சுந்தர ராமசாமி, அசோகமித்திரன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

மிகக் குளிரான ஒரு நாளின் மாலைப் பொழுதில் எழுதுகிறேன்.

அசோகமித்திரன் பற்றிய ஒரு வாசகரின் குறிப்பையும் அதற்கான உங்கள் பதிலையும் படித்தேன். சு.ரா.வைப் படிக்கத் தொடங்கிய காலத்திலிருந்து அசோகமித்திரனையும் படித்து வந்திருக்கிறேன். தீபம் சஞ்சிகை அவருடைய எழுத்துகளை அதிகம் பிரசுரித்தது என்று நம்புகின்றேன். கரைந்த நிழல்கள் நாவல் தீபம் இதழில்தான் தொடராக வந்தது. அந்தக் கதை சொன்ன விதமே ரொம்ப அலாதி. பெரிய திரையில் சினிமா பார்த்த மகிழ்வையும் பரவசத்தையும் தந்தது. திடீர் திருப்பங்களுடன் வெளிவந்த அந்த நாட்களின் தொடர்களுக்கு முற்றிலும் மாறுபட்ட விதமாக அவர் அதை எழுதிச் சென்றார். இன்று வரையிலும் இயங்குபவர்.

கனடாவின் இயல் விருது, மாதவனுக்கும் அசோகமித்திரனுக்கும் கிடைக்கவில்லையே என்ற என்னுடைய ஆதங்கத்தின் பாதியளவு பாரத்தை விஷ்ணுபுரம் விருதை மாதவனுக்கு வழங்கி நீங்கள் கௌரவத்தைத் தட்டிக் கொண்டீர்கள்.

அசோகமித்திரன் பற்றியும் ஒரு சிறு நூலையாவது நீங்கள் எழுத வேண்டும். (‘கடைத்தெருக் கலைஞன்’ மாதிரி)

வாழ்த்துக்கள்.

அன்புடன், எஸ்.எல்.எம். ஹனீபா

அன்புள்ள ஹனீஃபா,

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?

அசோகமித்திரனைப்பற்றி நான் பல கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். ஒன்று நீண்ட ஆய்வுக்கட்டுரை. அனைத்தையும் தொகுத்து ஒரு நூலாக ஆக்கமுடியும் என்று நினைக்கிறேன். பார்ப்போம்

ஜெ

ஜெ,

ஆகவே கதையைத் ‘தன்னிச்சையாக’ அமைக்க முயன்றார்கள். வெறும்
நிகழ்ச்சிகளைப்போல அமைந்த கதைகளை சா.கந்தசாமி ,சுந்தர ராமசாமி
,அசோகமித்திரன் போன்றவர்கள் எழுதினார்கள்.

சுந்தர ராமசாமியின் “பட்டுவாடா” என்ற சிறுகதை இந்த வகையை சேர்ந்ததா? இரு
ஆண்டுகளுக்கு முன் அவரது சிறுகதைகளின் முழுத் தொகுப்பை வாங்கியபோதுதான்
இந்தக் கதையை முதலில் படித்தேன். முழுக்க முழுக்க விவரணைகளால் நிறைந்த கதை.
இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே படித்திருக்கிறேன். கதையில் வரும்
நிகழ்வுகள் என்ன என்று எனக்கு இன்னும் பிடிபடவில்லை.

நன்றி
கார்த்திகேயன்

அன்புள்ள கார்த்திகேயன்

பட்டுவாடா அப்படிப்பட்ட கதை அல்ல. அதை சுந்தர ராமசாமி கவியுருவகமாக எழுதியிருக்கிறார். அதிலுள்ள எல்லாவற்றுக்கும் குறியீட்டுப்பொருள் உண்டு

பல்லக்குத்தூக்கிகள் சிறுகதைத்தொகுதியில் உள்ள கதைகளில் வெறுமே நிகழ்ச்சிகளாக மட்டுமே உள்ள பல கதைகள் உள்ளன. உதாரணம் போதை, வாசனை

ஜெ

முந்தைய கட்டுரைஜெயகாந்தன் பழையவராகிவிட்டாரா?
அடுத்த கட்டுரைகடிதங்கள்