இந்திய ஆங்கில இலக்கியம்

அன்புள்ள ஜெ

இந்திய ஆங்கிலப் படைப்புகள் குறித்து….

இந்தியாவின் பெருநகரங்களில் ஒரு பொதுப்போக்கை அவதானித்திருக்கிறேன். ஆங்கிலப் படைப்புகள் அதிகம் விற்பனையாகின்றன, வாசிக்கப்படுகின்றன (இதன் சாட்சி – பெருநகர வணிக வளாகங்களில் புத்தகக் கடைகளும், விமான நிலயத்தில் பலர் படித்துக் (பிடித்து)கொண்டிருக்கும் புத்தகங்கள்!!!) . இதில் marketingன் பங்கும் உண்டு. சில காலமாய் ஆங்கிலத்தில் எழுதும் இந்திய எழுத்தாளர்களும் உருவாகி வருகிறார்கள். இவர்களில் பலர் வெளி நாட்டில் வாழுபவர்கள் மற்றும் அந்த marketக்குக்காக எழுதுபவர்கள். இவர்களை ஒரு விதமாக வகைப்படுத்தலாம் – சற்றே சீரியஸ் (அருந்ததி ராய், அரவிந்த் அடிகா, விக்ரம் சேத் போண்றவர்) மற்றும் கொஞ்சம் வெகுஜனம் (சேத்தன் பகத், கிரண் தேசாய்) இன்னொரு வகை – சல்மான் ருஷ்டி, வி.எஸ். நாய்பால், குஷ்வந்த் சிங் போண்ற ”தீவிர” படைப்பாளிகள் (!!??) உலக அரங்கே அவர்கள் இலக்கு?? அபுனைவு எழுதுபவர்கள் – ராமச்ந்திர குஹா போண்றவர்களை வேறு விதமாகப் பார்க்கலாம் – மொழிபு, கருத்தாக்க்ங்கள்.(india after Gandhi ஒரு குறிப்பிடத்தக்க படைப்பு)
சில ஐயங்கள்:

• ஒருவன் என்னதான் ஒரு மொழியில் புலமை பெற்றிருந்தாலும் ஒரு அன்னிய மொழியில் – அதன் நுட்பங்களோடு, பண்பாட்டுத் தளங்களோடு முற்றிலும் பரிச்சயமிருந்தால் மட்டுமே ஒரு நல்ல படைப்பை உருவாக்க முடியும். ஆங்கிலம் இந்தியாவில் உருவானதல்ல. மேலும் அது தாய்மொழியுமல்ல (நான் அறிந்தவரையில்). அந்நிலையில் அப்படைப்புகளை வகுப்பதெப்படி?

• இதன் காரணமாகவே – நான் அவர்களைத் தவிர்த்திருக்கிறேன். எனக்கென்னவோ ஒரு pseudo intellectualistic இவர்கள் தென்படுகிறார்கள். (திடீரென்று ஏதாவது நேர்ந்தால் ‘அய்யோ அம்மா” என்று கூறாமல் “oh my god!!” என்று கத்தினால் அது மிகையாகத் தோன்றாதா??) இது ஒரு தவறான எண்ணமா? அல்லது என் அறியாமையா??

• இது ஒரு பெருநகர கலாச்சார சார்புடைய தாக்கம் மட்டும்தானா?

• இப்படைப்புகள் மீள் வாசிப்புக்கு உகந்தவையா?

• இப்படைப்புகள் நம் போன்ற ஒரு சமூக கலாச்சாரத்தை / அதன் தொன்மங்களை முன்னெடுத்துச் செல்லுமா அல்லது ஒரு வணிக உந்துதலின் உருவாக்கமாகவே இருக்குமா?

இக்கேள்விகளின் பின்னணி– நான் சமீபத்தில் விமானத்தில் பயணிக்கும்போது யு.ஆர்.அனந்தமூர்த்தியின் “பாரதிபுரம்” படித்துக்கொண்டிருந்தேன். சக இருக்கைக்காரர் என்னவென்று கேட்டுவிட்டு ஒரு மாதிரியாகப் பார்த்துவிட்டு ஏதோ ஒரு தலையணைப் புத்தகம் படிக்க ஆரம்பித்துவிட்டார்….

சதீஷ் (மும்பை)

அன்புள்ள சதீஷ்

இவ்விஷயத்தை நான் பலமுறை எழுதியிருப்பேன். இன்றைய இந்தியாவில் பயிற்றுமொழியாக இருப்பது ஆங்கிலம். இந்தியர்களில் கல்விகற்றவர்கள் ஆங்கிலத்தையே எளிதில் வாசிக்கிறார்கள். தமிழ்நாட்டில் சரளமாக தமிழ் வாசிக்கத்தெரிந்த உயர்கல்விகற்றவர்கள் குறைவு. பொதுவாகக் கல்வி மற்றும் சமூகநிலையில் நடுத்தரநிலைக்கு மேலே இருப்பவர்களே அதிகம் வாசிக்கிறார்கள். ஆகவே இங்கே எல்லாமே ஆங்கிலத்தில் வாசிக்கப்படுகிறது

நவீனகாலகட்டத்தில் பயனுறுநூல்களையே அதிகம்பேர் வாசிக்கிறார்கள். அடுத்தபடியாகக் கல்விநூல்கள். அவையெல்லாமே ஆங்கிலத்தில் சிறப்பாக வெளியிடப்பட்டுக் கிடைக்கின்றன. அவற்றின் நீட்சியாகப் புனைவுகளையும் ஆங்கிலத்தில் வாசிக்க ஆரம்பிக்கிறார்கள்.

இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே இந்திய ஆங்கில எழுத்து உருவாகிவிட்டதென்றாலும் தேசிய இயக்கத்தின் ஒட்டுமொத்தமான வீச்சு காரணமாக அது அவ்வளவாக கவனம்பெறவில்லை. தேசிய இயக்கம் பிராந்தியமொழி இலக்கியங்களை வளர்த்தது. க.நா.சு உள்ளிட்டவர்கள் ஆங்கில எழுத்தாளர்களாக ஆகவேண்டுமென்ற கனவுடன் இருந்து பின் தமிழில் எழுதினார்கள் என்பதைக் காணலாம்.

ஆனால் இன்று நாம் ஒரு திரும்பிச்செல்லும் பயணத்தில் இருக்கிறோம். எல்லாவகையிலும் சுதேசி அடையாளங்களைத் துறக்கமுயல்கிறோம். தனித்துவங்களை மழுப்பவும் சர்வதேசத்தன்மையை மட்டும் அடையவும் முயல்கிறோம். ஆகவே ஆங்கிலம் திரும்பி வருகிறது. இன்று தேசியமொழிகளில் எழுதுபவர்கள்கூட ஆங்கிலத்தில் எழுத விரும்புகிறார்கள். சிவராமகாரந்துக்குக் கிடைக்காத புகழும் அங்கீகாரமும் அரவிந்த் அடிகாவுக்குக் கிடைக்கிறது

இந்திய ஆங்கில இலக்கியம் சில இடங்களைத் தொடமுடியும். சில இடங்களை அது தீண்டமுடியாது. வரலாற்றையோ அரசியலையோ அது இன்னும் விரிவாகத் தொடமுடியும். ஏனென்றால் அதற்கான மூலநூல்களை அது ஆங்கிலத்திலிருந்து பெறுகிறது. ஏற்கனவே ஆங்கிலத்தில் எழுதப்பட்ட வரலாற்றின் நீட்சியாக அது அமைகிறது. ஆங்கிலம்பேசும் மேல்தட்டு மக்களின் வாழ்க்கையை அது அழகாகச் சொல்லமுடியும்

ஆனால் இந்தியாவின் அடித்தட்டு யதார்த்ததை, அன்றாட வாழ்க்கையின் அகத்தை, இந்தியாவின் தொன்ம புராண ஆழத்தைச்சொல்ல அதனால் முடியாது. இந்தியாவின் மொழிகளின் நுட்பங்கள் அளிக்கும் வாய்ப்புகள் அதற்கு இல்லை. இக்காரணத்தால்தான் தேசியப்போராட்ட காலத்தில் ஆங்கிலத்தில் எழுதிய பெரும் கலைஞர்கள்கூட தேசியமொழிகளில் எழுதவந்தார்கள். இந்த எல்லை இந்திய ஆங்கில எழுத்துக்களுக்கு உண்டு.

ஆனால் இந்த எல்லையை ஓர் இலக்கியமேதை எளிதில் தாண்டிச்செல்லக்கூடும். ஏனென்றால் மொழி என்பது கற்பனைக்கான ஒரு கருவி மட்டுமே. மிக எளிதாக ஒரு ஆங்கிலத்திற்குள் ஒரு தனிமொழியை உருவாக்கிக்கொண்டு அதில் இந்திய யதார்த்தங்களை ஒரு பெரும்படைப்பாளி சொல்லிவிடுவார்.

இந்திய ஆங்கிலஇலக்கியத்தில் இன்று விரிவான வரலாற்றுச்சித்தரிப்பை அளிக்கும் நல்ல ஆக்கங்கள் சில உள்ளன. மேல்தட்டுமக்களைச் சித்தரிக்கும் சில ஆக்கங்களும் உள்ளன. மற்றவை எளிய சமகால கருத்தியல் உள்ளடக்கம் மட்டுமே கொண்ட படைப்புகள், வணிகக்கேளிக்கைப்படைப்புகள் மட்டுமே

இந்தியா இன்றுசெல்லும் திசையில் ஒருவேளை அது வட்டாரமொழி இலக்கியங்களை முழுமையாக இழந்துவிடக்கூடும் என்றே நான் நினைக்கிறேன். இப்போதே வங்கத்தில் வங்க இலக்கியம் வாசிப்பாவர்கள் குறைந்துவிட்டார்கள் என்று ஒரு வங்க எழுத்தாளர் சொன்னார். வங்கம் பண்பாட்டு விஷயங்களில் இந்தியாவுக்கு முன்னோடி மாநிலம். அப்படி இந்தியமொழிகளில் இலக்கியம் வாசிக்கப்படாத நிலை வருமென்றால் அது இந்தியப்பண்பாட்டின் அழிவின் தொடக்கமாக இருக்கும்

ஏனென்றால் அதன்பின் எழுதுவதற்கு மொழி இருக்கும். எழுதப்படுவதற்கான இந்திய வாழ்க்கை இருக்காது.

ஜெ

முந்தைய கட்டுரைரப்பர்-கடிதம்
அடுத்த கட்டுரைமத்தகம்-கடிதம்