கோயில்நிலங்கள்-கடிதம்

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,
வணக்கம்.

இன்று தங்கள் வலைத்தளத்தில் ” கோயில்நிலங்கள்” சம்பந்தமாக தாங்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் நூற்றுக்கு நூறு சரியே.உண்மையிலேயே அவை பெரும்பாலும் இன்று தகுதியற்றவர்கள் கையில்தான் உள்ளது.கோயில் சம்பந்தப்பட்ட எல்லாமே இன்று வணிகமயமாக்கபட்டுள்ளது.
குறிப்பாக இதே போல் சமீபத்தில் என்னை பாதித்த நிகழ்வு திருப்பதி தேவஸ்தானம் மூலமாக ஊர் ஊராக சென்று ஸ்ரீனிவாச கல்யாணம் நடத்துவது.

மேலும் திருப்பதி தேவஸ்தானம் மூலமாக பக்தர்கள் இலவசமாக கொடுத்த இடத்தில் கன்யாகுமரியிலும்,சென்னையில் பிரதான இடத்திலும் கோயில் கட்டுவது.எத்தனையோ வைணவ திவ்ய தேசக் கோயில்கள் நித்ய பூஜைகளுக்கும்,யாத்ரீகர்கள் வந்து தங்கி தரிசனம் செய்து போவதற்குக் கூட
வழி இல்லாத நிலையில், சரவணா ஹோட்டல் கிளைகள் போல ஊர் ஊராக இவ்வாறு செய்வது வடிகட்டின வியாபர நோக்கே அன்றி வேறல்ல.

அன்புடன்,
அ.சேஷகிரி,
ஆழ்வார்திருநகரி.

***

அன்புள்ள ஜெயமோகன்

கோவில் நிலங்களை எடுத்துக் கொள்வது பற்றி கோகுல் எழுதியிருந்தார். இத்துடன் இணைக்கப் பட்டிருக்கும் படத்தைப் பாருங்கள். இது ஒரு தெப்பத் திருவிழாவின் பொழுது எடுக்கப் பட்டிருக்கும் படம். இது ஏதோ கிராமக் கோவிலின் தெப்பம் அல்ல. மதுரையின் மத்திய பகுதியில் அமைந்துள்ள கூடல் அழகர் பெருமாள் கோவிலின் தெப்பத் திருவிழா. இந்த அழகான தெப்பக் குளம் மதுரையின் நடுவே அமைந்திருந்தது. இப்பொழுது இது எங்கு இருக்கிறது என்பது மதுரைக்காரர்களுக்குக் கூடத் தெரியாது. இது மதுரை நகரின் மத்தியில் டவுண் ஹால் ரோட்டில் இருக்கிறது. இதைச் சுற்றி செருப்புக் கடைகளும் காசெட் கடைகளும் லாட்ஜுகளும் அமைந்திருக்கின்றன. டவுன்ஹால் ரோட்டில் நடந்து செல்பவர்களுக்கு இப்படி ஒரு தெப்பக் குளம் அந்தக் கடைகளுக்குப் பின்னல் ஒளிந்திருக்கும் விபரமே தெரியாது.

இதை இப்பொழுது குப்பைகள் போடவும் பிற மறைவான தொழில்களுக்கும் பயன் படுத்துகிறார்கள். இந்தப் படம் 1920ல் எடுக்கப் பட்டிருக்கிறது. ஒரு 40 வருடங்களில் இவ்வளவு பெரிய ஒரு குளத்தையே இருக்கும் இடம் தெரியாமல் அழித்து விட்டிருக்கிறார்கள். இப்பொழுதும் இதை புனருத்தாரணம் செய்து மீட்டெடுத்து விடலாம். மதுரை ஏற்கனவே சிறிதளவு கூட வெட்ட வெளியின்றி மூச்சு முட்டிக் கொண்டிருக்கிறது. இவை போன்ற குளங்கள் நகரின் நடுவில் தண்ணீர் நிரப்பப்ட்டு இருந்தால் அதுவே அந்த நகரின் பிராணவாயுவின் ஊற்றாக இருக்கும். கோவில்களின் வருமானத்தை முழுக்க எடுத்துக் கொள்ளும் அரசாங்கம் அதன் நிலங்களையும் பிற சொத்துக்களையும் அபகரித்து விட்டது. ஆனால் எந்தக் கோவிலிலும் ஒரு உருப்படியான கழிப்பறை வசதியைக் கூடக் கோவிலுக்கு வருபவர்களுக்குச் செய்து தருவதில்லை. மதுரை அழகர் கோவிலின் சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ளும் அரசாங்கம் அதன் மண்டபங்களையும் எழிலான கோட்டை வாயில்களையும் பாதுகாக்கும் லட்சணத்தையும் இந்தப் படங்களில் பாருங்கள்.

ராஜன்

***

முந்தைய கட்டுரைஹோமியோ அறிமுகம்
அடுத்த கட்டுரைஇலக்கியமும் ஆன்மீகமும்