பூத்தபடி
=======
சமவெளியின்
பசுமைநடுவே
இலைகாய்ந்து
நிற்கும் மரமே
பூத்துநிற்கிறாயென்று
தூரத்தே நின்றஒருவன்
எண்ணி
நெஞ்சில் பிரதியெடுத்துக்
கொண்டுசென்றிருக்கிறான் உன்னை.
மரணம்வரை அவனிலிருப்பாய்
பூத்தபடியே நீ.
அவனிலிருந்து கேட்டு
பிறரும்
மேலும் பூக்களுடன்
உன்னைக் காண்பார்கள்.
பூக்காலமாக உன்னை
ஒருவன் வரையலாம்.
கவிஞனும் எழுதலாம்
சமவெளியின் பசுமைநடுவே
இலைகாய்ந்து நிற்கும் மரமே
ஒருநாளும் காயமாட்டாய் நீ!
****************
வருகை
======
வெயில்
நீரில் போல
நீ என்னில் புகுந்தாய்.
பனி
இலையிலிருந்து போல
போகவும் போனாய்
எனினும்
நன்றியுடையேன் உனக்கு.
இந்தத் தேங்கலை
கொஞ்சநேரம்
படிகம் என்று
எண்ணச் செய்தாய்
*******
தழுவுதல்
=======
பூமிக்கு அடியில்
வேர்களால்
தழுவிக் கொள்கின்றன
இலைகள்
தொட்டுக்கொள்ளுமென
அஞ்சி
நாம்
விலக்கிநட்ட மரங்கள்
***********
நெஞ்சில் உள்ளது
=============
அருவி வரைக்கும் மட்டுமே
உள்ளே இருக்கும் காதலை
நதி
ரகசியமாக வைக்க முடியும்
முழக்கங்களில் இருந்து
விலக்கி வைக்க முடியாது
காதலித்தவனுடன்
போக முடியாத
கடலின் துயரம்
ஆனால்
நெஞ்சில் உள்ளதை
வெளிப்படுத்தாமலிருக்க
முயன்று பார்க்கும்
வானிலோடும் மேகங்கள்
இடியும் மின்னலும்
மாறி மாறி அனுப்பி
கண்கூச வைக்கும்.
எனினும்
பெய்யத்தொடங்குவரை
மட்டுமே
தேக்கிவைக்க முடியும்.
*************************
உன்னைப்பற்றி
==========
புழுவாய்
உறங்கி
விழித்தபோது
பட்டாம்பூச்சியாக
இருந்தேன்.
அவ்வளவுக்
காதலுடன்
கனவில்
வந்து முத்தமிட்டது
யார்?
*************
மின்னலே..
========
காதல் நம்மை
காப்பு இல்லா கம்பிகளில்
அமரச்செய்யும்.
அசைவுகள்
நம்
அலகுகளைத்
தொடச்செய்யும்.
மின்னலென ஒன்று
அப்போது
நம் வழியாகச் செல்லும்.
காதல் வழியாகச் சென்ற
அனுபவத்தை
எப்படிச் சொல்லும்
மின்சாரம்?
கடற்கரை விளக்குமரங்களை
பூக்க வைக்குமோ?
*********
காதலால்…
=========
இருட்டால் செய்த
வீடு
எத்தனைகாலம்
அப்படியே இருக்கும்?
காதலால்
கண்ணிழந்தவர் இருவர்
வந்துசேரும்வரை.
இப்போது அது
ஒளியால்
செய்த வீடு
குட்டிச் சூரியர்கள்
முற்றத்தில்
விளையாடுகிறார்கள்.
************
படிப்பு
=====
புரியவேயில்லை
அவளுக்கு
பட்டுப்பூச்சி படம்காட்டி
டீச்சர்
வண்ணத்துப் பூச்சி
என்று
கற்பித்துக் கொண்டேஇருந்தது.
கடைசியில்
கஷ்டப்பட்டு
அவளும்
வண்ணத்துப்பூச்சி
என்று
சொல்ல ஆரம்பித்தாள்.
பட்டுப்பூச்சி என்று
அதை
அதன் வீட்டில்
கூப்பிடுவார்களாக இருக்கும்
என்று எண்ணியபடி.
[வீரான்குட்டி மலையாளக் கவிஞர். கோழிக்கோடு அருகே மொகேரி அரசு கலைக்கல்லூரி ஆசிரியர். மீரான்குட்டி என்பதன் கேரள மரூஉ]
கல்பற்றா நாராயணன் கவிதைகள்
மலையாளக்கவிதை பற்றி
பத்து மலையாளக் கவிதைகள்