அன்புள்ள ஜெயமோகன் ,
நலமா?
இந்தி மொழியின் தேவை குறித்து உங்களிடம் விவாதிக்கத்தான் இந்த கடிதம்.
இந்தி மொழி நம் பாரத நாட்டில் பெருவாரியான மக்களால் பேசப்படும் ஒரு மொழி. ஓவ்வொரு மாநிலத்தின் மொழிக்கேற்ப உச்சரிப்பு மாறுபடும். ஆனால் எல்லா மாநிலத்தாராலும் இதனைப் புரிந்துகொள்ள முடியும். இதற்கும் சமஸ்கிருத மொழிக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
இந்தி மொழிக்கு இலக்கணம் மற்றும் இலக்கிய வளங்கள் மிக குறைவுதான்.அதனால்தான் நாம் முற்றிலும் புறக்கணிக்க முற்படுகிறோம்.ஆனால் அதற்கு இன்றைய காலகட்டத்தில் உள்ள முக்கியமான தேவையைப்பற்றி நான் உங்களிடம் விவாதிக்க விரும்புகிறேன் .
தற்போதைய காலகட்டத்தில் படிக்கும் அனைவருக்கும் அவர்களது சொந்த மாநிலத்திலேயே வேலை கிடைக்கும் என்பது கானல் நீர்தான்.முக்கியமாக தமிழகத்தில் பொறியியல் படித்தவருக்கு வேலை வாய்ப்பு மிகவும் குறைவு.
நம்முடைய நடுத்தர வர்க்கத்தினர் அதிக எண்ணிக்கையில் பொறியியல் படித்து வேலையை தேடி வட மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய கட்டாயம்.அந்த வகையில் நானும் ஒருவன்.நாங்கள் இங்கே வந்தவுடன் எதிர்நோக்கும் முக்கியமான பிரச்சினை இந்திதான்.பிற மாநிலத்தவர்களிடம் ஒப்பிடும்போது நம்மவர்கள் வேலையிலும் அறிவிலும் சற்றும் குறைந்தவர்கள் அல்ல. திறமைகள் இருந்தும் எங்களால் மேலும் வளர முடியாமல் இருப்பதற்கு இந்தி ஒரு தடையாகவே உள்ளது.
ஒடிசா, சட்டிஸ்கர் , ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில்தான் நிறைய தொழிற்ச்சாலைகள் அமைந்துள்ளன.கடந்த வருடம் அதிகமாக முதலீட்டை ஈர்த்தது ஒடிசாதான்.காரணம் இங்கே இயற்கை வளங்கள் எளிதில் கிடைப்பதுடன் நிலம் கையகப்படுத்துதலும் எளிது. எந்த ஒரு தொழிற்சாலையும் மூலப்பொருள், வேலையாட்கள் எளிதில் கிடைக்ககூடிய இடத்தைத்தான் தேர்ந்தெடுக்கும்.தொழில்நோக்கில் தமிழகம் மென்பொருள் துறையிலும் வாகன உற்பத்தி துறையிலும்தான் முதலீடுகளை ஈர்க்கிறது. தற்போது அதுவும் புனே , நொய்டா நோக்கி செல்கிறது. எனவே இந்தியாவில் வேலை செய்யவும், பயணம் செய்யவும் இந்தி,அத்தியாவசியத்தேவை என்றே நான் கருதுகிறேன்.
எங்களுக்குக் கீழே வேலை பார்ப்பவர்களிடம் நாங்கள் ஆங்கிலம் பேசமுடியாது.அவர்களுக்கு ஆங்கிலம் தெரியாது எங்களுக்கு இந்தி தெரியாது.பெரும் முயற்ச்சி எடுத்து நாங்கள் இந்தியை நாங்கள் (வேலைக்காக ) கற்றுக்கொண்டோம். இருந்தபோதிலும் பிற மாநிலத்தவர்களுடன் ஒப்பிடுகையில் எங்களின் வளர்ச்சி சற்று குறைவுதான்.இதற்குக் காரணம் எந்த உயர் அதிகாரிக்கும்(manager) வேலை ஆகவேண்டிய கட்டாயத்தில் எங்களிடம் உள்ள இந்தி தெரிந்தவரிடம் வேலையைக் கொடுப்பார்கள்.ஆனால் வேலை செய்யும்போது எல்லோரும் சேர்ந்துதான் செய்வோம். ஒவ்வொரு ஆண்டின் சம்பள உயர்வின்(appraisal system) போதும் கீழே என்ன நடக்கிறது என்று கண்டுகொள்வதில்லை.காரணம் அவர்களுக்கு வேலை இந்தி அறிந்தவர்கள் மூலமாகத்தான் நடக்கிறது என்ற எண்ணம்.
வெளிநாடுகளிலுள்ள எனது நண்பர்களுக்கும் இந்தியர்களுடனும்,பாகிஸ்தானியர்களுடனும் உரையாட இந்தி மொழி அவசியம்.ஆகவே இந்தியை நம்மூர்ப் பள்ளிகளில் ஒரு விருப்பப் பாடமாக வைக்கலாம் என்பது என் எண்ணம்.ஆனால் கட்டாயம் இல்லாமல் அதை யாராவது படிக்க முன்வருவார்களா??. நான் அரசுப் பள்ளியில் படித்தவன்.எனக்கு ஆங்கிலம் மீது வெறுப்பு அதிகம். பள்ளியிலும்,கல்லூரியிலும் கட்டாயம் இருந்ததால்தான் அதைக் கற்றேன். இந்தியைக் கட்டாயமாக்கினால் தமிழகத்தில் என்ன நடக்கும் என்பது என்னைவிட உங்களுக்கு நன்றாகவே தெரியும்.
நான் கடந்த ஒரு வருடமாக உங்களுடைய இணையத்தை வாசித்து வருகிறேன். சராசரி மனிதன் தேடும் கேள்விகளுக்கு நிறைய வழிகளை உங்களது இணையம் திறந்து வைக்கிறது.ஏற்கனவே இந்தி மொழியைப்பற்றி உங்களது ஒரு சில இடுகைகளை வாசித்தேன்.ஆகவேதான் இந்தக் கேள்வியை உங்களிடம் வைக்கிறேன். இந்த மொழிச் சிக்கலுக்கு என்னதான் தீர்வு ??
எனக்கு இந்தியாவை சுற்றுவதில் அலாதி பிரியம். எப்போது ஒடிசா மற்றும் கிழக்கிந்தியா வந்தாலும் என்னைத் தொடர்பு கொள்ளவும்.நானும் உங்களுடன் சேர்ந்து பயணம் செய்ய ஆசைப்படுகிறேன்.
அன்புடன்
மா.பா.இராஜீவ்