பக்தியும் தத்துவமும்

harinama

 

அன்புள்ள ஜெயமோகன் சார் அவர்களுக்கு,

இது நான் உங்களுக்கு எழுதும் முதல் கடிதம். தங்களுடைய செவ்விலக்கியப் படைப்பில் கொற்றவையும், விஷ்ணுபுரமும் , வாசித்துள்ளேன். தவிர, கட்டுரைகள், தொகுப்புகள், இணையத்தில் தொடர் வாசிப்புகள். உங்களின் எழுத்துக்கும் அது தரும் சிந்தனைத் தொலைவிற்கும் நன்றி. அது நான் வரலாறு, இலக்கியம், தத்துவம், கலை என்று எந்த ஒன்றினை வாசிக்கும் பொழுதும் அது ஒரு முறையைக் கற்றுக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. உங்களுடைய குறுந்தொகை பற்றிய உரையை ராக சுதா அரங்கில் கேட்க வாய்த்தது.

அப்பொழுது உங்களிடம் உரையாட வேண்டும் என்ற ஆவல். ஆனால் உங்களைப் பரிச்சயம் மிக்க நண்பர்கள் சூழ்ந்து கொண்டதால் பேசவில்லை.

பக்தி இயக்க வரலாற்றில் நம் சிந்தனை மரபு சிறிது நிராகரிக்கப்பட்டதா? எனில், ஏன்? பக்தி இயக்கம் பெருவாரியான மக்களை உள்ளிழுத்துக் கொண்ட பெரும் இயக்கமாக இருந்த காலத்தில் நம் தாந்த்ரீக மரபும், தத்துவ மரபும் தொடர்ந்த வண்ணம் இருந்ததா? இல்லை தாந்த்ரீக மரபும், தத்துவ மரபும் பக்தி இயக்கத்தினை சார்ந்திருக்க வேண்டிய நிலையை அடைந்ததா? பல, பக்தி இலக்கியங்களில் தாந்த்ரீகக் கோட்பாட்டினை உணர்த்துகின்ற பாடல்கள் இருப்பதால் இந்த எண்ணம் தோன்றியது. என்னுடைய கேள்வி தவறாக இருப்பின் மன்னிக்கவும்.

நன்றி சார்
ஜெயக்குமார் பரத்வாஜ்

 

 

அன்புள்ள பரத்வாஜ்,

பக்தி இயக்கம் இந்தியவரலாற்றின் ஒரு முக்கியமான வளர்ச்சிக்காலகட்டம். சமூக வரலாற்று அணுகுமுறையில் இந்தியாவின் பல்லாயிரம் பழங்குடி மரபுகளைத் தொகுத்து சமூகத்தைக் கட்டமைக்கும் பணியைச்செய்தவை இந்துமதமும், பௌத்தமும், சமணமும். அந்த மதங்களின் கட்டமைப்பேகூட இந்தத் தொகுப்புச்செயல்பாட்டின் விளைவாக உருவாகி வந்ததுதான்.

இந்துமதம் எல்லா இனக்குழு நம்பிக்கைகளையும் சடங்குகளையும் ஒரே தொன்மச்சரடில் பின்னி இணைத்துக்கொண்டே சென்றது. சடங்குகள் வைதிகமரபிலும் சிந்தனைகள் வேதாந்தமரபிலும் இணைக்கப்பட்டு மைய ஓட்டம் உருவாக்கப்பட்டது. அதன் விளைவாக அரசதிகாரமும் சமூகமேலாதிக்கமும் உருவாகி வந்தன.

இது நடந்து ஆயிரம் ஆண்டுக்களுக்குப்பின்னரே பக்தி இயக்கம் உருவாகிறது. இந்தக் காலகட்டத்தில் இந்துமதத்தின் மையத்தில் இருந்த வைதிகமும், வேதாந்தமும் பௌத்தத்தாலும் சமணத்தாலும் செல்வாக்கிழந்தன. விளைவாக இந்து சமூகத்தின் மையம் வலுவற்ற முடிச்சாக இருந்தது.

இக்காலகட்டத்தில் பல்வேறு இனக்குழுச்சமூகங்கள் மைய ஓட்டத்திற்கு வந்து முக்கியமான சாதிகளாக ஆகிவிட்டிருந்தன.பல சாதிகள் ஒன்றாகத்திரண்டு ஒற்றைச்சாதியாக மாறி அரசுகளை உருவாக்கிவிட்டிருந்தன. ஏராளமான நிலவுடைமைச்சாதிகளும் வணிகச்சாதிகளும் உருவாகிவிட்டிருந்தன.

இவர்களை எல்லாம் இணைக்கும் மேலும் வலுவான மையச்சரடு தேவையாயிற்று. அவ்வாறு சாதியச் சமூகங்கள் ஒருங்கிணைக்கப்பட்டால் மட்டுமே வலுவான அரசுகள் உருவாக முடியும் என்ற நிலை இருந்தது. அவ்வாறு இணைத்துப் பேரரசுகளை உருவாக்குவதில் சமணமும் பௌத்தமும் நடைமுறைத்தோல்விகளைத் தழுவின.

அதற்குக் காரணம் சமணமும் பௌத்தமும் நெகிழ்வுத்தன்மை கொண்ட கட்டமைப்புள்ள மதங்களாக இருந்தாலும் கூட அவற்றின் தத்துவ மையம் மிகமிக வலுவானது என்பதுதான். சடங்குகளில் மட்டுமே அவை மீறல்களையும் மாற்றுப்போக்குகளையும் அனுமதிக்கமுடியும். அது அன்றைய விரிந்த பன்மைத்துவம் கொண்ட இந்திய சமூகத்தை ஒருங்கிணைக்கப் போதுமானதாக இல்லை என்ற நிலை வந்தது.

ஆகவேதான் இந்துமதம் பக்தி இயக்கம் மூலமாக மறுஅமைப்பு செய்யப்பட்டது. இந்துமதத்தின் மையச்சரடாக இருந்த வைதிகம், வேதாந்தம் ஆகியவற்றுடன் அவற்றுக்கு மாறான சிந்தனைகளுக்கும் சம முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. எழுச்சியடைந்து வந்த சாதிகளின் இனக்குழு ஆசாரங்களையும் நம்பிக்கைகளையும் சடங்குகளையும் உள்ளிழுத்துக்கொண்டு இந்துமதம் பிரம்மாண்டமான ஒரு தொகுப்புமதமாக வளர்ந்தது. இந்த வளர்ச்சியையே நாம் பக்தி இயக்கம் என்கிறோம்.

பக்திஇயக்கத்தின் காலகட்டத்தில்தான் இங்கே சைவமும் வைணவமும் பெருமதங்களாக ஆயின. ஒருபக்கம் அவை நூற்றுக்கணக்கான சிறிய வழிபாட்டுமுறைகளை உள்ளே இழுத்துக்கொண்டன. அவ்வாறாக அவை மதம் என்பதைக்காட்டிலும் மதங்களின் குவியல் என்ற இயல்பைப் பெற்றன. மறுபக்கம் அவற்றின் தத்துவ மையத்தில் மிகத்தீவிரமான விவாதங்கள் நிகழ்ந்து அவை நெகிழ்வுள்ளவையாக ஆக்கப்பட்டன.

இந்த மாபெரும் தொகுப்புச் செயல்பாட்டின் பகுதியாகவே இங்கே பேராலயங்கள் உருவாயின. அவை உண்மையில் ஆலயத்தொகுதிகள். பல்வேறு வழிபாடுகள் ஒரே சமயம் நிகழும் மையங்கள். அங்கே விதவிதமான சடங்குகளும் ஆசாரங்களும் ஒன்றாயின. அந்த ஆலயத்திற்குக் கீழே விதவிதமான சாதிகள் ஒருங்கிணைந்தபோது அவர்களனைவரையும் இணைக்கும்விதமாக மாபெரும் திருவிழாக்கள் உருவாகி வந்தன. இன்றுகூட நம் திருவிழாக்கள் பல்வேறு சாதிச்சமூகங்களை சுமுகமாகத் தொகுக்கக்கூடியவையாக இருப்பதைப் பார்க்கலாம். அனைவரும் இணைந்துசெய்தால் மட்டுமே அவை நிகழ முடியும்.

சிந்தனைத்தளத்தில் இக்காலகட்டத்தில் இரண்டு விஷயங்கள் நிகழ்ந்தன. தத்துவம் பன்மைத்தன்மையை அடைந்தது. எல்லாவற்றையும் உள்ளடக்கும் தன்மை கொண்டதாக அது மாறியது. சைவத்தின் உள்ளடக்கமான சைவ சித்தாந்தத்தையே எடுத்துக்கொள்ளலாம். அது வைதிகத்தையும் அவைதிகத்தையும் தன்னுள் அடக்கிக்கொண்டதாக மாறுவதைக் காணமுடியும்.

இரண்டாவதாக சிந்தனைத்தளத்தில் புராணங்களின் பாதிப்பு அதிகரித்ததைச் சுட்டிக்காட்டலாம். பல்வேறு இனக்குழு நம்பிக்கைகள் ஒன்றாக ஒரு தெய்வத்துடன் இணைக்கப்படும்போது புராணம் தேவையாகிறது. அப்புராணங்கள் கலை மூலம் ஆழமாக சமூக மனதில் நிலைநாட்டப்பட்டன. சைவ மதத்தின் பெரியவர்கள் அனைவருமே சிவபெருமான் பற்றிய புராணங்களையும் அவரது தோற்ற்றத்தின் விவரணைகளையும் தொடர்ந்து பாடுவதைக் கவனிக்கலாம்.

தொகுப்புத்தன்மைக்கு உகந்த மனநிலை என்பது பக்தியே. சைவ வைணவப் பெருமதங்கள் அதி தீவிரமான பக்தியால்தான் தங்களை நிறுவிக்கொண்டன. பக்தி இயக்கத்தின் காலகட்டத்தில் பக்தி அனைத்தையும் விட மேலானதாகவும் ஞானத்தைவிட ஒருபடி முக்கியமானதாகவும் சொல்லபப்டுவதைக் கதைகளில் காணலாம்.

அதாவது இந்த வளர்ச்சிச்செயல்பாட்டில் பக்தி செறிவும் தீவிரமும் கொண்டதாக ஆக்கப்படுகையில் தத்துவம் தீவிரமிழந்து நெகிழ்வும் பன்மைத்தன்மையும் கொண்டதாக மாற்றப்படுகிறது. தத்துவச்செயல்பாடு தொடர்ந்து நடந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் அது கூர்மையாக ஆவதற்குப்பதில் விரிவானதாக ஆகியது

ஆழ்வார்கள் நாயன்மார்கள் பாடல்களில் தத்துவ விவாதங்கள் உள்ளன. ஆனால் அவை பக்தியின் உணர்வெழுச்சிக்குள் மறைந்துள்ளன. அவர்களின் பாடல்களில் உள்ள தத்துவம் எல்லாவகையான தரிசனங்களையும் சைவ வைணவ தெய்வங்களுடன் இணைப்பதிலேயே குறியாக இருக்கிறது.

பக்தி இயக்கத்தால் விரிவானதாக ஆக்கப்பட்ட தத்துவம் பக்தி இயக்கத்தின் இறுதிக்காலகட்டத்தில் மீண்டும் தீவிரமடைந்தது. ஏறத்தாழ பதினொன்று, பன்னிரண்டாம்நூற்றாண்டில். சைவசித்தாந்த நூல்கள் உருவாயின. ராமானுஜர் தோன்றி வைணவத்தைக் கறாரான தத்துவம் நோக்கிக் கொண்டு சென்றார்

ஜெ

 

மறுபிரசுரம் முஇதற்பிரசுரம் Apr 8, 2013

முந்தைய கட்டுரைஒன்றுமில்லை
அடுத்த கட்டுரைஎம்.ஏ.சுசீலா விழா