மையநில இலக்கியமும் குடியேற்றநில இலக்கியமும்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம், நலமா?

தமிழக இலக்கியப் படைப்புகளைவிட இலங்கை, மலேசிய, சிங்கை படைப்புகள் அத்தனை படைப்பூக்கத்துடன் வெளிவந்ததாகத் தெரியவில்லை. இது குறித்து நாம் பேசும்போது இலங்கை, மலேசிய, சிங்கை எழுத்தாள, வாசகர்களிடம் ஒரு கோபம் கொப்பளிப்பதை இன்றைய இணைய எழுத்துகளிலும்கூட‌ காணமுடிகிறது. இது இருவருக்கும் இடையேயான ஒரு தொடர்ச்சியான புரிதலின்மையுடன் இருப்பதாக தோன்றும். இதற்குப் பல்வேறு காரணங்கள் இருந்தாலும், இதே மாதிரியான பிரச்சனைகள் மற்ற மொழிகளிலும் உள்ளனவா? குறிப்பாக ஆங்கிலம், ஸ்பானிஷ். ஆங்கில, ஸ்பானிஷ் மொழிகள்தான் உலகின் பல பகுதிகளில் பரவியுள்ளன. ஸ்பானிஷ் மொழி எழுத்தாளர்களுக்கும், இலத்தீன் அமெரிக்க ஸ்பானிஷ் எழுத்தாளர்களுக்கு இந்தப் பிரச்சனை இருக்கிறதா? இங்கிலாந்து ஆங்கில எழுத்தாளர்களுக்கும், அமெரிக்க, ஆஸ்திரேலிய ஆங்கில எழுத்துக்கும் இந்தமாதிரியான பிரச்சனைகள் உள்ளனவா?

அன்புடன்

கே.ஜே.அசோக்குமார்.

அன்புள்ள அசோக்குமார்,

நான் வாசித்தவரை ஆங்கிலம், ஸ்பானிஷ் மொழிகளில் இன்று இப்பிரச்சினை இருப்பதைக் காணமுடிந்ததில்லை. நீங்கள் சொன்னபின்னர்தான் இதைப்பற்றி யோசித்தேன். இன்னும் விரிவாக வாசித்துப்பார்க்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.

நூற்றைம்பதாண்டுகளுக்கு முன்னர் இந்தப்பிரச்சினை ஆங்கிலத்திற்கும் ஸ்பானிஷுக்கும் இருந்திருக்கிறது. அமெரிக்க ஆங்கில இலக்கியம் ஒரு படி தாழ்வானதாக ஆங்கிலேயர்களால் கருதப்பட்டதை வாசிக்க முடிகிறது. அது பண்படாததாகவும் நயமற்றதாகவும் சொல்லப்பட்டது.

காரணம் அன்றைய அமெரிக்கர்கள் பிரிட்டன் மீது பெரும் மோகம் கொண்டவர்களாக இருந்திருக்கிறார்கள். பிரிட்டனில் இருந்து வரும் அழகுப்பொருட்கள், மோஸ்தர்கள் ஆகியவற்றை அவர்கள் போற்றினார்கள். அதாவது ஒரு சரியான பிரிட்டானியன் ஆவதே சராசரி அமெரிக்கனின் கனவாக இருந்த. ஆகவே பிரிட்டிஷ் இலக்கியம் மீதும் அவர்களுக்கு பக்தி இருந்தது.தாக்கரே, டிக்கன்ஸ் முதலியோரின் நாவல்களுக்காக அமெரிக்கர்கள் காத்துக்கிடந்தார்கள். அவர்களின் எழுத்துக்களைத் தாங்கிய இதழ்களை வாங்க கப்பல்கள் வருவதைக்காத்து துறைமுகங்களில் மக்கள் முண்டியடித்தார்கள்.

ஆனால் இக்காலகட்டத்திலேயே அமெரிக்காவில் அமெரிக்காவுக்கான இலக்கியங்களும் சிந்தனைகளும் வலுவாக உருவாகிவிட்டிருந்தன. அமெரிக்கர்கள் அதை நோக்கிப் பெருவாரியாக வர ஆரம்பிக்கவில்லை அவ்வளவுதான். அமெரிக்காவின் முக்கியமான எழுத்தாளர்களுக்கு பிரிட்டனின் அந்த அலட்சியநோக்கு மீது கோபமும் கசப்பும் இருந்தது.

அமெரிக்காவுக்கும் பிரிட்டனுக்குமான இந்தப் பண்பாட்டு வேறுபாடுகளின் நுட்பங்களைப்பற்றி வாசிக்க ஹென்றி ஜேம்ஸின் நாவல்கள் மிக உகந்தவை. நான் என் அம்மாவின் பலமான சிபாரிசினால் வாசித்த அமெரிக்கன்ஸ் என்ற நாவலை நன்றாகவே நினைவுகூர்கிறேன். திரும்ப வாசிக்க மனநிலைகூடுமா என்று தெரியவிலலை.

மையநில ஸ்பானிஷ் இலக்கியவாதிகள் குடியேற்ற ஸ்பானிஷ்நாடுகளின் இலக்கியங்களை நூறாண்டுக்காலம் ஒரு பொருட்டாகவே கருதியதில்லை. பொருட்படுத்துமளவுக்கு பெரிதாக ஏதும் அங்கிருந்து அக்காலத்தில் வரவும் இல்லை.

காலப்போக்கில் அமெரிக்கா வலுவான தேசமாக ஆகியது. அதன் சுதந்திரப்பண்பாடு உலகுக்கு முன்மாதிரியாக ஆனது. அதன் கல்விநிலையங்கள் பெரும் புகழ்பெற்றன. விளைவாக அமெரிக்க இலக்கியம் பிரிட்டிஷ் இலக்கியச்சூழலின் அங்கீகாரத்தை நாடவேண்டிய அவசியமே இல்லாமல் வளர்ந்தது. அமெரிக்க இலக்கியம் என்பது உலக இலக்கியமரபின் சாராம்சங்களின் தொகுதி என்ற நிலை உருவானது

அத்துடன் அமெரிக்கத் தனித்தன்மை கொண்ட எழுத்தாளர்கள் பலர் உருவானார்கள். நான் எண்பதுகள் வரை பிரிட்டிஷ் இலக்கியங்களையே முக்கியமாக வாசித்தவன் என் அம்மா பிரிட்டிஷ் இலக்கியங்களே உலக இலக்கியச்சிகரங்கள் என்ற எண்ணம் கொண்டவர். எங்களூரின் ஒய்.எம்சி.ஏ நூலகத்தில் பிரிட்டிஷ் நூல்கள் மட்டுமே அக்காலத்தில் இருந்தன.

எண்பதுகளுக்குப்பின் அமெரிக்க எழுத்துக்களை வாசிக்க ஆரம்பித்தேன். அதற்கு எனக்குத் தனிப்பட்ட முறையில் வழிகாட்டியவர்கள் ஆற்றூர் ரவிவர்மாவும் அசோகமித்திரனும்.என் வாசிப்பில் உடனடியாகப் பட்ட தனித்தன்மை அமெரிக்க இலக்கியங்கள் பிரிட்டிஷ் இலக்கியங்களை விட எளிதில் வாசிக்கத்தக்க மொழி கொண்டவையாக இருந்தன என்பதே.

அதற்கான காரணங்களைப் பின்னர் கண்டடைந்தேன். அமெரிக்க எழுத்தில் பிரிட்டிஷ் எழுத்தில் இருந்த சம்பிரதாயத்தன்மை அறவே இருக்கவில்லை. சுருக்கமான நேரடித்தன்மையே அவற்றின் முதல்சிறப்பு. அவை இன்னும்கூட புழுதிபடிந்த, மோட்டாவான படைப்புகளாக இருந்தன. என் சொந்த மனப்பதிவு இது. பிரிட்டிஷ் எழுத்துக்கள் அடித்தள வாழ்க்கையைப்பற்றி எழுதினாலும் கூட சூட் போட்டவை. அமெரிக்க எழுத்துக்கள் வைரச்சுரங்கம் பற்றி எழுதினாலும்கூட கௌபாய் தொப்பியும் காக்கிக் கால்சட்டையும் அணிந்தவை.

அமெரிக்க எழுத்துக்களை நான் ஆரம்பகாலத்திலேயே வாசித்த இரு முக்கியமான எழுத்தாளர்களுக்கிடையேயான ஒரு வெளியாக உருவகித்து வைத்திருக்கிறேன். தொடக்கப்புள்ளி ஜாக் லண்டன். கடைசிப்புள்ளி ஏர்னஸ்ட் ஹெமிங்வே. நூற்றுக்கணக்கான வண்ண வேறுபாடுகள் கொண்ட பற்பல இலக்கியமேதைகள் இருந்தாலும் இந்த வெளியில் எங்கோ அவர்களைப் பொருத்திக்கொள்வேன். தன் சாராம்சமான கிழக்கத்திய அறபோதனைத் தன்மையினால் முற்றிலும் வேறுபட்டவரான, அதனாலேயே எனக்கு மிகப்பிடித்த அமெரிக்க எழுத்தாளரான, ஐசக் பாஷவிஸ் சிங்கரைக்கூட என்னால் இந்த வெளியில் பொருத்திக்கொள்ளமுடியும். இது ஓர் அந்தரங்க மனவெளிதான்.

[சென்ற பதினைந்தாண்டுக்காலமாக நான் அமெரிக்க இலக்கியத்தையோ பிரிட்டிஷ் இலக்கியத்தையோ தொடர்ச்சியாக கவனித்து வாசிக்கவில்லை. என்னுடைய வாசிப்பின் முறை என்னுடைய சொந்த ஆன்மீக- தத்துவத்தேடல்கள் சார்ந்ததாக மாறிவிட்டிருக்கிறது. எல்லாரையும் வாசிக்க, தெரிந்த்கொள்வதற்காக மட்டுமே வாசிக்க இனி எனக்கு நேரமில்லை]

இதே போன்ற ஒரு தனித்தன்மை கொண்ட இலக்கியம் லத்தீன் அமெரிக்காவில் ஐம்பதுகளில் வலுவாக உருவாகி எண்பதுகளில் உலகையே ஆட்கொண்டது. அப்போது மையநில ஸ்பானிஷ் இலக்கியம் கிட்டத்தட்ட தேங்கி நின்றுவிட்டிருந்தது. ஆகவே மையநில ஸ்பானிஷ் இலக்கியத்தின் அங்கீகாரம் அவர்களுக்கு ஒரு பொருட்டாகவே இல்லை. நேர் மாறாக லத்தீனமெரிக்க இலக்கியம் பெற்ற கவனத்தின் சலுகையைத் தாங்களும் பெறவே மையநில ஸ்பானிஷ் இலக்கியம் முட்டிமோதியது.

இந்த நிலை இலங்கை, மலேசிய, சிங்கப்பூர் தமிழிலக்கியத்திற்கு இல்லை.இவற்றில் இன்று இலங்கை எழுத்தில் மட்டுமே முக்கியமான படைப்பாளிகள் சிலர் உள்ளனர். மற்ற சூழல்களில் இலக்கியம் என்பது உண்மையில் தங்கள் மொழியடையாளத்தைத் தக்கவைத்துக்கொள்வதற்கான முயற்சியின் ஒரு பகுதியாகவே உள்ளது. இலக்கியம் என்னும் தனித்த அறிவியக்கம் ஆற்றவேண்டிய, பணிகளை எதிர்கொள்ளவேண்டிய அறைகூவல்களை அவர்களிடம் எதிர்பார்க்க முடிவதில்லை.

காரணம் ஆங்கிலமும் ஸ்பானிஷும் அந்தக் குடியேற்ற மண்ணிலும் அம்மக்களின் மொழியாக நீடித்தன. இன்று தமிழ்நாட்டுக்கு வெளியே உள்ள சூழல்களில் தமிழ் சகஜமான புழக்கமொழியாக இல்லை. வீட்டுமொழியாகவே சுருங்கிவிட்டது. யாழ்ப்பாணம் மட்டும் விதிவிலக்காக இருக்கலாம். ஒரு மொழி சட்டம் அரசியல் வணிகம் என வாழ்க்கையின் எல்லாத் தளத்திலும் புழக்கத்திலிருக்கையிலேயே அது இலக்கியமாக மாறமுடியும். வீட்டு உரையாடல்மொழி அந்தப் பன்முகத்தன்மையை அடையமுடியாது

இன்னும் சொல்லப்போனால் எந்த மொழி நம் காதில் ஒவ்வொரு கணமும் விழுந்துகொண்டே இருக்கிறதோ அதில்தான் இலக்கியம் படைக்கமுடியும். இந்தியாவில் வீட்டில் வேறு மொழி பேசுபவர்கள் தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் கேரளத்திலும் நிறையவே உள்ளனர். அவர்கள் அந்த வீட்டுமொழியில் இலக்கியம் படைக்கவில்லை. வீட்டில் தமிழ் பேசிய மாஸ்தி வெங்கடேச அயங்கார் சூழலின் மொழியான கன்னடத்தில்தான் எழுதினார். வீட்டில் தமிழ் பேசிய மலையாற்றூர் ராமகிருஷ்ணன் மலையாளத்தில் எழுதினார்.

இந்தச் சிக்கலில் இருக்கிறார்கள் தமிழகத்திற்கு வெளியே வாழும் தமிழர்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகபட்சம் பதினைந்தாண்டுக்காலம் கூட தங்கள் எழுதும் வேகத்தைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. அவர்களின் வாரிசுகளிடம் தமிழே இல்லை என்பதைக் கவனிக்கலாம். இவ்வாறு வாழும் மொழிச்சூழலில் இல்லாமையின் அழகியல் பலவீனங்கள் அவர்களின் இலக்கியத்தில் தவிர்க்கமுடியாதபடி உள்ளன.

விமர்சனம் இலக்கியத்தின் தரத்தை தனியாகத்தான் சுட்டிக்காட்டும். அதற்கான சமூகக்காரணங்களை வேறு கோணத்தில் ஆராயலாம். அவ்வகையில் சுட்டிக்காட்டுகையில் அவர்கள் கோபம் அல்லது ஆற்றாமை கொள்வதும் இயல்பே.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்கடல், நீரும் நெருப்பும்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்கடல்-கடிதங்கள்