உள்ளுணர்வைப் பயில்தல்

திரு ஜெமோ,
உங்களுடைய பழைய கட்டுரை ஒன்றில் இவ்வரிகளை வாசித்தேன்,”உள்ளுணர்வை மனிதன் வளர்த்துக்கொள்ள முடியும், பயில முடியும்.”இதை விளக்க முடியுமா?

அதாவது உள்ளுணர்வைப் பயில்வது எப்படி?intuition மேல் நம்பிக்கை வைத்து அதன் வழியே முடிவெடுத்து, செயல்பட்டு பிறகு அதன் வெற்றி தோல்வியைக் கணக்கிட்ட பிறகு, மனதில் “சரி இந்த முறை நம் நுண்ணுணர்வைப் பின்பற்றி முடிவெடுத்தது சரியே!. அடுத்த முறை இதே போல ஒரு தருணம் வாய்க்கையில் மனதில் இதைப்போல் புகை மூட்டம் போல தோன்றும் ஒரு எண்ணத்தின் மேல் (gut feeling) நம்பிக்கை வைக்க வேண்டும்” எனத் தொடர்ந்து அனுபவங்களின் மேல் நமக்கு நாமே பின்னூட்டம் இட்டுப் பழக்கிக் கொள்வதா?
அல்லது வேறு வழி உண்டா?

முத்துக் கிருஷ்ணன் நீலகண்டன்

அன்புள்ள முத்துக்கிருஷ்ணன்,

உள்ளுணர்வை வளர்த்துக்கொள்ளும் பயிற்சிக்குப்பெயர்தான் தியானம். அதைப்பயன்படுத்தி பிரபஞ்சத்தையும் தன்னையும் அறியும் பயிற்சிக்குப்பெயர் யோகம்

உள்ளுணர்வை அறிவதற்கு அடிப்படையாகத் தேவைப்படுவது உள்ளுணர்வு என்றால் என்ன என்று உணர்வதுதான். ஒருவன் தன்னைத் தானே கூர்ந்து அவதானிப்பதன் வழியாகவே அதை உணரமுடியும். மனதுள் ஓடும் எண்ணங்கள், அதன்விளைவான உணர்ச்சிகள், கனவுகளாக ஓடும் பிம்பங்கள் எவையும் உள்ளுணர்வு அல்ல . உள்ளுணர்வு அவற்றின் அடியில் உள்ள ஒன்று. ஆனால் அது எண்ணங்களாக உணர்ச்சிகளாக, கனவுகளாக மட்டுமே வெளிப்பட முடியும்

யோகத்தின் மொழியில் சொல்லப்போனால் துரியம்தான் உள்ளுணர்வு. அது சுஷுப்தி வழியாக, ஸ்வப்னம் வழியாக வெளிப்படுகிறது. நாம் ஜாக்ரத்தால் அதைப் புரிந்துகொள்ள முயல்கிறோம்.

எது உள்ளுணர்வு என உணர்ந்தவன் அதன் செயல்முறையை, அதன் வெளிப்பாட்டுமுறையைக் கொஞ்சம் கொஞ்சமாக உணர முடியும். அதன்பின் அவன் உள்ளுணர்வுடன் தொடர்புகொள்ள முடியும். மெதுவாக அதைத் தனக்கேற்ப மாற்றிக்கொள்ள, வளர்த்துக்கொள்ள முடியும். அதுவே தியானத்தின் படிநிலைகளாக அறியப்படுகிறது.

கண் தெரியாதவன் காட்டுக்குள் செல்வதுபோல. அங்கே அவன் காணமுடியாத மாபெரும் மிருகம் ஒன்றிருப்பதை உணர்கிறான். கொஞ்சம்கொஞ்சமாக அந்தமிருகத்தை அவன் புரிந்துகொள்கிறான். காற்று வீசும் ஒலி, பாறை சரியும் ஒலி போன்றவை அல்ல அது நடக்கும் ஒலி என பிரித்தறிகிறான். பின்னர் அதன் ஒலியை வாசனையை ,அது வரும் நேரக்தை, அது செல்லும் பாதைகளை எல்லாம் பழகிக்கொள்கிறான்.

ஒருகட்டத்தில் அந்த மிருகத்துக்கு ஒரு துண்டு கரும்பை நீட்டவும், அதன் நல்லெண்ணத்தைப் பெறவும் கற்றுக்கொள்கிறான். அதன் மத்தகத்தைத் தொடவும் ,கொம்புகளை நீவவும் பயில்கிறான். அதன் மீது ஏறி அமர்ந்து செல்லும்போது காடே அவன் காலடிக்கீழ் இருக்கும.

ஜெ

முந்தைய கட்டுரைசங்க இலக்கியம் பயில
அடுத்த கட்டுரைகடிதங்கள்