கிளிசொன்ன கதை:மேலும் கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

கிளி சொன்னகதையை கூர்ந்து படிக்கின்றேன், தினமும் காத்திருந்து. இன்றைக்கு என்னை ஏமாற்றிவிட்டீர்.  எனது நினைவுகள் சுழல்கின்றது. ஆனந்தனின் அண்ணன்மீது ஒருகண் வைத்திருக்கின்றேன். தற்ப்போதைக்கு இருகேள்விகள் :  1.ஓலன் என்றால் என்ன? 2. ஜம்பருக்கு ஏதேனும் பெயர்க்காரணம் உண்டுமா?

அன்புடன்
கிறிஸ்

அன்புள்ள கிறிஸ்டோபர்

ஓலன் என்றால் சேனைக்கிழங்கு, வாழைக்காய் போட்டு தேங்காய்பால் விட்டு பெரும்பயறு சேர்த்து வைக்கப்படும் காரமே இல்லாத கூட்டு. சோற்றில் சேர்த்து சாப்பிடலாம். காரமும் இருக்காது, புளிப்பும் இருக்காது. ‘ஓலன் ஒத்தால் பாலோடு ஒக்கும்’ என்று சுவையாளர் பழமொழி. பால்போல சுவை கொண்டது.

ஜம்பர் என்பது உண்மையில் ஐரோப்பிய வணிகர்களில் ஆண்கள் போட்ட குடையான ஜாக்கெட்.  சட்டைக்கு மேல் கோட்டுக்கு உள்ளே போடுவார்கள். குட்டையான கை இருக்கும், அல்லது கை இருக்காது. வயிற்றுக்குமேல் தான் கீழ் விளிம்பு இருக்கும்.   அதைப்போன்ற ஆடையை பெண்கள் அணிந்த போது அந்தப்பெயரும் நீடித்தது. அதற்கு முன்னால் கச்சுதான் அணிந்திருந்தார்கள்.

குறுநாவலில் மேலும் இரு அத்தியாயங்கள் உள்ளன

ஜெயமோகன்

கிளி சொன்ன கதையை கூர்ந்து வாசிக்கிரேன். மிகமெல்ல போனாலும் பல வரிகள் நல்ல அருமையான கவிதைகளைப்போல இருக்கின்றன. நிறைய வரிகளை மீண்டும் மீண்டும் படித்தேன். கதை ஒன்று நிகழ்ச்சிகளுக்குள் புதைந்து கிடக்கிறது. அது அம்மாவின் கதை. அந்தக்கதையை அனந்தன் வேறு எல்லா கதைகளிலும் கண்டுகொன்டிருக்கிறான் இல்லையா?

சீனிவாசன் பெங்களூர்

அன்புள்ள சீனிவாசன்

கிளி சொன்ன கதை ஒரு ‘நிதானமான’ குறுநாவல். பண்பாட்டின் சில நுட்பமான அசைவுகளை மட்டுமே அது கணக்கில் கொள்கிறது. அது உங்களை கவர்ந்திருப்பதறிந்து மகிழ்ச்சி.
ஜெ

முந்தைய கட்டுரைஅமெரிக்க பயணம், புதியநிரல்
அடுத்த கட்டுரைகிளி சொன்ன கதை : 5