4. காமத்தை கட்டுப்படுத்துவதற்கான விவேகம் இயல்பாக வரக்கூடியதல்ல. அது பயிலப்பட வேண்டும்.

5. காமத்தை கட்டுப்படுத்தும் விவேக ஞானம் காமத்தை புரிந்து கொள்வதன் வழியாகவே சாத்தியமாகும்.

6. பிற அனைத்துச் செயல்பாடுகளும் அதில் தீவிரமாக ஈடுபடுவதன் வழியாகவே பயிலப்படுகின்றன. காமம் அப்படியல்ல. ஏனென்றால் அதனுடன் அகங்காரமும் கலந்தே உள்ளது. காமத்தில் அதிகமாக ஈடுபடுபவன் காமத்தை சற்றும் அறிய முடியாதவனாக ஆவான். காமம் அகங்காரத்துடன் கலந்து அவனை மூடி அதைப் பார்க்க முடியாதபடி ஆக்கிவிடும். அவன் காமம் உருவாக்கும் உணர்ச்சிக் கொந்தளிப்புகளால் நிரந்தரமாக அலைக்கழிக்கப்படுவான்.

7. ஆகவே காமத்தை புறக்கணிப்பவன் அதை மேலும் மேலும் வளர்த்துக் கொள்கிறான். அவனுக்குள் அவனை அறியாமல் அது பிரம்மாண்டமாக ஆகிக்கொண்டே இருக்கும். [அதைத்தான் நான் சொன்ன அந்த வரி குறிக்கிறது]

8. மாறாக காமத்தில் மூழ்கிவிடாமல் அதை விலகி நின்று கூர்ந்து கவனிப்பவன் அதை அறிந்து கொள்ள ஆரம்பிக்கிறான். அறியும் தோறும் அதை வெல்வது எளிதாகிறது.

9. காமத்தை வெல்பவன் மட்டுமே அகங்காரத்தை வெல்லமுடியும். உலகம் மீது பரவி அதை மறைக்கும் அகங்காரத்தையும் வென்றவனாலேயே உலகை உண்மையில் அறியமுடியும். ’தன்னுடைய உண்மை’க்குப் பதிலாக ’உண்மை’யை அவனால்தான் அறிய முடியும். ஆகவேதான் காமத்தை வெல்லுதல் ஞானத்தின் முதலடியாக எல்லா மரபுகளிலும் சொல்லப்படுகிறது.

ஜெ.

முந்தைய கட்டுரைமொண்ணைத்தனம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஏன் சங்கடமான வரலாற்றைச் சொல்ல வேண்டும்?