யூதக்கொலைகள்:கடிதங்கள்

அன்புள்ள ஜயமோகன்
 
நீங்கள் ”அமெரிக்கா அந்த யூதப்பேரழிவை ஒரு மானுடபிரச்சினையாக நிலைவில் நிலைநாட்டிக்கொண்டே இருக்கிரது. அதைவிடப்பெரிய மானுட அழிவான  நாகசாகி – ஹிரோஷிமா  அணுகுண்டு வீச்சு பேசப்படுவதே இல்லை. இது பேசப்படுவதே அதை மறைப்பதற்காகத்தானா?” என்பது அதிர்சியாக உள்ளது.
 
ஜயமோகன், யூதப் பேரழிவையும் (ஹோலோகாஸ்ட்) நாகசாகி-ஹிரோஷிமா  அணுகுண்டு தாக்குதல்களையும் ஒரே தளத்தில் வைத்து பேசுவது சரியல்ல. யூதர்கள் நாஜிக்களால் எல்லா ஐரொப்பிய நாடுகளிடமிருந்து சில இடங்களுக்கு குவிக்கப் பட்டு, கொலை செய்யப் பட்டனர். அதன் ஒரே காரணம் அவரக்ள் யூதர்கள் அவ்வளவுதான், யூதர்கள் நாஜிக்களுக்கு எதிராக ஒன்றும் செய்யவில்லை. நாஜிக்கள் ஜெர்மனி மற்றும் ஐரோப்ப முழுவதும் பரவியிருந்த யூதர்களை பல வருடம் திட்டமிட்டு சில இடங்களில் குவித்து கொன்றனர். யூதர் அழிவு திட்டம் ஜெர்மானியரின் போர் திட்டங்களுக்கு மிக்க இடைஞ்சல்களை கொடுத்தது, உதாரணமாக துருப்புகள் செல்ல வேண்டிய ரயில் வண்டிகளை யூதர்களை முகாம்களுக்கு எடுத்த செல்ல பயன்படுத்தினர். யூதர் அழிவால் ஜெர்மானிய யுத்த செயல்களுக்கு ஒரு பிரயோஜனமும் இல்லை, இடைஞ்சல்கள்தான். அப்ப்டி இருந்தும் நாஜிக்களின் கொலை வெறி , யுத்தத்தின் முக்கியத்துவத்திற்கு மேலேயே இருந்தது.
 
ஜப்பானிய மக்கள் அவர்கள் ராணுவம் பின்னால் திண்ணமாக நின்றனர். 1943 முதல் அமெரிக்கா ஜப்பானியரை பல பசிபிக் தீவுகளிடமிருந்து விரட்டி அடித்தது. ஆனால் ஜப்பானியர் மிக்க ஆக்ரோஷத்துடன் சண்டை இட்டனர். ஜப்பானிய துருப்புகள் சரணடைய மறுத்து கடைசி மூச்சு வரை போரிட்டனர், அல்லது தற்கொலை செய்து கொண்டனர். ஜப்பான் அருகில் வர வர, ஒவ்வொரு தீவை பிடிப்பதற்கும் அமெரிக்கா ஆயிரக்கணக்கில், லக்ஷக்கணக்கில் துருப்புகளை இழந்தது. மேலும் ஜப்பானையே பாதுகாப்பதற்கு, எல்லா ஜப்பானிய குடிமகன்களும் மடிய தயாராக அரசாங்கம் திட்டமிட்டது. ஐரோப்பவில் போர் மே, 45ல் முடிந்து விட்டது. பழைய முறைகள் படி போரை நடத்தினால், ஜப்பானியரை முழுவதும் தோல்விசெய்ய 2-3 வருடங்கள் ஆகும், 5 லக்ஷம் அமெரிக்க துருப்புகள் மடியலாம் என்று அமெரிக்க அரசாங்கம் கணக்கிட்டது. மே 45 போது, நேச நாடுகள் ஜப்பானை நிபந்தனை இன்றி சரண் அடைய கோறின, அதை ஜப்பான் அலட்சியம் செய்தது. போரை சீக்கிரமே, `குறைந்த பட்ச’ இழப்புகளுடன் முடிப்பதற்கு , அமெரிக்கா , புதிதாக செய்யப்பட்ட, அணுகுண்டை உபயோகிக்க முடிவெடுத்தது. ஜப்பானியருக்கு போரை முடிக்க எவ்வளவோ வாய்ப்புகள் இருந்தன. ஆனால் நம் காலத்து தமிழீழ புலிகள் போல, அவர்கள் போரை நிறுத்த ஒப்புக் கொள்ளவில்லை. புலிகள் போல அவர்களும் தற்கொலை செய்ய தயாராக இருந்தனர்.
 
ஹோலோகாஸ்டில் 60 லக்ஷம் யூதர்கள் கொல்ல பட்டனர். ஹிரோஷிம-நாகசாகியில் 2 லக்ஷம் மக்கள் கொல்லப் பட்டனர். (http://en.wikipedia.org/wiki/Atomic_bombings_of_Hiroshima_and_Nagasaki). 2ம் உலகப் போரில், ஆகாய விமான தாக்குதல்களால் லக்சக்கணக்கான மக்கள் பல நாடுகளில் கொல்லப் பட்டனர். 1943 முதல் அமெரிக்க விமானங்கள் ஜப்பானை ஒரு நாள் விடாமல் தாக்கின. 1945 முதல் , ஜப்பானின் ஆகாய பாதுகாப்பு முறைகள் (Air defence systems) அமெரிக்காவால் முழுமையாக அழிக்கப் பட்டிருந்தன,. அதனால் அமெரிக்க விமானங்கள் தங்கு தடையின்றி குண்டு போட்டு, ஜப்பானை அழைத்துக் கொண்டிருந்தன. அதேபோல ஜெர்மனியும் நேச நாடுகள் ஆகாய குண்டு தாக்குதலால் பெரிய அழிவிற்கு உண்டாகியது. உதாரணமாக டிரெஸ்டன் என்ற ஜெர்மானிய நகரத்தை, நேச ஆகாய விமனங்கள் 2 நாட்கள் தாக்கியதில், 50,000 ஜெர்மானியர் மாண்டனர். ஒவ்வொரு ஜெர்மன், ஜப்பானிய நகரமும் அணுகுண்டு தாக்குதல் முன்னாடியே விமானங்களால் தாக்கப் பட்டு, லட்சக்கணக்கில் மக்கள் இறந்துள்ளனர்.
 
அணுகுண்டு தாக்குதல் பெரிய shock value. அதன் பிறகு 2 நாட்களில் ஜப்பான் சரணடைந்தது.
 
அதனால் அப்பாவிகளான யூதர்களின் பேரழிப்பையும், போர்கோல ஜப்பானின் அழிப்பையும் சமதளத்தில் வைப்பது உசிதம் அல்ல. நாடுகள் உயிரா-சாவா என யுத்தம் செய்யும் போது, அணுகுண்டு மற்றொரு ஆயுதம் , அவ்வளவுதான்.
 
வன்பாக்கம் விஜயராகவன்
 
 
பிகு: “ அவை (வாசனைத்திரவியங்கள்) வெயில்பட்டபோது ஆவிகிளப்பின. எனக்கு வாசனைதிரவியங்கள் எல்லாமே நாசியை சீண்டும்” என எழுதியுள்ளீர்கள். பொதுவாக வெள்ளையரின் தோல் சூரிய உளியினால் எளிதில் பாதிக்கப் படுகிறன, வெள்ளையர்கள் 30 நிமிடம் வெய்யிலில் தோலை காண்பித்தாலும், செக்கச் செவேல் என ஆகி, sunburn வந்துவிடும். அவர்களுக்கு சூரிய வெப்பத்தினால், தோல் கான்சர் கூட வரும்,  அதை தடுப்பதற்கு பொதுவாக வெள்ளையர்கள் தோலின் மீது sun cream ஒன்றை தடவுவார்கள். அந்த வாசனையை நீங்கள் முகர்திருக்கலாம்.

 

 

அன்புள்ள விஜயராகவன்,

பொதுவாக எந்த ஒரு தரப்புக்கும் அதற்குரிய விளக்கம் இருக்கும். நீங்கள் சொல்வது ஓர் அமெரிக்க விளக்கம் என்றே நினைக்கிறேன்

முதலில் அணுகுன்டு வீச்சினால் போர் நிற்கவில்லை. போர் ஏற்கனவே முடிவை நெருங்கிவிட்டிருந்தது. கணிசமான போர்முனைகளில் ஜப்பான் தோற்று பின்வாங்க ஆரம்பித்திருந்தது. ஜெர்மனி வீழ்ச்சி அடைந்துவிட்டது. இத்தாலி சரண் அடைந்துவிட்டிருந்தது. ஜப்பான் சரண் அடைவதை ஒரு மாதம் முன்னால் கொன்டுவருவதற்கு மட்டுமே அணுகுண்டு உதவியது

இரன்டாவதாக அணுகுன்டுவீச்சினால் மூன்றுலட்சம்பேர் உடனடியாக இறந்தார்கள். இருபதுமடங்குபேர் கதிரியக்கத்தால் அப்போது பாதிக்கப்பட்டார்கள். மூன்றுதலைமுறைகளாக அதன் பாதிப்பு நீடிக்கிறது. கண்டிப்பாக அது யூத அழிவைவிட பெரிய அழிவே

மூன்றாவதாக உலகப்போரில் இழப்பு இல்லாத நாடே இல்லை. யூதர்கள் திட்டம்போட்டு அழிக்கப்பட்டார்கள். அதில் உள்ள இனக்காழ்ப்பு ஜப்பான் மேல் போடப்பட்ட குன்டிலும் இருந்தது. அணுகுன்டை ஜெர்மனி மீது போடுவதற்கு அந்த அறிவியலாளர் ஒத்துக்கொள்ளவில்லை

நான் கேட்பது அமெரிக்காவின் ராட்சத ஊடகம் யூத அழிவுக்கு மட்டும் அளிக்கும் அபரிமிதமான முக்கியத்துவத்தின் நோக்கம் குறித்த ஐயமே. அதே அளவு முக்கியத்துவம் ஏன் அணுகுன்டுக்கு அளிக்கபடுவதில்லை என்றே என் ஐயம். அந்த ஒப்பீடு மிகமிக முக்கியமானது. வரலாற்றை எப்போதும் வென்றவர்களின் கோணத்தில் பார்க்க பழகியிருக்கிறோம். அதை மீறி சிந்திப்பது தேவை என்றே எண்ணுகிறேன்.

நான் யூத அழிவைப்பற்றி இதுவரை எப்படியும் இருபது முப்பது படங்கல் பார்த்திருப்பேன். அணுகுண்டு குறித்து கிரோஷிமா மான் அமோர் என்ற ஒரே படம்தான். அதில் இருந்து வந்த ஐயம் என்னுடையது

ஜெ

 

அன்புள்ள ஜயமோகன்
உங்கள் கவனத்திற்க்கு, இன்று வந்த ஒரு அமெரிக்கரின் ஹிரோஷிமா-நாகசாகி நினைவுக் கட்டுரையை இணைக்கிறேன். மனித வர்கமே- அமெரிக்கர்களையும் சேர்த்து- அணுகுண்டின் விளைவுகளை பற்றி அறிந்து பல டாகுமெண்டரிகளில் நினைவு கொள்கிரது. இந்த கடுரையை எழுதியவர், அமெர்க்காவின் அணுஆயுத தடுப்பு இயக்கத்தை சேர்ந்தவர். ஆனால் நீங்கள் சொல்வதைப் போல ஒருவரும் அது அமெரிக்காவின் மனித அழிப்பு போர் குற்றம் என சொல்லவில்லை

விஜயராகவன்

 

http://www.atimes.com/atimes/Japan/KH05Dh01.html

அன்புள்ள ஜெயமொகன்,

பாஸ்டன் பற்றிய உங்கள் குறிப்புகளை வாசித்து மிகவும் ஆச்சரியம் அடைந்தேன்.
ஒன்று, நீங்கள் யூதப்பேரழிவை அணுகுண்டு வீச்சுடன் ஒப்பிட்டிருக்கும் விதம்.

யூதப்பேரழிவென்பது மிகமிக விரிவாக டன் டனாக ஆதாரங்கள் மூலம் நிறுவப்பட்ட ஒன்ரு. அதில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நாகசாகி கிரோஷிமாவின் மக்கள் தொகையைவிட அதிகம்.

இரன்டு ஜப்பானியர்கள் ஒன்றும் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் அல்ல. அவர்கள் தென்கிழக்கில் பெரும் கொடுமைகளை இழைத்திருக்கிறார்கள். ஐரிஸ் சாங் எழுதிய நாங்கின் படுகொலைகள் என்ற நூல் தூக்கமில்லாத இரவுகளை உங்களுக்கு அளிக்கும்.

அமெரிக்காவிலும் யூத எதிர்ப்பும் புறக்கணிப்பும் இருந்துள்ளது. அமெரிக்கா யூதர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பது ஒரு மாயையே.

என்னால் இந்த வரிகளை புரிந்துகொள்ள முடியவில்லை.

 “அவர்களுக்குள் ஆங்கில எதிர்ப்பு எப்போதும் இருந்து வந்திருக்கிறது. பின்னர் அது ஆங்கில மரபை சாராத சுதந்திர சிந்தனைக்கான தேடலாக உருவாகியது. மெல்ல மெல்ல அது அமெரிக்க இலட்சியவாதம் நோக்கி நகர்ந்தது. பிரெஞ்சுப் புரட்சியிலும் ஐரோப்பாவின் பண்பாட்டு மறுமலர்ச்சியிலும் தன் ஊக்கத்தையும் முன்னுதாரணத்தையும் கண்டு கொண்டது.” 

அமெரிக்க புரட்சி 1776ல் நடந்தது. அதற்குப்பின் 1789= 99 ல் தான் பிரெஞ்சுப்புரட்சி. …யாரில் இருந்து யார் ஊக்கம் பெற்றார்கள்? இது கால வழுவா?

அரவிந்தன் கன்னையன்
அன்புள்ள அரவிந்தன் கன்னையன்

நேரமில்லை, ஆகவே உங்கள் நீளமான ஆங்கிலக் கடிதத்தை சுருக்கியிருக்கிறேன்.

நான் ஒரு அமெரிக்க தரப்பு விளக்கம் மீது என் ஐயங்களை முன்வைக்கிறேன். கீழைநாட்டில் இருந்து வந்த ஒருவனது இயல்பான ஐயங்கள் மட்டுமே அவை. அவற்றுக்கான முகாந்திரங்களைச் சுட்டியிருக்கிறேன்.

யூதப்பேரழிவு மிகைப்படுத்தப்பட்டிருக்கக் கூடும் என்று நம்பும், வாதிடும் ஒரு தரப்பு உலகமெங்கும் உண்டு என்பதையே நான் சுட்டிக்காட்டினேன். அவர்களின் வாதங்கள் இன்றுவரை விரிவாக மறுக்கப்படவில்லை

யூதப்பேரழிவு குறித்து இன்று கிடைக்கும் ‘ஆதாரங்களில்’ பெரும்பாலானவை பாதிக்கபப்ட்டவர்களின் வாய்மொழிப் பதிவுகள். அவற்றில் எந்த அளவுக்கு கறாரான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்பது ஐயத்துக்கிடமானதே. அவற்றில் பல அப்பட்டமான கற்பனைகள் என நிறுவப்பட்டிருக்கின்றன. ஆகவே டன் டன்னாக ஆதாரம் என்பதெல்லாம்  முழுமையான வாதங்கள் அல்ல

நாங்கிங் படுகொலைகளை பற்றி நானே எழுதியிருக்கிறேன். [உயிர்மையில் ] ஜப்பானியர்கள் கொரியாவிலும் மஞ்சூரியாவிலும் படுகொலைத்தாண்டவம் ஆடியிருக்கிறார்கள்அதைவிட முக்கியமாக ஜப்பானியர்கள் சயாம் ரயில்பாதைபோடும் பணியில் பல்லாயிரம் தமிழர்களை கொன்றழித்திருக்கிறார்கள். சயாம் மரண ரயில் குறித்தும் நான் எழுதியிருக்கிறேன்.

டாக்டர் தகாஷி நாகாயி எழுதிய தி பெல்ஸ் ஆஃப் நாகசகி என்ர நூலை படித்து நானும் பலநாட்கள் தூக்கம் இழந்திருக்கிரேன்.

பிரெஞ்சுப்புரட்சி நிகழ்ந்தது அமெரிக்க புரட்சிக்குப் பின் என்பது எவரும் அறிந்ததே. ஆனால் பிரெஞ்சு புரட்சிக்கான கருத்தியல் அடிப்படைகள் அதற்கும் அரை நூற்றாண்டுமுன்னரே  வால்டேர் ,ரூசோ போன்ரவர்களின் சிந்தனைகள் மூலம்,  ,உருவாகிவிட்டிருந்தன. அதன் கோஷங்கள்தான் அமெரிக்க விடுதலைப்போரிலும்  எதிரொலித்தன. அமெரிக்க இலட்சியவாதம் பிரெஞ்சு சுதந்திரவாத சிந்தனைக்கு பெரிதும் கடன்பட்டது. அதை எமர்சன் தோரோ முதல் ஜெஃபர்சன் வரை பலரும் விரிவாக எழுதியிருக்கிறார்கள்.

ஜெ

முந்தைய கட்டுரைகன்னிநிலம் – நாவல் : 3
அடுத்த கட்டுரைஇணையம் ,கடிதம்