அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நேரில் சந்திக்கும்போது ஒன்றை கவனித்தேன். அது தொடர்ச்சியாகப் பேசும் உங்களின் திறனைத்தான். அதுவும் உற்சாகத்துடன் பேசுவது பெரிய வரம். பொதுவாக அதிகம் படிப்பவர்கள் அல்லது அப்படிக் கூறப்படுபவர்கள் பேசுவது மிகமிகக் குறைவு. அப்படிப்பட்டவர்கள் பேசுபவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருப்பார்கள். நேர்மாறாக, நீங்கள் பீறிட்டுவரும் நீர்ஊற்றுப்போல பேச்சு உங்களிடம் வெளிவருகிறது. உங்கள் பேச்சு ஒரு பேச்சாளரின் லாவகத்துடன், உடல்மொழியுடன் கேட்பவர்களின் கவனத்தைக் கவரும் உத்தேசத்துடன் இல்லை. பேசுவது சாதாரண இயல்பான செயலாகவே வெளிப்படுகிறது. ஒரே விசயத்தைப் பலநேரங்களில்கூட உங்களால் பேசமுடியும் எனத் தோன்றுகிறது. பாதி தூக்கத்தில் எழுப்பி கேட்டாலும் அதன் தொடர்ச்சியிலிருந்து ஆரம்பிக்கமுடியும் போலவும் தெரிகிறது.
சிறுவயதிலிருந்து இப்படித்தான் இருக்கிறீர்களா? இப்படித் தொடர்ச்சியாகப் பேசுவது ஒரு கலையாக அல்லது உங்கள் சிந்தனையை வெளிப்படுத்தும் விதமாக நினைக்கிறீர்களா? மீண்டும் அதே விசயத்தைப் பேசும்போது புதிய சிந்தனைகளை, அதாவது நீங்கள் சிந்தித்து வைத்துள்ளவை, அதனுடன் சேர்த்துக் கொள்வீர்களா? இப்படித் தொடர்ந்து பேசுவதனால் சிந்தனையின் தொடர்ச்சி எப்படிப் பெறமுடியும். புதிய சிந்தனைகளுக்கு இப்பேச்சுகள் ஏதாவது ஒருவகையில் இடையூறாக இருப்பதில்லையா? (அப்படி இருக்குமென நினைத்துக் கொண்டிருக்கிறேன்) அல்லது வளம்சேர்ப்பவையாக இருக்குமா? அப்படியே வளம்சேர்ப்பவையாக இருந்தால்கூட புதிய ஐடியாக்களைப் பெறமுடியாமல் போகும் வாய்ப்பிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. எதிரிலிருப்பவரின் பேச்சை நீங்கள் கவனிப்பதும் இல்லை. ஆனால் தொடர்ந்து அவர் விரும்பும் இடத்திற்கு வந்துவிடுகிறீர்கள் எப்படி?. கொஞ்சம் விளக்குங்கள் பிளீஸ்.
அன்புடன்,
கே.ஜே.அசோக்குமார்
அன்புள்ள அசோக்குமார்
நான் என்னுடைய பேச்சை என் பள்ளிநாட்களிலேயே நண்பர்களுடனான உரையாடல்மூலம் உருவாக்கிக்கொண்டேன் என்று நினைக்கிறேன். இன்றும் என் பள்ளிநண்பர்கள் – குறிப்பாக என்னுடன் ஒரே பெஞ்சில் இருந்தவர்கள்- என்னுடைய உரையாடல்களை நினைவுகூர்கிறார்கள். எல்லார் வீட்டிலும் என் பெயருள்ள ஒரு குழந்தை உள்ளது.
அந்த உரையாடல் எனக்கு நான் வாசித்தவற்றை செரித்துக்கொள்ளத் தேவைப்பட்டது. நாம் வாசித்த எவையும் நாம் பேசி எழுதி நம்முடைய மொழிக்கு மாற்றிக்கொள்ளாதவரை நம்முடையவை அல்ல. அவை நம்மிடம் மேற்கோளாகவே இருக்கும்,நம் சிந்தனைகளாக மாறியிருக்காது. ஆகவேதான் விவாதியுங்கள் என நான் எப்போதுமே சொல்கிறேன்
என்னுடைய பிள்ளைகளுடன் நான் எப்போதுமே விவாதித்துவந்திருக்கிறேன். அவர்களிடமும் அந்த் உரையாடல்திறன் இருப்பதைக் காண்கிறேன்.
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அண்ணனுக்கு
இன்றைய தேதியில் புனைவிலக்கியத்தில் என்னைப்போன்ற ஆரம்ப எழுத்தாளர் புதிதாய் படைத்து
சாதிப்பதற்கு இடம் இருக்கிறதா?அதற்கான தேவை இருக்கிறதா?
நவீன தமிழிலக்கியத்தில் புதுமைப்பித்தன் தொடங்கி ஜெயமோகன் வரையில் வாசிக்கையில் இனி நாம் என்ன எழுதுவது என்ற தயக்கம் எழுத நினைக்கும்போதெல்லாம் ஒட்டிக்கொள்கிறது.
புனைவு நீங்கலாகத் தமிழில் எழுதித் தடம் பதிக்க வேறு என்னென்ன எழுத்து வகைகளுக்கு(என்னென்ன துறைகளுக்கு) தேவை இருக்கிறது? இன்றைய தேதியில் தமிழின் அத்தனை சாதனையாளர்களைத்தாண்டிப் புனைவிலக்கியத்தில் ஏதேனும் புதிதாய் சாதிக்க முடியுமா? அல்லது மிகத்தேவையான ஏதேனும் புது வகை அபுனைவு எழுத்து வகை கொண்டு(புனைவின் அதே கலைத்திறத்தோடு)சாதிக்க இடமும் தேவையும் இருக்கிதா?
அன்புடன்
வ.அதியமான்.
அன்புள்ள அதியமான்
தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் எழுதியபின்னர்தானே நானும் எழுதிக்கொண்டிருக்கிறேன்?
மனித சிந்தனை, படைப்பியக்கம் என்பது பிரம்மாண்டமான நதி போல. அது எங்கிருந்தோ கிளம்பிப் பெருகிச்சென்றுகொண்டே இருக்கிறது. நாம் அதில் நம்முடைய சிறிய துளியைச் சேர்க்கிறோம். நம் வரை வந்துசேர்ந்த சிந்தனையைக் கற்று நம் வாழ்வனுபவங்கள் அளித்தவற்றை அதில் சேர்த்து அதற்கே திருப்பி அளிக்கிறோம்
ஆகவே எந்த சிந்தனைக்கும் எந்த படைப்புக்கும் அதற்கான இடம் ஒன்று உண்டு. இதுவரையிலான இலக்கியத்தைப் பயிலுங்கள் நீங்கள் எங்கிருந்து தொடங்கவேண்டுமெனத் தெரியும். உங்கள் சொந்த உணர்வுகளுக்கு நேர்மையாக எழுதுங்கள். எதை எழுதவேண்டுமெனப் புரியும்
அது முக்கியமானதாகவே இருக்கும். வாழ்த்துக்கள்
ஜெ