விவாதிக்கும் எழுத்தாளன் ,விவாதிக்காத எழுத்தாளன்

வணக்கம் சார்,

தமிழ் எழுத்துலகில் உள்ள வன்மங்கள் இப்பொழுதுதான் புரிகிறது. உங்களுக்கு நேர்ந்தமையால்… இது என்னுடைய நேரடி அனுபவமாகவே உணர்கிறேன்.நான் உங்களைப் படிக்க ஆரம்பித்த பிறகு நீங்கள் பெரிய விவாதத்துக்கு உள்ளானது இப்பொழுதுதான்.நீங்கள் இதை மிக மன விரிவுடன் எதிர்கொள்ளும் விதம் மகிழ்ச்சியை அளிக்கிறது.

எனக்கு பலியின் தலை மீது கால் வைத்து வளர்ந்து கொண்டு இருக்கும் வாமனன் தான் ஞாபகத்துக்கு வருகிறான்.அவன் வளர்ச்சி முன் பலி, இந்த உலகு, விஸ்வம் எல்லாமே சிறியதாக மாறிக்கொண்டு இருக்கும்.ஒரு எழுத்தாளராக, ஒரு விசில் ப்ளோயராகவும் நீங்கள் அந்த வாமனன் தான்.உங்கள் பண்பு, மன விரிவு முன் இதெல்லாம் சிறிய விஷயங்களாகவே மாறும்.

உங்கள் சக எழுத்தாளர்கள் உங்களிடம் உள்ள இந்த அறம் சார்ந்த கோபத்தைத் தேவையில்லாத ஒன்றாகவே கருதுகிறார்கள் ஏன் ?

எஸ்.ரா. ஆனந்த விகடன் வாசகர் கேள்வி பதிலில் உங்களைப் பற்றி இதேதான் சொன்னார். நீங்கள் பெரிதாக மதிக்கும் அசோகமித்திரனும் சமீபத்தில் ஆ. வி. பேட்டியில் உங்கள் எழுத்து ஆளுமையை வியந்து கொண்டே… இதே போன்ற கவலையைத்தான் தெரிவித்தார்!

இவர்களுக்கு உங்கள் மீது மிக்க அன்பும், மரியாதையும் இருக்கலாம். ஆனால்,ஒரு எழுத்தாளன் தன்னைச் சுற்றியுள்ள சிறுமைகள் பற்றி நேரடியாகப் பேசுவதில் அப்படி என்னதான் தவறு?அவன் அப்படிப் பேசும்போதே… அதனால் தனக்கு நேரும் விளைவுகள் தெரிந்துதானே தைரியமாக முன்மொழிகிறான்?அவன் பேசும் விஷயங்களுடன் கருத்தளவு ஆமோதிக்கும் ஒருவர் அதற்க்கு தார்மீக ஆதரவு தெரிவிக்க வேண்டாமா?
ஏன் தேவை இல்லாத விஷயங்களாகக் கருதுகிறார்கள்?

அன்புடன்,
ராஜு

அன்புள்ள ராஜூ

எழுத்தில் எது சரி எது தவறு என்பதற்கு இலக்கணங்கள் விதிமுறைகள் ஏதும் இல்லை. விதி என ஒன்று உண்டு என்றால் இதுதான் – ஒருவர் தான் எப்படிப்பட்டவரோ அப்படியே வெளிப்படவேண்டும்.

இலக்கியவாதிகளில் தன் எழுத்துக்குள் மட்டும் நின்றுவிட்ட பெரும்படைப்பாளிகள் உண்டு. எல்லா விஷயத்துக்கும் எதிர்வினையாற்றிய பெரும்படைப்பாளிகள் உண்டு.சமூகப்பணியாற்றியவர்கள் உண்டு ஆற்றாதவர்களும் உண்டு. பிறதுறைகளில் மேதமை வெளிப்பட்டவர்கள் உண்டு, இலக்கியம் மட்டுமேயாக வாழ்ந்தவர்களும் உண்டு. அவற்றை அந்தந்த இலக்கியவாதிகளின் தனி இயல்பு என்றே சொல்லவேண்டும்

மௌனியும் அசோகமித்திரன் எதிர்வினையாற்றாத பெரும்படைப்பாளிகள் புதுமைப்பித்தனும் சுந்தர ராமசாமியும் ஜெயகாந்தனும் எதிர்வினையாற்றிய படைப்பாளிகள்.

எதிர்வினையாற்றுகையில் படைப்பாளி தொடர் விவாதங்களில் சிக்கிக்கொள்கிறான். அவனுடைய நேரமும் கவனமும் படைப்பில் இருந்து சிதறடிக்கப்படுகின்றன

மேலும் கருத்துக்கள் என்றாலே அவை முதன்மையாக எரிச்சலைத்தான் உண்டுபண்ணும். மாற்றுத்தரப்புடையவர்கள் கோபம் கொள்வார்கள். மாற்றுக்கருத்தில்லாதவர்கள் கூடப் புதியகருத்து அளிக்கும் சமன்குலைவு காரணமாக ஒவ்வாமை கொள்வார்கள்.

அனைத்துக்கும் மேலாகக் கருத்துக்கள் தெரிவிக்கும் எழுத்தாளன் தன் சொந்த ஆளுமையை எழுத்துக்கு வெளியே தனியாக முன்வைக்கிறான். அகங்காரம் அதிகமுள்ள வாசகர்கள் அதனால் சீண்டப்படுகிறார்கள். பொதுவாக முதிர்ச்சியற்ற வாசகர்கள் அல்லது ஆரம்பநிலை வாசகர்கள் அதிக தன்னகங்காரத்துடன் இருப்பார்கள். அவர்களைப்போன்றவர்கள் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளன் மீது கசப்பை வளர்த்துக்கொள்வார்கள். ‘நானும் ஒரு ஆள்தான்’ என்ற மனநிலையிலேயே அவன் படைப்புகளை அவர்கள் வாசிப்பார்கள்.

கலை சார்ந்த நுண்ணுணர்வற்றவர்கள் படைப்புகளை வெறும் கருத்துக்களாகவே காண்பார்கள். அவர்கள் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளனின் கலைப்படைப்புகளை அவனுடைய கருத்துக்களின் நீட்சிகளாக மட்டுமே கண்டு சில்லறைத்தனமான வாசிப்பை முன்வைப்பார்கள்.

இவற்றின் விளைவாகக் கருத்துக்களை முன்வைக்கும் எழுத்தாளன் மீது பொதுவான ஓர் எதிர்மறைத்தன்மை சூழலில் நிலவும். அவனுடைய ஆக்கங்கள் பற்றிய அரைவேக்காட்டுத்தனமான, திரிக்கப்பட்ட கருத்துக்கள் உலவிக்கொண்டிருக்கும். இது எங்குமிருப்பதுதான். ஆனால் தமிழில் நல்ல வாசிப்புக்களைவிட இவை பன்மடங்கு அதிகம்

ஆகவே அவனை வாசிக்கவரும் புதியவாசகர்கள் திசைதிருப்பப்படுவார்கள். அவனை வாசிக்க அவர்களுக்கு மிகப்பெரிய தடை இருக்கும். இது அந்த எழுத்தாளனுக்கு மிகப்பெரிய இழப்பே. ஆகவே கருத்துக்கள் தெரிவிக்காமல், எதிர்வினையாற்றாமல் இருப்பதே நல்லது என்று தோன்றுகிறது.

ஆனால் இதற்கு இன்னொரு பக்கம் உண்டு. சமூகப் பண்பாட்டு அரசியல் தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்காமல், விவாதங்களுக்கு வராமல் ஒதுங்கிவிடும் எழுத்தாளன் காலப்போக்கில் தன்னுடைய சுய அனுபவங்கள் சார்ந்த ஓரிரு உணர்ச்சிகளுக்குள் ஒடுங்கிவிடுபவனாக ஆகிவிடுவான். அவனுடைய படைப்புலகம் சிறுத்து சூம்பிப் போய்விடும். ஒரு குறிப்பிட்ட படைப்புகளுக்குப்பின் அவனிடம் வளர்ச்சியே இருக்காது

ஆக, எதைத்தேர்ந்தெடுப்பது? ஆற்றலில் ஒருபகுதி வீணானாலும் பரவாயில்லை என எண்ணுமளவுக்குப் படைப்பூக்கம் கொண்ட படைப்பாளி கருத்துச்சொல்லி விவாதிப்பவனாகவே ஆகவேண்டும் என நான் நினைப்பேன். அக்கருத்துக்களினால் அவன் சமகாலத்தில் ஒருவேளை முழு நிராகரிப்பை அடைந்தாலும் கூட அவனுடைய மிகச்சிறந்த சாத்தியங்களை அவன் வெளிப்படுத்தியிருப்பான். தன் முழு ஆளுமையுடன் மலர்ந்திருபபன்

சமகாலத்தில் நிராகரிக்கப்படுவது எழுத்தாளனுக்கு ஒட்டுமொத்தமாக எந்த இழப்பையும் அளிப்பதில்லை. எழுத்துக்களின் வாழ்நாள் மிக அதிகம். புதுமைப்பித்தன் அவர் வாழ்ந்த காலத்தில் அனைவராலும் வெறுக்கப்பட்டவர் என்பது இன்று அவரது எழுத்துக்களைத் தீர்மானிக்கிறதா என்ன? எழுத்தாளனின் வாழ்நாள் அதிகபட்சம் ஐம்பது வருடம். எழுத்துக்கள் ஐம்பதாண்டுக்காலம் கழித்துதான் உண்மையான வாழ்க்கையை ஆரம்பிக்கின்றன

ஜெ

முந்தைய கட்டுரைபடைப்பியக்கம் இரு கடிதங்கள்
அடுத்த கட்டுரைநட்புக்கூடல் -திருச்சி