புண்படுதல்-கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு..

புண்படுதல் குறித்த உங்களது நெடிய விளக்கம் கண்டேன்.. நிறையவே புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது புரிந்தது.. உண்மைதான், தமிழர்களிடம் ஏதோ ஒருவிதமான தாழ்வு மனப்பான்மை இருக்கத்தான் செய்கிறது… பிராமண எதிர்ப்பு இயக்கத்திற்காக உருவாக்கப்பட்ட ஒருவிதமான தாழ்வு மனப்பான்மையாகக் கூட இருக்கலாம்.. அல்லது இதனால்தான் இன்றும் கழக அரசியல் வெற்றிபெறுகிறது என்று கூடச் சொல்லலாம்.. எல்லாவற்றிலுமே எதிரியைப் பார்க்கப் பழகிவிட்டார்கள்.. பாவம் தமிழன்..!

சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால்.. தில்லியில் சக நண்பர்களோடு பேசிக்கொண்டு இருந்த போது.. எனது கொல்கத்தா நண்பர்கள் அங்குவந்து சேர தங்களுக்குள் பெங்காலியில் பேச ஆரம்பித்துவிட்டார்கள்.. அதுவும் சத்தமாகப் பேசினால்தான் அவர்களுக்கு ஒரு திருப்தி வரும் போல..! நானும் எனது சக தமிழ் நண்பர்களும் கொஞ்சம் பொறுமை காத்த பிறகு.. தம் அடிக்க வெளியே வந்த நேரத்தில்.. “நாலு அஞ்சு பெங்காலிகள் சேர்ந்து பேச ஆரம்பித்துவிட்டால் அந்த இடத்தையே மீன் மார்க்கட் மாதிரி ஆக்கிடுறாங்க..!”என்று வழக்கமாக அவர்களைப் பற்றிச் சொல்லப்படும் பகடியை எடுத்துவிட.. எனது நண்பர் கடுமையாகப் புண்பட்டுவிட்டார்.. “அதெப்படி நீங்கள் மீன் மார்க்கட் என்று சொல்லலாம்” என்று கோபப்பட்டார். என்தமிழ் நண்பர் தனிப்பட்ட முறையில் அதை அவமானமாகக் கருத இடம் இல்லை.. அவருக்கும் கடலுக்கும் மீனுக்கும் ரொம்ப தூரம்.. இதில் புண்பட என்ன இருக்கிறது என்று நெடுநேரம் எனக்கு விளங்கவே இல்லை.. வேறு வழியின்றி “சரி பள்ளிக்கூடம் விட்டு வெளியே வரும் மாணவர்கள் போடும் இரைச்சல் போல இருக்கிறது” என்று சொன்னேன். அவருக்கு பரம திருப்தி..!

இதே கிண்டலை சம்மந்தப்பட்ட என் பெங்காலி நண்பர்களிடம் சொன்னேன்.. அவர்கள் வாய்விட்டு சிரித்தார்கள்.. நாங்கள் மீன் பிரியர்கள்..அதனால் எங்களை மீனோடு ஒப்பிட்டது ரொம்ப சந்தோசம் என்று கிண்டலோடு சொன்னான் என் நண்பன்..

ஆம், இந்தத் தாழ்வு மனப்பான்மைதான் ஒருவிதமான போலியான மேட்டிமைத்தனத்தை உருவாக்குகிறது.. இன்று எத்தனை சாதிகள் பற்றிய இனவரைவியல் சார்ந்த ஆய்வுகள் வந்திருக்கின்ற என்று பாருங்கள்.. பெரிதாக எதுவும் இல்லை.. இருக்கும் சாதிகள் பற்றி செய்யப்பட்டது எல்லாமே வெளிநாட்டு ஆய்வாளர்கள் செய்த ஆய்வுகள் மட்டுமே.. ஒவ்வொரு சாதியினருமே நாங்கள் ஆண்ட பரம்பரை என்று சொல்லித்தான் அரசியல் செய்கிறார்கள்.. ஒவ்வொரு சாதிச் சங்கத்தினரும் நாங்கள் ஒரு கோடிப்பேர் இருக்கிறோம், எங்கள் ஆதரவு இன்று யாரும் ஆட்சியைப் பிடிக்கமுடியாது என்கிறார்கள்.. இவர்கள் கணக்குப்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை குறைந்தது அறுவது கோடியாவது இருக்கவேண்டும்.. இப்படி புண்படுதல், தாழ்வு மனப்பான்மை ஒரு வராலாற்று ரீதியாக உருவாக்கப்பட்ட சமூக அவலம் என்றே காண்கிறேன்..

இப்போது என் பயமெல்லாம்.. இதற்காக யாரவது புண்பட்டுவிடுவார்களோ என்பதுதான்…!
அன்புடன்
மு.விடுதலை

அன்புள்ள விடுதலை அவர்களுக்கு

மன்னிக்கவும் தாமதமான கடிதம்

புண்படுதலின் அடுத்த கட்டத்தை இப்போது சந்தித்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் எளிதாகப்புண்படுகிறார்கள் என்று தெரிந்ததும் இங்குள்ள அரைவேக்காட்டு அறிவுஜீவிகள் அந்த மக்களிடம்’ இந்தாபாருங்க, இப்டி எழுதியிருக்கானே, புண்பட மாட்டீங்களா, ப்ளீஸ் புண்படுங்க, நாலு சாத்து சாத்துங்க’ என்று ’போட்டுக்கொடுக்க’ ஆரம்பித்துவிட்டார்கள் .அப்படிப்பார்த்தால் தமிழில் எதையும் எவரும் எழுதிவிடமுடியாது. அது எங்கேனும் எவரையேனும் புண்படுத்தும். ஒருவேளை புண்படுத்தாவிட்டால்கூட புண்படுத்தும்படி விளக்கிக்கொள்ளவேண்டியதுதான்

சமீபத்தில் ஒரு மீனவர் அமைப்பிலிருந்து கூப்பிட்டார்கள். கடல் படத்தில் மீனவர்கள் இழிவு படுத்தப்பட்டிருப்பதாக ஒரு கட்டுரை எழுதும் அரசியல்ஆசாமி எழுதியதை அவர்கள் வாசித்திருந்தார்கள். ’நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?’ என்று கேட்டேன். ‘நாங்க நினைக்கேல்ல’ என்றார்கள்.

’சரி என்ன செய்யவிரும்புகிறீர்கள்? நான் உங்களையோ உங்கள் சமூகத்தையோ புண்படுத்தக்கூடியவன் என நினைக்கிறீர்களா?’ என்றேன். மீனவர்கள் அவர்களே அவர்கள் வாழ்க்கையை எழுதும் பயிற்சிக்கான இலக்கியமுகாமை நான்தான் ஆரம்பித்துவைத்து உரையாற்றினேன். அதன் நூறாவது கூட்டத்திலும் நானே தலைமையேற்றுப் பேசினேன். அந்த நிகழ்ச்சிகளில் என்னை அவர் சந்தித்திருந்தார் ‘இல்லை’ என்றார் தயக்கமாக

‘பின்னே? எவனாவது அரைவேக்காடு எதையாவது எழுதினால் எப்படி நீங்கள் என்னிடம் அதைப்பற்றிக் கேட்கலாம்?’ என்று கோபமாகப் பிடித்துக்கொண்டேன். ‘சாரி சார்…விட்டிருங்க’ என்று ஃபோனை வைத்தார்

இதுதான் இன்றைய தமிழ் எழுத்தாளனின் நிலை. அவனுடைய எழுத்தில் எதையாவது திரித்து எவரிடமாவது போட்டுக்கொடுத்து சிக்கலை உருவாக்க ஒரு கும்பலே அலைகிறது.

ஜெ

அன்புள்ள ஜெ

புண்படுதல் அருமையான கட்டுரை & தன்னிலை விளக்கம். உங்களது “பண்படுதல்” புத்தகத்தின் கடைசி அத்தியாயமாக அடுத்த பதிப்பில் இந்த ”புண்படுதல்” கட்டுரையையும் சேர்த்து விடலாம். ஏனென்றால் அறிவுத் தேடலும், ஆழமும், முதிர்ச்சியும், வாழ்க்கை குறித்த பன்முக நோக்கும் கொண்ட ஒரு பண்பாட்டின் முக்கியமான ஒரு அம்சத்தை இந்தக் கட்டுரை பேசுகிறது.

கடந்த சில வருடங்களில் தங்கள் தொடர்பினாலும், வழிகாட்டுதலினாலும் சிந்தனைகளை முன்வைத்தல், விவாதித்தல், மாற்றுத் தரப்புகளை அறிவுபூர்வமாக மதிப்பிடுதல் ஆகியவற்றில் தனிப்பட்ட அளவில், பல விஷயங்களைக் கற்றுக் கொண்டிருக்கிறேன். அதற்கும் மிக்க நன்றி.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

சமீபத்தில் கடல் படம் சம்பந்தமாக ஒரு தொலைக்காட்சி விவாதம். அதில் ஒருவர் சொன்னார் , ’இந்தப்படத்தைப் பார்த்தபோதுதான் தெரிந்தது சார், நீர்ப்பறவை படத்தில் வைரமுத்து எழுதிய வரிகளுக்கும் ஜெயமோகன்தான் பொறுப்புன்னு’

இப்படி இருக்கிறது நம் புண்படும் மரபு

ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கியமும் ஆன்மீகமும்
அடுத்த கட்டுரைஅகமும் ஆன்மீகமும்-கடிதங்கள்