அன்புள்ள ஜெயமோகன்
காந்தியைப் படிக்கும் போது அவருடைய அடிப்படை நோக்கமாக எனக்குத் தோன்றியது அவருடைய ஆன்மீகத் தேடலே.
“நான் விரும்புவதும், இந்த முப்பது ஆண்டுகளாக நான் பாடுபட்டு வந்திருப்பதும், ஏங்கியதும், என்னை நானே அறிய வேண்டும் என்பதற்கும், கடவுளை நேருக்கு நேராகக் காணவேண்டும் என்பதற்கும், மோட்சத்தை அடைய வேண்டும் என்பதற்குமே. இந்த லட்சியத்தை அடைய வேண்டும் என்பதற்காகவே நான் வாழ்கிறேன்”
மேலே உள்ள காந்தியின் கூற்று உண்மை எனில் காந்தியின் கடவுள் தேடல் என்பதே அவரை ஒரு ஊர் சுற்றியாக மாற்றியதா அல்லது எனது கண்களுக்குப் புலப்படாத வேறு ஏதேனும் காரணம் உள்ளதா?
காந்தி தன்னுடைய வாழ்க்கையில் பல்வேறு வகையான சத்திய சோதனைகளை சுய பரிசோதனை செய்தாலும் அந்த “இறைத்தேடல்” என்பதற்கு என்ன வகையான முயற்சிகள் செய்தார் என்ற கேள்விக்குத் தாங்கள் விடை அளித்தால் அதைப் பின் பற்ற முடியவில்லை என்றாலும் முயற்சி செய்து பார்க்க ஒரு வாய்ப்பாக அமையும்.ஏனென்றால் மோட்சத்தை அடைதல் என்பதே வாழ்க்கையின் நோக்கம் என்பதில் எனக்கும் உடன்பாடே.
நன்றியுடன்
சாமி
அன்புள்ள சாமி,
கடவுள் , மோட்சம், ஆன்மீகம் போன்றவை பொதுவான சொற்கள். ஆனால் கூர்ந்துநோக்கினால் அவற்றுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு அர்த்தம் கொடுப்பதைக் காணமுடியும். ஒருவருடைய கடவுள் அல்ல இன்னொருவரின் கடவுள். லௌகீக வாழ்க்கைக்கு வேண்டியதைக் கேட்டு மன்றாடினால் மேலே இருந்து கொடுக்கக்கூடிய ஒருவர் என்று சிலர் கடவுளை வரையறுக்கிறார்கள். தன்னுடைய செத்துப்போன மூதாதை என்று ஒருவர் நினைக்கிறார். பூமியிலே நடக்கவேண்டிய எல்லாவற்றையும் சட்டங்களாக ஆக்கி மனிதர்களுக்கு அனுப்பி வைத்து விட்டு மேலே இருந்து கண்காணிக்கக்கூடிய ஒருவர் என்று சிலர் நினைக்கிறார்கள்.
காந்தியின் ஆன்மீகம் அவருக்கே உரித்தானது. காந்தியைப் புரிந்து கொள்ளாமல் அதைப் புரிந்து கொள்ள முடியாது. ஒரே சொல்லில் காந்தி தன் கடவுளைச் சுட்டிக் காட்டியிருக்கிறார்- நரநாராயணர். துன்பப்படும் சகமனிதர்களிடம்தான் அவர் கடவுளைக் காண்கிறார். அவர்களுக்குச் செய்யும் சேவையை இறைவழிபாடு என்கிறார். அந்த பக்தி மற்றும் வழிபாடு மூலமே தன்னால் மானுடவாழ்க்கையைக் கவ்வியிருக்கும் துயரம், அறியாமை, தனிமை என்னும் மூன்று தளைகளில் இருந்து விடுபடமுடியுமென நினைக்கிறார். அதையே அவர் மோட்சம் என்று சொல்கிறார்.
இந்த தரிசனத்தை காந்தி அவரது வைணவ மரபிலிருந்து எடுத்துக் கொண்டார். நரநாராயணர் என்ற சொல்லேகூட புஷ்டி மார்க்க வைணவத்தில் இருந்து பெற்றுக் கொண்டதே. அந்த தரிசனம் ராமானுஜரால் வைணவத்துக்குள் நிலைநாட்டப்பட்டது. ராமானுஜர் கைங்கரியம் என்று சொல்வது அதையே. எளியோர் சேவை. அதன் மூலம் அகங்காரம் அழிவதுதான் உண்மையான தியானம்
வைணவம் அந்த விவேகத்தை புராதனமான சமண மரபில் இருந்து பெற்றுக் கொண்டது. மானுட வரலாற்றில் ஆன்மீகம் என்பது சேவையின் வழியாக அடையபப்டும் நிலை என வகுத்த முதல் மதம் சமணம்தான். சமணம்தான் மதத்தை சேவையுடன் இணைத்தது. கல்வி, மருத்துவம், சமரசம் ஆகிய மூன்று தளங்களிலும் செய்யப்படும் சேவையைத் தன்னுடைய துறவிகளின் ஞானசாதனைக்கான வழியாக சமணம் வலியுறுத்தியது. சமணத்தில் இருந்தே உலகின் பிற மதங்கள் அதைக்கற்றுக்கொண்டன.
காந்தியின் வீடு சமணமும், வைணவமும் சரிபாதியாகக் கலந்த மதப்பின்னணி கொண்டதாக இருந்தது. அவரது அன்னை பேஜாரி சுவாமி என்ற சமணத்துறவியின் பக்தையாகவும், தீவிர வைணவ வழிபாட்டுக் கொள்கை கொண்டவராகவும் இருந்தார். அந்தப்பின்புலத்தில் இருந்தே காந்தியின் ஆன்மீகம் ஆரம்பிக்கிறது
காந்தியின் ஆன்மீகத்தின் மூன்று புள்ளிகள் அதுவே. கல்வி, மருத்துவம் சமரசம். அவர் என்றும் ஆசிரியராகவும், மருத்துவராகவும் பணிபுரிய பெருவிருப்புக் கொண்டிருந்தார். அப்பணியை அவர் ஆற்றாத நாளே இல்லை. அவரது அரசியல் என்பது சமரசம்தான். அந்த மூன்று சாதனைமார்க்கங்கள் வழியாக அவர் அடைந்த உச்சமே அவரது மெய்ஞானம்
ஜெ